திரை -3

மிழ் திரைப்படச் சூழலில் குறிப்பாக திரைப்படங்களைத் தாண்டி குறும்படங்களிலும், ஆவணப்படங்களிலும் கவனம் செலுத்துவது என்பது அரிதானதே. அவ்வகையில் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் பயின்று, இயக்குநராக பரிணமித்து, தொடர்ந்து குறும்பட/ஆவணப்பட சூழலில் இயங்கி வருபவர் அருண்மொழி. உலக திரைப்பட அரங்கில் இவருடைய பல ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் பரவலாகப் பேசப்பட்டவை. அதன் தொடர்ச்சியாக சர்வதேச இயக்குநர்களோடு நட்பில் இருப்பவர். திரைப்படக் கல்லூரி உருவாக்கிய பல ஆளுமைகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே சிறப்பம்சம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அருண்மொழி இதில் விதிவிலக்காக பன்முகத் தன்மையை பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியத்திலும், திரைத்துறையிலும் ஜாம்பவான்களான பலரை ஆவணப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு ஒருவருக்கு உண்டென்றால் அது நிச்சயமாக அருண்மொழியையேச் சாரும்! அது ஒரு மதியவேளை. தன்னுடைய ஆவணப்படங்கள் குறித்து விவாதிப்பதற்காக நம்மை சென்னை - நுங்கம்பாக்கத்திலுள்ள அலையன்ஸ் பிரான்ஸிற்கு வரச் சொல்லியிருந்தார் அருண்மொழி! அவருடைய வருகைக்காக காத்திருந்தோம். சென்னை அலையன்ஸ் பிரான்ஸிஸ் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களையும், சிற்பங்களையொட்டி வளர்ந்திருக்கும் குரோட்டான் செடிகளையும் கவனித்தபடி நின்று கொண்டிருந்தோம். விதவிதமான மரங்களோடு ரம்மிய சூழலில் வளாகம் அமைதியாக நின்று கொண்டிருக்க, அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு என்பதால் ஆட்களின் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் தனது நண்பரோடு இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்த அருண்மொழியிடம் கலந்துரையாடினோம்.
""முதன்முறையாக நான் இயக்கிய ஆவணப்படம் "நிலமோசடி' (1984). இது அப்போதைய பிரபல அரசியல்வாதி ஒருவரின் பினாமி நிலங்கள் குறித்து எடுக்கப்பட்ட தமிழின் முதல் புலனாய்வு ஆவணப்படமாகும். பிறகு இரு திரைப்படங்கள் இயக்கினேன். அதன் பிறகு நான் பல குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் எடுக்கத் தொடங்கினேன். தற்போதும் இவ்வகை முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வகையில் நான் எடுத்த படங்களுள் முக்கியமானவை ஆவணப்பட வரிசையில் கவிஞர் நகுலன் பற்றிய "ஐ கான்', கவிஞர் இன்குலாப்பின் "மக்கள் கவிஞர்' கோவை ஞானி, ராஜம் கிருஷ்ணன், சாமிநாத ஆத்ரைய்யா, புரிசை கண்ணப்ப தம்பிரான், ஸ்தபதி சிற்பி தட்சினாமூர்த்தி, கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் போன்றவர்களைப் பற்றிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றி ஆவணப்படத்தை தெருக்கூத்து, ஒப்பனை, குடும்பம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் முப்பது நிமிடங்கள் ஒதுக்கி ஒன்றரை மணிநேர ஆவணப்படமாக எடுத்தேன். தாமிரபரணியில் நடந்த மாஞ்சோலை சம்பவத்தை மையமாக வைத்து, "விசாரணைக்கமிஷன் ஜாக்கிரதை' என்ற ஆவணப்படத்தை 1997-ல் இயக்கினேன். இதுத் தவிர்தது "நிர்வாண்' (2000), "நிலமோசடி' (1984), "இரண்டாம் பிறவி', "கருத்தத் தெய்வத்தைத் தேடி' போன்ற ஆவணப்படங்களையும் இயக்கினேன். "இசைவானில் இன்னொன்று', "தர்மர்', "ஐ.