சினிமா: 16
அண்ணா
(பெருங்கடலிலிருந்து சில துளிகள்...)
""அண்ணாவோடு இருந்த காலத்தில் அவரோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறேன். கட்சிக்காரர்களிடம் இருந்து இவ்வளவு நிதி கிடைத்திருக்கிறது என்று அண்ணாவிடம் சொன்னால், அதை அவர் ஆர்வத்தோடு கேட்க மாட்டார். காரணம், எப்போதுமே அவர் பணத்தை சட்டை செய்யமாட்டார். அவர் ஒரு துறவி மாதிரி வாழ்ந்தார்'' - அண்ணாவின் நூற்றாண்டு கொண்டாடிய வேளையில் ஒரு மூத்த பத்திரிகையாளர் உதிர்த்த முத்துக்கள்தான் இவை.
ஆவணப்படம் தொடங்கிய சில நொடிகளிலேயே திரையில் ஒலிக்கும் அண்ணாவின் கம்பீரக் குரல், பார்ப்பவரின் மனங்களில் சிலிர்ப்பை ஏற்படுத்தி, படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. பெரும்பாலும் இன்றைய இளம் தலைமுறையினர் கேட்டறியாத அந்தக் குரலை அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, படம் நெடுக இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. அண்ணாவின் எழுத்துக்கள் தமிழனின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த மூட நம்பிக்கையின் முதுகெலும்பை உடைத்தன. "செவ்வாழை' சிறுகதையாகட்டும், தம்பிக்கு அவர் எழுதிய கடிதங்களாகட்டும், சமுதாயம் மீதான அண்ணாவின் அக்கறை சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கிறது. இப்படத்தில் அண்ணாவின் உண்மையான கையெழுத்தை இயக்குனர் காட்டும் இடங்களில் அந்த எழுத்துக்கள் யாவும் மேல் நோக்கிய வாக்கில் எழுதப்பட்டிருக்கின்றன. மனோதத்துவ அறிவியலாளர்கள் குறிப்பிடுவது போல, அவருடைய இந்த மேல் நோக்கிய எழுத்துக்கள், முற்போக்கு சிந்தனை கொண்டவராக, தமிழனின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக அண்ணா வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புடம் போட்டு விளக்குகின்றன. அவற்றிக்கு உதாரணமாக இந்த ஆவணப் படத்திலேயே அண்ணா நடத்திய முதல் உலகத் தமிழ் மாநாட்டின் சில காட்சிகளைச் சேர்த்திருப்பது சான்றாகிறது. அது மட்டுமின்றி வழக்கத்தில் இருந்த கலப்பு மொழிகளுக்கு மாற்று வடிவம் தந்ததை கோடிட்டுக் காட்டியிருப்பதும் சாலப்பொருத்தம். நாடகத்தை எடுத்துக்கொண்டால் "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்நாடகத்தின் வாயிலாகக் கலையுலகிற்கு கணேசன் என்ற மகா கலைஞனை சிவாஜியாக அடையாளம் காட்டிய பெருமை அண்ணாவையே சாரும். இந்த ஆவணப் படத்தைப் பொருத்தவரை அந்த நாடகத்தின் காட்சி வடிவத்தைக் காண்பித்திருக்கும் விதம் அக்கால நாடக உலகை நாம் அறிந்துகொள்ள ஏதுவாகிறது. "நீதி தேவன் மயக்கம்' நாடகத்தில் ராவணணின் நியாயங்களை, அண்ணா எடுத்துரைத்த விதத்தை விலாவாரியாக தொகுத்திருப்பது ஆவணப் படத்தின் சிறப்பு. சினிமா என்கிற காட்சி ஊடகத்தை மக்களுக்கான மாற்று சக்தியாக மாற்றியமைத்ததில் முன்னே நிற்பவர் அண்ணா. இவரின் திரையுலகப் பிரவேசத்தால் தமிழ்த் திரையுலகம் மறுமலர்ச்சி பெற்றிருந்ததைக் காட்டியிருந்த விதம் அருமை. அண்ணாவின் கதை, வசனத்தில் உருவான "வேலைக்காரி', "ஓர் இரவு' உள்ளிட்ட திரைப்படங்கள் சமூக அநீதிகளை சாட்டையால் அடித்தன. அண்ணாவின் எழுத்தில் உருவான அத்தகைய படங்களையும், மூட நம்பிக்கை மலிந்திருந்த படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியிருந்த விதம் பாராட்டிற்குரியது. குறிப்பாக வசன உச்சரிப்பில் பெரிய மாறுதலை ஏற்படுத்தியதை இந்த ஆவணப் படத்தில் கண்கூடாக நாம் காணலாம். சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத சக்திகளாக மக்களின் மனங்களில் வாழ்ந்து வரும் கலைஞர்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் இதழ்களிலிருந்து அண்ணாவின் வசனம் கரைபுரண்டோடியதைக் காட்சிகள் விளக்கும்போது அவரின் பன்முக ஆளுமை வெளிப்படுகிறது. மக்களுக்காக அண்ணா செயல்படத் தொடங்கியபோது, இரவு, பகல் பாராமல் மக்களிடையே சென்று தன் கருத்துக்களைப் பரப்பி, மக்களின் மனங்களில் எழுச்சியை ஏற்படுத்தினார். அவ்வாறு அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப் படம். அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? கேமரா என்கிற கருவி தன்னை மறந்து