சினிமா - 10
(ஓர் இரவு)
சிக்கலான சமூக வாழ்க்கையின் கட்டுப்பாடுகளால் விளையும் விபரீதங்கள் வீதிக்கு வராதவை. அல்லது கண்டுகொள்ளப்படாதவை. சமூகத்தின் ஓர் அங்கமான குடும்பத்தினுள் நிகழும் வன்முறைகள் இன்னும் தீர்வு காணப்படாத கேள்விகளாக முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அர்த்தமற்ற வாழ்க்கை பயணத்தில் நம்மைச் சுற்றி நாம் போட்டுக்கொள்ளும் கட்டுப்பாடுகள் நம்மை சதா அலைகழித்துக் கொண்டே இருப்பதைப் போல! கட்டுப்பாடுகள் மீறுவதற்காகத்தானோ? தனி மனிதனாக வாழ நேர்ந்து விட்டால் நாம் நம்மை எப்படி வேண்டுமானாலும் சமூகத்தில் பிணைத்துக் கொள்ள முடியும். சமூகமும் அதற்கு வழி காட்டும். ஆனால், கூடி வாழ நேரிடுகிறபோதுதான் கட்டுப்பாடுகள் இயல்பாக நம்முடைய கைகளை கட்டிப்போட்டு விடுகின்றன. சமூகம் எழுதி வைத்திருக்கும் கோட்பாடுகள் காலந்தோறும் மீறப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வந்தாலும், சமூகம் தொடர்ந்து தனது வரையறையை எழுதிக்கொண்டேதான் வருகிறது. சமூகத்தின் வேலையே குடும்பத்தை வரையறைப்படுத்துவதுதானே! குடும்பமோ சமூகத்தை அஞ்சியேதான் வாழ்கிறது. குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைகளுக்கான நீதிக்கு சமூகம் கண்களை கட்டிக்கொண்டுதானே தீர்ப்பு வழங்குகிறது. ஒருபோதும் அதற்கு வன்முறையின் கோர வேர்கள் தெரிவதேயில்லை. இல்லையா? ஒருவேளை இருட்டான பக்கங்களை அது பார்க்க மறுக்கிறதோ? சமூகம் தன் அழுக்கை மறைத்துக்கொண்டு சதா பயணித்துக் கொண்டே இருக்கையில், வாழ்வு மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? அழுக்கடைந்த வாழ்க்கையில் எல்லாம் பிரச்சினைதான். அதன் எதற்கும் நியாயமில்லை? தீர்வுமில்லை. வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாய் இருப்பதில்லை. நதியில் விழுந்த இலையின் பயணத்தைப்போல வாழ்வு அதன் திசையில் நம்மை அலைக்கழித்தபடிதான் செல்லும். நாம் இலையாய் இருந்தால் தொடர்ந்து பயணித்துத்தான் ஆக வேண்டும். இலையாய் இருப்பது நாமா? சமூகமா? குடும்பத்தின் வேர்களான குழந்தைகளின் மனவுலகத்தை நாம் என்றைக்காவது நெருங்கிச் சென்று பார்க்க நேர்ந்திருக்கிறதா? பெரும்பாலான குழந்தைகளுக்கு நாம் தனிமையைத்தான் பரிசாக வழங்கியிருக்கிறோம் என்பதையாவது நம்மால் நேர்மையாக ஒப்புக்கொள்ள முடியுமா? அல்லது குழந்தைகள் பெரும்பாலும் தனிமையைத்தான் தரிசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியுமா? குழந்தைகளுக்கு தனிமையை பரிசளித்தது யார்? தனிமை புரிந்து கொண்டவர்களுக்கு அழகு! குழந்தைகளுக்கு தனிமை புரியுமா? கூடி விளையாடும் குழந்தைகளின் காட்சி மனித வாழ்க்கையின் சரித்திர நிகழ்வுகள். நம்முடைய தெருக்களும், வீதிகளும் குழந்தைகள் விளையாட அனுமதிக்கின்றனவா? நகரத்தில் சரித்திர நிகழ்வுகளுக்கு இடமுண்டா? பத்துக்கு பத்து சுவர்களுக்குள் குழந்தைகள் எதைத்தேடி அலையும்? தொலைக்காட்சிகளும், டெர்பி பொம்மைகளும், காகித தாட்களும், சாக்பீஸ் துண்டுகளும் அதன் தனிமையை விரட்டி விடுமா? குழந்தைகள் பெற்றுக்கொள்வது சந்தோஷத்திற்காகவா? சமூகத்தை வளர்தெடுப்பதற்கா? அர்த்தம் இழந்துபோன இந்த கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார்? சமூகமா? குடும்பமா? ஒருவேளை அதற்கான பதில் உங்களிடம் இருக்கிறதா? கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஓ! சமூகம் தன் வேலையைத் தொடங்கி விட்டது!