என்.ஏ.', "சோலோ பெர்ஃபார்மன்ஸ்', "நிலமோசடி' போன்ற ஆவணப்படங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவைப் பற்றி "இசைவானில் இன்னொன்று' என்ற ஆவணப்படத்தை சுமார் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக படமாக்கியிருந்தேன். அந்த சமயத்தில் ஃபிலிம் சேம்பரில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இளையராஜாவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததோடு, அதனை நான் இயக்கினால் சரியாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இதனை இளையராஜா அவர்களின் அண்ணனான ஆர்.டி.பாஸ்கர் அவர்களும் ஆதரித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ""லண்டனிலிருந்து "பில்ஹர்மோனிக் இசைக்குழு' ஒன்று தமிழகம் வருகிறது. அவர்களுக்கு இளையராஜா பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். சீக்கிரமாக இளையராஜாப் பற்றிய ஆவணப்படத்தை எடுத்துக் கொடுக்க முடியுமா?'' என்று எஸ்.பி.முத்துராமன் ஸôர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஏறக்குறைய பாதிப்படத்தை நான் ஏற்கனவே முடித்துவிட்டிருந்ததால் குறுகிய நாட்களுக்குள் அப்படத்தை முடித்தேன். இதில் பிரபலங்கள் பலரும் இளையராஜாவைப் பற்றி தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கர்நாடகப் இசைப் பாடகரான செம்மங்குடி சீனிவாச ஐய்யர், இளையராஜா ஸôர் பற்றிக் கூறிய வார்த்தைகளைச் சொல்லலாம். அவர் பேசியதைப் பார்த்துவிட்டு இளையராஜா அவர்கள் நெகிழ்ந்து போய் என்னைப் பாராட்டினார்கள். அதுப்போல, கர்நாடக இசைப்பாடகரான டி.வி.கோபாலகிருஷ்ணன், இளையராஜா குறித்து கூறிய விஷயங்களும் இசைத்துறையில் முக்கியமானவை. இவரிடம்தான் இளையராஜா அவர்கள் கர்நாடக இசையை முறைப்படிக் கற்றுக்கொண்டார் என்பது கவனித்தக்க ஒன்று! "தர்மர்' (1997) என்னும் ஆவணப்படம் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள களையூர் கிராமத்தில் வாழும் ஒரு சிறப்பம்சம் வாய்ந்த தர்மர் என்னும் பெயர் கொண்ட சமையல்காரரைப் பற்றியது. இவர் ஆறு வகையான ரசத்தை ருசியாக சமைப்பதில் தேர்ந்தவர். இவர் ரசம் வைக்கும் முறைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று வெளிநாட்டினரான எனது நண்பர்கள் விரும்பி, இவ் ஆவணப்படத்தை தயாரித்தனர். நாங்கள் அந்த ஊருக்கு அருகிலுள்ள ஹோட்டலில் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்குமேல் தங்கியிருந்து இந்த ஆவணப்படத்தை எடுத்தோம். இந்த படத்தை எடுக்கும்போது எங்களுக்கு சில உண்மைகள் தெரிய வந்தது. ஒன்று அவருடைய பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனதால்தான் அவர் சமையல்காரராக மாறினார் என்பதும், வீட்டில் எந்த ஒரு சூழலிலும் (மனைவி