சினிமா - 9
(நானும் ஒரு பெண்)
மனித வாழ்க்கையின் துயரங்களில் துடைத்தெறியப்படாமல் தேங்கிக் கிடப்பவைகளுள் திருநங்கைகளின் வாழ்க்கையும் ஒன்றாகும். பிறப்பால் ஆணாகவும், மனதால் பெண்ணாகவும் வாழ்க்கையை சுமக்கிற எண்ணற்ற திருநங்கைகளின் இதயத்தின் வலியை உணர்ந்துகொள்ளவோ, அறிந்து கொள்ளவோ இச்சமூகமோ, நாமோ பெரும்பாலும் தலைப்பட்டதில்லை. மாறாக, இயற்கையின் படைப்பில் நிகழ்ந்த தவறினால் மூன்றாம் பாலினமாக மாறிவிட்ட இவர்களை பாலியல் தொழிலாளியாகவும், கேலிப் பொருளாகவும் பாவிக்கும் சமூகத்தின் பார்வையை எந்த சாட்டையைக் கொண்டு அடிப்பது? தன்னுடன் பிறந்த சகோதர்களாலும், சகோதரிகளாலும், ஏன்? பெற்றெடுத்த தாய், தந்தையராலுமே புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளின் கண்ணீரை எத்தனை கைகள் சேர்ந்து துடைத்தாலும் துடைத்தெறிய முடியாதது. அன்பு காட்டவும், அரவணைக்கவும், தட்டிக் கொடுக்கவும், தவறி விழும்போது தோள் கொடுக்கவும் எப்போதும் திருநங்கைகளுக்கு பக்க பலமாக இருப்பது மற்றுமொரு திருநங்கையே! சென்னைப் போன்ற பெருநகரங்களின் ரயில் பயணங்களில், பயணத்திற்காக காத்திருக்கும் வேளைகளில், டீக்கடைகளில், வணிக நிறுவனங்களில், வீதிகளில், ப்ளாட் பாரங்களில் எழுத்தில் கொண்டு வர முடியாத இன்னும் எத்தனையோ இடங்களில் நம்முன் கையேந்தி நிற்கும் திருநங்கைகளின் முகங்கள் ஆயிரமாயிரம் துயரக்கதைகள் நிரம்பியவை. வாழ்க்கைச் சூழலும், பொருளாதர மாற்றங்களும் எவ்வளவோ முன்னேறி விட்ட நம் சமூகச் சூழலில் திருநங்கைகளுக்கான வாழ்வாதரம் குறித்து மிக கவனமாக கலந்தாலோசிக்க இத்தருணத்தைப் போன்று அரிய தருணம் இனியொரு நாள் நம் வாழ்வில் வரப்போவதில்லை!
கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நுழையும் திருநங்கையை காவலாளி ஒருவன் தடுக்க, அவளோ தான் இந்நிறுவனத்தின் வேலை ஒன்றின் நேர்காணலுக்காக வந்திருப்பதாக கூறுகிறாள். அவள் பெயர் செல்வி. ஆச்சர்யத்துடன் செல்வியை காவலாளி உள்ளே அனுப்புகிறான். நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான பெண்ணொருத்தி செல்வியை நிறுவன மேலாளரிடம் அறிமுகப்படுத்துகிறாள். அவர் அவளைப் பற்றி விசாரித்துவிட்டு, ""நீங்கள் இன்றே வேலையில் சேர்ந்து கொள்ளலாம்'' என்கிறார். திருநங்கையான செல்வியோ, ""என்னை கேள்வியே கேட்கவில்லையே?'' என்று கேட்க, அவர் ""அதற்கு அவசியம் இல்லை. நீங்கள் அந்த வேலைக்கு தகுதியானவர்தான்'' என்கிறார். செல்வியோ தன்னை கேள்விக் கேட்காமல் தேர்ந்தெடுத்துவிட்டதால் சற்று மனம் கலங்கிய நிலையில் அறையின் வெளியே காத்திருக்கிறாள். அறையினுள்ளே மேலாளர், செல்வியை அழைத்து வந்ததற்காக அந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியான பெண்ணை கண்டிக்கிறார். அவளோ ""நமது நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரப் படுத்திக் கொள்வதைப் போலத்தான், திருநங்கையை வேலைக்கு அமர்த்துவதும். இதனால் நமது நிறுவனத்தின் பெயர் இன்னும் பெரிய அளவில் பேசப்படும்'' என்கிறாள். இதையறியும் திருநங்கை செல்வி வருத்தத்துடன் வீடு திரும்ப, வரவேற்கும் தன் தோழியிடம் விரக்தியோடு, ""அவர்கள் என் திறமையைப் பார்த்து வேலைக் கொடுக்கவில்லை''என்கிறாள். மறுநாள். அலுவலகத்தில் திருநங்கை செல்வியை அவளுடைய டீம் லீடரிடம் அறிமுகப்படுத்துகிறார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி. டீம் லீடரோ, அவளை தன் குழுவுடன் இணைத்துக்கொள்ள எதிர்ப்புத் தெரிவிக்கிறான். செல்வி, பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்தும்போது சக பெண் ஊழியர்கள் முகம் சுளிக்கிறார்கள். வருகைப்பதிவேடை கொண்டு வரும் அலுவலக உதவியாளர், செல்வி திருநங்கையென்பதை அறிந்து, ""இனி கையெழுத்தை கேட்டிலே போட்டுவிட்டு வா'' என்று ஏளனம் செய்கிறான். செல்வி எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தன் வீட்டிற்கு சோர்வுடன் திரும்புகிறாள். அறைத்தோழியிடம் அலுவலகத்தில் தன்னை