திரை - 13
திரைப்படக்கல்லூரி உருவாக்கிய ஆளுமைகளுள் இயக்குநர் பாபுராமசாமியும் குறிப்பிடத்தகுந்தவராவார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சிறந்த பத்துப் படங்களின் வரிசையில் இடம் பிடித்த "அவள் அப்படித்தான்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். படத் தாயரிப்பாளர், இயக்குநர், திரைப்படத் தணிக்கைக் குழு அதிகாரி, மும்பை - உலகத் திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர், திரைப்பட விரிவுரையாளர் என பன்முகத் தன்மை கொண்ட அவரை திரைப்படக் கல்லூரி நினைவலைப் பகுதிக்காக தொடர்பு கொண்டோம். சென்னை - பெசன்ட் நகரில் மரங்களடர்ந்த சூழலில் இருக்கும் மத்திய அரசு அலுவலர்களுக்கான புதிய குடியிருப்பில், சில்லென்ற தூறலின் இடையே சென்று சந்தித்து, உரையாடினோம். ""மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமம்தான் ஆனைமலை. இது பொள்ளாச்சியிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊரில்தான் புகழ் பெற்ற திரெüபதி அம்மன் கோவிலும், மசானி அம்மன் கோவிலும் உள்ளது. இத்தகைய புகழுக்கு பெயர் பெற்ற ஊரில்தான் 1951ல் நான் நீலக் குழந்தையாகப் பிறந்தேன். எல்லோரும் குழந்தைகளாகத்தானே பிறப்பார்கள். அதென்ன நீங்கள் மட்டும் நீலக்குழந்தையாகப் பிறந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பிறக்கும்போது என்னுடைய இதயத்தில் சிறு பிரச்சினையோடுதான் பிறந்தேன். சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது தொடர்ந்து ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாலோ என்னுடைய உடம்பெல்லாம் நீலம் பாரித்து விடும். அதானால்தான் நான் அப்படி சொன்னேன். பிறக்கும்போது நான் வசதியான வீட்டுப் பிள்ளையாகத்தான் பிறந்தேன். அதுமட்டுமின்றி, என்னோடு பிறந்தவர்களிலேயே எனக்குத்தான் எல்லோரும் அதிக செல்லம் கொடுப்பார்கள். அதற்கு என்னுடைய இதயக்கோளாறும் ஒரு காரணம்! எங்கள் ஊருக்குப் பக்கத்தில்தான் வேட்டைக்காரன் புதூர் என்னும் ஊர் உள்ளது. இந்த வேட்டைக்காரன் புதூர்ப் பற்றித்தான் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமே? ஆமாம்! உங்கள் யூகம் சரிதான்! மலையடிவாரத்தையொட்டி இந்த ஊர் அமைந்திருப்பதால் இந்தப் பகுதிகளில் அதிகமான திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்கும். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் எல்லாம் வண்டிக்கட்டிக்கொண்டு இந்தப் படப்பிடிப்புகளை நேரில் சென்று பார்ப்பது வழக்கம். அப்படித்தான் எங்களது குடும்பமும் வண்டிக்கட்டிக்கொண்டு படப்பிடிப்புகளுக்குப் போய் வரும். எனக்கு நன்றாக விவரம் தெரிந்த வயதில் நான் போன படப்பிடிப்பு பிரபல இயக்குநர் ஸ்ரீதருடையது. அப்போது அவர் "விடிவெள்ளி' என்னும் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி மற்றும் பலர் நடித்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் நான் பார்த்த முதல் படப்பிடிப்பாகும். இந்தப் படப்பிடிப்பைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து மெகா வெற்றியடைந்த "காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அப்போது