திரை - 12

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் படிப்பதோடு நிற்காமல், திரைப்படத்துறையிலும் சேர்ந்து பகுதி நேரங்களில் பணியாற்றும் வழக்கத்தை வைத்துக் கொண்டால் அவர்களுடைய திரைத்துறை கனவு சீக்கிரமே நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. கல்லூரியில் 180 டிகிரி காட்சிக் கோணத்தைப் பற்றி தியரியாக படிப்பதை விட திரைப்படத்துறையில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? என்பதை நேரில் காணும்போது இன்னும் தெளிவாகக் காட்சிக் கோணம் குறித்தப் புரிதல் வரும். கல்லூரியில் நாம் பயிற்சி எடுத்துக்கொண்டாலும் திரைத்துறையோடுப் படிக்கிற காலத்திலேயே ஒரு தொடர்பு வைத்திருந்தால் பாடத் திட்டங்களும், பயிற்சி முறைகளும் இன்னும் தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் அமையும். "ரமணா' படத்தில் நான் பேசிய திருநெல்வேலி வட்டார வழக்கானது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. படம் மிகவும் சீரியஸôக சென்று கொண்டிருந்தாலும், நான் நடித்த அந்தக் காட்சி வரும்போது மட்டும் தியேட்டரில் பலத்த சிரிப்பலையை காண முடியும். அதற்குக் காரணம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஸôரின் வலிமையான திரைக்கதை அமைப்பும், என்னுடைய பாத்திரப்படைப்பும்தான்! இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா ஸôர் பின்னணி இசைக்கும்போது என்னுடைய காட்சியைப் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பாராம். இதை நண்பர்கள் கூற கேட்டபோது, ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். இப்படத்தைத் தொடர்ந்து எனக்கு எனது நண்பர் மணிகண்டன் மூலமாக இயக்குநர் ஹரி ஸôரின் இயக்கத்தில் வெளிவந்து, மெகா வெற்றியடைந்த "சாமி' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருநெல்வேலியில் உள்ள சீதாபதி லாட்ஜில் "சாமி' படத்தின் படப்பிடிப்பிற்காகத் தங்கியிருந்தார் இயக்குநர் ஹரி ஸôர். என்னை தொலைபேசியில் அழைத்த நண்பர் மணிகண்டன், உடனடியாக திருநெல்வேலிக்கு கிளம்பி வரச் சொன்னார். நானும் கிளம்பிப் போனேன். என்னை அழைத்துச் சென்று மணிகண்டன் இயக்குநர் ஹரி ஸôரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். நான் போனபோது இரவு நேர படப்பிடிப்பில் இருந்தார் ஹரி ஸôர். என்னைப் பார்த்தவர், ""இரண்டொரு நாட்களில் படப்பிடிப்பு இருக்கும். தயாராக இருங்கள்'' என்றார். சொன்னது போலவே, மூன்று நாட்களில் அவரது அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் நான் நடித்த அந்த கலவரக் காட்சி தொடர்ந்து பலமுறை திரும்ப திரும்ப தொலைக்காட்சிகள் பலவற்றிலும் ஒளிபரப்ப பட்டது. இப்படத்தில் அக்காட்சி குறித்து நடிகர் விக்ரம் ஸôர் ஒரு நேர்காணலில், ""அந்த காட்சி மிகச் சிறப்பாக வந்ததற்கு காரணம், சரியான இர்ன்ய்ற்ங்ழ் அழ்ற்ண்ள்ற் இருந்ததுதான்'' என்று கூறியிருக்கிறார். இப்படத்தில் நடித்ததன் மூலமாக என் மேல் தமிழ் திரைப்பட ரசிகர்களின் பார்வையும் விழுந்தது. தமிழில் மூன்றாவது பட வாய்ப்பு எனக்கு இயக்குநர் பாலா ஸôரின் இயக்கத்தில் வெளிவந்த "பிதாமகன்' படத்தில்தான் கிடைத்தது. நடிப்பின் மீதான எனது பார்வை மாறியதும் பாலா ஸôரால்தான். அந்தப் படத்தில் "ஜெயிலர்' பாத்திரத்தில் நடித்திருந்தேன். இப்படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குநர் சி.