சினிமா: 14
(வாழ்க ஜனநாயகம்)
நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் இருக்கும் உண்மைக் குறித்தோ, அல்லது அவற்றில் பதுங்கியிருக்கும் பகடி குறித்தோ, நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? அல்லது ஒரு முறையாவது அவற்றின் மீது உங்களுக்கு சந்தேகம் துளிர்த்திருக்கிறதா? அப்படி இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தால், நிச்சயம் நீங்கள் அச்சம்பவங்கள், நிகழ்ச்சிகளுக்குள் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரசியலைக் கண்டு மனம் பேதலித்திருப்பீர்கள். சமீபத்தில் பிரபலமான பதிப்பகம் ஒன்றின் நூல் வெளியீட்டு விழாவிற்குப் நண்பர்களோடு போயிருந்தோம். விழா நடைபெறும் அரங்கத்தில் நவீன படைப்பாளிகள், விமர்சகர்கள், திரைப்பட இயக்குநர்கள், வாசகர்கள், கலைஞர்கள் என அரங்கமே நிறைந்திருந்தது. மாறுபட்ட சிந்தனைகளை ஒட்டிய பல எழுத்தாளர்களும் குழுமியிருந்த அவ்விழா முடிவுறும் தருவாயில் மேடையேறினார் ஒரு நவீன எழுத்தாளர். மேடையேறியவர் தான் குறித்துப் பேச வேண்டிய புத்தகத்தை மறந்து தன்னைப் பற்றியும், சமூகத்தில் தனக்கிருக்கும் நற்பெயர் பற்றியும், தன்னை விடமால் தொடர்ந்து விமர்சிக்கும் மற்றொரு நவீன எழுத்தாளர் பற்றியும் கொஞ்சம் ஹாஸ்யமாகவும் அதிகம் நாரகாசமாகவும் பேசத் தொடங்கினார். தனது கையில் வைத்திருந்த வசைபாடிய அந்த நவீன எழுத்தாளரின் புத்தகத்தை வாசகர்களிடம் காட்டிவிட்டுப் பிறகு, அவற்றின் சில பக்கங்களை வாசிக்க ஆரம்பித்தார். புத்தகத்திலிருந்த வாசகங்கள் மூர்க்கமானவையாகவும், சற்றும் ஈவு, இறக்கமின்றியும் எழுதப்பட்டிருந்தது. இவ்வசை மொழிகள் யாவும், எழுத்தாளரும், பிரபல பதிப்பகத்தின் உரிமையாளருமான ஒரு முக்கிய நபரைப் பற்றிய சித்தரிப்புகள்தான்! (மேடையில் அமர்ந்திருந்தவர்களில் அவரும் அடக்கம்) பெரும்பாலான எழுத்துக்கள் அவருடைய உடல்ஹீனத்தைப் பற்றியது. சில மணித்துளிகள் வாசித்தவர், சற்று களைப்புற்றவராக, அப்புத்தகத்தின் சில பக்கங்களை மேடையிலேயே வாசகர்களின் முன்னால் கிழித்தெறிந்தார். பிறகு, சில நிமிடங்கள் தான் பேச வேண்டிய புத்தகம் குறித்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மேடையிலிருந்து இறங்கினார். இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், யார் பற்றி மிக மோசமாக அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்ததோ, அவரேதான் அந்த புத்தகத்தையும் பதிப்பித்தவர் என்பதுதான்!