இதில் அண்ணாவின் இயல்பைப் பதிவு செய்திருப்பதுதான். அது என்னவென்றால், அண்ணா அந்த விழாவில் நினைவுப் பரிசை வழங்க முற்படும்போது அவரது இடுப்பு வேட்டி தளர்கிறது. மேடையில் நின்றபடியே தன் வேட்டியை சரி செய்துகொள்ளும் அந்த எளிமையின் அழகிற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஆவணப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். தனது நாட்டின் மீது மட்டுமல்லாது, அண்டை நாட்டு தியாக சீலர்களையும் அண்ணா மதித்த பாங்கிற்கு ஒரு நிகழ்ச்சியைக் சுட்டிக் காட்டியுள்ளது ஆவணப்படம். போப்பாண்டவரைச் சந்தித்தபோது அண்ணா வைத்த கோரிக்கை, மக்கள் போராளிகள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையை எடுத்துரைக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தோற்றபோது கண்கலங்கியதாகட்டும், கவியரசு கண்ணதாசன் போன்ற மாற்றுக் கருத்து உடையோரை மதித்த பண்பிலாகட்டும், பெரியாருக்காக தலைவர் நாற்காலியை காலியாக வைத்திருந்த குரு பக்தியாகட்டும்... அவருக்கு நிகர் அவரே! படத்தின் துவக்கத்தில் சென்னையில் அண்ணாவின் பெயரைக் தாங்கிய பல்கலைக்கழகம் காட்டப்படுகிறது. அப்பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் அண்ணாவைப் பற்றி அவர்கள் என்ன அறிந்து வைத்திருக்கிறார்கள்? என்று கேட்கப்படுகிறது. ஒரு மாணவன் அவரை, ""பொலிட்டிக்கல் லீடர்'' என்பதோடு நிறுத்திக் கொள்கிறான். இன்னொரு மாணவன் அவரை, "ஹீ ஈஸ் லெஜன்ட்' என்கிறான். பிறகு ஒரு மாணவியிடம் கேட்கப்படுகிறது. அவள் யோசித்தவாறு, "ஐ திங்...' என்று சிரித்தபடியே ஏதோ ஒன்றைக் கூறியவாறு சென்று விடுகிறாள். இன்றைய இளம் தலைமுறையினரிடம் அண்ணா என்ற மாமனிதன் அந்த அளவிற்கு மட்டுமே தெரிந்ததற்குக் காரணம்... யாரைச் சொல்லி நோவது என்ற வருத்தம்தான் ஏற்படுகிறது.
பத்திரிகையாளர் கோவி.லெனின், "தலைப்பிரவசம்', "வேப்பங்காற்று', "அழகழகாய் பூத்த பொய்கள்' ஆகிய கவிதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர். இவர் எழுதிய "திரைத் தமிழ்' என்ற தொடர் ஒரு வார இதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவற்றோடு, "கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?' உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறுவர் இலக்கியம் தொடர்பாக இவர் எழுதிய புத்தகம் ஒன்று பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. "அண்ணா - பெருங்கடலிலிருந்து சில துளிகள்...' கோவி.லெனின் இயக்கிய முதல் ஆவணப்படம். எந்த விதமான போட்டிகளுக்கும் அனுப்பப்படாத இந்த ஆவணப்படத்தின் சி.டி.க்கள் இதுவரை ஆயிரக்கணக்கில் விற்றிருக்கின்றன. அண்ணா ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் லெனின். அண்ணா பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆவணப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது. லண்டன், பாரீஸ், கொழும்பு ஆகிய நாடுகளில் இப்படத்தைத் திரையிட்டபோது தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழியினரும் அண்ணாவை அறிந்துகொண்டனர். அமெரிக்காவில் செயல்படும் "அட்லாண்டா தமிழ்ச்சங்கம்' கடந்த ஜூன் மாதம் நடத்திய "அண்ணா நூற்றாண்டு விழா'வில் கோவி.லெனின் இயக்கிய "அண்ணா... பெருங்கடலிலிருந்து சில துளிகள்...' திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது அந்த ஆவணப்படத்தின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மற்றுமொரு வைரக்கல்! "தமிழினம் நிமிரவும், தமிழகம் உயரவும் பாடுபட்ட மாமனிதர்' - அண்ணா... பெருங்கடலிலிருந்து சில துளிகள்' ஆவணப்பட குறுந்தகட்டில் பொறிக்கப்பட்டுள்ள இந்த வாசகமே குன்றிலிட்ட விளக்காய் அண்ணாவின் புகழ் சொல்லும். "சமுதாயத்திற்கு தொண்டு செய்வதே அரசியல்' என்ற வார்த்தைக்கு முற்றிலும் பொருத்தமான அண்ணாவின் புகழை, அவரைப் பற்றி இதுவரை பதிவு செய்யப்படாத விஷயங்களைத் தாங்கி மலர்ந்துள்ளது கோவி.லெனின் இயக்கியுள்ள இப்படம். மாற்று சினிமா முயற்சிகளை ஆதரிப்போரின் கரங்களில் தவழ வேண்டிய தமிழின் முக்கிய ஆவணமே இந்த ஆவணப்படம். பாராட்டி வரவேற்போமாக!
Comments
Post a Comment