திரை - 5

மிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட திரைப்பட இயக்குநர் கே.ஹரிஹரன். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தனது திரை விமர்சனங்களாலும், சொற்பொழிவுகளாலும் இளையதலைமுறை இயக்குநர்களை புதிய திசையை நோக்கி பயணிக்க வைத்த திரை ஆர்வலர். திரைப்படம் மற்றும் மீடியா சார்ந்து பல்வேறு கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராக மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர். 1976-ம் ஆண்டில் புனே திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் பயின்ற மாணவரான இவர், மராத்தியின் புகழ்பெற்ற "காசிராம் கொத்துவால்' நாடகத்தை, அதே பெயரில் தனது முதல் திரைப்படமாக எடுத்து, மக்களிடையே பிரபலமானவர். அதுமட்டுமின்றி பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தின் திரைப்பட சுருள் தற்போது ஜெர்மனியின் திரைப்பட ஆவண காப்பகத்தில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் "வாண்டட் தங்கராஜ்'. தமிழில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் சார்பாக, அப்போது சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் வி.சாந்தாராம் தயாரித்திருந்தார். அடுத்து இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம்தான் "ஏழாவது மனிதன்'. இதனைத் தொடர்ந்து "முதலையின் நண்பன்', "துபாஷி' போன்ற படங்களை குழந்தைகள் திரைப்பட சங்கத்திற்காக இயக்கினார். "துபாஷி' திரைப்படம் தஞ்சாவூர் அருகே வாழும் இரண்டு மொழிகளைப் பேசும் மக்களைப் பற்றிய கதையாகும். 1992-ல் எடுக்கப்பட்ட இப்படத்தில் நாசர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாரயணன் எழுதிய, அவருடைய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான "கரண்ட்' சிறுகதையை, திரைப்படமாக இயக்கியவர். குஜராத்தி மொழியில் உருவான இப்படத்தை இந்திய திரைப்படக் கழகம் தயாரித்தது. இதில் ஓம்புரி நாயகனாக நடித்திருந்தார். இது விவசாயிகளின் மின்சார பற்றாக்குறை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். மேலும் கே.ஹரிஹரன், டெல்லியில் அமைந்துள்ள தேசிய அளவிலான திரைப்பட விருதுக்குழுவில் இருந்தவர். தற்போது இந்திய திரைப்படக் கழகத்தின் சென்னை பிரிவில் திரைக்கதைக் குழுவில் அங்கம் வகித்து வருபவர். அதுமட்டுமின்றி காட்சி தொடர்பியல் (ஸ்ண்ள்ன்ஹப் ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) பாடப்பிரிவின் கமிட்டி மெம்பராகவும் இருக்கிறார். சமீபத்தில் கமல்ஹாசனின் தலைமையில் ஐ.ஐ.டி.யில் நடந்த திரைக்கதை பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தவர். இவருடையது காதல் திருமணம். மனைவி ரமா, ஹோமியோபதி மருத்துவர். ""என்னுடைய இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கும், புகழுக்கும் என்னுடைய மனைவியின் முழு ஒத்துழைப்பும், அரவணைப்பும்தான் காரணம்'' என பல மேடைகளில் மனம் திறந்து பேசும் கே.ஹரிஹரன், இந்திய சினிமாவின் ஆளுமைகளில் முக்கியமானவர் என்பது தமிழிற்கு கிடைத்த கொடையாகும். மறைந்த எல்.வி.பிரசாத்தின் கனவான திரைப்படக் கல்லூரி தொடங்கும் திட்டத்திற்கு பக்கபலமாக இருந்து, தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் அண்ட் டி.வி.அகடமியின் இயக்குநராகப் பணியாற்றி வருபவர். சமீபத்தில் இவருடைய மாணவர்களில் பலர் இயக்கிய குறும்படங்கள் சர்வதேச தரத்தில் பல விருதுகளைக் குவித்துள்ளது இவருடைய திரைத்துறை அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். மனம் ஓரிடத்தில் நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் வடபழனி - அருணாச்சலம் சாலையில் அமைந்துள்ள எல்.வி.பிராசாத் ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்து ரகுவரன் குறித்து உரையாடினோம்.
