கதை எழுது - 23
1. சிறுகதை ஒரு குறுகிய நாவலில்லை. அநேக பாத்திரங்களையும் அநேக சம்பவங் களையும் சித்தரிக்கவேண்டி இருப்பதால் ஒரு நாவலுக்கு அகன்ற சித்திரக்கிழி வேண்டும். ஒரு நிகழ்ச்சிதான் சிறுகதைக்குள்ள வட்டம். அவ்வட்டத்துக்குள் எவ்வளவு அலங்காரம் செய்யலாமோ அவ்வளவு அலங்காரம் செய்யலாம். ஒரு நாவலில் கூட்டலாம்; கழிக்கலாம்; ஆனால் கதாபாவம் கெட்டுப் போவதில்லை. ஒரு கதையில் ஒரு பதத்தை எடுத்தாலும் கதை பழுதுபட்டுப் போய்விடும்.
2. நாடகத்தைப் போலவே சிறுகதையிலும் ஒவ்வொரு பதத்திற்கும் ஒரு பயன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும். வர்ணனைக்காக வர்ணனையும், ஹாஸ்யத் திற்காக ஹாஸ்யமும் சிறுகதையில் இடம்பெற முடியாது. ஹாஸ்யமான விஷயம் கதைப் போக்கின் ரசத்தை அதிகப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதை அடியோடு தள்ளிவிடவேண்டும்.
3. கதையின் முடிவில் எழும் நாதத்திற்குக் கதை முழுதுமே எதிரொலி கொடுக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தியைப் பேச வைப்பதுதான் சிறுகதை.
4. கதைக்கும் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. சிறுகதைச் சைத்ரீகனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அவன் ஒரு கவி என்பது புலனாகும். கவியுள்ளம் படைத்தவன்தான் சரியான கதை எழுத முடியும். அகத்துறைக்கான ஒரு நிலையை (ப்ஹ்ழ்ண்ஸ்ரீ) அடைந்து விடுகிறது உண்மையான சிறுகதை. 'அகத்துறைப்பா'வைப் போலவே சிறுகதையிலும் தெளிவாக உணர்ச்சி பொங்க வருணிக்கப்படும் ஓர் அனுபவத்தை மாற்றக்கூடிய அல்லது குழப்பக்கூடிய வேறு எந்த அம்சமும் இருக்க இடமில்லை.
5. நாவலை ஒரு வாழ்க்கைச் சித்திரமென்று மொழியலாம். வாழ்க்கையில் எவைகளைப் பார்க்கிறோம்? பிறப்பு, வளர்ப்பு, இவைகளைப்பற்றி சர்ச்சை செய்கிற மக்களின் பேச்சு, மக்களின் குணங்களுக்கேற்ற செயல்கள், மக்களின் போராட்டங்கள், உணர்ச்சிவேகங்கள், சிரிப்பு, அழுகை, உயர்ந்த லட்சியங்கள், அவைகளின், சிதைவு, வெற்றி, ஏமாற்றம், நல்லது, தீமை, மழை, வெயில், குளிர், வெப்பம், புயல், அமைதி - இவை அனைத்தையும் வாழ்க்கையின் விரிந்த காட்சியில் நோக்குகின்றோம்.
6. நாவல் வாழ்க்கையின் ஒரு விமர்சனமாய் இருக்கலாம், அல்லது வியாக்கியானமாய் இருக்கலாம். நாவலுக்குப் பொருள் வாழ்க்கை என்பதில் ஐயமில்லை. ஆதலால் எடுத்துக் கொண்ட விஷயம் எல்லா உள்ளங்களுக்கும் பொதுவானதாயும், உணர்ச்சி பாய்கின்ற ஆழ்ந்த உள்ளத்தைத் தொடுவதுமாயும் இருக்க வேண்டும். வெறும் கதைதானே என்ற எண்ணத்தில் எதையும் அதில் புகுத்திவிடலாம் என்ற தவறான எண்ணம் முளைக்கக் கூடாது. நாம் பார்த்த விஷயம், நாம் நுகர்ந்த அனுபவம், நாம் அகமனத்தின் ஆழத்தில் உணர்ந்த வாழ்க்கையின் உணர்ச்சிகள் இவைகளுக்கு உருக்கொடுக்க வேண்டும்.
7. முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் கதை. கதை, சொல்லத் தகுந்த கதைதானா? இது தீர்மானமாகுமானால், அதை அழகுபெறப் புனைகின்றோமா? - என்ற கேள்வி பிறக்கும். கதாபாத்திரங்கள் செவ்வனே படைக்கப்படுகின்றனவா? எடுத்துக்கொண்ட விஷயத்துக்கேற்றவாறு கதையின் அம்சங்கள், தொடர்புடையனவாய் அமைந்திருக்கின் றனவா? - என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
8. ஒரு நாவலில் மிகவும் முக்கியமாகக் கருதக்கூடியது கதாபாத்திரங்கள். நிதம் நம் முன் நடமாடும் பாத்திரங்களின் சித்திரங்களை அமைப்பீர்களா? அல்லது தைரியமாய் அமானுஷ்யமான பாத்திரங்களைச் சமைப்பீர்களா? விசித்திர உருவங்களைப் படைப்பீர்களா? எதைச் செய்வீர்களோ தெரியாது. புத்தகத்தை மூடினதும் கதையின் நிகழ்ச்சிகள் மறந்து போனலும், அமைக்கப்பட்ட பாத்திரங்கள் நம்முள் நடமாட வேண்டும்.
9. ஓர் ஆசிரியனுக்கு வாழ்க்கையைப்பற்றி தனித்த ஒரு தத்துவம் இருக்க வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் தத்துவமான ஓர் உயர் குன்றின்மீது இத்தனையும் நோக்க வேண்டும். இப்படி நோக்கினால் நாவலுக்கே ஒரு தனிச்சிறப்பு ஏற்படும். உதாரணமாக:
ஹார்டி இரக்கமற்ற ஒரு குருட்டுச்சக்தி உலகத்தை ஆட்டிப் படைக்கிறது என்ற மூல தத்துவத்தை அடிப்படையாக வைத்துக் கதைகளை அமைத்துக் கொண்டேபோகிறார். அவர் கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அக்கருத்து படைக்கப்படுகிற நாவலுக்கு ஒரு மூலசக்தியாய் நின்றுகொண்டு மற்ற அம்சங்களுக்கு ஓர் உயிர் அளிக்கிறது என்ற உண்மையை ஒருவராலும் மறுக்க முடியாது.
10. நாவல் எந்த அனுபவத்தையும் சித்தரிக்கும். அதற்கு விலக்கான அனுபவமே ஒன்று மில்லை. உதாரணமாக: அறிவைப்பற்றிய (ண்ய்ற்ங்ப்ப்ங்ஸ்ரீற்) நாவல்கள் போதும் அது வாழ்க்கையைக் குலைத்துவிடும்; உண்மையான உணர்ச்சிக்குத்தான் (ண்ய்ள்ற்ண்ய்ஸ்ரீற்) நாம் வணக்கம் செய்யவேண்டும் என்ற அடிப்படையான தத்துவத்தைக் காட்டப் பல நாவல் களைப் புனைந்து தந்திருக்கிறார் டி.ஹெச்.லாரன்ஸ் என்பதை நாம் நன்கறிவோம்.
Comments
Post a Comment