மாற்று சினிமா

சினிமா-1


(அட்சயம்)


யற்கையான வாழ்வியல் சூழலிலிருந்து நாம் வெகுதூரம் நகர்ந்து வந்து விட்டோம் என்பதை எப்போதாவது உணர நேரிட்டிருக்கிறதா? நண்பர்களே! நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் நாம் இயற்கையை புறக்கணித்து வாழ்வதுதான் என்பதை யோசித்திருக்கிறீர்களா? சில வருடங்களுக்கு முன்பு, நண்பரும், கவிஞருமான மணிவசந்தம் என்பவரின் வீட்டில் ஒரு ஐந்து நாட்கள் தங்க வேண்டிய சூழல் எமக்கு உருவாகியிருந்தது. அவர், நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் "கிளண்டல் எஸ்டேட்' என்னும் இடத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார். அவருடைய தந்தையும், தாயும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களுடன்தான் நாம் தங்கியிருந்தோம். சென்னையிலிருந்து இரவு கிளம்பி நாம் அந்த இடத்தை அடையும்போது ஏறக்குறைய அதிகாலைப் பொழுது. பனியைப் போர்த்திக் கொண்டிருக்கும் மலைகளும், ஓரே சீராக வெட்டப்பட்ட தேயிலைச் செடிகளும், ஆங்காங்கே நெடுந்துயர்ந்து நிற்கும் ஓக் மரங்களும் மனதிற்கு ரம்மியாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. சிறிய ஓடுகளால் வேயப்பட்ட அந்த வீட்டில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நாம் அந்த இயற்கைச் சூழலிலேயே தங்கி இருந்தோம். சோலைகளும், சிறு சிறு நீர்வீழ்ச்சிகளும், விதவிதமான சிறு பறவையினங்களும், வண்ணமயமான பல வித மலர்களும், அவற்றின் நறுமணங்களும் அவற்றினோடு அதிகாலைப் பனியின் குளுமையும் எம்மைச் சூழந்திருந்தன. வாழ்வின் தரிசனத்தை நாம் கண்டுணர்ந்த தருணங்கள் அவை. சொர்க்கத்தின் வாயிலை நாம் அடைந்து விட்டதாக உணர்ந்தோம். சூழல் சரியாக இருக்கும்போது மனிதர்களும் சரியாகத்தானே இருப்பார்கள் நண்பர்களே? அந்த எஸ்டேட்டில் வாழ்ந்த மக்களும் அப்படித்தான் இருந்தார்கள். எல்லோரும் என்னிடம் நேசம் பாராட்டியது எனக்கு வியப்பை அளித்தது. சினிமாக்காரன் என்கிற முகம் ஒருவேளை அவர்களுக்கு என் மீது நேசத்தை உண்டு பண்ணியிருக்குமோ? என்று கூட யோசித்ததுண்டு. ஆனால், அவர்கள் அதிகம் படம் பார்ப்பதில்லை என்பதை பிறகு அறிந்துகொண்டபோது அவர்களின் மீதான மதிப்பு என்னிடம் பல மடங்கு கூடியிருந்தது. அவர்கள் உழைப்பாளிகளாக, இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களாக, இயற்கையை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஆகவே சக மனிதர்களையும் நேசிப்பதற்கு அவர்கள் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது வாய்ப்புண்ணால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். இரண்டொரு நாட்களில் நண்பரின் தாயார் கொடுத்த இயற்கை வைத்தியமே என் நோயை பறந்தோட செய்துவிட்டது. கனவுகளற்ற ஒரு ஆழமான உறக்கத்தை முதன்முதலாக எம் வாழ்நாளில் அந்த வீட்டில்தான் நாம் அனுபவித்தோம். மறுபடியும் அப்படியோர் கனவுகளற்ற உறக்கத்தை நாம் அனுபவிக்க முடிந்ததேயில்லை. இப்போதும் கூட ஏதேனும் ஒரு ரயில் பயணத்திலோ, பேருந்துப் பயணங்களிலோ அந்த மலைகளும், வீடும், வெள்ளந்தி மனிதர்களின் கருத்த முகமும் எம் மனதில் தோன்றி ஏக்கத்தின் தீயை கொழுந்துவிட்டு எரியத்தான் செய்துவிடுகின்றன. உண்மைதான் நண்பர்களே, நகரம் நம்மை விழுங்கிவிட்டது!