ஜெ.பாஸ்கர் ஸôர், என்னைப் பற்றி நடிகர் சிவகுமார் ஸôரிடம் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகுமார் ஸôரே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வந்து பார்க்க சொன்னார். நானும் அவரை,அவரது வீட்டில் போய் பார்த்தேன். அவர் சொன்னதன் பேரில் நடிகர் சூர்யா ஸôரை சென்று படப்பிடிப்பில் சந்தித்தேன். அப்போது சூர்யா ஸôர், செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் படப்பிடிப்பில் இருந்தார். நான் சூர்யா ஸôர் அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது பாலா ஸôர் மானிட்டரின் அருகே இருந்தார். அவருக்கு அருகில் ஒருவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மேக்-அப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். சூர்யா ஸôரிடம் சிவகுமார் ஸôர் அனுப்பியதாக கூறினேன். சிவகுமார் ஸôரும் சூர்யாவிற்கு தொலைபேசியில் விஷயத்தை சொல்லியிருந்ததால் உடனே சூர்யா, என்னை இயக்குநர் பாலா ஸôரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காட்சியில் நடிப்பதற்காக டெஸ்ட் ஷூட்டிற்காக மறுநாள் வருமாறு சொன்னார் பாலா ஸôர். கிளம்பும்போதுதான் கவனித்தேன், ரொம்ப நேரமாக பாலா ஸôர் அருகில் உட்கார்ந்திருப்பது நடிகர் விக்ரம் ஸôர் என்று! பிறகு, ""மன்னிக்கணும் ஸôர்...'' என்று கூறி, ""அடையாளம் தெரியவில்லை'' என்றேன். விக்ரம் ஸôர், ""பரவாயில்லை...'' என்று கூறி, அவரும் பாலா ஸôரிடம் என்னை சிபாரிசு செய்தார். பிறகு அனைவரிடம் சொல்லிவிட்டு விடைப் பெற்றேன். அவர் சொன்னபடியே மறுநாள் டெஸ்ட் ஷூட்டிலும், அதற்கடுத்து படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். இப்படத்தின் மூலமாக பாலா ஸôரிடம் நடிப்புக் குறித்து புதுப்புது விஷயங்களை அறிந்து கொண்டேன். படம் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்றது. எனக்கும் பரவலான வாய்ப்புகள் வரத் தொடங்கின. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பேரரசு ஸôர் இயக்கத்தில் விஜய் ஸôருடன் "திருப்பாச்சி' படத்தில் நடித்தேன். இந்தப் படம்தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் மத்தியில் என்னை ஒரு நடிகனாக அடையாளம் காட்டியது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். இப்படம் வெளியான சில மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூருக்குச் சென்றிருந்தேன். அங்கே "முஸ்தபா காம்ப்ளக்ஸ்' என்னும் பெயர் கொண்ட பிரபலமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. அங்கே நான் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது என்னை ரசிகர் ஒருவர் சூழ்ந்து கொண்டார். பிறகுதான் தெரிந்தது அவர் மட்டும் வரவில்லை, அவர் குடும்பமே அங்கே வந்திருக்கிறது என்று! சற்று நேரத்தில் என்னைச் சுற்றி அவரது மொத்த குடும்பமும் சுற்றிக்கொண்டு விட்டது. "திருப்பாச்சி' படத்தைப் பற்றியும், அதில் என்னுடைய நடிப்பு பற்றியும் அவர்கள் பாராட்டினார்கள். அத்தோடு இல்லாமல் அவர்கள் எனக்கு விலையுயர்ந்த "ஐ-பாட்' ஒன்றையும் பரிசாக வழங்கினார்கள். அவர்கள் நமது தமிழ்நாட்டில் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் செட்டிலாகியிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ரசிகர்கள் அவர்கள். விஜய் ஸôருடன் "மதுர', "ஆதி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் "திருப்பாச்சி'யின் மூலமாகத்தான் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். அதற்கு பேரரசு ஸôருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இயக்குநர் அமுதன் இயக்கத்தில் வெளிவந்த "தமிழ்படம்' என்ற படத்தில் முக்கிய போலீஸ் அதிகாரியாக பாத்திரம் ஏற்று நடித்திருப்பேன். அந்தப் படத்தில் பிரபல சீனியர் நடிகர் வி.