சினிமா: 17
(நடந்த கதை)
உலகத்தின் பெரும் துயரங்களில் முக்கியமானது தீண்டாமைதான். சக மனிதனை ஏதோ ஒன்றின் பெயரால் பிரித்து, தீண்டத்தகாதவர்களாக மாற்றி, புறக்கணிப்பது என்பது வரலாற்றில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இன்றைய சமூகத்தின் மோசமான பிரச்சினையில் தீண்டாமைதான் முன்னே நிற்கிறது. எத்தனை தலைவர்கள் வந்தாலும்,விளக்கங்கள் அளித்தாலும் உணர்ந்து, திருந்தாத சமூகத்தை என்னவென்று சொல்லுவது? மனிதன், விஞ்ஞானத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் எவ்வளவு முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருந்தாலும், இன்னும் அவன் மனிதத் தன்மையில் மிகவும் பின்தங்கியேதான் இருக்கிறான். பள்ளியில் படித்த காலங்களில் நம் பாட புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருப்பதை பலமுறை வாசித்திருப்போம். ""தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்'' என்று! ஆனால் இதை வெறும் வாசிப்பதோடு மட்டுமே நாம் நிறுத்தி விடுகிறோம். அதை நமது வாழ்க்கைக்குள் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மையும்கூட! சக மனிதனின் வாயில் மலத்தை கரைத்து ஊற்றி இம்சித்ததும், வெற்றிப்பெற்றும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதும், தனது வீதிகளில் நடக்கக் கூடாது என்பதற்காக, ஊரின் குறுக்கே சுவர் எழுப்பப் பட்டதும் ஏதோ ஒரு நூற்றாண்டில் நடந்தது இல்லை! எல்லாம் சம காலத்தில் நம் கண்முன்னே நடந்தவைதான்!
எனக்கென்று/ ஒரு தோழியிருந்தாள்/ மழலைப்பருவத்தில்/ அம்மா என்றழைக்க! போன்ற கவித்துவமான வாழ்க்கையைச் சொல்லும் பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் சா.இலாகுபாரதி. தனது "மழை இரவு' கவிதைத் தொகுப்பின் மூலமாக பலரின் கவனம் ஈர்த்தவர். பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழகத்தில் உயர்த்திப் பிடித்தவரான தோழர் ஜீவாவின் வாழ்க்கைப்பற்றிய பதிவுகளின் தொகுப்பையும் சமீபத்தில் அவர் எழுதியிருக்கிறார். சென்னையில் மழை விடாது பெய்த ஒரு ஞாயிறின் மாலை வேளையில் பாரதியைச் சந்திக்க சென்றிருந்தோம். கையில் இரு வேறு வண்ணங்களின் குடையோடு தொடங்கிய எங்களது நடைப்பயணத்தில் மழையும் சேர்ந்து கொண்டது மனதிற்கு குதூகலத்தை கொடுத்தது. வழக்கமான இலக்கிய பேச்சுவார்த்தைகளினிடையே எழுத்தாளர் அழகிய பெரியவனைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போதுதான் இயக்குனர் பொன்.சுதா இயக்கிய "நடந்த கதை' குறும்படம் பற்றி கூறினார் பாரதி. வார்த்தைகளும், கால்களும் ஓய்ந்த அந்த மாலை வேளையில்தான் "நடந்த கதை' குறும்படத் தகடு எமது கைக்கு வந்து சேர்ந்தது.