நகரத்தில் இருக்கும் அந்த வீட்டில் பொருட்கள் கலைந்து கிடக்கின்றன. சிறுமி ஒருத்தி பயம் கவ்விய நிலையில் கால்களை குறுக்காக கட்டிக்கொண்டு இறுக்கத்தோடு சுவரோரம் உட்கார்ந்திருக்கிறாள். அருகில் இருக்கும் தொலைபேசியில் அவளது கவனம் படிகிறது. யாருடைய அழைப்பிற்காகவோ அவள் காத்திருப்பது தெரிகிறது. பயம் அப்பிக்கிடக்கும் அவளது மனதிற்குள் வார்த்தைகள் அதிரடியாய் இறங்குகின்றன. அவளது நினைவு பின்னோக்கி நகர்கிறது. அவளது அம்மா அவளுக்கு தலைவாரிக் கொண்டிருக்கிறாள். அவனது தம்பி அவர்களது அருகில் தலை குனிந்தபடி நின்று கொண்டிருக்கிறான். வீட்டின் ஒரு அறையிலிருந்து அவளது அப்பா எதையோ அவள் அம்மாவிடம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறார். அவளது அம்மா அறையிலேயே சரியாக தேடிப்பார்க்கச் சொல்லுகிறாள். அவர் தொடர்ந்து நச்சரிக்கிறார். அவர்களுக்குள் வார்த்தைகள் தடித்து, வெடிக்கின்றன. அலுப்புடன் தன் மகளின் தலையை தள்ளிவிட்டு, அந்த சிறுமியின் தாய் அந்த அறைக்குள் நுழைகிறாள். அவள் கோபத்தின் உச்சியில் தனது கணவனை திட்டுகிறாள். பதிலுக்கு அவனும் மோசமான வார்த்தைகளை வீசுகிறான். முடிவில் அவன் அறையை விட்டு கோபத்துடன் திட்டிக்கொண்டே, வீட்டிலிருக்கும் பூச்சாடியை கிழேத் தள்ளிவிட்டுவிட்டு வெளியேறுகிறான். அவன் பின்னாலே அவனது மனைவியும் பெரும் கோபத்தோடு அவனை திட்டியபடியே, வெறுப்புடன் அறையை விட்டு வெளியேறுகிறாள். சிறுமி அம்மாவை அழைப்பினால் தடுக்கப் பார்க்க, அது தோல்வியில் முடிவடைகிறது. தற்போது அவள் நினைவிலிருந்து திரும்புகிறாள். வீட்டின் கனத்த அமைதி அவளை மேலும் பயமுறுத்துகிறது. அவள் அருகிலிருக்கும் தொலைபேசியிலிருந்து அழைப்பு வராதா? என்று ஏங்கியபடியும், பயத்தைக் கைவிடாமலும் சற்று கோபத்துடனும், தன் குடும்பம் மீதான வெறுப்பினாலும் தனிமையில் அமர்ந்திருக்கிறாள். பக்கத்து வீட்டிலிருக்கும் நடுத்தர வயதையொத்த ஒருவன் அந்த சிறுமியின் அருகில் அமர்ந்து, அவளுக்கு ஆறுதல் சொல்ல வருவதுபோல, அவளை யாருமில்லாத தனது வீட்டிற்கு தப்பான எண்ணத்தோடு அழைக்கிறான். அது அவனின் உடல் மொழியில் நமக்கு தெரிகிறது. அந்த சிறுமி அவன் தன்னை தொடுவதை தடுக்கிறாள். இந்த சூழலில் பக்கத்து அறையிலிருந்து அவனது தம்பி அவளை அழைக்கிறான். தம்பியின் குரல் கேட்டு, அந்த நடுத்தர வயதுக்காரர் தான் அப்புறம் வருவதாக கூறி, பயத்தோடு வெளியேறுகிறார். இப்போது தம்பி மறுபடியும் அக்காவை அழைக்கிறான். அவள் தன் தம்பியின் அறைக்குச் செல்கிறாள். தம்பி தனியாக இருப்பது தனக்கு பயமளிப்பதாகவும் அத்தோடு தனக்குப் பசிப்பதாகவும், சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றும் கேட்கிறான். அவள் அவனை சமாதானப்படுத்தி அவனுக்கு எதையாவது சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து சமையலறைக்குள் செல்கிறாள். திடீரென வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை இருளுக்குள் மூழ்கிறது. அவள் மேலும் கலவரமடைகிறாள். இருளில் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே ஓர் தடித்த உருவம் நிற்பது அவளது கண்களுக்குத் தெரிகிறது. அவள் கலவரம் படிந்த பயத்துடனே அந்த இருண்ட சமையலறையிலிருந்து