திரை - 10

து ஒரு மாலை நேரம். வழக்கம்போல், சென்னை - வடக்கு உஸ்மான் சாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. "ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் அதன் புனைக் கதைகள் பிரிவின் தலைமைப் பொறுப்பாளர் மணிஸ்ரீதரின் வருகைக்காகக் காத்திருந்தோம். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, சந்தித்து, கைகுலுக்கிக் கொண்டு, அருகிலிருந்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் உணவகம் ஒன்றிற்குப் பயணமானோம். நாங்கள் காபியைப் பருகியபடி உரையாடிக் கொண்டிருந்தபோது, வெளியே தூறல் போடத் தொடங்கியிருந்தது. சில்லென்ற தூறலின் ஸ்பரிசமும், காபியின் மணமும் எங்களது உரையாடலுக்கு மேலும் சுவை கூட்டின. மணிஸ்ரீதர், பிரபல தொலைக்காட்சிகள் பலவற்றிலும் தொடர்களை இயக்கியவர். குறிப்பாக இவர், ராஜ் தொலைக்காட்சிக்காக இயக்கிய, காமெடி தொடரான "டேக் இட் ஈஸி ஊர்வசி'யும், விஜய் தொலைக்காட்சிக்காக இயக்கிய "கதையல்ல நிஜம்' தொடரும் பிரபலமானவை. "கதையல்ல நிஜம்' தொடரானது, இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக ஒளிபரப்பப்பட்ட "ரியாலிட்டி டாக் ஷோ'வாகும். மணிஸ்ரீதரின் இயக்கத்தில் மட்டும் இத்தொடர் சுமார் 130 எபிசோடுகள் ஒளிப்பரப்பானது இவருடைய திறமைக்கு சான்றாகும். சென்னை - தரமணி, எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் பயின்ற மாணவர் மணிஸ்ரீதர். அவருடனான நினைவலைகளிலிருந்து...
திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்களையும், அவர்கள் இயக்கிய படங்களையும் (குறிப்பாக ரஷ்யன், ஜெர்மன், ஐரோப்பா போன்ற நாடுகளின் படங்களை உதாரணமாகச் சொல்லலாம்) பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, என்னுடைய துறைத் தலைவராக ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய "ஓர் இரவு' நாடகத்தைத் திரைப்படமாக்கி இயக்கியவர்; நடிகர் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதல் பட வாய்ப்பை வழங்கியவர்; முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளராகப் பணியாற்றியவர். ஆக, இத்தனை சிறப்புகளுக்குரிய ஒருவரிடம்தான் நான் உட்பட நான்கு பேர் மாணவர்களாக டைரக்ஷன் குறித்தப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குப் பாடம் எடுக்கும்போது அவர், ""இந்த வகுப்பில் மொத்தம் நான்கு மாணவர்கள் இல்லை. என்னோடு சேர்த்து ஐந்து மாணவர்கள் ஆகும்'' என்பார். அதுமட்டுமின்றி,""உங்களைப் போல நல்ல படங்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால், நானும் நல்ல படங்களை எடுத்திருப்பேன்'' என்று எங்களிடம் சொல்லுவார். கல்லூரியில் படிக்கும்போது, ஏ.எஸ்.சாமி அவர்கள் ஒருமுறை கூட தான் இயக்கியத் திரைப்படங்கள் குறித்து சிலாகித்துப் பேசியதில்லை. பெரும்பாலும், மற்ற இயக்குநர்களின் படங்கள் குறித்துதான் பேசுவார். யாருக்குமே தலை வணங்காத மனிதர் அவர் என்பதற்கு சில உதாரணங்களை இங்கே குறிப்பிடலாம். ஒருமுறை எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருந்தார் ஏ.எஸ்.ஏ.சாமி ஸôர்! அப்போது படத்திற்காகப் போடப்பட்டிருந்த படப்பிடிப்புத் தளம் ஈரப் பதமாக இருந்ததை அறிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள், படப்பிடிப்பிற்கு வராமல் போய்விட்டார். ஆனால், அன்றைய படப்பிடிப்பிற்கு வந்த ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பிற்கு வராததை அறிந்து, உடனே ஃபோன் செய்திருக்கிறார். எதிர்முனையில் எம்.ஜி.ஆரோ, ""அண்ணே...செட் இன்னும் ரெடியாகலையாம்! அதான் வர முடியவில்லை'' என்று பதிலளித்திருக்கிறார். இதைக் கேட்ட ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள், ""செட் ரெடி பண்ணுவது என்னுடைய வேலை. நீங்கள் வந்து நடித்துவிட்டு போங்கள்...'' என்றிருக்கிறார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் மிகுந்த மரியாதை வைத்திருந்த எம்.ஜி.