திரைப்படம் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் கூட அங்கே இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் வேலை வாங்கிய விதத்தைப் பார்த்தபோது நான் இயக்குநர்தான் ஒரு படத்தில் முக்கியமானவர் என்பதை தெரிந்து கொண்டேன். இந்தப் படப்பிடிப்புதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக பின்நாட்களில் மாறப்போகிறது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு, 1971ல் நாச்சிமுத்து கவுண்டர் மெமோரியல் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் பாடத்தை எடுத்துப் படித்தேன். கல்லூரியில் படித்த சமயங்களில் இரண்டு வேலைகளில்தான் நான் அதிகம் கவனம் செலுத்துவேன். ஒன்று சிறந்த புத்தகங்களைத் நூலகத்திலிருந்து தேடி எடுத்து வந்து படிப்பது, இரண்டாவது சிறுகதைகள் எழுதுவது. இந்த இரண்டில் நான் அதிகம் ஈடுபடுவதற்கு என்னுடைய உடலைமைப்புதான் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நான் சென்னைக்கு வந்து சி.ஏ. கோர்ஸில் சேர்ந்தேன். இந்தப் படிப்பை முடிக்க நீண்டகாலம் பிடிக்குமென்பதால் எங்கள் வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் இயக்குநர் பாலசந்தர் ஸôரின் படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களோடு நானும் அவ்வப்போது அவரின் படங்கள் வெளியானவுடன் சென்று பார்த்துவிட்டு வருவதுண்டு. சினிமாவின் மீதான ஈர்ப்பு என்னில் இன்னும் சற்று வலுவடைய இயக்குநர் பாலசந்தரின் படங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்கலாகாது! சி.ஏ.கோர்ûஸ தொடர முடியாததால் நான் பிறகு சென்னை - தரமணியிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு வரச்சொல்லி வந்திருந்த விண்ணப்ப கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்னை வந்தேன். நேர்காணல் நடக்கும் அன்று, நான் என்னுடைய அழைப்புக்காக வரிசையில் காத்திருந்தபோது மேலும் சில மாணவர்களும் என்னுடன் நேர்காணலுக்காக காத்திருந்தனர். அதில் ஒரு மாணவன் பி.காம். படித்திருந்தான். பெயர் சரியாக இப்போது ஞாபகத்தில் இல்லை. அந்த மாணவன் உட்கார்ந்திருக்கும்போது அருகில் இருந்த அவனுடைய நண்பனிடம் படப்பிடிப்பின்போது "கிளாப்' போர்டு எதற்குப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? என்று கேட்டான். அவனது நண்பனுக்கு பதில் தெரியவில்லை. பிறகு அவனே அந்தக் கேள்விக்கான பதிலையும் சொல்லத் தொடங்கினான், ""அதாவது படப்பிடிப்பின்போது காட்சியை தனியாகப் படம் பிடிப்பார்கள், வசனங்களையும் இதர ஒலிகளையும் தனியாகப் படம் பிடிப்பார்கள். இவையிரண்டையும் சரியாக இணைப்பதற்காகத்தான் கிளாப் போர்டு அடிக்கப்படுகிறது. கிளாப் போர்டின் சப்தம் ஒலிப்பதிவுக் கருவியில் பதிவாகி இருக்கும் அல்லவா? அதனால் அந்த சப்தத்தை வைத்துக்கொண்டு எளிதாக காட்சியையும், ஒலியையும் இணைக்க முடியும்'' என்றான். இதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னை நேர்காணலுக்காக உள்ளே அழைத்தார்கள். அங்கே இயக்குநர் பஞ்சு ஸôரும், அப்போதைய கல்லூரியின் முதல்வரான சிவதாணுப் பிள்ளையும் இருந்தார்கள். அப்போது பஞ்சு ஸôர் என்னைப் பற்றிய தகவல்களை கேட்டுவிட்டுப் பிறகு, சினிமாவின் அடிப்படை மற்றும் நவீன