சினிமா - 3
(தீரா இருள்)
வாழ்க்கையின் எல்லா பக்கங்களும் அழகாக இருப்பதில்லை. சில சங்கடங்கள், வருத்தங்கள், மனக்கசப்புகள் என்று விட்டு விலகிவிட முடியாத எத்தனையோ விஷயங்களையும் நமது கைகளில் கோர்த்துக்கொண்டுதான் பயணப்பட வேண்டியிருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத குடும்பமோ, நாடோ இப்பூமியில் இருக்கிறதா என்ன? சூழலுக்கும், வசதிக்கும் ஏற்றவாறு பிரச்சினைகள் வெவ்வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதானே இருக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு நியாயம் அவரவர் தரப்பில் ஒளிந்து கொண்டுதானே உள்ளது. நமக்கு சரி என்று தெரியும் விஷயம் ஏன் மற்றவருக்குத் தவறாகப் படுகிறது? எதனால் மற்றவருக்கு சரியாகத் தோன்றும் விஷயம் நமக்கு சரியாகத் தெரிவதில்லை? சரிக்கும் தவறுக்குமான முரண்பாடுகளால் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருப்பதால்தானோ... பிரச்சினையைச் சார்ந்துதான் சரிக்கும் தவறுக்குமான வேறுபாட்டைப் பிரித்துணர முடியும் அல்லது அலசி ஆராய முடியும். ஒருவருக்கான நியாயமும், ஒரு கோடிப் பேருக்கான நியாயமும் ஒரே போல் இருப்பதில்லையே. எல்லா விடியலும் ஒன்று போலவா இருக்கிறது? ஏன் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டும்? நேற்று போல் இல்லாததுதானே விடியலுக்கு அழகு. ஆகவே, அளவுகளிலும், மாறுபாட்டிலும்தான் பிரச்சினையின் வீரியமும், பதிலும் இருக்கின்றன. வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு அனுபவம் மட்டுமே காரணமாகி விட முடியாது இல்லையா? காலம்தானே நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறது. நேற்று பூதாகரமாய்த் தெரிந்த பிரச்சினை இன்று நகைப்பிற்கான இடமாக மாறிப்போனது எதனால்? காலம் கொடுத்த மன மாற்றத்தினால்தானே? காலம் கட்டணம் வாங்காத உன்னத மருத்துவனாக, அன்பு காட்டும் தாயாக, அரவணைத்துக் கொள்ளும் நட்பாக நம் முன்னே கை விரித்துக் காத்துக் கிடக்கிறது. "யாவும் கடந்து போகும்' என்பது போல, காலம் எல்லாவற்றையும் மாற்றும். வாழ்க்கையை மட்டுமல்ல. வலிகளையும் கூடத்தான்! காத்திருப்போம் தோழர்களே! காத்திருப்பு மட்டும்தான் இப்போது நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம். நிராயுதபாணியான நமக்கு, காலத்தை விட வேறு எது நம்பிக்கையை ஊட்டி விடப்போகிறது.
