திரை - 11
சென்னை - அசோக் பில்லர் பேருந்து நிறுத்தம், மாலை நேரப் பரபரப்பில் மூழ்கியிருந்தது. திரைப்படத் துறையில் போலீஸ் அதிகாரி பாத்திரம் என்றால் "அவரைக் கூப்பிடுங்கள்' என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லுமளவிற்கு பிரபலமானவர் நடிகர் ராஜேந்திரநாத். "ரமணா', "சாமி', "திருப்பாச்சி', "பிதாமகன்', "நான் கடவுள்' உள்ளிட்ட எண்பத்தேழுக்கும் மேற்பட்ட படங்களில் மிரட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்திரநாத், தியேட்டர் உரிமையாளர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளின் பட விநியோகஸ்தர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படக் கல்லூரியின் இயக்குநர் பிரிவில் பயின்ற மாணவர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல முகங்களைக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். இவை மட்டுமின்றி, சமீபத்தில் தே.மு.தி.க.வில் கலை, இலக்கிய அணியின் துணைச் செயலாகராகவும் மாநில அளவில் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார். ஆஜானுபாகுவான உடலமைப்போடு, உருட்டும் விழிகளுடன் பார்ப்பவரை வெளியிலிருந்தும் காணும் நம்மை சற்று பயம் தொற்றிக்கொள்ளவே செய்யும். ஆனால், நெருங்கிச் சென்று அவருடன் பேசும்போதுதான் ராஜேந்திரநாத் ஒரு குழந்தை மனம் படைத்தவர் என்பது புரியும். அவருடன் பேசியபோது, "இவரா நம்மை திரைப்படங்களில் பயமுறுத்துகிறார்?' என்று ஆச்சர்யத்தில் நம் கண்கள் விரிந்தன. அசோக் பில்லர் அருகிலுள்ள ஒரு பிரபலமான உணவு விடுதியில் எங்களது சந்திப்பு நடந்தது. ""திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்து முடித்தவுடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் அண்ணாதுரை அவர்களிடம் என் அப்பாவின் உதவியால் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தேன். அண்ணாதுரை அவர்கள், என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியர் மாணவராவார். என்னுடைய அப்பாவும், அண்ணாதுரை ஸôருடைய அப்பாவும் சிநேகிதர்கள். அப்பா, திருநெல்வேலியில் தியேட்டர் அதிபராக இருந்தார். அண்ணாதுரை ஸôருடைய அப்பா, திரைப்பட விநியோகஸ்தராக இருந்தார். ஆகவே, இருவரும் நெடுங்காலமாக தொழில் ரீதியாக நட்போடு பழகி வந்தனர். அந்தப் பழக்கத்தினால்தான் என்னை அண்ணாதுரை ஸôர் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். 1985ஆம் ஆண்டு "சிறையில் சில ராகங்கள்' படத்தின் மூலமாக நான் திரைப்பட உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்கினேன். அதன் பிறகு, "ஒரே ராகம்' "வலது காலை வைத்து வா' "கல்யாண கச்சேரி' "என்றும் அன்புடன்' போன்ற படங்களில் தொடர்ந்து உதவி ஒளிப்பதிவாளராக அண்ணாதுரை ஸôரிடம் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் என்னுடைய கவனம் முழுக்க நடிப்பின் மீதுதான் இருந்தது. ஆகவே, ஒரு நடிகனுக்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, சென்னை - தரமணியிலுள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் நடிப்பு பிரிவிற்கு விண்ணப்பித்தேன். அப்பாவிடம் எனது ஆசையைக் கூறினேன். அவரும் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார். கல்லூரியிலிருந்து நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். அப்போது என்னை நேர்காணல் செய்தவர் பிரபல நடிகரான வி.எஸ்.ராகவன் அவர்கள். என்னை நடிக்கச் சொல்லி, சில கேள்விகளைக் கேட்டார். நானும் எனக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறி, நடித்தும் காட்டினேன். ஆனால், வி.எஸ்.