நகரத்தின் புறநகர் பகுதியொன்றில் வசிக்கும் சிறுமி ஒருத்தி மொட்டைமாடியில் நின்று, தன் வீட்டின் வேப்பமரத்தின் குளுமையை அனுபவிப்பதிலிருந்து படத்தின் கதை துவங்குகிறது. அவள் மரத்தின் இலைகளின் வழியே வழியும் நீர்த் திவளைகளை தனது அழகிய கன்னங்களில் ஏந்தி மகிழ்ச்சி கொள்ளுகிறாள். மரத்தின் கிளைகளையும், இலைகளையும் வாஞ்சையோடும், மிகுந்த நேசத்தினோடும் தனது கண்களால் நோக்குகிறாள். அந்த மரம் அவளது நெருங்கிய தோழியைப்போல அவள் முன் இருக்கிறது. தன் தோழியோடு அந்த சிறுமி மொட்டை மாடியில் ஆனந்த நர்த்தனமாடுகிறாள். இடையிடையே அவள் தெருவையும் நோட்டமிடுகிறாள். மரத்தின் கிளைகளில் பச்சைத் தாவணியணிந்து தொங்கும் இலைகள் காற்றில் அசைந்தபடி அவளிடம் ஏதோ ஒன்றை தெரிவிக்கின்றன. அந்த இயற்கையின் மொழி அந்த சிறுமிக்கும், மரத்திற்கும் மட்டுமே தெரிந்திருக்கும் போலும்! நம்மால் உணர மட்டுமே முடிகிறது. முதன்முதலாக தனக்குப் பிறந்த குழந்தையின் ஸ்பரிசத்தை உணரும் தாய் போல அந்த சிறுமி அந்த மரத்தோடு ஒன்றியிருக்கிறாள். இப்போது அவள் மறுபடியும் தெருவை நோட்டமிட்டு, எதையோ பார்த்துவிட்டவளாய் மாடியிலிருந்து கீழிறங்கி ஓடுகிறாள். தெருவில் இறங்கி ஓடும் அவளை அவளது தாய் கண்டிக்கவே, அவள் சோர்வுடன் மறுபடியும் வீடு திரும்ப... இப்போது அந்த தெருவின் முனையில் அழகிய வெள்ளை நிறத்திலான கார் ஒன்று வந்து நிற்கிறது. வீடு திரும்பிய சிறுமி காரினை கண்டதும் துள்ளிக் குதித்து அதனை நோக்கி ஓடுகிறாள். அந்த காரை அவளது தந்தை புதிதாக வாங்கியிருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வருகிறது. மகளைக் கண்ட தந்தையும், தந்தையைக் கண்ட மகளும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு, அத்தெருவின் வழியே வீட்டிற்கு காரில் வருகிறார்கள். அந்த சிறுமி தனது இடது கையை காரினுள்ளிலிருந்து வெளியே நீட்டியபடி காற்றினில் தன் பிஞ்சு விரல்களால் எதையோ வரைகிறாள் அல்லது எழுதுகிறாள். கவித்துவமாக இந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. தன் செல்ல மகளின் இந்தச் செய்கையை கண்டு முதலில் மகிழும் தந்தை, பிறகு எச்சரிக்கையுணர்வு வந்தவராய் அவள் கையை வெளியே நீட்டுவதை கண்டிக்கிறார். இப்போது அந்த கார் ஒரு வீட்டின் முன் நிற்க, தந்தையும், மகளும் காரிலிருந்து கீழிறங்கி தங்களது வீடு நோக்கி செல்கிறார்கள். வீட்டின் முன்னால் தாய் காத்து நிற்க... சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்தோடும் சிறுமி தனது தந்தை புதிதாக கார் வாங்கியிருப்பதாக கூறுகிறாள். அந்தத் தாய் தன் செல்ல மகளை அணைத்தபடி, ""காரை நம்ம வீட்டு முன்னாடி நிறுத்தாம... எதுக்கு