ஆர். அவர்களும், சாமி ஸôரின் பேச்சிற்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே படப்பிடிப்புத் தளத்திற்கு புறப்பட்டு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அதேபோல ஒருமுறை படப்பிடிப்பில் சிவாஜி கணேசன் ஸôரின் நடிப்பில் திருப்தியடையாத சாமி ஸôர் அவரிடம், ""உங்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன்...'' என்று கூறியுள்ளார். அதற்கு சிவாஜி ஸôர், ""அப்படியென்றால் அந்தக் காட்சியில் நீங்களே நடித்து விடுங்களேன்'' என்று சொன்னாராம். இதற்கு, ""நான் நடிக்கிறதா இருந்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் தரேன்'' என்று பதிலளித்தாராம் ஏ.எஸ்.ஏ.சாமி ஸôர்! ""ஒரு இயக்குநருக்கு முதல் தேவை அவருடைய உடல் நலம்தான்!'' என்று அடிக்கடிக் குறிப்பிடுவார். அதனாலேயே, நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது அவருக்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருந்தோம். திரைப்படக் கல்லூரியில் படிப்பதற்கும், கோடம்பாக்கத்தில் ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலை பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. உலக நாடுகளில் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அந்த நாட்டின் திரைப்படத் துறையினர் மரியாதை கொடுப்பார்கள். ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக இயக்குநர் பிரிவிலிருந்து வெளியே வருபவர்களுக்கு திரைத்துறையில் உரிய அங்கீகாரமோ, மரியாதையோ இருப்பதில்லை. ஏ.எஸ்.ஏ.சாமி ஸôரைப் போலவே, படத் தொகுப்பில் பணியாற்றிய துரை ஸôர், ஒலிப்பதிவுத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ஏ.வெங்கடாசலம் ஸôர், ஃபிலிம் அப்ரிúஸசியன் பிரிவுக்கு ஆசிரியராக இருந்த அப்பாராவ் ஸôர் போன்றவர்களையும் எங்களால் மறக்கவே முடியாது. பெரும்பாலான ரஷ்ய திரைப்படங்களை, நல்ல சினிமாக்களை பல்வேறு இடங்களிலிருந்து பெற்று வந்து, எங்களுக்குத் திரையிட்டுக் காண்பித்துப் பாடம் எடுப்பார் அப்பாராவ் ஸôர்! என்னுடைய விளம்பரப் படத்திற்கு இசையமைத்ததன் மூலமாக எனக்கு அறிமுகமானவர்தான் மறைந்த இசையமைப்பாளாரான மகேஷ். அவரை, இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனிடம் நான்தான் அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் அவருக்கு "நம்மவர்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. சேதுமாதவன் தமிழில் மட்டுமின்றி, ஹிந்தியில் "ஜூலி' என்னும் வெற்றிப் படத்தையும் எடுத்தவராவார். "நம்மவர்' படத்திற்கு இசையமைத்ததற்காக மகேஷிற்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. ""நான் விருதைப் பெறும்போது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன் ஸ்ரீதர்!'' என்று அவர் என்னிடம் கூறியது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. மகேஷ், எப்போதும் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொண்ட அருமையான மனிதர். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் அவருடனான நட்பும் மறக்க இயலாதது. அதேபோல, நல்ல கதைகளை சிறந்த திரைக்கதைகளாக மாற்றித் திரைப்படம் எடுக்கும் வல்லமை பெற்றவர் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் ஸôர்! ரொம்ப நாகரீகமாகப் பழகக்கூடியவர். நான் அவருடைய நீண்ட காலக் குடும்ப நண்பரும் கூட! ஹிந்தியில் இவர் இயக்கிய "ஜூலி' திரைப்படம் சூப்பர் ஹிட். இதில் விக்ரமும் (பாலிவுட்டைச் சேர்ந்தவர்), லட்சுமியும் நடித்திருந்தார்கள். இதில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக லட்சுமி நடித்திருந்தார். இதனால், அந்தப் பாத்திரத்தில் லட்சுமி குட்டைப் பாவாடை போட்டு நடித்திருப்பார். இந்தக் குட்டைப் பாவாடையைக் கவர்ச்சி என்று நினைத்து, அந்தப் படத்தின் டி.வி.டி.