சினிமா: 15


(நிறங்கள்)


டைமழை பெய்து கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அலுவலக கேண்டினில் அமர்ந்து பூரியையும், மசாலாவையும் ருசித்துக் கொண்டிருந்தபோது எதிரே அமர்ந்திருந்த நண்பர், ""வாழ்க்கை எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது. ஒருபோதும் அது நாம் நினைப்பது மாதிரி இருப்பதில்லை இல்லையா?'' என்றார். இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை இருவருமே ஓரளவிற்கு உணர்ந்திருந்ததால் நாங்கள் மெüனமாகவே இருந்தோம். நண்பரின் வார்த்தைகளைப்போலவே வாழ்க்கையைப் பற்றிய பெரும் கனவுகள் நம்மிடம் இருக்கின்றன. கனவுகளற்ற மனிதர்கள் என்று யாரேனும் இப்பூமியில் இருக்கிறார்களா? நமது உடலின் பாரத்தை விட, கனவுகளின் பாரத்தைத்தானே நாம் அதிகம் சுமந்து திரிகிறோம். நீண்ட நாட்களாக ஒரு கேள்வி எம்மிடம் தங்கியிருக்கிறது. கனவுகள் வருவது கருப்பு, வெள்ளையாகவா? இல்லை வெவ்வேறு நிறங்களிலா? அல்லது நிறமற்ற கனவுகள் என்று ஏதேனும் இருக்கிறதா? கனவில் வரும் நிறங்கள் பற்றிய அபிப்ராயங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபட்டே இருக்கின்றன.சிறு வயதில், பட்டம் ஒன்றை வாங்கி, வானில் வெகு தூரம் பறக்க விட வேண்டுமென்ற ஆசை. இல்லையில்லை கனவு வெகுநாட்கள் மனதில் மையம் கொண்டிருந்தது. நகரத்திற்கு குடிபெயர்ந்த பிறகு, சில நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியில் நின்று கொண்டு வானத்தில் அரிதாய் பறக்கும் பட்டங்களைப் பார்க்கும்போது மனதில் சின்ன ஏக்கம் தோன்றும். இவை போன்ற சின்ன சின்னக் கனவுகள் கூட கைக்கூடாமல் போன வலியின் வடுக்கள் நம் எல்லோர் மனதிலும் உண்டுதானே? வாழ்க்கையை வசப்படுத்தியவர்கள் இங்கே எத்தனைப் பேர் இருக்கிறார்கள். ஒரு வேளை நாம் கண்ட வண்ண வண்ண கனவுகள் எல்லாம் நிறைவேறிவிட்டால் என்னவாக இருக்கும் வாழ்க்கை நமக்கு? நகரத்தின் சாலையொன்றின் ஓரமாக ஒரு இளம் பெண்ணும், பையனும் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். பெண், தன் கையில் வைத்திருக்கும் வயலினிலிருந்து இசையை மீட்டுகிறாள். பையன் சாலையில் சாக்பீஸ் கொண்டு எதையோ வரைகிறான். வழிப்போக்கர்களில் சிலர் அவன் வரைந்ததை வேடிக்கைப் பார்க்கின்றனர். அதில் ஒருவன் அவர்களுக்கு உதவும் பொருட்டு தன் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் எதையோ தேடி எடுப்பதைபோல பாவ்லா காட்டுகிறான். அவன் எடுப்பதோ தலை வாரும் சீப்பு! கவனமாக, தன் தலையை வாரிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்கிறான். மற்றவர்களும் நகர்கிறார்கள். இப்போது, தரையில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞன், சாப்பிட்டு ரெண்டு நாள் ஆயிற்று என்கிறான். வருத்தத்துடனே அதை தன் காதில் வாங்கிக் கொள்கிறாள் அவள். பிறகு தன் அருகில் இருக்கும் சிறிய ரேடியோ பெட்டியை ஆன் செய்கிறான் அவன். ரேடியோவில் இருவர் பேசிக் கொள்கிறார்கள். ஒருவர் பேட்டி காணும் நபரிடம், நம் நாட்டு நிலைமையைப் பற்றிக் கேட்கிறார். அதற்கு அவர்,"உலகிலேயே மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர். நம் நாட்டில் மட்டும் ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் வாழ்கிறார்கள் என்றும் ஒவ்வொரு வருடமும் குளிரால் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கிறார்கள். இந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் மட்டும் ஆயிரத்து நூறு குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியால் இறந்துள்ளனர்'' என்று புள்ளி விவரம் சொல்கிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன? என்ற கேள்விக்கு, ""நம் மக்கள் கேள்வி மட்டும் வக்கனையாக கேட்பார்கள். ஆனால் ஒழுங்காக வரி மட்டும் கட்டமாட்டார்கள்'' என்று கூறி,பேட்டியை முடித்துக் கொள்கிறார். சாலையில் அமர்ந்திருக்கும் இளைஞன் இந்த விஷயத்தைக் கேட்டு, வருத்தமடைகிறான். பிறகு, ஏதோ முடிவெடுத்தவனாக, அந்த சாலையில் புதிய ஓவியம் ஒன்றை வரையத் தொடங்குகிறான். அது நமது தேசத்தின் வறுமையை பறை சாற்றும்படியான ஓவியம். முதன் முறையாக ஒரு ரூபாய் நாணயம் அந்த ஓவியத்தின் மீது விழுகிறது. அருகில் இருக்கும் பெண் தன் வயலினை எடுத்து மீட்டியபடியே "சாமி படம் வரையலாமே' என்கிறாள். அவனோ,"இனி சாமி படமெல்லாம் வரையப்போவதில்லை. எனக்கு ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது' என்று நம்பிக்கையுடன் கூறி, அவளிடம் சாக்பீஸ் கேட்கிறான். அவள் கொடுக்கும் சாக்பீûஸ அவன் வாங்க முற்படுகையில், அது கை நழுவி சாலையில் விழுந்து விடுகிறது. சாக்பீஸ் கைக்கு வராததால் கண் தெரியாத அந்த இளைஞன், சாலையில் தன் கைகளால் சாக்பீûஸ தேடுகிறான். சாக்பீஸ் வரையும் சப்தம் கேட்காததால், வயலினை வைத்து விட்டு அவளும் சாலையில் இறங்கி துழாவுகிறாள். பிறகு சாக்பீஸ் அவன் கைகளுக்குள் சிக்குகிறது. சந்தோஷத்துடன் தன் தேசப்படத்தை வரைந்து அதனை வண்ணங்களால் நிரப்புகிறான். இதுவரை கருப்பு, வெள்ளையில் இருந்த வாழ்க்கை மெல்ல மெல்ல வண்ணங்களால் மாறத் துவங்குகையில், பலத்த காற்று வீசத் தொடங்க,வெகுண்டு வரும் புயலை எதிர்கொள்ள முடியாமல் இருவரும் தத்தளிக்கிறார்கள். இருள் அவர்கள் வாழ்வை சூழ்கிறது. புயல் ஓய்ந்த வேளையில், அந்த சாலையில் அவர்கள் வரைந்த ஓவியம் மட்டும் தனித்து நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.