""அது 1980-ம் வருடத்தின் இறுதி நாட்கள் என்று நினைக்கிறேன். அப்போது எனது முதல் படம் இயக்குவதற்கான வேலைகளில் மூழ்கியிருந்தேன். இந்தப் படத்தில் நாயகப் பாத்திரத்தில் நடிப்பதற்காக நான் நாயகர்களைத் தேடும் முயற்சியில் இருந்தேன். அப்போது என்னுடைய நண்பர்கள், திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பிரிவில் படித்துக் கொண்டிருப்பவர்களில் யாரையேனும் நீ பயன்படுத்திக் கொள்ளலாமே'' என்று ஆலோசனை சொன்னார்கள். மறுநாள் கல்லூரிக்குச் சென்றபோது நடிப்பிற்கான பிரிவில் பயிலும் மாணவர்களின் வருகைக்காக காத்திருந்தேன். சிறிது நேரத்தில் வகுப்பு முடிந்து மாணவர்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தார்கள். அப்போது என் படத்தின் நாயகனுக்கான முகம் யார் முகத்திலாவது தெரிகிறதா? என்று உற்றுக் கவனித்தபடியே இருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. நெடும் உயரமாக, பார்த்தவுடன் பிடித்துப் போகிற, தீர்க்கமான கண்களுடன், தன்னம்பிக்கையுடனான முகத்துடன் அந்த கும்பலில் மிகவும் தனித்து அந்த பையன் மட்டும் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் எனக்குப் பல மடங்குப் பிடித்துப் போய்விட்டது. அந்த பையன்தான் ரகுவரன்! ரகுவரன் கல்லூரியில் சேர்ந்து அப்போது ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தது. நான் அப்போது சென்னை - தரமணி திரைப்படக் கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக இயக்குனர் பிரிவு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது முதலாமாண்டு மாணவர்களாக ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், இயக்குநர் மற்றும் நடிகர் யூகிசேது போன்றவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி, என்னுடைய நண்பரும், இயக்குநருமான கே.ராஜேஷ்வரும் அப்போது திரைப்படக் கல்லூரிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். அவர்தான் ரகுவரனை "ஏழாவது மனிதன்' திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதற்கு, சிபாரிசு செய்தார் (அதற்கு முன்னதாக இயக்குநர் அருள்மொழியும் ரகுவரன் குறித்து கூறியிருந்தார்). இப்படித்தான் ரகுவரன் என் முதல் படத்தின் மூலமாக நாயகனானார். பிறகு, நாங்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளைத் தொடங்கி சிறப்பாக முடித்தோம். படப்பிடிப்பு முடிந்து, டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. டப்பிங் பேசும்போது அதிக டேக் வாங்கினால் தயாரிப்பு செலவு கூடும் என்பதால் ரகுவரன் என்னிடம், ""என்னுடைய குரல் சரியில்லையென்றால் வேறு யாரையாவது வைத்து டப்பிங்கை முடியுங்கள்'' என்றார். ஆனால், நான் ரகுவரனை வைத்துத்தான் முழு டப்பிங்கையும் முடித்தேன். கோவையில் பிறந்த ரகுவரன், அடிப்படையிலேயே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சினிமா மீதுள்ள காதலை,ஈடுபாட்டை, அர்ப்பணிப்பைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால் அதற்காக ஒரு தனி ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். அந்தளவிற்கு நடிப்பின் மீது தீவிர நேசம் கொண்டிருந்த கலைஞன் அவர். உதாரணத்திற்கு "ஏழாவது மனிதன்' படப்பிடிப்பின்போது, ""எனக்கு பாட்டும், டான்ஸýம் வராது'' என்று வெளிப்படையாகவே என்னிடம் சொன்னார். இந்த தைரியம் யாருக்கு வரும்? அதுவும் தான் நாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தில்! "ஏழாவது மனிதன்' படப்பிடிப்பின்போதும் சரி, அதன் திரையிடலுக்குப் பிறகும் சரி, நான், அருண்மொழி, ரகுவரன், கே.