கதை எழுது - 29

1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு
வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ். ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.
2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்;
கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிட கடைசி வாக்கியம்தான் முக்கியம் - தவில் அடியின் முத்தாய்பைப் போல. சிலை செய்கிறவன் செய்து முடித்த சிலைக்குக் கண்களைத் திறக்கிற மாதிரி!
3. கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக்கூட ஒரு கதையை எழுதலாம். கருவே இல்லாமல்கூட கதை எழுதி விடலாம். கூந்தல் வைத்திருக்கிற பொண்ணு எப்படி வேண்டுமானாலும் கூந்தலை முடிந்து காண்பிப்பாள். எல்லாம் சாமர்த்தியத்தினுள் அடக்கம்.
4. எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை. எல்லோருக்கும்தான் கிடைக்கும் கரு. கருவுக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் எழுதப்பட்ட கருக்களைவிட, எழுதப்படாமல் கிடக்கிற கருக்கள்தான் லட்சோபலட்சம். இன்றைய தேதி வரை கரு கிடைக்காமல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் கருவைத் தேர்ந்தெடுக்கிறவன் புதுப்புது மாதிரியானவைகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவன் புதுக்கருவை வைத்து எழுதித் தோற்றுப் போனாலும்கூட அவனுக்கு அதற்காக நான் 30 மார்க்குகள் கொடுப்பேன்.
5. தூங்கிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும்போதும் அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும். அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டரையைச் சுற்றி கிடப்பதுபோல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.
6. கருக்களில் நாலு வகை உண்டு. கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவித்தது, கற்பனை. இந்த நாலில்
எது, சம்பந்தப்பட்ட கதைக்கு நன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. பொதுவாக அனுபவித்தது
சிறப்பாக அமையலாம் என்பது என்னுடைய கணக்கு.
7. எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள்
தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை.
8. ஒவ்வொரு மனுஷனிடமும் அவன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு நாவலுக்கான கதை நிச்சயம் இருக்கும். தன்னுடைய வாழ்க்கையையே சுவாரஸ்யமாக - போரடிக்காமல் - சொன்னால் அதுவே ஒரு நாவலாகி விடும்.
9. நாவல் என்பது ஒரு பரந்த விஸ்தாரமான களம். எழுத்தாளன் அதில் ஓடியாடி இஷ்டம்போல்
'விளையாட'லாம். சிறுகதை போல, தீ வளையத்துக்குள் பாய்ந்து தீக்காயம் படாமல் வெளியே வருவதோ, இரும்புக் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டிலோ அல்லது மேலுங்கீழாகவோ வட்டமடிக்கிற சோலியே கிடையாது.
10. நாவலில் இன்னொரு முக்கிய அம்சம், நடை; மொழிநடை.. சரித்திர நாவல் என்றால் அதில்
வருகிற அரசியும் அரசனும் தனிமையில் பேசும்போதுகூட அவர்களுக்குள் ஏட்டுத் தமிழ் நடையில்தான் பேசுவார்கள் என்கிற மடத்தனமான ஓர் எண்ணம் இருக்கிறது! (நம்முடைய வானொலி சரித்திர நாடகங்களைக் கேட்டிருக்கிறீர்களா?) இரண்டு புலவர்கள் சந்தித்து ஒருத்தருக்தொருத்தர் பேசிக் கொள்ளும்போதுஅப்படிப் பேசினார்கள் என்றால், தொலைந்து போகிறது என்று விட்டுவிடலாம்.; ராஜாவும் ராணியும் படுக்கை அறையில் ஏட்டுத் தமிழில் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குச் சரியயாகத் தோன்றவில்லை.

Comments

Popular Posts