பக்கத்து வீட்டில் போய் நிறுத்தி வைச்சிருக்கீங்க...?'' என்று கேட்க, "இன்னிக்கு ஒரு நாள் மட்டும் அங்க நிக்கட்டும்... நாளையிலிருந்து இங்க நிறுத்திக்கலாம். மரம் இருக்குல்ல... அதான் நிறுத்த முடியல... ஆளுங்ககிட்ட சொல்லிட்டு வந்திருக்கிறேன்... நாளைக்கு இந்த இடம் காலியாயிடும்...'' என்று கூறும் தந்தையை சிறுமி வருத்தத்துடன் பார்க்கிறாள். தன் தாயிடம் ""அப்பாவை அந்த மரத்த வெட்ட வேண்டாம்னு சொல்லும்மா...'' என்று கெஞ்சுகிறாள். தந்தை, ""உனக்கு மரம் வேண்டுமா? அல்லது கார் வேண்டுமா?'' என்று சற்று கோபத்துடன் கூறி வீட்டிற்குள் சென்று விடுகிறார். இரவு சாப்பாட்டு மேசையின் மீது தனது மகள் வருத்தம் தோய்ந்த கண்களுடன் தலைகுனிந்து உட்கார்ந்திருப்பதை பார்க்கும் தந்தை, நாளை அவளை வெளியில் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், மரத்தை வெட்டவில்லையெனவும் அவளிடம் உறுதியளிக்கிறார். மகள் ஆர்வமுடன் சாப்பிட்டுவிட்டு படுக்கையறை நோக்கி சென்று விட... இப்போது அந்த சிறுமியின் தாய், தன் கணவனைப் பார்த்து, ""நிஜமாவே நீங்க மாறிட்டீங்க...'' என்று சந்தோஷத்துடன் கூறுகிறாள். தான் மாறவில்லை எனவும் எப்போதும் போல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறேன் என்றும், மரத்தை வெட்ட நாளை ஆட்கள் வருவதால்தான் அப்படி ஒரு பொய்யை மகளிடம் சொன்னேன். இல்லையென்றால் அவள் சாப்பிட்டிருக்க மாட்டாள் அல்லவா? என்று அவர் விளக்கம் தெரிவிக்க, எரிச்சலுடன் மனைவி சாப்பாட்டில் கையை கழுவிவிட்டு, ""நீங்க திருந்தவே போறதில்லை...'' என்று கூறி அறையைவிட்டு வெறுப்புடன் வெளியேறுகிறாள். படுக்கையறையில் மூவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். பின்னிரவில் அந்த வீட்டின் முன் இருக்கும் மரமும், அந்த மரத்தைச் சுற்றியிருக்கும் மரங்களின் ஆன்மாக்கள் ஒவ்வொன்றும் வெளியேறி, ஒன்று சேர்ந்து, அந்த சிறுமி வசிக்கும் வீட்டின் முன் நிற்கும் மின்கம்பத்தில் மோதி, ஒருமித்த ஒரு சக்தியின் வடிவமாகி அச்சிறுமியின் வீட்டினுள் நுழைந்து, படுக்கையறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அவளுடைய தந்தையின் நினைவலைகளுக்குள் சென்று மறைகின்றன. இவையாவும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அச்சிறுமியின் தந்தை மரங்கள் அடர்ந்த ஒரு வனப்பகுதியில் மரங்களை மிகுந்த அன்போடும், பரிவோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடர்ந்து பரந்து விரிந்து கிடக்கும் மரங்களின் அடர்த்தியும் அழகும் அவரை கொள்ளை கொள்கின்றன. இப்போது அவருக்கு எங்கிருந்தோ தனது மகளின் அலறல் குரல் கேட்கிறது. திரும்பிப் பார்க்கும் தந்தை, பட்டுப்போன