எஸ்.ராகவன் ஸôரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்த இந்தப் படமும், அந்த நாட்களும் மறக்க முடியாதவை. காரணம், திரைப்படக் கல்லூரியில் நான் நடிப்புப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்து வாய்ப்புக் கிடைக்காமல் போனது இல்லையா? அதற்கு பின்னால் மற்றொரு சம்பவமும் இருக்கிறது. நடிப்புப் பிரிவில் சேர்வதற்கான நேர்காணலுக்கு நான் சென்றிருந்தபோது என்னை நேர்காணல் செய்தவர் வேறு யாருமில்லை சாட்சாத் நடிகர் வி.எஸ்.ராகவன் ஸôரேதான்! அவர்தான், ""உனக்கு நடிப்பு வரவில்லை'' என்று கூறி என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்தார். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். படப்பிடிப்பின்போது ஒரு நாள் வி.எஸ்.ராகவன் ஸôரிடம் அந்த கல்லூரி சம்பவம் குறித்து சொன்னேன். சிரித்துக்கொண்டே அவர், ""அப்போதெல்லாம் நடிப்பின் மீது எல்லோருக்கும் பெரிய மரியாதை இருந்தது. நடிப்பதற்கும் மிகுந்த திறமையெல்லாம் தேவைப்பட்டது. அந்த சூழலுக்குத் தகுந்தவாறு நடந்து கொண்டிருப்பேன். மற்றபடி இப்போதான் நீ நல்ல நடிகனாகி விட்டாயே'' என்று கூறி என்னை பாராட்டினார். அவருடைய பாராட்டும், பேச்சும் நீண்ட நாள் நடிப்பு பிரிவில் படிக்க முடியவில்லையே? என்ற எனது ஏக்கத்தையெல்லாம் தூக்கியெறிந்து விட்டது! மறுபடியும் பாலா ஸôர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு "நான் கடவுள்' படத்தில் கிடைத்தது. சினிமா வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத படம் எது என்று? நீங்கள் கேட்டால் அது "நான் கடவுள்' என்றுதான் சொல்லுவேன். காரணம், அந்த போலீஸ் அதிகாரி பாத்திரத்திற்கு பிரபலமான பல நடிகர்களை தேர்வு செய்து, ஒத்திகை பார்த்த பிறகு, ஒருவரை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தியும் எதுவுமே பாலா ஸôருக்கு பிடிக்காது போகவேதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் போனபோது அந்தக் காவல் நிலைய காட்சியில் நடிப்பதற்காக பிரபல நடிகர் ஒருவருக்கு மேக்-அப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் பாலாவிடம் நேராகச் செல்லாமல் காஸ்ட்யூமரிடம் சென்று, அந்த காட்சிக்குரிய ஆடையைப் போட்டுக்கொண்டு, அந்த ஆடையில் மேல்சட்டை பட்டன்களை மட்டும் போடாமல், பனியன் தெரியும்படியாக அணிந்து கொண்டு பாலா ஸôர் முன்னால் போய் நின்றேன். என்னை மேலும், கீழுமாக பார்த்த பாலா ஸôர், ""நாளைக்குப் படப்பிடிப்புக்கு வந்து விடு'' என்றார். சொன்னபடியே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இந்தப் படத்தில் ஆர்யா ஸôருக்கு மேலான ஒரு கட்டுடலுடன் ஒருவர் தேவைப்பட்டதாலும், அந்த ஆஜானுபாகுவான கட்டுடல் எனக்கிருந்ததாலும்தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "நான் கடவுள்' படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் காவல் நிலையத்தில் நான் உட்கார்ந்திருப்பேன். எனக்கெதிரே