இருள் திரையில் மனித பிம்பங்கள் கருப்பு, வெள்ளையில் தெரிகின்றன. சிலர் கூட்டாக நின்று, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி இருவர், ""அதில் ஒவ்வொருத்தரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். நாம் யாரையும் விலக்க வேண்டாம். விலகி நின்று வேடிக்கை மட்டுமே பார்ப்போம்'' என்கின்றனர். பிறகு அந்த கூட்டத்திலிருந்து ""வாழ்க ஜனநாயகம்'' என்னும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. திரையில் ஒரு கருப்பு உடை அணிந்தவர் தோன்றி பேசுகிறார். அவர் பேசுவதை மேடையின் கீழே அமர்ந்து சிலர் கவனிக்கின்றனர். கூட்டத்தின் முடிவில் இருவர் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டத்திற்கு ஆட்கள் குறைவாக வந்திருப்பதால், தலைவர் கோபத்தில் இருப்பதாக ஒருவர் சொல்கிறார். வேறு கட்சி கூட்டத்திற்கு பிரியாணியும், மதுவும், பணமும் கொடுத்ததால் எல்லோரும் அங்கே போய்விட்டதாக எதிரில் இருப்பவர் கூறி, கூட்டத்திற்கு அழைத்து வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்கிறான். ""நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தால் எல்லாம் செய்கிறேன்'' என்கிறார் எதிலிருப்பவர். அவரோ, ""ஆங்ங்...நமக்கு கட்சியெல்லாம் கிடையாதுங்க...'' என்று கூறி, தனக்கு கொடுக்க வேண்டிய பணம் முழுவதையும் கேட்கிறான். இப்போது திரையில் வெள்ளை கட்சிக்காரர் தோன்றி, தனக்கு மக்கள் ஓட்டுப் போட்டால் ""இலவசமாக செல்ஃபோன் வழங்குவேன்'' என்கிறார். அவரைத் தொடர்ந்து பேசும் வெள்ளைக் கட்சிக்காரர், கருப்பு கட்சிக்காரர் குடும்ப உறுப்பினர் நடத்தும் செல்ஃபோன் நிறுவனத்தைக் காப்பாற்றவே அவர் அவ்வாறு பேசுவதாக கூறி, தனக்கு ஓட்டுப் போட்டால், செல்ஃபோனோடு சேர்த்து, இரண்டு சிம் கார்டுகளையும் இலவசமாக தருவதாக வாக்களிக்கிறார். அடுத்து திரையில் நீலக்கட்சிக்காரர் தோன்றி தனக்கு வாக்களித்தால் செல்ஃபோனிற்கு விதவிதமான ரிங் டோன்களை இலவசமாக வழங்குவேன் என்கிறார். அடுத்து, பச்சைக்கட்சிக்காரர் தோன்றி, ""பிரம்மாண்டத்திற்கு பெயர் போனது பச்சைக் கட்சி. மக்கள் எமது கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் அனைவரையும் நடிகராக்குவேன். இதற்காக தனி வாரியம் அமைப்பேன்'' என்கிறார். இதனைத் தொடர்ந்து சிவப்பு கட்சிப் பேசுகிறது. பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் அவரிடம் குறிப்பு சீட்டு ஒன்று வருகிறது. அதை படித்துவிட்டு, அவர் ""வெள்ளைக் கட்சி, மூதாட்டி ஒருவருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியதற்காக கைதாகியிருக்ககிறார்'' என்கிறார். இப்போது தொலைக்காட்சியில் அந்த வெள்ளைக் கட்சிக்காரர், தனது ஆதரவாளர்களுடன் தோன்றி, ""ஒரு ஏழைப்பெண்ணின் சங்கடத்தைப் புரிந்து கொள்ளாத சட்டம் ஒரு சட்டமா? எங்களுக்கு அந்த பெண்ணின் கண்ணீருக்குப் முன்னால் சட்டம் ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. ஆகவேதான் வழங்கினோம். இந்த தேர்தலில் எங்கள் கட்சிக் வெற்றிப் பெற்றால் போலி பாஸ்போர்ட்டுகளை விரும்புகிற அனைவருக்கும் வழங்குவோம்'' என்கிறார். பிறகு எல்லாக் கட்சிக்காரர்களும் தேர்தல் முடிவு நிலவரங்களை தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். அதில் எல்லாக் கட்சியும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாகவே கூறுகிறார்கள். இதனையறியும் மக்கள் சரியான முடிவு தெரியாமல் தலையைப் போட்டு பிய்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதில் ஒருவர் ""நாட்டில் அந்த தியாகிக்கு ஓட்டுப்போடாமல் மக்கள் அனைவரும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்களே'' என்கிறார். மற்றொருவரோ ""தலைவரே, இதற்கு ஏன் கவலைப்படுறீங்க. நம்ம ஆட்களை வைத்து மொத்த ஓட்டுக்களையும் நாமே போட்டு, ஜெயித்து விடலாம். ஜனநாயகத்திற்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தானே இதனையெல்லாம் செய்யுறோம்'' என்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து கோரஸôக ""வாழ்க ஜனநாயகம்'' என்று முழக்கமிடுகின்றனர். பிறகு தொலைக்காட்சியில் ""மூஞ்சிக்கு மூஞ்சி'' நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கேள்விகேட்பவரின் மனதில் நினைப்பதும் வெளியே கேட்க, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை வசை பாடுகிறார். பிறகு, நிகழ்ச்சியை படம் பிடிப்பவரிடம் கேட்கிறார் அந்த தொகுப்பாளர். அதற்கு, ""இது நவீன தொழில்நுட்பம். அதனால் கேள்வி கேட்கும்போது, எதிரிலிருப்பவர் பற்றி எந்த அபிப்ராயத்தையும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடாது. இங்க வேலை பார்க்க வந்தா, மனசை மிஷின் மாதிரி ஆக்கிடணும். கொஞ்ச நாளில் நீங்களும் தயாராயிடுவீங்க'' என்பதுடன் படம் முடிகிறது.