பாரீஸில் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள ஒரு தெருவில் வசிக்கும் நான்கு பேரின் பிரச்சினையை மையப்படுத்தி கதை நகர்கிறது. அலுவலகப் பணி முடித்து மிகுந்த சோர்வுடன் வீட்டுக்குத் திரும்புகிறாள் பெண்ணொருத்தி. வீட்டினுள் அவளுடைய வருகைக்காகக் காத்திருக்கிறான் கணவன். அவனுடைய கண்களில் சந்தேகத்தின் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வீட்டினுள்ளே நுழையும் அப்பெண், நேராக தன் சிகையை சரி செய்தபடி அடுக்களையை நோக்கிச் செல்கிறாள். அங்கே பொருட்கள் போட்டது போட்டபடியே கிடக்கின்றன. அவள் கணவனிடம், "வீட்டில்தானே இருக்கிறீர்கள். சிக்கனைக் கூடவா உங்களால் வெட்டி வைக்க முடியவில்லை. நானும்தானே வேலைக்குப் போய்விட்டு வருகிறேன்...'' என்று கோபப்பட்டுப் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் அவளுடைய கைப்பையிலிருக்கும் செல்பேசியை எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறான். அவளின் கேள்விக்கு பதிலளிக்காது, "செல்பேசியில் இருக்கும் புது எண் யாருடையது?' என்று வினவ, அவளோ, "இவ்வளவு சந்தேகம் கொண்ட நீங்கள் எதற்கு என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள்? அரசு வேலையில் இருக்கிறேன் என்பதாலா?'' என்று கோப வார்த்தைகளை வீசுகிறாள். பதிலுக்கு அவனும் வீசுகிறான். முடிவில், அவன் அவளைத் தாக்க, அவளின் அலறோடு திரை இருளில் மறைகிறது. இப்போது அவள் நடுநிசியின் இருள் சூழ்ந்த இரவில் அந்தத் தெருவின் வீதியில் காத்திருக்கிறாள். அந்தத் தெருவின் வழியாக காரில் செல்லும் இளைஞர்கள் இருவர் காரை நிறுத்துகின்றனர். அவளைத் தவறாக நினைத்து அவளிடம் ""எவ்வளவு ரூபாய்?...'' என்கின்றனர். அவள் ""தயவு செய்து போய்விடுங்கள்...'' என்று கூறவே, அவர்கள் விலகிச் செல்கின்றனர். இப்போது அந்தத் தெருவின் ப்ளாட்ஃபாரத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தெருவை நோட்டமிட்டபடியும், சிகரெட்டைப் புகைத்தபடியும் ப்ளாட்ஃபார மேஜையில் சாய்ந்திருக்கிறான். ப்ளாட்ஃபாரத்தில் முகம் கவிழ்ந்த நிலையில் இளைஞன் ஒருவன் தெருவை வெறித்துப் பார்த்தபடி அமரந்திருக்கிறான். அவனது பார்வை இருளினை நோக்கி நகர...அதன் தொடர்ச்சியாக அவனது பிரச்சினை காட்சிப்படுத்தப்படுகிறது. அந்த நாட்டில் வாழ்வதற்கான விசா அவனுக்குக் கிடைக்காததாலும், அவனுடைய வேலைக்கு வேறொருவர் வருவதாலும் அவன் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்படுகிறான். அடுத்து, அந்தத் தெருவில் கையில் சூட்கேஸþடன் கோட்டு சூட்டுப் போட்ட நாகரீகமான இளைஞன் அந்தப் பிச்சைக்காரனிடம் ஏதோ கேட்க, அவன் மறுத்துவிட்டு சாவகாசமாக புகைத்தபடி படுத்துக்கொள்கிறான். கையில் சூட்கேஸ் வைத்திருக்கும் இளைஞன் அந்தப் பெண்ணிடம் வருகிறான். அவளிடம் ஏதோ கூற, அவளும் மறுக்கிறாள். இப்போது அந்த சூட்கேஸ் இளைஞனுடைய பார்வை, அதே ப்ளாட்ஃபாரத்தில் சற்றுத் தள்ளி இருளில் அமர்ந்திருக்கும் இளைஞன் மீது கவிழ்கிறது. இச்சமயத்தில் அந்தத் தெருவின் வழியே வேகமாக வரும் கார் ஒன்று, ஒரு இளைஞனை கீழே தள்ளிவிட்டுப் போகிறது. அந்த இளைஞனது பாயின்ட் ஆஃப் வியூவில் அவனுடைய பிரச்சினையும் அலசப்படுகிறது. அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வாழும் இளைஞர்கள் அந்த இளைஞன் ஏதோ பேசியதற்காக அவனைத் தாக்கி, கீழே தள்ளிவிட்டுப் போகின்றனர் என்பது தெரிய வருகிறது. தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவன் எழுந்து அருகிலிருக்கும் வீடு நோக்கிச் செல்ல, அந்த வீட்டிலிருந்து வேறு ஒரு