உடல்நலமில்லாமல் படித்திருந்தாலும்கூட) அவர் ஒரு முறைக்கூட சமைத்ததே இல்லை என்பதையும் அறிந்து கொண்டோம். இவர் அந்த ஊரில் தலைமை சமையல்காரராக இருந்தார். இவரைப் போலவே பலருக்கு அந்த ஊரில் சமைப்பதுதான் பிரதான தொழிலாக இருந்தது. தர்மர் சமைப்பது மட்டுமின்றி, தெருக்கூத்து கலைஞராகவும் இருந்தார். பெரும்பாலும் அவர் நடித்த நாடகத்தின் பெயர் "நளபாகம்'. அதில் நளன் பாத்திரத்தில் மட்டும்தான் தோன்றி நடிப்பாராம். இந்த ஆவணப்படத்தில் இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. களையூர் என்கிற இந்த ஊரின் பெயரை ஒரு பிரபல வார இதழ் "கலையூர்' என்று மாற்றி கூற, தற்போது அந்த ஊர் மக்களும் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு "கலையூர்' என்றே குறிப்பிடுகின்றனர். கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ் நாடகச் சூழலில் நிகழ்ந்து வந்திருக்கிற நாடகங்கள், அவை நாடகச்சூழலில் என்னவிதமான மாற்றங்களை உண்டுபண்ணியிருக்கின்றன என்பதைப் பற்றிய ஆவணப்படம்தான் "சோலோ பெர்ஃபார்மென்ஸ்' (2002). இதில் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த ந.முத்துசாமியின் நாடகங்களான "நல்லவள்', "நாரை சொன்ன கதை', "தூத கடோத்கஜன்', "கடவுள்', "இங்கிலாந்து' கவிஞர் இன்குலாப்பின் "அவ்வை', "மணிமேகலை', "குறிஞ்சிப்பாட்டு' நாடகங்கள் மற்றும் நாடகக்கலைஞர் செ.ராமனுஜம் திருக்குறுங்குடியில்லுள்ள கோவிலில் நடத்தும் "கைசீகி' உள்ளிட்ட நாடகம் உட்பட பல நாடகங்களை இவ் ஆவணப்படத்தில் தொகுத்திருக்கிறேன். இதில் நாடகங்கள், நாடகக் கலைஞர்களின் பேட்டிகள், விமர்சனங்கள் என வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து ஆவணப்படுத்தியிருக்கிறேன். இந்த ஆவணப்படம் செக்கோஸ்லோவியாவின் தலைநகரமான "ப்ராக்' திரைப்பட விழா, ஹங்கேரி புடாபெஸ்ட் திரைப்பட விழா மற்றும் ஜெர்மனியின் பெர்லின் திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டது. "ஐ.என்.ஏ' என்னும் தலைப்பில் இந்திய தேசிய ராணுவப்படையை மையமாக வைத்து, ராணுவத் தளபதி சுபாஷ் சந்திரபோஸின் படையில் இருந்த ராணுவ வீரர்களைப் பற்றிய ஏறக்குறைய 85 பேரின் நேர்காணல்களைத் தொகுத்தேன். இதை முடிப்பதற்கு போதிய பணவசதி இல்லாததால் பாதியிலே நிறுத்திவிட்டேன். அப்போது அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சொர்ணவேல் பிள்ளை எனக்கு அறிமுகமானார். இவர் புனே திரைப்படக்கல்லூரி மாணவராவார். இந்தப் படம் குறித்து அவர் கேள்விபட்டு, அவரே முன்வந்து மீதிப்படத்தை அவருடைய சொந்த செலவில் எடுத்து முடித்தார். இந்த ஆவணப்படத்தில் "கேப்டன்' லட்சுமி உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ராமுத்தேவர் பற்றிய குறிப்புகள் இந்த ஆவணப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பொதுவாக இயக்குநர்கள் வெகுஜன ரசனைக்கான திரைப்படங்களை இயக்கினாலும் அவ்வப்போது குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கினால் நல்லது. ஏனெனில் ஒரு இயக்குநரின் பன்முக