நாம் காணும் பிம்பத்திலும், கேட்கும் குரலிலும் பெரும்பாலும் பொய்தான் அழகான முகமூடி அணிந்து நம்மை மயக்குகிறது. எப்போதும் உண்மை இயல்பான முகத்துடனே நம் முன்னே வருவதால், நாம் கண்களற்றவர்களாக அவற்றை கவனிக்கத் தவறி விடுகிறோம். வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து, ஏற்றுக்கொள்வது என்பது இயலாத காரியமாகவே நமக்கு தோன்றுவதால்தான், சில நேரங்களில் பிறரின் வெற்றிகள் கூட நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகின்றன. "வாழ்க ஜனநாயகம்' குறும்படம் தேர்தல் நேரங்களில் பல்வேறு கட்சிகள் மக்களிடையே என்னவிதமான நாடகங்களையெல்லாம், தனது ஆதாயத்திற்காக ஆடுகிறது என்பதை விமர்சன பார்வையுடன் சொல்ல வந்திருக்கிறது. மிக குறுகிய நபர்களை வைத்துக்கொண்டு நிறங்களை மாற்றி படம் பிடித்திருக்கும் விதம் பாராட்டிற்குரியது. அதற்óகுச் சான்று இறுதியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும் கேள்வியும், அதனைத் தொடர்ந்த உரையாடல்களும். வசனங்கள் மனதில் கூர் தீட்டுகின்றன. முறையான பயிற்சியுடன் திரையில் சமூகத்தின் தனது பார்வையை கொண்டு வந்திருக்கும் கணபதிக்கு எதிர்காலம் சிறப்பாகவே கனிந்திருக்கிறது.
மதுரை மண்ணிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் வந்து, இன்று பெரும் வீச்சோடு தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் இயக்குனர்களின் வரிசையில், தன்னையும் இணைத்துக் கொள்ள, மிகுந்த ஆர்வத்தோடு புறப்பட்டு வந்திருக்கும் இளைஞர்களில் ப.நா.ஜெய்கணபதியும் ஒருவர். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனருக்கான பணியை செம்மையாகச் செய்வதற்காக அடிப்படைத் திரைத் தொழில்நுட்பத்தை சென்னை ஃபிலிம் இண்டஸ்ட்ரியல் ஸ்கூலில் ஒரு வருடம் கற்றிருக்கிறார். மதுரைக்கு அருகேயுள்ள திருப்புவனம் புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பட்டப்படிப்பில் வரலாறு படித்திருக்கிறார். "வாழ்க ஜனநாயகம்' குறும்படம் இவர் ஃபிலிம் ஸ்கூலில் படிக்கும்போது இறுதியாண்டில் எடுக்கப்பட்டது. இக்குறும்படம் பல்வேறு திரையிடல்களில் கலந்து கொண்டு பாராட்டைப் பெற்றதோடு, பிரபல இயக்குனர் "சேரன்' அவர்களிடம் உதவி இயக்குனராகச் சேரும் வாய்ப்பையும் இவருக்கு வழங்கியிருக்கிறது!
Comments
Post a Comment