வெளியேறுகிறாள். இருளில் தற்போது "அம்மா' என்று அவள் அலறும் சப்தம் மட்டும் கேட்கிறது. அக்காவின் அலறல் கேட்டு தம்பி இருட்டில் அவளைத் தேடுகிறாள். அறையில் ரத்தம் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. சிறிது நேரத்தில் மின்சாரம் மறுபடியும் வந்து அறையில் வெளிச்சத்தைப் பாய்ச்ச, அந்த சிறுமி வீட்டின் சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். அவளது பாவாடையில் ரத்தம் உறைந்து, கறையாய் படிந்திருக்கிறது. அவள் அருகில் அமரும் தம்பி, வீட்டில் ரத்தம் சிந்தியிருப்பதைக் அவளைத் தொட்டு கேட்கிறான். அவள் தன் தம்பியின் தொடுதலைத் தவிர்த்து, அவனை தூரப்போகச் சொல்லுகிறாள். அவளது குரலில் ஒரு சிறிய வெட்கமும், நாணமும் தலைக்காட்டுகிறது. அவள் பூப்பெய்தி விட்டாள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். வீட்டில் பொருட்கள் கலைந்து கிடக்கின்றன. பயம் பீடித்த நிலையில் திரை இருளில் மூழ்கிறது.
குடும்பத்தில் இருக்கும் கணவனோ, மனைவியோ தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் சண்டைகள் குழந்தையின் மனதில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அவர்களை தனிமையில் விடுவதால் அவர்கள் சமூகத்தில் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்? என்பதனை தனது "ஒர் இரவு' குறும்படத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநரான பாவல் நவகீதன். படத்தின் துவக்கிலிருந்து, இறுதிவரை கேமரா ஓரிடத்தில் நிற்காமல் படபடவென தனது கோணத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு வீட்டினுள், குறிப்பிட்ட சில அறைகளுக்குள்ளேயே கதை நிகழந்தாலும் அதை காட்சிப்படுத்தும்போது, திரும்ப திரும்ப ஒரே மாதிரியான காட்சி கோணத்தை வைக்காமல், இடம் மாற்றி படம் பிடித்திருக்கும் விதம் அழகு. அதேப்போல பின்னணி இசையும். இவையிரண்டும் படத்தின் ஆழத்திற்கு மிகக் கச்சிதமாக உதவியிருக்கின்றன. அதேப்போல கதாபாத்திரங்களின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். செüம்யா பாத்திரத்தேர்வு கனக்கச்சிதம். திறமையான இயக்குநருக்கான எல்லா திறமைகளும் பாவலிடம் தெரிகிறது. நம்பிக்கையளிக்கும் இயக்குநர் பட்டியலில் இனி பாவலுக்கும் ஓர் இடமிருக்கும். வாழ்த்துவோம்!
"ஓர் இரவு' குறும்படத்தை இயக்கியிருக்கும் பாவல் நவகீதன் செங்கல்பட்டைச் சேர்ந்தவராவார். பி.ஏ. பட்டதாரியான இவர், டிப்ளமோவில் காட்சியல் தொடர்பான படிப்பையும் படித்திருக்கிறார். "பாலை' என்னும் குறும்படத்தை 2003-ம் ஆண்டு முதன்முதலாக இயக்கியதிலிருந்து அதன்பிறகு இதுவரை பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல்வேறு குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறது. "ஓர் இரவு' குறும்படம் இவருடைய இயக்கத்தில் 2007-ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். இப்படம் கே.எம்.சி. திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிப்பு மற்றும் சிறந்த பின்ணனி இசை ஆகியப் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டது. தற்போது "ரங்க ராட்டினம்' என்னும் திரைப்படத்தை இயக்கும் வேலைகளில் பாவல் நவகீதன் மூழ்கியிருக்கிறார்.
Comments
Post a Comment