சினிமா - 8
(மறைபொருள்)
சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் என்பது காலம் காலமாக மிக வன்மையாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய தொழில்நுட்பப் புரட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியுலகிற்கு வந்து விட்டாலும், அவர்கள் கைவிலங்கிடப்பட்ட கைதியாகத்தான் அலைந்து, திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். தன் சொந்தக் கருத்தை பகிர்ந்து கொள்ளவோ, ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தவோ அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே அவர்கள் தனது கருத்தை சமூகத்தின் முன் வைத்தாலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை என்பது ஈடு செய்ய இயலாததாகவும் இருக்கிறது. சமீபத்தில் பிரபல ஆவணப்பட இயக்குநரும், கவிஞருமான லீனா மணிமேகலையின் கவிதை குறித்து எழுந்திருக்கும் சர்ச்சைகளே அதற்கு சாட்சி! பொதுத் தளத்தில், ஊடகங்களில், அலுவலகங்களில், குடும்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் என்பது பக்கங்களுக்குள் நிரப்ப இயலாதவை. தன் தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் இணக்கமான செயல்களை செய்ய மட்டுமே சமூகம் அவர்களை அனுமதிக்கிறது. சமூகம் வரையறைத்து வைத்திருக்கிற எல்லைக்கோட்டைத் தாண்டவோ, சுயமுடிவுகளை தீர்மானிக்கவோ ஒருபோதும் அவளுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரமற்றவளாக, அடக்கி ஆளுபவளாக நாகரீகச் சமூகத்தில் அடையாளமிழுந்து வாழும் பெண்களின் கோப பெருமூச்சுகள் நகரத்தின் சூட்டை அதிகப்படுத்தியபடியேதான் இருக்கின்றன. பெண்ணின் கட்டுப்பாட்டு விலங்குகள் என்று முழுமையாக உடைக்கப்படுகிறதோ, பெண் எப்போது தன்னை சுதந்திரமானவளாக உணருகிறாளோ அந்த நாளே மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் பொதிந்த நாளாக இருக்க முடியும். அந்த நாள் வருவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை!
குளித்து மின்விசிறியில் தலை துவட்டும் ஒரு பெண், பிறகு தனது பீரோவில் குவிந்திருக்கும் விதவிதமான வண்ண ஆடைகளிலிருந்து, தனக்கு விருப்பமான உடையைத் தேடித் தேடி கண்டடைகிறாள். தலை சீவுகிறாள். அழகிய தன் முகத்துக்கு அலங்காரம் செய்கிறாள். கவிதைப் பேசும் கண்களுக்கு மையிடுகிறாள். மெல்லிய தன் கை விரல்களுக்கு நெயில் பாலீஷ் பூசுகிறாள். பிறகு, தலையில் பூச்சூடுகிறாள். நிலையுர கண்ணாடியில் தனது அலங்கார ரூபத்தை ரசிக்கிறாள். அவளுடைய அலங்கார காட்சி, அழகிய நட்சத்திரம் ஒன்று வானத்திலிருந்து, பூமிக்கு இறங்கி வந்ததைப் போன்று காட்சியளிக்க, நிலைக்கண்ணாடி அவளைக் கண்டு நாணம் பூக்கிறது. பிறகு அவள் பெருமூச்சை ஒன்றை வெளியிட்டபடி தன் பீரோவிலிருந்து கருப்பு நிற பர்தாவை எடுத்து அணிகிறாள். அது அவளையும், அவளது அழகையும் தனக்குள் மறைத்துக்கொள்ளுகின்றன. பின் முகத்திரை அணிகிறாள். இப்போது அவளது கண்கள் மட்டுமே அந்த பர்தாவில் தெரிகிறது. கவலை தோய்ந்த முகத்துடன் அவள் மீண்டும் தன்னை கண்ணாடியில் பார்க்கிறாள். சோகத்தில் அவள் கண்கள் மூடித் திறக்கிறது. இறுதியாய் கண்களை மூடிக்கொள்ள, இருள் திரையை சூழ படம் நிறைவடைகிறது.