இலக்கியங்கள் குறித்தும் கேள்விகள் கேட்டார். அடிப்படையில் நான் தொடர்ந்து வாசிப்பவனாக இருந்ததால் இலக்கியம் தொடர்பான கேள்விகளுக்கு சரியாகப் பதிலளித்தேன். அதே போல அவர் சினிமா சம்பந்தமாக கேட்ட முதல் கேள்வி, "சினிமாவில் எதற்காக கிளாப் போர்டு அடிக்கிறார்கள்?' என்பதுதான்! இந்தக் கேள்விக்குத்தான் எனக்கு பதில் நன்றாகத் தெரியுமே! வெளியே அந்த மாணவன் சொன்ன பதிலை அப்படியே சொல்லி, அந்த ஆண்டு திரைப்படக் கல்லூரியில் திரைக்கதைப் பிரிவில் சேர்ந்தேன். அப்போது கல்லூரியில் திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகிய இரண்டையும் தனித்தனி கோர்ஸôகப் பிரித்து வைத்திருந்தனர். நான் இயக்கம் பிரிவிற்கு விண்ணப்பித்திருந்தாலும், எனக்கு திரைக்கதைப் பிரிவில் (ள்ஸ்ரீழ்ங்ங்ய்ல்ப்ஹஹ் ஜ்ழ்ண்ற்ண்ய்ஞ்) சேர்வதற்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. எதனால் இயக்கம் பிரிவில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை. என் இதயக்கோளாறைக் காரணம் காட்டி என்னை இயக்கம் பிரிவில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இயக்குநர் என்பவர் ஓடியாடி வேலைப் பார்க்க வேண்டுமல்லவா? அதற்கு என்னுடைய உடலமைப்பு ஒத்துக்கொள்ளாது என்பதால்தான் அவர்கள் நிராகரித்துவிட்டனர். எப்படியோ இயக்கத்திற்கு தொடர்புடைய ஒரு படிப்பைத்தானே படிக்கிறோம் என்பதால் நானும் திரைக்கதைப் பிரிவை விரும்பி ஏற்றுக் கொண்டேன்! அந்தப் பிரிவில் என்னோடு பொன்னுச்சாமி, பிரேம் சொரூப், ஜி.ராஜேசேகரன், ஞானராஜசேகரன் (எஸ்.ஆர்.எம். சிவாஜி திரைப்படக்கல்லூரியின் டீன்) ஆகியோர் என்னுடன் படித்தனர். நேர்காணலுக்காக காத்திருந்தபோது கிளாப் போர்டு குறித்து விளக்கமளித்த அந்த மாணவனுக்கு மட்டும் அந்தப் படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. வாழ்க்கையின் பெருத்த முரண்பாட்டை பாருங்களேன்! திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது பூனே - திரைப்படக் கல்லூரியில் திரைக்கதைப் பிரிவை இயக்கம் பிரிவில் சேர்த்து ஒரே பிரிவாக மாற்றினர். அதன் விளைவாக சென்னை - திரைப்படக் கல்லூரியிலும் திரைக்கதைப் பிரிவில் இருந்த மாணவர்களை இயக்கம் பிரிவில் ஒன்று சேர்த்து விட்டனர். இப்படித்தான் நான் இயக்கம் பிரிவிற்கு வந்து சேர்ந்தேன். அந்த சமயத்தில் எங்களுக்கு இயக்கம் குறித்த பாடங்களை பீர் முகம்மது ஸôர் எடுப்பார். இவர் பூனே திரைப்படக்கல்லூரியில் ஆசிரியராக வேலைப் பார்த்தவராவார். அதுமட்டுமில்லை, மிகவும் இளம் வயதிலேயே ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். சர்வதேச திரைப்படங்கள் குறித்தும், இயக்குநர்கள் குறித்தும், ஆவணப்படங்கள் குறித்தும் தெளிவான பார்வையையும், அறிவையும் பெற்றிருந்தவர். அவர் எங்களுக்கு ஆசிரியராகக் கிடைத்தது எங்களுக்கு பெரிய கொடையாக இருந்தது. உலகத் திரைப்படங்கள் குறித்தப் புரிதலையும், அதன் தாக்கத்தையும் எங்களிடம் விதைத்ததில் பீர் முகம்மது ஸôருக்கு பெரிய பங்குண்டு! அதுவரை இந்தியத் திரைப்படங்களை மட்டுமே கண்டு வந்த எங்களுக்கு பீர் முகம்மது ஸôரின் வருகை ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. இதன் விளைவாகத்தான் நானும் எனது