மரங்கள் தீப்பிடித்து எரியும் சாலையின் வழியே ஓடிவரும் அவளது மகள் அந்த தீயில் மாட்டி, சாம்பலாவதை கண்டு அலறித் துடிக்கிறார்! அது கனவென்பது பின்பு தெரிய வருகிறது. படுக்கையிலிருந்து பயத்தில் முழித்துக் கொள்ளும் தந்தை, தன் இருப்பை உணர்ந்து அருகில் தனது மகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். பின்பு, எதையோ உணர்ந்து கொண்டவராய், படுக்கையிலிருந்து எழுந்து அறையின் ஜன்னலின் வழியே காற்றில் அசைந்தபடி நடனமாடிக் கொண்டிருக்கும் மரத்தினை அவர் நேசத்தோடு பார்ப்பதோடு படம் நிறைவடைகிறது.
"அட்சயம்' என்னும் தலைப்பில் உருவாகியிருக்கும் இக்குறும்படம் நகரமயமாகிவிட்ட நம் வாழ்க்கையில் இயற்கையிலிருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளி வந்து விட்டோம் என்பதையும், இயற்கைக்கும் நமக்குமான உறவு எவ்வளவு நுட்பமானது என்பதையும் நம் முகத்தில் அறைந்து சொல்லுகிறது. ஒரு குடும்பத்தின் மூன்று பாத்திரங்களோடும் ஒரு மரத்தோடும் கதைப் பின்னப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, "வாழ்க ஜனநாயகம்' என்னும் குறும்படத்தின் மூலம் நம் கவனம் ஈர்த்த இயக்குநர் பி.என்.கணபதிதான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். படத்தில் கணவன், மனைவி மற்றும் சிறுமியாக வரும் மூன்று பாத்திரங்களும் நிஜத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! அநேகமாக தமிழ் குறும்படச் சூழலில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்துப் பாத்திரங்களையும் நடிக்க வைத்து, எடுக்கப்பட்ட முதல் குறும்படமாகக்கூட "அட்சயம்' இருக்கலாம். தந்தையாக நடித்திருக்கும் பொன்.சுதாவின் நடிப்பில் யதார்த்தம் பளிச்சிடுகிறது. ஏனைய பாத்திரங்கள் வசனத்தை ஒப்பிப்பது போன்ற பாவனையை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். படத்தின் மிகப்பெரிய பலம் ராஜ் பாபுவின் ஒளிப்பதிவு. நடு இரவில் ப்ளூ டோனில் இலைகள் அழுவது போன்ற ஒரு அண்மைக் காட்சியையே அவரது திறமைக்குச் சான்றாக சொல்லலாம். அதேபோல படத்தொகுப்பும், கிராஃபிக்ஸ் காட்சிகளும் பாராட்டும்படியாகவே உள்ளன. எழுத்தில் வாசித்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஆழமான கதைக்கருவை மையமாகக் கொண்ட கதையை காட்சி மொழியில் சொல்ல வந்திருக்கும் பி.என்.கணபதி முன்பை விட இப்போது பல படிகள் மேலே முன்னேறியிருக்கிறார் என்பது இப்படத்தைப் பார்க்கும் போது நமக்குத் தெரிகிறது. நம்பிக்கையளிக்கும் "நாளைய இயக்குநர்கள்' பட்டியலில் இனி இயக்குநர் பி.என்.கணபதிக்கும் ஓர் இடமுண்டு என்பதில் மிகையில்லை!

Comments

Popular Posts