கதை எழுது - 25
1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் குணபேதங்கள், பெயர்கள், சம்பாஷணைகள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டு மொத்தமாக நகைச்சுவை உணர்வைப் படிப்போர் மனத்தில் எழுப்ப இவை உதவும்.
2. பெரும்பாலான நகைச்சுவைக் கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாகக் கதையை அவர்கள் ஒருபடி அதிகமாகவே ரசிக்க முடியும்.
3. எழுதுவது என்பது மிக எளிய விஷயம். ஆனால் எழுதத் தொடங்குமுன் நிறைய மனத்தில் அசை போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறைய யோசனை செய்து மனத்திலேயே கதையை உருவாக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.
4. கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு - ஏன் கதையைவிட அதிகம் என்றுகூடச் சொல்லலாம் - முக்கியமானது நடை, கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், ம்பாஷணைகளைச் சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் - எல்லாம் முக்கியமானவை.
5. நகைச்சுவை எழுதும்போது, சிலேடைகளைப் பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும் சில சிலேடைகளைச் சேர்க்க முடியும். அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.
6. அதீதமும் நகைச்சுவையில் ஒரு முக்கிய அம்சம். இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.
7. நகைச்சுவைக் கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, வக்கிரமான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது நலம். எப்படி இருப்பினும், அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும் தோல்வியும்.
Comments
Post a Comment