இளைஞன் கோபத்துடன் வெளியேறுகிறான். அவனை வீட்டிற்குள்ளே வருமாறு அழைத்தபடி அவனது அம்மா அந்த இளைஞனை பின் தொடர்கிறாள். ஆனால் அவனோ அம்மாவை நிராகரித்தபடியே தெருவில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். வீட்டில் அவனது தந்தையின் குடிப்பழக்கத்தால் பிரச்சினை என்பது நமக்கு வசனங்களின் மூலம் உணர்த்தப்படுகிறது. பிச்சைக்காரன் இந்தக் காட்சிகள் அனைத்தையும் பார்த்தபடி, எந்தவித எதிர்வினையுமின்றி வெறும் பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறான். சிகரெட் புகைந்தபடியே இருக்கிறது. சூட்கேஸ் இளைஞன், தலைகவிழ்ந்து காத்திருக்கும் இளைஞனின் தோளைத் தொட்டு, "எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. இந்த உலகத்தில் அன்பு காட்டவும் ஆட்கள் இருக்கிறார்கள் நண்பனே. இதோ இந்த வாசகத்தைப் படியுங்கள்...'' என்று ஒரு புத்தகத்தைத் திறந்து, ""ஒரு மந்தையில் நான்கு ஆடுகள். நான்கும் வெவ்வேறு திசைகளில்....'' என்றபடி வாசிக்கத் துவங்குகிறான். அவனுக்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணிடம் மற்றொரு கார் வந்து நிற்கிறது. காரிலிருக்கும் இளைஞர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து சினேகத்துடன் ""உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?...'' என்கின்றனர். வாழ்க்கையின் நேசம் மிகுந்த வார்த்தையைக் கேட்டுவிட்ட சந்தோஷத்தில் அவள் விருப்பத்துடன் அந்தக் காரில் ஏறிச் செல்கிறாள். கார் இருளைடந்த அந்தத் தெருவிலிருந்து புறப்பட்டு, மிகுந்த வெளிச்சம் பரவிக் கிடக்கும் சாலையை நோக்கி விரைவதோடு படம் நிறைவடைகிறது.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் பிரான்ஸ் தமிழர்கள் ஆண்டுதோறும் குறும்பட விழாக்களை நடத்தி வருகிறார்கள். இப்பட விழாவில் கலந்து கொள்ளும் படங்களிலிருந்து சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு "சங்கிலியன் விருது' என்ற பெயரில் விருது கொடுத்து கெüரவிக்கிறார்கள். 2009க்கான சங்கிலியின் விருதைத் தேர்வு செய்ய தமிழகத்திலிருந்து ஓவியர் மருதுவும், ஒளிப்பதிவாளர் செழியனும் அழைக்கப்பட்டிருந்தார்கள். திரையிடப்பட்ட பல படங்களிலிருந்து மூன்று படங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதில் "தீரா இருள்' குறும்படம் "சிறந்த இயக்க'த்திற்கானப் படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெற்றிருக்கும் அரிய முயற்சி என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். கதையின் உள்ளடக்கத்திலும், தொழில்நுட்ப விஷயங்களிலும் இக்குறும்படம் மிகச்சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவரை "பாப்புலர் சினிமா' மீதான மோகத்திலிருந்த இளைஞர்கள் உண்மையைத் தேடும் முயற்சியாக பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இக்குறும்படம் எடுத்துக் காட்டுகிறது. இப்படத்தை இயக்கியிருப்பவர் சதா பிரணவன். திரைக்கதையில் ஒரு புதிய யுத்தியைக் கையாண்டிருப்பது, மிகக் குறுகிய அளவிலான பாத்திரங்களை வைத்துக்கொண்டு அழுத்தமான ஒரு கதையைச் சொல்லியிருப்பது போன்றவை அவருடைய இயக்குநருக்கான ஆளுமைகளாகத் தெரிகின்றன. ஜனாவின் இசையும், டெசுபனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கின்றன. "அவதாரம்' இக்குறும்படத்தைத் தயாரித்திருக்கிறது. தமிழகத்தில் குறும்படங்கள் இயக்க முன் வருவோர் இம்மாதிரியான குறும்படங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் வெற்றியும், கவனிக்கத்தக்க வரவேற்பையும் பெறலாம்.
Comments
Post a Comment