எல்லோரும் புறக்கணிப்பதை சொல்லி, அவள் மடியில் முகம் புதைத்து அழுகிறாள். மூன்றாவது நாள் அலுவலகத்தில் செல்வியின் டீம் லீடர், புரோகிராம் ஒன்றில் ஏற்பட்ட தவறை நீக்கமுடியாததற்காக தன் குழுவில் உள்ள ஒருவரை திட்டிக் கொண்டிருக்கிறார். அங்கே வரும் செல்வி, டீம் லீடரிம் அந்தப் பிரச்சினையை தன்னால் சரி செய்ய முடியும் என்பதோடு, அந்தப் புரோகிராமின் பிரச்சினையையும் அவளே தீர்த்து வைக்கிறாள். பிறகு அலுவலகத்தில் மெல்ல மெல்ல சூழல் மாறுகிறது. அவளுடைய திறமையை சக ஊழியர்களும் அங்கீகரித்து, பின் அவளோடு பழக ஆரம்பிக்கின்றனர். அவளுடைய பதவி உயர்வுக்கு ட்ரீட் கேட்கும் தன் சக ஊழியர்களை சூர்யா படத்திற்கு அழைத்துப் போவதாக வாக்களிக்கிறாள் திருநங்கையான செல்வி. அன்று தன் காரிலேயே அழைத்து வரும் பெண்ணான மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவளிடம், உன் கையால் சாப்பிட வேண்டும் என்க, செல்வியோ என் சமையல் பிடிக்குமா? எனக் கேள்வியெழுப்ப? ""நாம்தான் நன்றாக சமைப்போமே!'' என்பதோடு படம் நிறைவடைகிறது.
திருநங்கைகள் குறித்த குறும்படங்களோ, திரைப்படங்களோ தமிழில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. அந்த வகையில் இயக்குநர் வி.ராமநாதனின் "நானும் ஒரு பெண்' குறும்படம் பாராட்டிற்குரியது. இன்றைய சூழலில் திருநங்கைகளில் பலர் கல்வித்துறையில் பல பெரிய படிப்புகளைப் படித்து, அத்துறைச் சார்ந்த பெரிய அறிவோடு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குரிய பணியை வழங்க எத்தனை நிறுவனங்கள் முன் வருகின்றன? அப்படியே முன் வந்தாலும், திருநங்கைகளுக்கு அந்நிறுவனங்களில் உரிய மரியாதை கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரியே. இது போன்ற பல கேள்விகளை நமது மனதில் தட்டியெழுப்பும்படி தெளிவான திரைக்கதையுடனும், தொழில்நுட்பத்துடனும் இயக்கியிருக்கிறார் இயக்குநர். இக்குறும்படத்தில் ஈஸ்வர் என்பவர் திருநங்கை செல்வியாக நடித்திருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலமே ஈஸ்வரின் நடிப்புதான். நடிப்பு என்று சொல்வதைவிட சரியாக பாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும். மதியழகனின் ஒளிப்பதிவு, கதைக்கு மிக நெருக்கமாக நின்று உதவியிருக்கின்றன. இப்படத்தை எல்.வி.பிரசாத் நிறுவனம் சார்பாக கே.ஹரிஹரன் தயாரித்திருக்கிறார். தமிழின் முக்கிய பதிவாக "நானும் ஓர் பெண்' குறும்படத்தைக் குறிப்பிடலாம்.
சென்னை - வடபழனியிலுள்ள பிரசாத் ஃபிலிம் அண்ட் டி.வி. அகடமியில் இயக்குநர் பிரிவில் பயின்றவர் வி.ராமநாதன். மாதம் ரூபாய் 60,000/- சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த சார்ட்டட் அக்கெüவுண்டன்ட் வேலையை உதறிவிட்டு, திரைத்துறைப் பக்கம் கவனம் செலுத்தி வருபவர். இவருடைய திரைத்துறை வேலைகளுக்கு மிகவும் பக்க பலமாக இருப்பவர் இவரது துணைவியரான மாலதி! "நானும் ஒரு பெண்' எனும் இக்குறும்படம் இவர் பிரசாத் ஃபிலிம் அண்ட் டி.வி. அகடமியில் இறுதியாண்டில் (2009) எடுக்கப்பட்டது. இப்படம் கோவா திரைப்பட விழாவிலும், ராஜஸ்தான் மாணவர் திரைப்பட விழாவிலும் மற்றும் உலக திரைப்பட விழாக்கள் சிலவற்றிலும் பங்கு பெற்று பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது. இயக்குநர் அருண்மொழியின் திருநங்கைகள் குறித்த ஆவணப் படங்களான "இரண்டாம் பிறவி', "நிர்வாண்', "மூன்றாம் பாலினம்' போன்ற படங்கள் இவர் "நானும் ஒரு பெண்' குறும்படத்தை இயக்க மிகவும் உந்துதலாக இருந்திருக்கின்றன. வி.ராமநாதன் இக்குறும்படத்தை இயக்கும் முன் "ஏவம் நாடகக் குழு'விடமும், திருநங்கையும், எழுத்தாளருமான ப்ரியா பாபுவிடமும் கதைக் குறித்து கலந்துரையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது! தற்போது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்காக "கூவம்' பற்றிய ஆவணப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.
Comments
Post a Comment