கதை எழுது - 37

1. 'கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்' கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி.
2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான நூல் அல்ல. இரண்டாம் தடவை படிக்கும்போது ஒரு நூலில் பல புது அம்சங்கள் கண்ணில் படவேண்டும். கருத்தில் உறைக்க வேண்டும். அப்படிப் புதிதாக எதுவும் உறைக்கா விட்டால் அது தரமான நூல் அல்ல என்பது என் இலக்கிய அபிப்பிராயங்களில் ஒன்றாகும்.
3. ஒரு அனுபவத்தை விவரிக்கிற நல்ல கவியின் வார்த்தைகள் நமது ( அதாவது வாசகனின்) உள்ளத்தில் மறைவாகக் கிடக்கிற அனுபவங்களில் எதோ ஒன்றைப் பாதாளக் கரண்டி போலப் பற்றி இழுக்கிறது. எதொ புரிகிறமாதிரி தெரிகிறது. உடனடியாகவே இந்த அனுபவ எதிரொலிப்பு நிகழ்கிறபடியால் நாம் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய செயல்., சிந்திப்பு எதுவும் இல்லாமலே, தானாகவே, ஒரு அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தை தட்டி எழுப்புகிற மாதிரி இருக்கிறது. அப்படித் தட்டி எழுப்பாது போனால், ஒரு அனுபவத்தைச் சித்தரிக்கிற வார்த்தைகள் படிப்பவன் உள்ளத்தில் எதிரொலியை எழுப்பாது போனால் அதை நல்ல கலை என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
4. கலை எனபது என்ன என்று யோசிக்கையில் அது சற்று சிரமமான விஷயந்தான். கடவுளை எடுத்துக் கொண்டு அதைச் சொல்லலாம் அல்லது கடவுளை மறுக்கிற வேதாந்தத்நி, பிரம்மவாதத்தை எடுத்துக் கொண்டு அதை நாம் தெளிவாக்கலாம். எந்த தெய்வத்தையுமே, எந்த நிர்க்குண பிரம்மத்தையுமே வார்த்தைகளில் அகப்படாதது என்று வர்ண்ஙிப்பதுதான் நமது மரபு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட என்கிற நிர்குண பிரம்மத்தையும், கடவுளையும் போன்றதுதான் இலக்கியமும்.
5. ஒருவகை மொழிகடந்த பொருள்தான் இலக்கியம். எனவே இலக்கியத்தை பூனை காலால் தூரத்தில் தொட்டுப் பார்ப்பது போல் தான் செய்ய முடியும்.
6.கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் ஒரு மயிரிழைதான் வித்தியாசம் இருக்கிறது.
7. இலக்கியம் ஒன்றும் (ஒன்றையும்) சொல்லாமலும் இருக்கலாம்.
8. எழுத்தாளன் அவனுடைய அரசியல், பொருளாதார, சமூகப் பின்னணியைப் பிரதிபலித்தே ஆக வேண்டும் என்பதில்லை. இந்த அம்சங்களோடு ஒத்துப் போகலாம். அல்லது எதிர்த்துக் கலகம் செய்யலாம். அது ஒரு பிரக்ஞா பூர்வமான செயல்.

Comments

Popular Posts