சினிமா - 13
(நெடுஞ்சாலைப் பயணம்)
தமிழ்த் திரையுலகில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை, எந்த சொல்லைக் கொண்டும் ஏட்டில் எழுதி விட முடியாத கண்ணீர் சரித்திரம். மனசு நிறைய கனவுகளோடும், வயிறு நிறைய பசியோடும் கோடம்பாக்க, வடபழனி, எம்.ஜி.ஆர் நகர், சாலிகிராமத் தெருக்களில் சுற்றித் திரியும் இந்த கலியுக கலைஞர்களைப் பற்றிய கதைகள் இதுவரை திரையில் காணாத காவியத்தன்மை கொண்டவை. ஒரு இயக்குனரின் மனவுலகை சரியாகப் புரிந்துகொண்டு, அவரின் படைப்பு வெற்றியடைய அயராது தன் உடலுழைப்பைச் செலுத்தும் இத்தகைய நாயகர்களுக்குக் கிடைக்கும் வெகுமானங்கள் பெரும்பாலும் புறக்கணிப்புகளும், வசை சொற்களும், பட்டினியும்தான். இன்றைய சூழலில் சமூகத்தில் மிகக் குறைவான பொருளாதார வாழ்க்கையை யார் வாழ்கிறார்கள்? என்று எடுத்து ஆய்வு செய்தோமானால், நிச்சயமாக அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள் உதவி இயக்குனர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு டீக்கடையில் டீ கிளாசைச் சுத்தம் செய்யும் சிறுவனுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச கூலியும், மரியாதையும் கூட பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் நம் ஈர மனதைச் சுடும் உண்மையும்கூட! கதை விவாதங்களில், படப்பிடிப்புகளில், ஆடியோ வெளியீட்டு விழாக்களில், தியேட்டரில் என இவர்களின் பங்கை எதன் கொண்டும் அளந்து சொல்லிவிட முடியாதது! டீயும், சிகரெட்டும் உற்ற நண்பர்களாகி அதனை மட்டுமே உண்டு உயிர்வாழும் இந்த ஜீவன்களின் கதை நீண்ட வரலாற்றை உடையது. தீராக் கனவுகளுடன் தன் வாழ்க்கையை எதன் துணைக் கொண்டு இவர்கள் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்? என்பது இன்னமும்,யாராலும் கண்டு சொல்ல முடியாத புதிராகவே இருக்கிறது! பெரும் கனவுகளுடன் நகரம் நோக்கி வந்து, உதவி இயக்குனராய் அலைந்து, சில திரைப்படங்களில் பணியாற்றி, பட முயற்சிகளுக்காக தொடர்ந்து பல தயாரிப்பு நிறுவனங்களுடன் போராடி இதோ இந்த சென்னை பெருநகரத்தின் கூட்ட நெரிசலுக்குள் கசங்கி, காணாமல் போனவர்களின் பட்டியல்கள் சீன பெரும் சுவரைவிடவும் நீளமானவை. பண்டிகை நாட்களிலும், வீட்டில், உறவுகளுக்கு மத்தியில் நடக்கும் குடும்ப விழாக்களிலும் அழைக்கப்படாத நபர்களின் பட்டியலில் உதவி இயக்குனர்களின் பெயரும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ""தான் பிறந்த மண்ணில் ஒரு இயக்குனராய் மட்டுமே தடம் பதிப்பேன்'' என்று சூளுரைத்து மாண்டு, மரித்துப்போன எம் கலைஞர்களின் கண்ணீர் வாழ்க்கையை இன்னும் எத்தனைப் பக்கங்கள் எழுதினாலும் எழுதித் தீர்க்க முடியாதுதான்! சிறிது நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் கோர மரணத்தைப் பற்றிய செய்தி ஒன்றுதான் எம் நெஞ்சத்தின் சுவர்களில் மோதி, தொடர்ந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நண்பர் திரைப்பட உதவி இயக்குனர். வழக்கம்போல் நண்பர் ஒருவரின் மூலமாக டீக்கடை ஒன்றில்தான், புகையும் சிகரட்டோடு நமக்கு அவர் அறிமுகமானார். பிரபல இயக்குனர் ஒருவரிடம் தொடர்ந்து உதவியாளராகப் பணியாற்றியவர். பெரியாரியக் கருத்துக்களின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் தீராதப் பற்றுக் கொண்ட அந் நண்பரை, வேடந்தாங்கல் பறவைகளைப் போல வருடத்தின் ஏதோ சில நாட்களில் மட்டும்தான் நாம் காணுவதுண்டு. புற்றுநோய் பீடித்து, வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டு மருத்துவமனையிலிருந்து தன் பிறந்த மண்ணிற்கு அவர் திரும்பியபோது அவரது உடலில் கனவுகள் மட்டும்தான் எஞ்சியிருந்தன. பெற்றவர்களிடமிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த, பெருங்குரலெடுத்த அழுகையோ, நண்பர்களின் துக்கமோ எதுவுமே அறியாதவராகத்தான் அவரது உடல் அவரது பிறந்த மண்ணைத் தழுவியது. தன் பெரும் கனவுகளோடு மரித்துப்போன அந்த உதவி இயக்குனரின் பூத உடலை தீ சிதையில் வைக்கும் வரை உடனிருந்து, எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டது வேறு யாருமில்லை, முகம் தெரியாத சக உதவி இயக்குனர்களேதான்!