ராகவன் ஸôர், ""உங்களுக்கு நடிப்பு வரவில்லை... இன்னும் உங்களுக்கு பயிற்சி தேவை'' என்று கூறி நிராகரித்து விட்டார். கல்லூரியில் எனக்கு நடிப்புப் பிரிவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பாவும் நம்பிக்கையளித்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு மறுபடியும் நடிப்புப் பிரிவுக்கு விண்ணப்பிக்காமல், இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பித்தேன். இயக்குநராகியப் பிறகு நடிகனாகி விடலாம் என்கிற எண்ணத்தில்தான் நான் இயக்குநர் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். இந்த முறை அப்பா சென்னை வந்திருந்து எனக்கு இயக்குநர் பிரிவில் சீட் வாங்கிக் கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றார். 1988லிருந்து 1991 வரை நான் திரைப்படக் கல்லூரியில் மாணவனாகப் பயின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சீனியர்களாக இயக்குநர் பிரிவில் "மெட்டி ஒலி' திருமுருகன் ஸôரும், நடிப்புப் பிரிவில் சுதீஷ் (தே.மு.தி.க. பிரமுகர்) ஸôரும் படித்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது திரைப்பட விழா ஒன்றுக்காக கொல்கத்தாவிற்கு என்னுடைய சக மாணவர்களுடன் சென்றிருந்தேன். அந்தத் திரைப்பட விழாவில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மாணவர்களும், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் நடிகர், நடிகையர்களும் வந்திருந்தனர். நாங்கள் கலந்துகொண்ட அன்று, ஹிந்தியின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் அவர்களும், பிரபல இயக்குநரான சத்யஜித்ரேவும் வந்திருந்தனர். அன்று மதிய உணவின்போது அவர்கள் சாப்பிட்ட இடத்தில்தான் எங்களது மாணவர் கூட்டமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பலரும் அவர்கள் அருகே சென்று அமர்ந்து தயங்கியபோது நான் எந்த பயமுமின்றி அவர்கள் அருகே சென்று அமர்ந்து சாப்பிட்டேன். கல்லூரிக்குத் திரும்பி "பதேர் பாஞ்சாலி' உள்ளிட்ட இயக்குநர் சத்யஜித்ரேவின் படங்களைப் பார்த்தும், அவருடைய ஆளுமையைப் பார்த்தும் நான் வியந்து போனேன். "இந்த மகா உன்னத இயக்குநரின் அருகிலா நாம் அமர்ந்து சாப்பிட்டோம்...!' என்பது இப்போதும் எனக்கு பிரமிப்பையும், ஆச்சர்யத்தையும் தருகிறது. இது கல்லூரியில் நான் படிக்கும்போது மறக்க முடியாத ஒரு நினைவலையாகும். அதேபோல, கல்லூரியில் இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. தேர்தலில் போட்டியிடுவதற்கான கடைசி நாளன்று என் நண்பர்களில் சிலர், ""இந்தத் தேர்தலில் மாணவர் பேரவைத் தலைவர் பதவிக்கு நீ போட்டியிடலாமே...'' என்றனர். நான் எந்த வித முடிவும் எடுக்காமல் சாதாரணமாகத்தான் இருந்தேன். ஆனால் நான் போட்டியிடப் போவதாக செய்திகள் மிக வேகமாக கல்லூரி முழுவதும் பரவியிருந்தன. அப்போது சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பிரிவினராகவும், வெளியூர் மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிந்து இருந்தனர். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு வெளியூர் மாணவர்கள் பலரும் ஆதரவாக இருந்தனர். அப்போது சென்னை - ஓட்டேரியைச் சேர்ந்த ஒளிப்பதிவுப் பிரிவு மாணவர் பாஸ்கர் அவர்கள் என்னிடம் வந்து "நீங்கள் தேர்தலில் நிற்கக் கூடாது' என்றும், " அப்படி நின்றால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்' என்றும் மிரட்டல் விடுத்தார். அதுமட்டுமின்றி, அவருக்குத் தெரிந்த நண்பர்களைக் கொண்டு என்னை மறைமுகமாக எதிர்க்கவும் செய்தார். உண்மையில் கல்லூரி பேரவைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென்கிற எண்ணம் அவர் என்னை வந்து மிரட்டும் வரை இருந்ததேயில்லை. நான் அடிப்படையிலேயே திருநெல்வேலிக்காரன் என்பதாலும், இயல்பாகவே எங்களூர் ஆட்களுக்குக் கோபம் வரும் என்பதாலும், நான் பாஸ்கருக்காகவே தேர்தலில் போட்டியிட்டேன். அவர் மிரட்டிய அன்றுதான் தேர்தலில் போட்டியிடுவதற்கான கடைசி நாள். உடனடியாக போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை மிக வேகமாகப் பூர்த்தி செய்து அளித்தேன். அடையாரை சுற்றியுள்ள இந்திரா நகர், கானகம் ஆகிய பகுதிகளைச் சேரந்த நண்பர்களையும் உதவிக்கு நாடினேன். என்னை மிரட்டுவதற்காக பாஸ்கர் அவர்கள் இந்திரா நகரைச் சேர்ந்த சிலரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களோ, ""அந்தப் பையனுக்கு ஏற்கனவே நாங்கள் வாக்கு கொடுத்து விட்டோம். ஆகவே, அந்தப் பையனை மிரட்டவெல்லாம் முடியாது. வேண்டுமென்றால் நீங்கள் போட்டியிட்டு ஜெயித்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி பாஸ்கரை திருப்பி அனுப்பி விட்டனர். இதன்பிறகு பாஸ்கர் எனக்கெதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினார். ஆனால், தேர்தலில் நான்தான் அதிகப்படியான வாக்குகள் பெற்று மாணவர் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் மாணவர் பேரவைத் தலைவராகவதற்கு அப்போது மிகவும் உதவிகரமாக இருந்தவர் இயக்குநர் "மெட்டி ஒலி' திருமுருகன் ஸôர்தான். அதே போல அப்போது பாஸ்கருக்கு பக்கபலமாக இருந்தவர் சுதீஷ் அவர்கள். அன்று என்னுடைய பேச்சையும், நடவடிக்கைகளையும் பார்த்துதான் தற்போது என்னை கேப்டன் ஸôர் ஆதரவுடன் சுதீஷ் அவர்கள் தே.மு.தி.க.வின் மாநில கலை, இலக்கிய அணியின் துணைச் செயலாளராக நியமித்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க கல்லூரியில் என்னை எதிர்த்து நின்ற பாஸ்கர் அவர்களும் சமீபத்தில் என்னிடம் வாய்ப்பு தேடி வந்தார். நான் அதிர்ந்தே போய்விட்டேன். காலம் எப்படியெல்லாம் மனிதர்களை சுழற்றி அடிக்கிறது என்பதை இந்த சம்பவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன். கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தாலும் ஒளிப்பதிவாளர் அண்ணாதுரை அவர்களிடம் சில படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டுதான் இருந்தேன். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் 1993ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சி, ஜெயின் தொலைக்காட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிலையங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்த இடத்தில் என்னுடைய அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் உங்களிடம் சொல்லியாக வேண்டும். அப்பாவிற்கும் சினிமா மீது ஆர்வமுண்டு. அவருடைய இளமைக் காலங்களில் சென்னைக்கு வந்து ஏ.வி.எம். உட்பட பல்வேறு ஸ்டூடியோக்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடினார். அது கிடைக்காமல் போகவேதான் திருநெல்வேலிக்கே திரும்பி, முக்கூடலில் "சண்முகா டாக்கீஸ்' என்னும் பெயர் கொண்ட தியேட்டரைக் கட்டினார். சுமார் நாற்பதாண்டு காலங்களுக்கும் மேலாக தியேட்டர் அதிபராகவே வாழ்ந்தவர் அவர். அவருக்கு சினிமாவின் மீது முழு ஈடுபாடு இருந்ததால்தான் என்னுடைய சினிமா கனவையும் ஆதரித்தார். எந்த ஏ.வி.எம். வாசலில் எனது தந்தை திருப்பி அனுப்பப்பட்டாரோ அதே ஏ.வி.எம்.மில்தான் சமீபத்தில் என்னுடைய தயாரிப்பில், திரு.ஏ.வி.எம். சரவணன் அவர்களின் திருக்கரத்தால் "காதலே என் காதலே' என்ற படத்தைத் துவக்கி என்னுடைய அப்பாவின் கனவை நிறைவேற்றினேன். கல்லூரியில் இறுதியாண்டு படத்தை (ப்ராஜெக்ட் ஃபிலிம்) எடுப்பதற்காக ரவிராஜ் ஸôரிடம் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட கதைகளைக் கூறினேன். கடைசியில் அவரிடம் கூறாத ஒரு கதையைத்தான் இறுதியாண்டுப் படமாக எடுத்தேன். இந்தப் படமும் போலீஸ் - திருடன் சம்பந்தப்பட்ட கதைதான். படத்தின் தலைப்பு "அருணோதயம்'. இதில் அப்போது பிரபலமாக நடித்துக்கொண்டிருந்த ஜெய்கணேஷ் மற்றும் நளினிகாந்த் ஆகிய இருவரையும் என்னுடைய இயக்கத்தில் நடிக்க வைத்தேன். நான் புதியவர்களை நடிக்க வைத்து இயக்காததற்குக் காரணம், நம்முடைய