திரை - 4

மிழ் சினிமாவில் வில்லன் பாத்திரங்கள் பெரும்பாலும் தன் உடல் வலிமையைக் காட்டியோ, அல்லது உரக்கப் பேசியோ, பயமுறுத்தியோ, தன்னுடன் பெரும் ஆட்களைத் திரட்டிக் கொண்டோ நாயகனையோ, நாயகியையோ மிரட்டும். அல்லது எச்சரிக்கும். ஆனால், ஒடிசலான தேகம், கூர்மையான கண்கள், கவர்ந்திழுக்கும் உடல்மொழி, அளவறிந்த மாறுபட்ட வசன உச்சரிப்பு, மிகையில்லா நடிப்பு என தமிழ் சினிமா வில்லன் பாத்திரத்திற்கு ஒரு புதிய வடிவத்தையும், ஏற்கனவே கட்டமைக்கப் பட்டிருந்த விதிகளையும் உடைத்தெறிந்துவிட்டு உள்ளே நுழைந்தவர் நடிகர் ரகுவரன். சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பிரிவில் சேர்ந்த சில மாதங்களிலேயே தமிழ் சினிமாவிற்குள் கொண்டுவரப்பட்டவர். தனது நடிப்பிற்கு சரியான தீனி கிடைக்காமல் வெகுநாட்கள் மனப் புழுக்கத்திலும், தேடலிலும் அலைந்த கலைஞன்! தான் ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு, தான் மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக மதுவின் உதவியை நாடி, பிறகு, அது மட்டுமே நெருக்கமான நண்பனாக மாறிப்போன வரலாற்றுச் சோகத்தின் துயரக் கலைஞன் ரகுவரன் மட்டுமே என்றால் அது மிகையாகாது. வாரத்தின் இறுதிநாட்கள் ரகசியம் மிகுந்தவை. அதுவும் ஞாயிற்றுக் கிழமையில் என்ன மாதிரியான சூழல் நிலவும் என்பதை யாரும் தீர்மானமாக யூகிக்க முடியாது. அப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமையின் பரபரப்புக்களுக்கு மத்தியில் நடிகர் ரகுவரனின் நினைவலைகளைத் தேடி அலைந்ததில் சற்று மனமும், உடலும் சோர்வுத் தட்டியிருந்தது. இயக்குநர் ஹரிஹரினிடம் சில நினைவலைகளைத் அறிந்து கொண்டிருந்தோம். நினைவலைக்கு இன்னும் விஷயங்கள் தேவைப்பட்டிருந்தது. ஆகவே, இயக்குநர் அருண்மொழியை தொடர்பு கொண்டிருந்தோம். ரகுவரனின் திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் மிக நெருக்கமாக பழகியவர்களில் அருண்மொழி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ரகுவரனின் முதல் திரைப்பட பிரவேசத்திலிருந்து, வாழ்வின் இறுதிப்பயணம் வரை தொடர்ந்து பயணித்தவர். ரகுவரனின் டைரியில் பல பக்கங்களில் பதிவு செய்யுமளவிற்கு, அருண்மொழி ஏராளமான நினைவுகளைத் தன் மனப்பதிவில் சேகரித்து வைத்திருந்தார். இன்னவென்று சொல்ல முடியவில்லை. சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலின் இடையேயும், காலையிலிருந்து தென்றல் சுழன்று அடித்தபடியே இருந்தது. சூட்டிற்கும், குளுமைக்கும் இடையேயான ஊடலின் சங்கமமாக எனக்குத் தென்றலின் வரவு தோன்றியது. ஞாயிறு மாலை. ""கோடம்பாக்கம் - லிபர்டி தியேட்டரின் அருகே சர்குலர் ரோட்டில், நாற்பத்தியொன்றாவது வீட்டின் மாடியில் நடக்கும் மேடை நாடக கலைஞரான விநோதினியின் தனி நபர் நாடக நிகழ்விற்குப் பிறகு, ரகுவரன் குறித்து உரையாடலாம்'' என்றிருந்தார் அருண்மொழி. நாங்கள் மொட்டை மாடி நாடக அரங்கிற்குள் செல்லும்போது ஏறக்குறைய இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஆஜராகியிருந்தனர். முதலில் எங்களை வரவேற்றவர் ரவிசுப்பிரமணியனும், முன்னாள் பேராசிரியையான சந்திரலேகா அம்மாளும்தான் (விநோதினியின் தாயாரும் கூட) பிறகு