தன் வாழ்க்கையின் வண்ணங்கள் தொலைந்தாலும், தன் தேசத்திற்கு வண்ணமிட்டு அழகுப் பார்க்கும் ஒரு குருட்டு இளம் ஜோடியின் வாழ்க்கையே "நிறங்கள்'. கருப்பு, வெள்ளையில் துவங்குகிற அவர்களது வாழ்க்கை இறுதியில் வண்ணங்களால் நிறைவுறுவது கவித்துவமான முடிவு. இந்திய தேசத்தில் வறுமையின் கோர முகத்தை வானொலியின் வழியே, புள்ளி விவரத்துடன் வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டிற்குரியது. குருடர்களாக நடித்திருக்கும் சந்திரமெüலியும், ஐஸ்வர்யாவும் கவனம் ஈர்க்கிறார்கள். அதைவிட வேடிக்கைப் பார்ப்பவராக வந்து, தலைவாரும் அந்த மனிதரே மனதில் அதிகம் நிற்கிறார். அவரின் இயல்பான நடிப்பு யதார்த்தமாக பதிவாகியிருக்கிறது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். சமூக நோக்கோடு ஒரு கதையை சொல்ல வந்திருக்கும் இயக்குனர், சில இடங்களில் காணப்படும் முரண்பாடுகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கும். மற்றபடி சில பிழைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் இக்குறும்படம் வரவேற்கத்தக்க முயற்சியே!
சென்னை - விவேகானந்தா கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரான ஸ்ரீகாந்தன் இயக்கிய மூன்றாவது குறும்படம்தான் "நிறங்கள்'. இக்குறும்படம் சத்யபாமா பல்கலைக்கழகம் நடத்திய தேசிய அளவிலான குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்ட்ஸ் அண்ட் கம்பைன்ஸ் இக்குறும்படத்தைத் தயாரித்திருக்கிறது.

Comments

Popular Posts