கிராமம் ஒன்றில் வசிக்கும் இளைஞன் ஒருவன் கிராமிய வாழ்க்கையில் ஈடுபாடின்றி, கவிதையும், கதையும் என வாழ்க்கையைக் கழிக்கிறான். தொழிற்கல்வி படித்திருந்தாலும் அதில் அவனுக்கு நாட்டமில்லை. வீட்டில் தனது அம்மா வைத்திருக்கும் பணத்தை எடுத்துச் சென்று தியேட்டரில் தனக்கு விருப்பமான படங்களைப் பார்க்கிறான். இதனால் வீட்டில் அம்மாவின் வசை சொல் அவனுக்குக் கிடைக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களைப் பார்ப்பதன் வாயிலாக அவனுக்குள் திரைப்பட இயக்குனராகும் கனவு முளைவிடுகிறது. நெருங்கிய நண்பன் ஒருவனின் உதவியால் சென்னைக்கு பயணமாகிறான். அங்கே, ஒரு அறையில் தங்கி, உதவி இயக்குனராவதற்காக வாய்ப்புத் தேடுகிறான். நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு அவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. புத்தகங்களும், கவிதைகளும், இருளும், சிகரெட்டும் மட்டுமே அவனுக்குப் பிறகு உற்றத் தோழர்களாகின்றனர். இத்தகைய சூழலில், அவனது ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று அவனுக்கு வருகிறது. அவனுடைய தாய் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும், மருத்துவச் செலவுக்கு ரூபாய் நாற்பதாயிரம் தேவைப்படுவதாகவும், பணத்தை எடுத்துக்கொண்டு உடனே ஊர் திரும்பவும் என்று எதிர்முனையில் இருக்கும் நண்பர் கூறுகிறார். உதவி இயக்குனராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அவனுக்கு சாப்பாட்டிற்கே வழியில்லாதபோது, பெரும் பணத்திற்கு என்ன செய்வது? என்று அவன் மனம் குழம்புகிறான். பிறகு, தனது இயக்குனரிடம், தனது தாயின் மருத்துவச் செலவிற்கு பணம் கேட்கும்போது அவரோ, ""தம்பி நான் சான்ஸ்தான் கொடுக்க முடியும். இவ்வளவு பணம் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?'' என்று கையை விரிக்கிறார். வேறு வழியின்றி, அவன் தன் உடலில் இருக்கும் கிட்னியில் ஒன்றை விற்க முடிவு செய்கிறான். இதற்காக அவன் மருத்துவமனையை நாடும்போது, அவர்களோ ""அப்படியெல்லாம் நாங்கள் கிட்னியை வாங்குவது கிடையாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவைப்பட்டாலொழிய அவர்கள் மூலமாக மட்டுமே நாங்கள் பணத்தைப் பெற்றுக் கொடுப்போம். மற்றபடி அது சட்டவிரோதமானது'' என்கின்றனர். நம்பிக்கைத் தளர்ந்து அறைக்குத் திரும்பும் அவனை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருத்தி அவனது நிலையை கேட்டு அறிகிறாள். பிறகு, தன்னிடமுள்ள நகைகளைக் கழற்றிக் கொடுத்து அவனுக்கு உதவுகிறாள். நம்பிக்கையுடன் ஊர் திரும்பும் அவனை, வழியிலியே தங்கை வழிமறித்து கதறுகிறாள். உறவினர்களோ, ""பணத்தோடு வாடான்னா... பாடைக்கட்ட வந்திருக்கியே'' என்று வசைபாடுகின்றனர். பெற்றெடுத்தத் தாயைக்கூட காப்பாற்ற முடியாத அவன் மிகுந்த மன வேதனையோடும், கழிவிறக்கத்தோடும் மறுபடியும் சென்னைக்கே திரும்புகிறான். தன் வாழ்க்கையைக் கண்டு மனம் வெறுத்தவனாக, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ரயில்பாதையில் நடப்பவனுக்கு, எதிரே வரும் ரயில் வண்டியில் சாக ஒரு பெண்ணும் முற்படுவதைக் கண்டு, அவளைக் காப்பாற்றுகிறான். ""வெளிநாட்டில் படிக்க வீட்டில் சம்மதிக்காததால்தான் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்'' என்று தன் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறுகிறாள் அவள். ""சாவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், வாழ்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அது வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத்தான்'' என்று கூறி அவளோடு, தன் தற்கொலை முயற்சியையும் கைவிட்டு, அவன் தன் புதிய பயணத்தைத் தொடங்குவதோடு படம் நிறைவடைகிறது.