தனது பேரனான மழலையின் காலில் இருக்கும் இசைச் செருப்பிலிருந்து வரும் சங்கீதத்தை ரசித்தவாறே படுத்திருக்கிறார் வயதான பெரியவர் ஒருவர். அந்தப் பிஞ்சுவின் பாதத்தில் இருக்கும் செருப்பு அவருக்குள் பல நினைவுகளை பின்னோக்கி திருப்புகிறது. அவரின் கடந்த காலங்கள் மனத் திரையில் நிழலாடுகின்றன. கீழத் தெருவில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறக்கும் வீரபத்திரனின் மழலைப் பருவத்திலிருந்து கதை துவங்குகிறது. அவரது மனவுலகின் மூலமாக கதை நமக்கு சொல்லப்படுகிறது. தெருவில் அமர்ந்திருக்கும் அந்தக் குழந்தையின் பார்வையில் உறவினர்கள் யார் காலிலும் செருப்பு இல்லை. எல்லோரும் வெற்றுக் கால்களோடு நடக்கிறார்கள். குழந்தை வளர ஆரம்பிக்கிறது. காடுகளிலும், மேடுகளிலும் திரியும் அந்தச் சிறுவனின் பாதங்களில் கோரமான முற்கள் குத்திக்கொண்டே இருக்கின்றன. கனவுகள் வராத நாட்களை விடவும், முற்கள் குத்தாத நாட்கள்தான் குறைவாக இருக்கின்றன அந்த சிறுவனின் நாட்களில். ஒரு முறை தனது தந்தையோடு மேட்டுக் குடியினர் வசிக்கும் மேலத் தெருவிற்குச் செல்ல நேர்கையில், அந்தத் தெருவில் வசிப்பவர்களின் கால்களில் மட்டும் செருப்பு இருப்பதை அறிகிறான் சிறுவனான வீரபத்திரன். இரவு உறங்கப் போகும் முன் தன் தந்தையிடம், ""நாம மட்டும் ஏம்ப்பா...செருப்பே போடுறதில்லே...'' என்று கேட்கிறான். அப்பாவிடமிருந்து பதிலில்லை. கேள்விகள் மட்டும் தினசரி தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. ""சாமிதான்ப்பா போடக்கூடாதுன்னு சொல்லிச்சு'' என்று ஒரு வழியாக சமாளிக்கிறார் அப்பா. சிறுவனுக்கு அந்தப் பதில் போதுமானதாக இல்லை. தொடர்ந்து, சிறுவன் செருப்பு தைக்கும் தனது உறவினர் ஒருவரிடமும் கேட்கிறான். அவரும் வேறு எதையோ சொல்லி மழுப்புகிறார். சரியான பதில் அவனுக்கு கிடைப்பதேயில்லை. இறுதியாக அவனது கேள்வி மேட்டுக்குடியினரிடமே சென்று சேரும்போது, அவர்களால் தாக்கப்படுகிறான். அவனது கனவுலகில் தொடவே முடியாத தூரத்தில் செருப்பு தொங்கிக் கொண்டிருக்கிறது. சிறுவன், இளைஞனாகும் பொழுது தன்னைச் சுற்றி தீண்டாமையின் வேர்கள் கிளைப் பரப்பி வளர்ந்து கிடப்பதை அறிகிறான். கோவிலின் வெளியே மேட்டுக்குடியினரின் செருப்புக் குவியல்களை பார்ப்பவனின் மனதில் "வன்மம்' துளிர் விடுகிறது. எல்லாச் செருப்புகளையும் தனது துண்டில் அள்ளிக் கொண்டு போய், யாருமற்ற வனாந்திரத்தின் எல்லா திசைகளிலும் தூக்கி எறிகிறான். காட்சி மாறுகிறது. காட்டு பாதை ஒன்றில் விறகு வெட்டிக் கொண்டிருப்பவனுக்கு ஆச்சர்யம் கலந்த ஒரு விஷயம் நடக்கிறது. பட்டாளத்திலிருந்து கம்பீரத்தோடு, ஷூ அணிந்து வருபவரின் கால்களையே வெறித்துப் பார்த்தபடி நிற்கும் வீரபத்திரனின் மனதில் என்னவோ உதிக்கிறது. அவரை நெருங்கிச் சென்று, தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறான். அதன் தொடர்ச்சியாக அவனுக்கு பட்டாளத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. முதன்முறையாக அவனுக்கு பட்டாளத்தில் கிடைக்கும் ஷூவுடன் கூடிய சீருடையை பெருகிவரும் கண்ணீரோடு பெற்றுக் கொள்கிறான். வாழ்வை சூழ்ந்திருந்த இருளை கிழித்தெறியும் மின்னலைப்போல அவனது