படைப்பாற்றல் இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமாகத்தான் நாம் அடையாளம் காணப்படும். இயக்குநர் என்கிற ஆளுமையும் இதுபோன்ற முயற்சிகளால் இன்னும் செழுமைப்படுத்தப்படும். நம்மூரிலிருந்தும், உலக சினிமாவிலிருந்தும் நிறைய இயக்குநர்களை அடையாளம் காட்ட முடியும். உதாரணமாக, ப்ரான்சிஸ் த்ரூஃபா, கோடார்டு, லூயி பியூனியல், கீஸ்லோவெஸ்கி, அகிரா குரோசோவா, அடூர் கோபாலகிருஷ்ணன், பாலு மகேந்திரா, அரவிந்தன், சத்யஜித்ரே, மிருணாள் சென், கெüதம் கோஷ், மணி கவுல் போன்றவர்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். தங்களது கமர்ஷியல் படங்களுக்கு இடையேயும் இவர்கள் குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்குகிறார்கள். மக்களோடு எங்களை தொடர்பு படுத்திக்கொண்டு எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ள இப்படங்கள் பெரிதும் வழிவகுக்கின்றன. மேலும் எங்களுடைய ஈகோவைத் தொடைத்தெறிந்து விட்டு, ஒரு புதிய மனிதனாக, ஒரு புதிய படைப்பாளியாக நாங்கள் மாறுவதற்கு இவை பயன்படுகின்றன'' என்று தங்களின் ஆவணப்பட முயற்சிக் குறித்து கூறுகிறார்கள். மேலும், அவர்களுக்கு இது ஒரு ஆத்மார்த்தமான தேடலாகவும் இருக்கிறதாம். ""திருவண்ணாமலைக்குப் போய் வரும்போது ஒவ்வொரு முறையும் நான் என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன். புதுப்புது இசையை உருவாக்குகிறேன்'' என்று இசைஞானி குறிப்பிடுவதைப்போல, இவர்கள் ஆவணப்பட / குறும்பட முயற்சிகளுக்குப் பிறகு படம் இயக்குகிறார்கள். தமிழின் முக்கிய இயக்குநரான பாலு மகேந்திரா கூட இதுக்குறித்து ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். பிள்ளைகளால் கைவிடப்பெற்ற பெற்றோர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில், ஏறக்குறைய இரண்டு மாத காலங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தி எடுத்தார். இந்த ஆவணப்பட இயக்குதலுக்குப் பிறகு அவர் பேசும்போது, ""புனித யாத்திரைக்கு சென்று வந்தது போல, என்னுடைய இந்த ஆவணப்பட இயக்கம் இருந்தது'' என்றார். இதேபோன்று இயக்குநர் பாரதிராஜாவும் ஒரு ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேசும்போது, ""சமூகத்தின் மோசமான பிரச்சினைகளை மையமாக வைத்து ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் இயக்க வேண்டும் என்கிற நோக்கோடுதான் நான் சென்னைக்கு வந்தேன். ஆனால் நான் தமிழ் சினிமாவில் திசைமாறி போய்விட்டேன்'' என்று ஆதங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் குறும்படங்களை ஒரு விசிட்டிங் கார்டாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கிராமத்தில் புதியதாக நாடகம் போடும் புதியவர்கள் போல, நிறைய பேர் தற்போது குறும்படங்கள் இயக்க வருகிறார்கள். சமுதாய நோக்கம் குறித்த எந்த தெளிவும் இல்லாமலே படத்தை இயக்குகிறார்கள். அவர்களிடம் சினிமா மொழி, காட்சி, கோணம், பாத்திரப்படைப்பு, கதையின் தன்மை போன்ற திரைக்கதைக் குறித்த எந்த தெளிவும் இருப்பதில்லை. அதே சமயத்தில் குறும்படத்திற்கான எந்த நோக்கமும் இருப்பதில்லை. இவர்களின் எண்ணிக்கைதான் தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது. என்னுடைய ஆவணப்பட வரிசையை சிறப்பம்சம், விமர்சனப் பார்வை என இரு பிரிவுகளாக நீங்கள் பிரித்து பார்க்கலாம். விமர்சனப் பார்வையுடன் அணுகிய ஆவணப்படங்களாக எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி மற்றும் எஸ்.