கதை எழுது - 38

1. பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒருதடவை (அந்த அளவுக்கு இல்லாமல்) பலவீனமாக முயன்று பார்ப்பதும் வீண் உழைப்பு ஆகும். தனக்கென ஒரு புதுப் பார்வை இருந்து ஏதாவது அதில் ஒரு நோக்கம் ஏற்ற முடியுமானால்தான் பேனாவைக் கையில் பிடிக்க வேண்டும்.
2. புதுமை, தன் தனிப்பார்வை, தொனிக்காக எழுத்துக்கு இடம் கிடைக்காது பிற்கால மதிப்பீட்டில். இன்று சூடாக விலை போவதை எண்ணி மகிழ்ந்து திருப்திப் பட்டுக் கொண்டுவிடக் கூடாது இளம் படைப்பாளி.
3. ஒரு நல்ல கலைப் படைப்பில், சிந்தனை, படிமம், உணர்ச்சி இவைகள் நெருங்கிக் கலந்து ஒரு முழுமை பெற்ற உருவம் அமைய ஏதுவாக இருக்கும்.
4. சிறுகதை ஆரம்பம் திடுதிப்பென 'காலப்' எடுத்த மாதிரியும் நாவல் ஆரம்பம் மெதுவாக முதல் எட்டு நகர்த்த ஆரம்பித்த மாதிரியும் நம் மனதில் படும். நாவல் களுக்கு ஆரம்பம் முடிவு சம்பந்தமாக சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் இன்றைய நாவல்கள் ஆரம்பமும் சிறுகதைக்கு ஏற்பட்டது போல புதிய சம்பிரதாயங்கள் பெற்று இருக்கின்றன. சிறுகதைகள் போலவே ஆரமப வரிகள் திடுதிப்பெனவும் ஆரம்பித்து இருக்கும். ஆனால் ஆரம்ப தொனி பொதுவாக சற்று சாவகாசமாகவேஇருக்கும். மந்தகதியிலே தகவல்கள் ஏறும். ஆகவே இந்த தொனியை வைத்துத்தான் வித்தியாசம்.
இன்னொரு விஷயமும் கூட. ஆரம்பம் சம்பந்தமாக வேறு சில குணங்களும் வேண்டி இருக்கிறது. சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களைக் கொடுப்பது ரொம்ப முக்கியமானது. நாவல் போல களம் விஸ்தீரணமாக இல்லை சிறுகதையில். காலம், இடம், நிகழ்ச்சி சம்பந்தமாக கதையம்சம் தாராளமாக யாத்திரை செய்ய அவகாசமும் இல்லை. ஒரே தொடர்ச்சியானாலும் நடுநடுவே தகவல்களுக்கு இடம் நாவல்களில் இருப்பது போல இல்லை. ஒரே தம், ஒரே மூச்சுப் பிடித்தல்தான். பலீன் சடுகுடுவில் ஒரே மூச்சில் போய் மறிப்பை எதிர்த்து காரியத்தை முடித்து விட்டு வரவேண்டும். கிளித்தட்டுக்குத் தங்கல்கள் உண்டு. கூட்டம் கூட்டமாகத் தங்கி மறிப்பைச் சமாளித்து ஒரு முடிவை எட்டலாம். ஆகவே சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களை எடுத்த எடுப்பிலேயே கொடுத்து உணரச் செய்ய வேண்டும். அறாத ஓட்டம், தொடர்பு இருக்கிற பிரமை ஏற்படச் செய்ய வேண்டும். ஆரம்பத்துக்கு முன் ஏதேதோ நிகழ்ந்திருப்பதை எல்லாம் ஆரம்ப, தொடர்கிறவர் களில் சாயல் விழச் செய்ய வேண்டும். அப்போது நமக்கு நல்ல பகைப்புலம் உருவாகி நிற்கும்.
5. ஆசிரியர் கூற்றாகக் கதை சொல்வதில் தவறு இல்லை. அதுவும் ஒரு உக்திதான். ஆனால் ஆசிரியன் கதாபாத்திரங்கள் தங்கள் உயிர்த்துடிப்பைக் காட்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். நாவல்கள் போல பெரும் அளவுக்கு முடியாவிட்டாலும் குணச்சித்திரத்துக்கு சிறுகதையில் இடமுண்டு. நுணுக்கமாக முழு விவரமடங்கிய விவரிப்புக்கு இடமில்லாவிட்டாலும் உள்ளதாக எண்ணவும் இட்டு நினைக்கவும் ஏதுவாக பாவனையாக எழுதப் படத்தான் வேண்டும். 'ஸீன் ஓ பயோலின்' சொல்வதுபோல் சவிஸ்தாரமான அதாவது முழுவிவரம் அடங்கியதாக செய்து விட்டால் பொம்மலாட்டப் பொம்மைகள் மாதிரி ஆகிவிடும். ஒரு வைக்கப்பட்ட நிலை, சம்பாஷணை, காட்டுகிற சமிக்ஞை, அவர்களது நினைப்போட்டம் இவைகளிலிருந்து அவர்களது குணவிசேஷங் களை நாம் அறியலாம். கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும். தானே விளக்கிச் சொல்லிக்கொண்டே போக வாய்ப்பு இல்லை. அதுக்கு அவகாசமும் இல்லை.

Comments

Popular Posts