நண்பர்களும் உலகத் திரைப்படங்களைப் பார்க்க விழைந்தோம். அப்போது சென்னை - ரஷ்யன் கலாச்சார மையத்தில் தினந்தோறும் இலவசமாக ரஷ்ய மொழித் திரைப்படங்களை திரையிடுவார்கள். தினசரி கல்லூரி விட்டதும் நான் அங்கே சென்று படங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படித்தான் உலகத் திரைப்பட வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படமான "பேட்டல் ஷிப் பொடம்கின்' படத்தை ரஷ்ய கலாச்சார மையத்தில்தான் கண்டு களித்தேன். அப்படம் கொடுத்தப் பிரமிப்பை இன்றளவும் என்னால் மறக்க முடியாது! கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயங்களில் கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் என்னோடு மிகவும் அன்பாக இருப்பார்கள். அதற்கு காரணம் நான் எல்லோருடனும் திறந்த மனதோடு பழகுவேன் என்பதும், அவர்களுடைய கதை விவாதங்களிலும், பிரச்சினைகளிலும் பங்கெடுத்துக்கொண்டு அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவனாக திகழ்ந்ததும்தான்! கல்லூரியில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் அதைத் தீர்த்து வைக்கச் சொல்லி என்னிடம்தான் வருவார்கள். நானும் இரு தரப்பிடமும் தனித்தனியேப் பேசுவேன். இருவரும் ஒத்துப்போவதற்கான வழிகளை யோசித்து சொல்லி இரண்டு தரப்பையும் சமாதானமாக்கி ஒன்று சேர்ப்பேன். இதனால் கல்லூரியில் மாணவர்கள் என்னை "சமாதானப் புறா' என்றும் கூட அழைப்பதுண்டு! சக மாணவர்களிடத்திலும் சரி, ஆசிரியர்களிடத்திலும் சரி அவர்களிடம் பழகியபோது எனக்குக் கிடைத்த படிப்பினை என்னவென்றால், பொதுவாக மனிதர்கள் எல்லோரிடமும் ஏராளமான மனத்தடைகள் இருக்கின்றன. அவைதான் அவர்களை சக மனிதனிடம் நெருங்க விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் மனத்தடைகளை உடைத்தெறிந்தால் அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையும் கொண்டாட்டமாக அமையும். அவர்கள் தங்கள் மனத்தடைகளை உடைத்தெறிய நான் அவர்களுக்கு உதவினேன். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இரண்டு மனதிற்கிடையே பாலங்களை அமைக்கிற பணியை நான் செய்தேன். அதற்குரிய திறமையும் எனக்கிருந்தது. ஆகவேதான் நான் எல்லோருக்கும் பிடித்த மாணவனாக, நண்பனாக இருந்தேன். கல்லூரியில் படித்த சமயத்தில் எல்லாத் துறையைச் சார்ந்த ஆசிரியர்களும் தன்னுடைய துறைக்கு வந்துவிடுமாறு பலமுறை எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அந்த அழைப்பிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது நான் சக மனிதர்களின் மீது வைத்திருந்த அன்பும், நேசிப்பும்தான். அன்பு ஒன்றிற்குத்தான் துரோகமிழைக்கத் தெரியாது இல்லையா? பெரும்பாலும் எங்களது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவனாக நான் மட்டுமே இருந்தேன். எனது சக வகுப்புத் தோழர்களின் வருகைப் பதிவைக் கூட நான்தான் சொல்லிக் கொண்டிருப்பேன். நான் வகுப்பறையிலேயே பெரும்பாலும் இருந்ததால் எனக்கு சில நல்ல விஷயங்களும் கிடைத்திருக்கின்றன. இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராமமூர்த்தி ஸôர்தான் (இசையமைப்பாளர் விஸ்வநாதன் கூட்டணியில் இருந்தவரேதான்!) எங்களுக்கு இசை சம்பந்தமான