பாத்திரத்தை அவர்கள் மேலும் மேலும் செழுமைப்படுத்தமாட்டார்கள் என்பதால்தான். அதேபோல அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்தனர். அந்த சமயத்தில்தான் ஜெய் கணேஷ் ஸôர் நடித்த "அவள் ஒரு தொடர்கதை' படமும் வெளியாகியிருந்தது. நான் ஜெய்கணேஷ் ஸôரிடம் அந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்தது குறித்து கேட்டபோது, ""சினிமாவை நாம் சினிமாத்தனம் இல்லமால் பண்ணினாலே யதார்த்தமான நடிப்பை வெளிக்கொண்டு வந்து விடலாம்'' என்றார். நான் நடிப்புத் துறைக்குள் நுழைவதற்கு அவருடைய அந்த வார்த்தைதான் முதல் அடித்தளமாகவும் எனக்கு அமைந்திருந்தது. நான் திரைப்படத் துறையில் நடிகனானதற்கு இரண்டு விதமான காரணங்கள் மிக முக்கியமானவை. அதில் முதலாவது, கல்லூரியில் படிக்கும்போது நான் பார்த்த பிரெஞ்ச் திரைப்படம் ஒன்று. படத்தின் தலைப்பு சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால், படத்தின் கதை இதுதான். ஒரு போலீஸ் அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் படத்தின் மையக்கதை. இப்படம் எனக்குள் ஒரு பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. அந்தப் படத்தில் நடித்த போலீஸ் அதிகாரியின் பாத்திரம் என்னை வெகுவாகப் பாதித்திருந்தது. இரண்டாவது, திரைப்படக் கல்லூரியில் சேருவதற்கு முன்பாகத்தான் நானும், எனது அண்ணன் ரகுநாதனும் காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கு நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டோம். அதில் அண்ணன்தான் தேர்வானார். நான் தேர்வாகவில்லை. இருந்தாலும், அண்ணனைப் பார்க்க அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு செல்வதுண்டு. அப்போது அங்கே இருக்கும் கைதிகளையும், போலீஸôரின் செயல்களையும் கவனித்துக் கொண்டிருப்பேன். அதுதான் பின் நாட்களில் நான் போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்கு பக்கபலமாக இருந்தது. முதல் பட வாய்ப்பும் அப்படித்தான் எனக்கு அமைந்தது. எனது திரைப்படக் கல்லூரி நண்பரும், எங்களூரைச் சேர்ந்தவருமான ராஜ் என்பவரைச் சந்திக்க அடிக்கடி நான் செல்வதுண்டு. அவர் கல்லூரியில் இயக்குநர் பிரிவில் படித்திருந்தார். அப்படி அவரை ஒருமுறை சந்திக்கச் சென்றிருந்தபோது, வழக்கம்போல் எங்களது திருநெல்வேலி வட்டார வழக்கில் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். இதைப் பக்கத்து அறையிலிருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. நான் சென்றவுடன் எனது நண்பனை அழைத்துப் பேசியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் ஸôர். என்னைப் பற்றி விசாரித்துவிட்டு என்னை அவருடைய அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு சொல்லியிருக்கிறார். அதன்படி நானும் அவரை அலுவலகத்தில் போய் சந்தித்தபோது அங்கே "கேப்டன்' விஜயகாந்த் ஸôர் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்த இயக்குநர், கேப்டன் ஸôரிடம் அறிமுகப்படுத்தி ""சம்பந்தப்பட்ட பாத்திரத்தில் இவரை நடிக்க வைக்க இருக்கிறேன். உங்களுக்கு சம்மதமா?'' என்று கேட்டார். கேப்டன் ஸôரும், ""உங்களுக்கு சரியாக இருந்தால் அந்தப் பாத்திரத்தில் அவரையே போடுங்கள்...'' என்றார். முருகதாஸ் ஸôர், ""இன்னும் இரண்டொரு நாட்களில் உங்களை புரொடக்ஷன் மேனேஜர் தொடர்பு கொள்வார்'' என்றார். இதன்பிறகு எனக்கு அந்தப் படத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திரைப்படத் துறையில் ஒரு நடிகனாக "ரமணா' படத்தின் மூலமாகத்தான் நான் அறிமுகமானேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய கனவு நிறைவேறத் தொடங்கிய நாளும் அதுதான்! என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தினமும் அதுதான்!
(தொடரும்)
(தொடரும்)
Comments
Post a Comment