கதை எழுது - 45

1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது.
2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற சொல்செட்டு, அதே சமயத்தில் சரளம், நையாண்டி - இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜ.ர வின் பேனாவிலிருந்துபுறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்குச் சாட்சி.
3. எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அதோடு இணைந்து, அதே சமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு, discipline அவன் பாஷைக்கு அத்யாவசியம்.
4. கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து, தட்டித்தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்.
5. சில சமயங்களில் மனதில் ஒரு எண்ணம் எழுந்ததும் சமயமும் சந்தர்ப்பமும் அற்று அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன.
6. கதையம்சம் என்று தனியாக எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.எந்தக் காட்சியில், எந்த ஓசையில், ஒரு அற்புத அம்சத்தில் கண், செவி, மனம் இதயம் என்று காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது.
7. நெருப்புண்ணா வாய் சுடணும். அப்படி வார்த்தையைச் சுண்டக்காய்ச்சி எழுதணும்.
8. நிறையப் படிக்கணும். தமிழ் மட்டுமல்ல, தெரிஞ்ச மொழி எல்லாத்துலேயும் நிறைய புக்ஸ் படிச்ச பிறகு எழுத ஆரம்பிக்கணும். இப்போ வாசகர் கடிதம் எழுதறவன் கூட எழுத்தாளன்னு சொல்லிக்கிறான். அவனுக்குக்கூட கடிதத்துக்கு இவ்வளவுனு பரிசு எல்லாம் தர்றா. அதனால எழுத்தாளன் ஆகிறது இப்போ ரொம்ப சுலபம்.....
9. யாருமே எழுத்தாளனாய்த்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வழியில் அழகைப் பேணுபவர்தான். ஆனால் அழகை எங்கேயும் கண்டு கொள்ள மனம் பழக வேண்டும். மாலையின் செவ்வானம் அவள் ஜ்வாலா முகத்தை நினைவூட்ட வேண்டும். வாழைமரத்தில் ஆடும் வாழை இலைப் பச்சையில் அவளுடைய தட்டாமாலையில் சுற்றும் பச்சைப் பாவாடை மனதில் தோன்ற வேண்டும். அப்பொதுதான் தரிசனம் நிகழும். எழுத்தாளனுக்கு, அவன் எழுத்து காட்டும் முகங்கள் தான் தரிசனங்கள்.
10.எல்லாவற்றுக்கும் கடைசியாக; முதலும் அதுதான். சிறுகதையோ, நெடுங்கதையோ எழுத ஆரம்பித்து விடு. விஷயம் பிறகு தன் வெளியீட்டுக்குத் தன் வழியை எப்படியேனும் பார்த்துக் கொள்ளும். தண்ணீரில் முதலில் விழுந்தால்தான், குளிப்பதோ, மூழ்கிப் போவதோ, நீச்சல் அடிப்பதோ. எழுதப் போகிறேன், அதற்கு ஹோட்டல் ஓஷியானிக்கில் அறை வாடகைக்கு எடுக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரியாதே. இதோ, திண்ணையில் உட்கார்ந்து, அட்டையைத் துடைமீது வைத்துக் கொண்டு ஆரம்பி. ஆரம்பித்துவிடு.

Comments

Popular Posts