பாடங்களை எடுக்க வருவார். பெரும்பாலும் அவர் வகுப்பு எடுக்கும்போது மாணவர்களில் பலர் வகுப்பிற்கு கட் -அடித்து வெளியே போயிருப்பார்கள். நான் மட்டும் அவருடைய பேச்சைக் கவனித்துக் கொண்டிருப்பேன். இது கல்லூரியில் எனக்குக் கிடைத்த வெகுமதிகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை! இரண்டாமாண்டு நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு சீனியர் மாணவர்களாக இருந்த பலர்தான் பின்நாட்களில் திரைத்துறையில் மிகப்பெரும் ஜாம்பவான்களாக விளங்கினார்கள். அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆறுமுகம் என்னும் பெயர்கொண்ட ருத்ரைய்யா (இயக்குநர்), ராபர்ட் - ராஜசேகர் (இயக்குநர்), ரோகினி குமார் (பி.பி.சி. கரெஸ்பாண்டன்ட்), ராஜேந்திரன் (ஸ்டூடியோ அதிபர்), ஏ. தியாகராஜன் (என்.டி. டி.வி.யின் தலைமைப் படத்தொகுப்பாளர்) போன்றவர்களைச் சொல்லலாம். அதேபோல, ஜூனியர்களான ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி, தற்போதைய என்.டி. டி.வி.யின் ஒளிப்பதிவாளர் நந்தகுமார் போன்றவர்கள் ஜூனியர்களாக படித்துக் கொண்டிருந்தார்கள். "புழுதியில் புரளும் மொட்டுக்கள்' என்னும் பெயர் கொண்ட குறும்படம்தான் கல்லூரியின் இறுதியாண்டில் நான் எடுத்த குறும்படமாகும். அப்போது கல்லூரியிலேயே நடிப்புப் பிரிவும் இருந்தது. அந்தப் பிரிவில் பயிலும் மாணவர்களைத்தான் இயக்கம் பிரிவில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய குறும்படங்களுக்கு தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்போது போல் கதைக்கேற்றப் பாத்திரத்தை தேர்வு செய்யும் சுதந்திரம் அப்போதெல்லாம் எங்களுக்கு இருந்ததில்லை. எனவே அந்த ஆண்டு எங்களுடன் நடிப்புப் பிரிவில் படித்துக் கொண்டிருந்த சுதீர் மற்றும் கல்யாணராமன் ஆகிய இருவரையும்தான் நடிக்க வைத்தேன். இந்தப் படம் விபச்சாரம் குறித்த கதையாகும். சுதீர் அடிப்படையில் திறமையாக நடிக்கக்கூடியவர். ஆனால், கல்யாணராமனுக்குத்தான் கதையில் அழுத்தமான பாத்திரப்படைப்பு இருந்தது. இதனால் சுதீர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்காமல் என்னிடம் கொஞ்சம் கோபித்துக்கொண்டு ஆர்வம் காட்டாமல் இருந்தார். ஆனாலும், அவரை சமாதானப்படுத்தி அந்தக் குறும்படத்தை எடுத்து, முடித்து கல்லூரியில் சமர்பித்தேன். அப்போது எங்களது துறைத்தலைவராக ஏ.எஸ்.ஏ.சாமி ஸôர் இருந்தார். அவர் ஒரு மேதை. தமிழகத்தின் மூன்று முதல்வர்களை தன்னுடைய இயக்கத்தில் நடிக்க வைத்த பெருமைக்குச் சொந்தக்காரர். அவருடைய வழிகாட்டுதலும் என்னுடைய குறும்படத்தில் இருந்தது. குறும்படம் சம்பந்தமான தேர்வுக்கு தேர்வாளராக பிரபல தயாரிப்பாளரான நாகிரெட்டியின் சகோதரரான பி.என்.ரெட்டி வந்திருந்தார். இவர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவராவார். இவர் என்னுடைய "புழுதியில் புரளும் மொட்டுக்கள்' படத்தைப் பார்த்துவிட்டு, ""இந்த ஆண்டு படித்த மாணவர்களில் ஒருவன் மட்டுமே இயக்குநராக ஆவான் என்றால் அது நீயாகத்தான் இருக்கும்'' என்று பாராட்டினார். அந்தப் பாராட்டு எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது.
(தொடரும்)
(தொடரும்)
Comments
Post a Comment