பாரவி உள்ளிட்டோரும் இலக்கிய செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், தென்றல் மிக வேகமாக சோலோ நடனம் எங்களிடையே ஆடிக் கொண்டிருந்தது. நாங்கள் அந்த ரம்மியமான மாலை வேளைச் சூழலை ஒருவருக்கொருவர் விவாதிக்காமல் மனதிற்குள் ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தோம். மொட்டை மாடிதான் என்றாலும் எல்லா இடமும் ஒரே சம தளமாக இல்லாமல் அவற்றில் பெரும்பகுதியை புல்தரையாக்கி அவற்றினிடையே குரோட்டான் செடிகளும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண் யானைப் பொம்மைகளும் நடப்பட்டிருந்தன. தலை ஒடிந்த யானையின் தோள் மீது சாயந்தபடி நாம் சூழலை நோட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில் எழுத்தாளர் அஜயன்பாலாவும் வந்து சேர்ந்து கொண்டார். சில மணித்துளிகளில் நாடக ஆசிரியர் வெளி ரங்கராஜனின் முன்னுரையோடு, எழுத்தாளர் பாமாவின் "சாமியாட்டம்' சிறுகதையொன்று கூத்துப்பட்டறையைச் சேர்ந்த விநோதினியின் நடிப்பில் நிகழ்ந்தது (இந் நாடகத்தை அவரே இயக்கவும் செய்திருந்தது தனிச்சிறப்பு!) தலித் பெண்களிடையே நிகழும் குடும்ப வன்முறையை மிக நேர்த்தியாகவும், புதிய உத்தியோடும், வலிமையாகவும் தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தார் விநோதினி. அவருடைய உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஆடை வடிவமைப்பு, அரங்க வடிவமைப்பு என யாவும் ஒரு தேர்ந்த இயக்குநரின் திறமையை பறைசாற்றின. இருள் சூழ்ந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு, ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு நாங்கள் கலைந்தோம். ஒரு சிறிய தேநீர் இடைவேளைக்குப் பிறகு, லிபர்டி தியேட்டரின் வாசலில், தெரு விளக்கின் வெளிச்சத்தில் அருண்மொழி, ரகுவரனின் நினைவலைகளில் மூழ்கினார். நாம் குறிப்பெடுக்கத் தொடங்கினோம்.
நினைவலை: 5
அது 1982ம் வருடத்தின் துவக்கம். "ஏழாவது மனிதன்' திரைப்படத்திற்குப் பிறகு நானும், ரகுவரனும் பேச்சுலர் என்பதால் அப்போது லியோ தியேட்டர் பின்புறத்திலுள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். இருவருமே கல்லூரியில் படிக்கும்போது நண்பர்கள் என்பதால் இருவரும் ஒன்றாகத்தான் டூவிலரில் சுற்றிக் கொண்டிருப்போம். "ஏழாவது மனிதன்' படத்திற்குப் பிறகு ரகுவரன் மூன்று வருடங்கள் படமில்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் ஒளிப்பதிவாளர் சிவன், செம்மங்குடி சீனிவாச ஐய்யரை மையமாக வைத்து படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு உதவியாளராக சுமார் இரண்டு வருடங்கள் வேலைப் பார்த்தேன். இந்த பழக்கத்தை வைத்து, சிவன் ஸôரிடம் ரகுவரனை அறிமுகப்படுத்தினேன். ஒளிப்பதிவாளர் சிவனின் அண்ணனான சங்கீத் சிவனை பாம்குரோவ் ஹோட்டலில் சந்தித்துப் பேசினோம். இச் சந்திப்பிற்குப் பிறகு, அவர் தன்னுடைய படமான "யூத்'தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். இப்படம் மலையாளத்தின் முக்கிய படங்களுள் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில், ஸ்ரீவித்யாவுடன் ஜோடி சேர்ந்து, ரகுவரன் "தெய்வத்தின்டே விக்குருதிகள்' என்னும் படத்தில் நடித்தார். இப்படத்தில் நடித்த ரகுவரனிற்கு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தவறிப்போனது. இதனிடையே நாங்கள் இருவரும் ஒவ்வொரு படக் கம்பெனியாக ஏறி இறங்குவோம். குறிப்பாக உட்லண்ட்ஸ் ஹோட்டலிற்கு தினமும் போவோம். இங்கே தினசரி எஸ்.