சில பிச்சைக்காரர்களும், அருகில் ஆர்யாவும் அமர்ந்திருப்பார்கள். நான் பாலா ஸôர் கூறியபடி அந்தக் காட்சியில் நடித்தேன். ஆனால் அவருக்கு இருபது டேக்குகளுக்கு மேல் போயும் அந்தக் காட்சியில் எனது நடிப்பில் திருப்தியில்லாமல் இருந்தார். இருபது டேக்குகளுக்கு மேல் போய்விட்டதால் எனக்கு பயம் வந்துவிட்டது. நான் பாலா ஸôரிடம் மன்னிப்புக் கேட்டு, ""ஸôர் எதை விரும்புறீங்கன்னு தெரியலை... ப்ளீஸ் கொஞ்சம் நீங்க நடித்துக் காட்டினால் நான் பிடித்துக்கொள்வேன்'' என்றேன். பாலா ஸôர், ""எனக்கு என்ன தேவையோ அதை கண்டிப்பாக உங்களிடமிருந்து எடுத்துக் கொள்வேன். நீங்க பண்ற சினிமா வேற... நான் எடுக்குற சினிமா வேற... நீங்க எதுக்கு ஸôரி சொல்லணும்?'' என்று கூறி விட்டு, அந்தக் காட்சியில் நான் எப்படி உடல் மொழியையும், கண்ணசைவையும் வைத்திருக்க வேண்டும், எந்த இடத்தில் வசனத்தில் வரும் வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் நடித்துக் காட்டினார். அதன்படியே நடித்து அடுத்த ஒரு சில டேக்குகளிலேயே ஓ.கே. வாங்கினேன். இந்தக் காட்சியில் நான் வசனத்தில் ஒரு இடத்தில் வரும் வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்காமல் பேசியதால்தான் பாலா ஸôர் திருப்பி திருப்பி எடுத்திருக்கிறார். இப்படத்தில் நடித்ததற்குப் பிறகுதான் எனக்கு நடிப்பின் ஆழமும், பன்முகத் தன்மையும் புரிபட ஆரம்பித்தது. இப்படத்திற்கு பிறகு, எனக்கு மலையாளத்தில் பிரபல இயக்குநரான ஜோஷியின் இயக்கத்தில் "ராபின் ஹுட்' படத்திலும், தெலுங்கில் "ஹை ஸ்கூல்', கன்னடத்தில் "நாயகா' போன்ற வெற்றிப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பாலா ஸôரின் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்ததற்குப் பிறகுதான் என்னுடைய நடிப்பில் ஒரு பெருத்த மாறுதல் வந்தது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் நடிப்பின் ஆழத்தை நான் பாலா ஸôரின் படங்களில் நடித்ததால்தான் கற்றுக் கொண்டேன் என்றால் அது மிகையில்லை. இதுவரை சுமார் அனைத்து மொழிகளிலும் சேர்த்து எண்பத்தைந்து படங்களில் நடித்திருப்பேன். இதில் எழுபத்தி நான்கு படங்களில் மட்டுமே போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். பொதுவாக, சினிமாத்துறையில் ஒருவருக்கு வெற்றிகரமான பாத்திரப்படைப்பு கிடைத்துவிட்டால் தொடர்ந்து அதே மாதிரியான பாத்திர படைப்பையே அவருக்கு வழங்குவார்கள். அதுதான் எனக்கும் நடந்தது. சமீபத்தில்தான் என்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் வகையில் சில படங்களில் மாறுபட்ட பாத்திரங்கள் கிடைத்திருக்கிறது. இனி நீங்கள் திரையில் இந்த ராஜேந்திரன் என்கிற ராஜேந்திர நாத்திடமிருந்து பன்முக நடிகனை அடையாளம் காண்பீர்கள். நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கான பதிலையும் இப்போது சொல்கிறேன். இவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய பார்வையில் மிகச்சிறந்த இயக்குநர்கள் என்றால் அது வரிசைப்படி பாலா, ஜோஷி, சிம்பு ஆகிய மூவரும்தான்! இவர்கள்தான் என்னுடைய நடிப்பின் பாதையை ஒழுங்குப்படுத்தி, என்னை அதில் எவ்வித சிரமமுன்றி பயணிக்க வைத்தவர்கள். என் திரை வாழ்க்கையில் நான் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்!

Comments

Popular Posts