ராஜேஷ்வர், தர்மா எல்லோரும் பள்ளியில் பயிலும் மாணவர்களைப் போல ஒன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். ரகுவரனுக்கு நடிப்பின் மீது தீவிர நேசிப்பு இருந்ததற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். ஒரு முறை படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது, அவர் குடித்திருந்தார். நான், ""படப்பிடிப்பின்போது குடித்திருக்கிறீர்களே?'' என்று கேட்டேன். அதற்கு, ""ஹரி... எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வில்லன் பாத்திரத்திற்கு நான் நேர்மையாக இருக்கணும். குடிச்சாத்தான் அந்த பாத்திரத்தை நான் சரியா உள்வாங்கிக்க முடியுது. இப்போ நான் என்ன செய்யட்டும்?'' என்றார். நான் வார்த்தைகளற்று அங்கே உட்கார்ந்திருந்தேன். தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக குடிக்கத் தொடங்கிய அவரது பயணம், அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, அவருடைய வாழ்க்கையையே அழித்துவிட்டதை பின் நாட்களில் உணர்ந்தேன். "ஏழாவது மனிதன்' திரைக்கு வந்த பிறகு அது மக்களிடையேயும், திரை விமர்சகர்களிடையேயும் பரவலான கவனத்தைப் பெற்றது. நாங்கள், ரகுவரனை எங்களுடன் அழைத்துக்கொண்டு, தியேட்டர், தியேட்டராகப் போய் டிக்கெட் விற்றோம். படம் நூறு நாட்களைத் தாண்டி சிறப்பாக ஓடியது. அப்போது இந்தப் படத்தின் வெற்றிக்கு பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், ஆர்.குசேலன் போன்றவர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து இப்படத்தை வெற்றிப்பெற வைத்தார்கள் என்பதை இங்கே நன்றியோடு நினைவு கூர்கிறேன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, எங்களுடைய இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறு திசையில் பயணித்ததால், நாங்கள் அதிகம் சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. ரகுவரன் இந்தப் படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நடிக்கத் தொடங்கி மிகுந்த கவனிப்பை தமிழ் திரை ரசிகர்களிடையே பெற்றிருந்தார். ஏறக்குறைய எட்டு வருடங்களுக்குப் பிறகு என்னுடைய இயக்கத்தில், ரகுவரன் நடிக்க "தூள் பறக்குது' படத்தில்தான் இருவரும் ஒன்றிணைந்தோம். இப்படத்தை "பதினாறு வயதினிலே' திரைப்படத் தயாரிப்பாளரான எஸ்.ஏ.ராஜகண்ணுவின் சகோதரரான சிவசுப்பிரமணியன் தயாரித்தார். இதில் ரகுவரனுக்கு நாயகிகளாக ஷோபனாவும், ரம்யா கிருஷ்ணனும் நடித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 1988-ல் ஜூலை மாதத்தில் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், தயாரிப்பாளர் இப்படத்தை நிறுத்தி விட்டார். பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை 1990-ல் ஆரம்பித்து, அதுவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. நான் இந்தப் படத்தை இயக்கியதால் மிகுந்த