பி.முத்துராமன், சோ, மோகன், மணிஸ்ரீதர், ராஜன் சர்மா போன்றோர்கள் வந்து போவார்கள். அப்படி வந்து போனவர்களில் எஸ்.பி.முத்துராமனிடம் நெருக்கமாக பேசி வருவார் ரகுவரன். பின்நாட்களில் ரகுவரனைத் தன் படங்களில் எஸ்.பி.முத்துராமன் பயன்படுத்துவதற்குப் இச்சந்திப்புகளே காரணமாக அமைந்தன. இச்சமயத்தில்தான் ரகுவரன் தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி கிதார் வாசிக்க கற்றுக் கொண்டார். ஒரு பக்கம் நடிப்பிற்கான தேடலோடு, மறுப்பக்கம் இசைப் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். நடிப்பதற்காக "நெற்றிக்கண்', "புதுக்கவிதை', "உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற படக் கம்பெனிகளிடம் வாய்ப்புக் கேட்டோம். அப்படி நாங்கள் பலமுறை இயக்குநர் பாலசந்தரின் கவிதாலயா பட நிறுவனம் உட்பட, சிறந்த படம் எடுக்கும் எல்லா நிறுவனங்களின் வாசற்படிகளையும் நாங்கள் மிதித்திருக்கிறோம். அந்த வகையில் மறைந்த அனந்து அவர்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறோம். அனந்து அவர்களை "அவள் அப்படித்தான்' படத்தில் வேலைப் பார்க்கும்போது அவரிடம் நட்பு எனக்கு ஏற்பட்டது. இந்த நட்பின் அடிப்படையில் ரகுவரனை, அனந்துவிடம் நான் அறிமுகப்படுத்தி வைத்தேன். அனந்து, இயக்குநர் விசுவிற்கு பரிந்துரைக்க, அதன்மூலம் கிடைத்துதான் "சம்சாரம் அது மின்சாரம்' பட வாய்ப்பு. இதில் குணசித்திர வேடத்தில் ரகுவரன் தன் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதனைத் தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸில் "மந்திரப் புன்னகை' படத்தில் நடித்தார். அடுத்து கே.ஆர். தயாரிப்பில், இயக்குநர் ரவீந்திரன் இயக்க, "கண்ணுக்கொரு வண்ணக்கிளி' படத்தில் நடித்தார். இப்படத்தில் இவருடன் கிரிஷ் கர்ணாட் மற்றும் ஸ்ரீவித்யா உடன் நடித்தனர். இப்படம் இரண்டு வார படப்பிடிப்பிற்குப் பிறகு கைவிடப்பட்டது. அடுத்து, ரகுவரன் "ரெüடி' என்று ஒரு படத்தின் கதையை எழுதி, இயக்குவதாக இருந்தார். இதற்கு நான்தான் வசனம் எழுதினேன். இந்தப் படமும் துவக்கத்திலேயே நின்று போனது. ரகுவரனோடு நான் மட்டுமின்றி கோவையைச் சேர்ந்த, இசையில் ஆர்வமுள்ள தாமு, மேன்பவர் சேகர், மற்றும் திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த தர்மா உள்ளிட்டோரும் நண்பர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர். எங்கள் எல்லோருக்கும் பெரும்பாலும் சந்தித்து உரையாடும் இடமாக இருந்தது பிரபல இயக்குநர் ருத்ரைய்யாவின் வீடுதான். ரகுவரனுக்கு என்று சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் இருந்தன. குறிப்பாக அவர் எந்த படத்தின் பட பூஜைக்கும் செல்வதில்லை. அதேப்போல தான் நடித்தப் படம் நூறு நாட்களைத் தாண்டி படம் சிறப்பாக ஓடி, நூறாவது நாள் விழாக் கொண்டாடினாலும் அதிலும் கலந்து