கால்கள் மேலத் தெருவில் இருக்கும் தெருக்களின் வழியே ஓடுகிறது. வழக்கம்போல் தீண்டாமையின் முகங்கள் இடை மறிக்கின்றன. ""பட்டாளத்தில் சேர்ந்தால் ஜாதி மாறிவிடுமா?'' என்னும் எதிர்க் குரலை கிழித்தெறிகிறது வீரபத்திரனின் தோட்டாக்கள். தடைகளைத் தாண்டி அவனது ஓட்டம் கீழத் தெருவிற்குள் செல்கிறது. அவனது பாதம் பட்ட இடங்கள் யாவும் செருப்புகள் சுமந்த வீதிகளாகின்றன. வாழ்க்கை அவனுக்கு வசப்படுகிறது. இறுதியாக தனது நினைவுகளிலிருந்து வெளியே வரும் வீரபத்திரனின் கை, தனது பேரனை இறுகப் பற்றிக்கொண்டு கம்பீரமாக நடப்பதோடு படம் நிறைவடைகிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவரால்தான், அவர்களின் பிரச்சினையை சரியாகச் சொல்ல முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எழுத்தாளர் அழகிய பெரியவன். இவரின் கதைகள் யாவும் தீண்டாமையின் கோரமுகத்தை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுபவை. அவ்வகையில் இவர் எழுதிய "குறடு' என்னும் சிறுகதைதான் "நடந்த கதை' குறும்படமாக உருவாகியிருக்கிறது. ஒரு ஊரில் இரண்டு பிரிவினருக்கிடையே மண்டிக்கிடக்கும் தீண்டாமையை பற்றிப் பேசுகிறது. கதையின் நாயகனான கருணாகரனைத் தவிர, மற்ற அனைத்துப் பாத்திரங்களும் இதுவரை திரைமுகம் காணா€தவர்களே! விடலைப் பருவத்தில் நடித்திருக்கும் சிறுவனின் வெளிப்பாடு பாராட்டிற்குரியது. பின்னணியில் கதை சொல்லியாக குரல் கொடுத்திருக்கும் கவிஞர் அறிவுமதியின் குரல், சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியபடியே இருக்கின்றன. மற்ற குறும்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருப்பதும், திரை மொழிக்கே உரிய, பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வசனம் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியிருப்பதும் சிறப்பு. சிறுகதையை சிதைக்காமல், தனது திறமையான திரைக்கதையின் மூலம் காட்சி படுத்தியிருக்கும் விதம் அழகு. மாற்று சினிமாவிற்கான சிறந்த உதாரணப் படமாக இதைத் தேர்வு செய்யலாம். சிறந்த கருவைத் தேர்ந்தெடுத்ததற்காகவும், அதை சரியாகச் சொன்னதற்காகவும் இயக்குனரை மனம் திறந்து பாராட்டலாம்!
திரைப்படத்துறையில் ஏறக்குறைய பனிரெண்டு வருட அனுபவம் பொன்.சுதாவிற்கு உண்டு. "ரகசிய போலீஸ்', "அரவிந்தன்', "தை பொறாந்தாச்சு' போன்ற படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பிரபல இயக்குனர்களின் படங்களின் கதை விவாதங்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். "கவிதை அல்ல காதல்', "நானும் நீயும் நாமானபோது', "மழையின் சுவடுகள்' போன்ற கவிதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். "நடந்த கதை' இவரது இரண்டாவது குறும்படம். முதலில் இவர் எடுத்த "மறைபொருள்' என்கிற குறும்படம், பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறது. மேலும் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இயக்குனரின் "மறைபொருள்' குறும்படத்தை இணையத்தில் பார்த்துத்தான், "நடந்த கதை'யை தயாரிக்க முன் வந்திருக்கிறார் இதன் தயாரிப்பாளரான அருள் சங்கர்! தற்போது பொன்.சுதா திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறார்.
Comments
Post a Comment