குருமூர்த்தி போன்றவற்றைக் குறிப்பிட்டு சொல்லலாம். நகுலன், கோவை ஞானி, இன்குலாப், ராஜேந்திர சோழன், ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களைப் பற்றிய ஆவணப்படங்களைக் சிறப்பம்சம் குறித்த பிரிவில் வகைப்படுத்தலாம். இலக்கியத்தில் கட்டுரை, சிறுகதை,கவிதை,நாவல் என்று இயங்குவது போல, சினிமாவில் ஆவணப்படத்தை கட்டுரைக்கும், குறும்படங்களை சிறுகதைக்கும் ஒப்பிட்டு பேசலாம். கிளாச்சிக்கல் சினிமாவை நாம் ஒரு கவிதையோடு ஒப்பிடலாம். கவிதை பற்றிப் பேசும்போது எனக்கு கவிஞர் நகுலன் பற்றிய ஞாபகம்தான் வருகிறது. நகுலனை சுமார் நான்கு முறை திருவனந்தபுரத்தில் அவருடைய வீட்டில் சந்தித்து, அவரைப் பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனக்குப் மிகப்பெரும் மனநிறைவைத் தந்த ஆவணப்படங்களுள் "நகுலன்' (2004) படமும் ஒன்றாகும். நகுலன் தன்னுடைய கவிதைகளில் பட்டாம்பூச்சிப் பற்றியும், சுசிலா என்கிற பாத்திரம் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். நகுலனைச் சந்திக்க அப்படி ஒரு முறை சென்றபோது, அவருடைய வீட்டிலிருந்து ஆறு தெருக்கள் தள்ளி, ஒரு பேருந்து நிறுத்தத்தில் நான் இறங்கியபோது பட்டாம்பூச்சி ஒன்றைக் கண்டேன். அப்போது கையிலிருந்த ஹாண்டி கேமராவைக் கொண்டு, அந்த பட்டாம்பூச்சியை படமெடுக்க ஆரம்பித்தேன். பட்டாம்பூச்சி ஒவ்வொரு தெருக்களாக பறந்து, பறந்து சென்று கொண்டே இருந்தது. அது ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் பூவிலோ, இலைகளிலோ உட்கார்ந்து சிறிது வினாடிகளுக்குப் பிறகு மற்றொரு பூவைத் தேடி பறக்க ஆரம்பித்துவிடும். அப்படி அது பறந்து போகும் சில தெருக்களிள் மற்ற பட்டாம்பூச்சிக் கூட்டத்திலும் அது பறந்து செல்லும். நான் பின்தொடர்ந்த பட்டாம்பூச்சியை தவற விட்டுவிடக் கூடாது என்கிற அவதானிப்பிலே அந்த பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்தேன். இறுதியாக அந்த பட்டாம்பூச்சி ஓரிடத்தில் இருந்த மஞ்சள் நிறப் பூவில் வெகுநேரம் அமர்ந்திருந்தது. என்னால் அந்த காட்சியை நம்பமுடியவில்லை. நான் வியப்பில் கண்கள் விரிய அந்தக் காட்சியைப் பார்த்து நின்று கொண்டிருந்தேன். அது நகுலனின் வீடு. நகுலன்தான் ஒரு பட்டாம்பூச்சியைத் தயார் செய்து, எனக்கு வழிகாட்ட அனுப்பியிருக்கிறார் என்று நான் அப்போது நினைத்துக் கொண்டேன்.
(தொடரும்)

Comments

  1. உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் மிக முக்கியம் - சு.புதுமலர் பிரபாகரன் 9942133644

    ReplyDelete
  2. ராமுத்தேவர் பற்றிய ஆவணப்படம் குறித்து பேச வேண்டும்

    ReplyDelete
  3. மிகவும் அவசரம்

    ReplyDelete

Post a Comment

Popular Posts