வாழ்க்கையின் மீதான வெறுப்பினால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு உதவி இயக்குனர், மற்றொரு தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி அதன் மூலம் தன்னை திருத்திக் கொள்ளும் மாறுபட்ட கதைதான் "நெடுஞ்சாலைப் பயணம்'. இன்றைய உதவி இயக்குனர்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சினைகளையும், அவர்களது கனவுகளையும் ஒரு தற்கொலை முயற்சியின் வாயிலாக காட்சிப்படுத்தி, அதனை "ஃப்ளாஷ்பேக்' உத்தியோடு திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனரான ஏ.சுதாகர். படத்தின் துவக்கத்திலேயே காட்டப்படும் ரயில் வண்டியின் சப்தமும், அதனைத் தொடர்ந்து நகரும் காட்சிகளில் காட்டப்படும் புதிய கேமரா கோணங்களும், ஒரு இயக்குனருக்கான ஆளுமைகளை காட்டுகிறது. இரண்டாவதாக, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணி இசையை, கதையின் தன்மைகேற்ப தேர்ந்தெடுத்திருப்பதும், காட்சிகளை இழுக்காமல், கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருப்பதும் பாராட்டிற்குரியது. படத்தின் துவக்கத்தில் போடப்படும் டைட்டிலில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தலைப்பிற்கேற்றவாறு சாலையில் டைட்டில்கள் தோன்றுவது போன்று அமைத்திருப்பது, திரைப்படங்களுக்கு இணையான அணுகுமுறை. வசனங்களை குறைத்து, காட்சிகளின் மூலமாகவே கதையைச் சொல்ல முற்பட்டிருக்கும் ஏ.சுதாகரை மனம் திறந்து வரவேற்கலாம்!
தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்களை இயக்குவதற்கு முன்னதாக, சில குறும்படங்களை இயக்கி, தங்களின் திறமையை பரிசோதனை செய்து கொள்வது வரவேற்கத் தக்கது! பெரும் பொருட்செலவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி, பிறகு அத்திரைப்படத்தில் காணும் குறைகளைக் கண்டு, பிறகு திருத்திக்கொள்வதை விட இதுபோன்ற மாற்று சினிமா முயற்சிகளில் அவர்கள் தங்களை பட்டைத் தீட்டிக் கொள்ளலாம் என்பது பல திரை ஆய்வாளர்களின் கருத்து. திருச்சி - ஆர்.எஸ்.மாத்தூர் அருகேயுள்ள "வங்காரம்' கிராமத்தைச் சேர்ந்தவரான ஏ.சுதாகர், பிரபல இயக்குனர் சரணிடம் "இதயத்திருடன்', "வட்டாரம்' மற்றும் இயக்குனர் வெங்கட்டிடம் "கதிர்வேல்' போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். "நெடுஞ்சாலைப் பயணம்' அவர் இயக்கியிருகும் முதல் குறும்படம். இப்படத்தை அவர் இரண்டே நாட்களில், பதினாறு லோகேஷன்களில் படம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார்.
Comments
Post a Comment