கொள்வதுமில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதை அவர் பெரும்பாலும் தவிர்த்தார். அதைக் கடைசிவரை கடைப்பிடித்தும் வந்தார். "மிஸ்டர் பாரத்' படத்தைத் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. இந்த சமயத்தில் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது, பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதை அவர் விரும்பாததால், ஒரு படம் முடிந்த பிறகு, மற்றொரு படம் என்பதில் கவனமாக இருந்தார். அதற்குக் காரணம், அவர் தன்னுடைய நடிப்புத் தொழிலை அவர் தீவிரமாக காதலித்ததுதான்! இளையராஜா குறித்த ஆவணப்படத்தை இயக்கும்போது எனக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக திருவண்ணாமலைக்குச் சென்றபோது அவர் செய்த உதவிகளை என்றன்றைக்கும் என்னால் மறக்க முடியாதது. அப்போது அவர் குறிப்பிட்ட விஷயம் இப்போதும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. நான் நகுலனை ஆவணப்படுத்தப் போகிறேன் என்று தெரிந்ததும் ரகுவரன், ""அந்த ஆவணப்படத்தில் நகுலனின் கவிதைகளில் இரண்டை நான் வாசிக்க வேண்டும்'' என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கவிதையின் வரிகள் சரியாக ஞாபகத்தில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு அந்த கவிûதையை என்னால் நினைவு கூர முடியும்.
ஏன் குடிக்கிறீர்கள் என்றுபலரும் கேட்கிறார்கள்நான் அவர்களைஎப்படி இப்படியே வாழ்கிறீர்கள் என்று கேட்பதில்லை
நண்பர்கள்வருகிறார்கள்போகிறார்கள்அவர்கள்வந்ததும் தெரியவில்லைபோனதும் தெரியவில்லை
இக் கவிதையை அவர் அடிக்கடி நினைவு கூறுவார். இன்று அக்கவிதைகளை திருப்பி வாசிக்கும்போது எம் கண்ணில் நீர்கோத்துக் கொள்வதை தடுக்க முடியவில்லை. தரமான நாவல் ஒன்றின் பக்கங்களை சுவராஸ்யமாக வாசித்துக் கொண்டே செல்லும்போது, நாவலின் இறுதிப் பக்கங்கள் மட்டும் கிழிக்கப்பட்டோ அல்லது செல்களால் அரிக்கப்பட்டோ சிதைந்து போயிருந்தால் வாசகனின் மனம் என்ன மாதிரியான மனநிலைக்கு உள்ளாகுமோ அந்த துயரத்தைத்தான் நான் ரகுவரனைப் பற்றி எண்ணும்போது உணருகிறேன். இறுதியாக நான் ரகுவரனைச் சந்தித்து, "முதல்வன்' திரைப்பட படப்பிடிப்பில்தான். கூத்துப்பட்டறைச் சேர்ந்த கலைராணி ( இவரும் திரைப்படக் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது) யை டூ-வீலரில் அழைத்துக்கொண்டு சென்றேன். படப்பிடிப்பு நாங்கள் பயின்ற தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில்தான் தொலைக்காட்சி நிலைய அரங்கு அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இயக்குநர் ஷங்கரிடம், நான் கலைராணியை அறிமுகப்படுத்திவிட்டு நின்று கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ரகுவரன், நான் வந்திருப்பது கேள்விப்பட்டு என்னை வந்து நலம் விசாரித்தவர், நான் கலைராணியை "முதல்வன்' படத்திற்காக அழைத்து வந்திருப்பதை அறிந்ததும், ""நீ இன்னும் இந்த வேலையை விட வில்லையா?'' என்றபடியே என் முதுகில் தட்டிக் கொடுத்தார். ரகுவரனின் அந்த கபடமற்ற சிரிப்பும், பாராட்டும் இன்னும் என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது...

Comments

Popular Posts