யைக்கூட சேதுமாதவன் ஸôர் தன் வீட்டில் வைத்துக் கொண்டது கிடையாது. நான் கல்லூரி முடித்தவுடன், மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் முன்னணி ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ரெஸிடன்ட் டைரக்டராகப் பணியாற்றினேன். மலேய மொழி குறும்படங்களையும், மலேய அரசின் திட்டங்களையும் ஆவணப் படமாக்கும் பணியை அங்கே செய்து கொண்டிருந்தேன். பிறகு, இந்தியா திரும்பியபோது, இயக்குநர் பாலச்சந்தர் ஸôரிடம் உதவியாளராகச் சேர்ந்து சில படங்களில் வேலை பார்த்தேன். பாலச்சந்தர் ஸôர் வசனம் எழுதுவதில் ஒரு பெரிய மாஸ்டர், கடின உழைப்பாளி. நான் கல்லூரியில் சினிமாவைக் கற்றுக் கொண்டதை விட, கே.பி. ஸôரிடம் கற்றுக் கொண்டதுதான் அதிகம் என்றால் அது மிகையில்லை. சென்னை - தொலைக்காட்சி நிலையத்திற்காக "சின்னஞ் சிறு உலகம்' என்னும் தொலைக்காட்சித் தொடரை இயக்கினேன். இதில் பிரபல நடிகை செüகார் ஜானகி மற்றும் ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்போது இத்தொடர் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இது ஒரு இரண்டு வாரத் தொடராகும். அந்த ஆண்டில் அதிகமான டி.ஆர்.பி. ரேட்டிங்கை இத்தொடர் பெற்றது. இதனைத் தொடர்ந்து "கபில்தேவின் தொப்பி' என்னும் இரண்டு வாரத் தொடரையும் இயக்கினேன். இத்தொடர் முந்தைய தொடரான "சின்னஞ் சிறு உலகம்' பெற்ற டி.ஆர்.பி. ரேட்டிங்கை முறியடித்தது. இவ்விரு தொடர்களுமே 1995ஆம் ஆண்டிலிருந்து 96ஆம் ஆண்டுக்குள் ஒளிப்பரப்பப்பட்ட தொடர்களாகும். "சின்னஞ் சிறு உலகம்' தொடரில் நடித்த செüகார் ஜானகி மேடம், ""முன்பெல்லாம் ரசிகர்கள் என்னைப் பார்க்கும்போது ஸ்மைல் மட்டும்தான் பண்ணுவார்கள். இந்தத் தொடரில் நடித்தப் பிறகுதான் இப்பொழுது நிறைய பேர் என்னிடம் வந்து பேசவும் செய்கிறார்கள். இத்தொடரில் நடித்ததன் மூலமாக ரசிகர்ளை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது என் பாக்கியம்'' என்று என்னிடம் உருக்கமாக சொன்னார். அவருடன் பணியாற்றிய சமயத்தில், ஒவ்வொரு முறையும் அவரிடம் வசனத்தைப் படித்துக் காட்டுவதற்காக அவருடைய அறைக்குச் செல்லும்போது, என்னைப் பார்த்ததும் அவர் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்பார். நான் ஒவ்வொரு முறையும் அவர் எழுந்து நிற்பதைக் கண்டு ஒருமுறை கேட்டபோது, ""ஒரு நடிகை கண்டிப்பாக இயக்குநருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் ஸôர்! நீங்கள் எத்தனை முறை வந்தாலும் நான் எழுந்துதான் நிற்பேன். அதுதான் என் முதல் வேலை!'' என்று சொல்லுவார். அதேபோல, எந்தக் காட்சியையும் அவர் பலமுறை ஒத்திகைப் பார்ப்பார். அவருக்கு திருப்தியாக வந்தால் மட்டுமே நடிப்பார். அப்படி அவர் நடிக்கும்போது உணர்ச்சி பிரதிபலிப்பும் மற்றும் வசன உச்சரிப்பும் ரொம்ப சிறப்பாக இருக்கும். "சின்னஞ் சிறு உலகம்' தொடரின் டப்பிங் முடிந்த பிறகு, அவருக்குத் தொடரைப் போட்டுக் காட்டினோம். அப்போது அவர் நடித்த காட்சியைப் பார்த்துவிட்டு பொல பொலவெனக் கண்ணீர் விட்டு அழுதார். அவர் அருகே தொடரின் தயாரிப்பாளரின் மனைவி கீதா கைலாசமும் இருந்தார். அவரும் தொடரைப் பார்த்து அழுது கொண்டிருந்தார். அந்த அளவிற்குத் தொடரில் சிறப்பாக நடித்திருந்தார் செüகார் ஜானகி மேடம்! இத்தொடர் குறித்து ஏவி.எம்.சரவணன் அவர்கள் ""சின்னஞ்சிறு உலகம்' தொடரைப் பார்ப்பதன் மூலமாக என்னுடைய மாலைப் பொழுது சிறப்பாக இருக்கிறது'' என்று சௌகார் ஜானகி மேடத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை என்னிடம் காட்டி சந்தோஷப்பட்டார் சௌகார் ஜானகி மேடம். நானும் ஒரு பிரபல நாளிதழ், ""வாழ்த்துக்கள் மேடம்! உங்களால் மட்டுமே இது போன்ற பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும்'' என்று சௌகார் ஜானகி மேடத்தைப் பாராட்டி எழுதியிருந்த விமர்சனம் குறித்து அவரிடம் கூறினேன். அவர் உடனே, ""அந்த பேப்பர் எனக்குக் கிடைக்குமா?'' என்று கேட்டார். நான் ""எதற்கு மேடம்?'' என்று கேட்டதற்கு, ""ஒவ்வொரு முறையும் நம் முதுகை யாரேனும் தட்டிக் கொடுக்கும்போது நமக்கு உற்சாகம் பிறக்கிறது. அதனால்தான் கேட்டேன்'' என்றார். அதன் பிறகு அந்த பேப்பரை அவருக்கு நான் அனுப்பி வைத்தேன். (தொடரும்)

Comments

Popular Posts