மனச்சோர்வும், உடற்சோர்வும் அடைந்தேன். விட்டால் போதுமென்ற மனநிலைக்கு உள்ளாகியிருந்தேன். ஆனால், தயாரிப்பாளர் ஆட்களை என் வீட்டுக்கு அனுப்பி, மிரட்டினார். வேறு வழியின்றி பல சமரசங்களுக்கு இடையில் அப்படத்தை 1993-ல் முடித்தேன். அப்போது எனக்கு இந்தப் படம் திரைக்கு வராமலே போனால் நன்றாக இருக்கும் என்றுகூட நினைக்கத் தோன்றியது. ஒரு இயக்குநர் தன்னுடைய படம் தியேட்டரில் வெளியாகக் கூடாது என்று நினைத்த முதல் இயக்குநர் நானாகத்தான் இருப்பேன். என் நினைப்பு வீண்போகவில்லை. அப்போதிருந்த சென்னை - கேசினோ தியேட்டரில் "கொடி பறக்குது' வெள்ளிக்கிழமை வெளியானது. படம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறாததால் திங்கட்கிழமையே படத்தைத் தூக்கி விட்டார்கள். அப்போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. பிறகு இப்படத்தை சன் தொலைக்காட்சி வாங்கி திரையிட்டது. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகக்கூடாது என்று நான் விரும்பியதற்கு அடிப்படைக் காரணம், படத்தின் கதை, படத் தயாரிப்பாளரின் குறுக்கீட்டால் தலைகீழாக மாறிப்போயிருந்ததுதான்! தமிழ் சினிமாவில் வில்லன் பாத்திரத்திற்கு மாற்று வடிவம் தந்த ரகுவரன், பிறகு அதிகப் படங்களில் நடிக்கத் தொடங்கி பிஸியானார். நானும் சினிமாவில் வேறு ஒரு தளத்தில் பயணித்ததால் எங்களிடையேயான சந்திப்புகள் மிகக் குறைவே! அந்த வகையில் அவரை கடைசியாக "பார்க் ஷெரட்டன் ஹோட்டல்' லாபியில் சந்தித்தேன். அப்போது ரகுவரன் மிகுந்த உற்சாகத்தில் "ஹாய் ஹரி! மை குரு... என்னை வைத்து படம் பண்ணுப்பா...' என்றவரிடம், ""கண்டிப்பாக பண்ணுகிறேன்...'' என்று கூறி விடைப்பெற்றபோது அவர் கொஞ்சம் குடித்திருந்ததை என்னால் உணர முடிந்திருந்தது. ஹோட்டலை விட்டு வெளியே வந்து காரில் அமர்ந்தபோது மனம் மிகுந்த சஞ்சலத்தில் இருந்தது. வீடு வந்து சேரும்வரை எனக்கு ரகுவரன் பற்றிய ஞாபகம் மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தன. ரகுவரனை நீங்கள் மற்ற நடிகர்களோடு ஒப்பிட்டு பேச முடியாது. அவர் ஒரு அறிவார்ந்த, தனித்துவம் கொண்ட நடிகர். அவரிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வர வேண்டுமானால் நீங்கள் அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த அவகாசத்தை கடைசிவரை யாருமே அவருக்கு வழங்கவில்லை. அந்த மனக் கசப்பிலேயே அவர் இறந்து போனார். ரகுவரன் இறந்துபோன செய்தியை அவருடைய சொந்த ஊரான கோவையில் இருக்கும்போதுதான் எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில், ""தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல பாத்திரங்களுக்காக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கலைஞனை இந்த தமிழ் திரைப்படச் சமூகம் கொன்று புதைத்துவிட்டது. அவன் தொடர்ந்து ஏங்கிக் கொண்டிருப்பதைவிட இறந்துபோனதே நல்லது'' என்று நினைத்துக்கொண்டேன். அப்போது, திரைப்படக் கல்லூரியில் நம்பிக்கையுடன், புன்னகையுடனும் நடந்து வந்த ரகுவரனின் பதிவுகள் என் மனக்கண்ணில் தோன்றி மறைய, ஒரு நிமிடம் கண்களைக் மூடிக்கொண்டு மெüனமாக அழுதேன். கண் திறந்தபோது வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து மழைக்காக காத்திருந்தது...

Comments

Popular Posts