""பொன்.சுதா இயக்கிய மறைபொருள் என்னை பாதித்தது. வசனம் எதுவுமில்லாத அந்த ஐந்து நிமிடக் குறும்படம் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலை மெüனமாகப் பதிவு செய்ததால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பல நிமிடங்கள் கைத்தட்டலைப் பெற்றது. குறும்படம் காட்சி ஊடகத்தின் குறைவான கால அளவைக் கோருகிறது. ஆனால் பெரிய தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. "மறைபொருள்' ஒரு செய்தியை எப்படிக் கலை வடிவமாக்குவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது'' என்று கூறும் கீரனூர் ஜாகீர்ராஜாவின் வார்த்தைகளே படத்தைப் பற்றிய மதிப்பீடுகளை நம்முன் வைக்கிறது. ""மறைபொருள்' தன் பொருளை ஒரு பூடகமாய்த்தான் காட்டத் துவங்குகிறது. சராசரிக் குடும்பத்து இளம்பெண் வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்ல தன்னை ஆயத்தம் செய்கிறாள். குளித்து வந்து தலைவாரிப் பூ முடித்தல், கண்ணுக்கு மை தீட்டுதல், உடையணிதல் எல்லாம் ஒழுங்காக முடிகின்றன. கண்ணாடி முன் நின்றவளின் முகம் தன் அலங்காரத்தைக் கண்டு திருப்தியில் பிரகாசமடைகிறது. பின் முஸ்லீம் பெண்ணுக்கான கறுப்பு உடையை எடுத்து அணிகிறாள். முகம் மறைக்கப்பட்டு கண்கள் மட்டும் ஒரு சோகத்தை அப்பியனவாய் கனத்து மூடுகின்றன. அவை மறுபடி திறந்து மூடுகின்றன. பார்வையாளன் தன்னுள் சிதறுகிறான். இத்தகைய பாதிப்பு விளைவிக்கக் கூடியதாய் அண்மையில் வெளிவந்த தமிழ்க் குறும்படமேதும் நம்மிடமில்லை'' என்று தன் மனம் திறந்து கூறும் கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவகாந்தனின் கூற்று மிகச் சரியானதே. படத்தில் பெண் பாத்திரத்தில் வரும் நிவேதாவின் உடல்மொழியும், வெளிப்பாட்டுத்தன்மையும் யதார்த்தத்தின் மொழியில் பேசுகின்றன. பீட்டர் பாபியாவின் கச்சிதமான படத்தொகுப்பும், கண்களை உறுத்தாத, மிக இயல்பான வெளிச்சத்தில், தேவையான கோணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கும் ச.ஜெயக்குமாரின் கேமரா கண்களும் கூடுதல் அழகு! இது போன்ற முயற்சிகளை தமிழ் குறும்படச் சூழலில் மனம் திறந்து வரவேற்கலாம்! திரைப்படத்துறையில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வரும் பொன்.சுதா இயக்கிய "மறைபொருள்' முதல் குறும்படமாகும். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது குறும்படம்தான் "நடந்த கதை'. பெரியாரிய கருத்துக்களின் மீது தீவிர பற்றுக்கொண்ட இவர், மதங்களும், சாதியமும்தான் சமூகத்தின் முதல் எதிரி என்று நம்புபவர். ""கோவையில் ஒரு முறை நண்பர் ஆனந்தகுமாருடன் கிரேஸ்கட் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது பர்தா அணிந்த சில பெண்கள் ஒரு பெரிய துணிக்கடைக்குள் நுழைந்தார்கள். அதைக் கண்டதும் அவர்கள் பற்றி பேசிக்கொண்டே நடந்தோம். பலமணிநேரம் செலவழித்து, துணிகள் எடுத்து அதன் மீது கருப்புத்துணியை கொண்டு மூடி மறைக்கும்போது அவர்களின் மனது வலிக்காதா? என்ற கேள்வியிலிருந்து பிறந்துதான் "மறைபொருள்' குறும்படத்துக்கான கரு. எல்லா மாற்றங்களும் ஆணுக்கு எளிதாய் வந்துவிடுகின்றது. ஆனால் பெண்கள் மட்டும்தான் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்ற கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். அதை நோக்கிய கேள்வியே "மறைபொருள்'. இந்தப் படத்தை பெண்ணிய பார்வையோடு புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் மதத்தை மட்டும் குறைசொல்லி மற்ற மதங்கள் உயர்வானவை என்று சொல்வது எனது நோக்கமல்ல. எல்லா மதங்களிலும் இருக்கும் அர்த்தமற்ற சடங்குகளையும், அடக்குமுறைகளையும் நோக்கிய எதிர்வினைதான் இது என்பதை பெரும்பாலோனர் புரிந்து கொண்டார்கள். அதுவே இப்படத்தின் வெற்றி'' என்கிறார் பொன்.சுதா. இக்குறும்படம் லண்டன் விம்பங்கள் 2007-ல் சிறந்த குறும்படமாகவும், மேட் 2007 குறும்பட விழாவில் இரண்டாம் பரிசையும், பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய (2008) போட்டியில் முதல் பரிசையும் பெற்றிருக்கிறது. கலைவிழி மாற்று குறும்பட போட்டியில் மூன்றாவது பரிசையும், யூ டியூப்பில் ஒரு வருடத்திற்குள் சுமார் மூன்று லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பெற்றுள்ளது. மேலும் தமிழகம் முழுக்க த.மு.எ.க.ச., கலை இலக்கிய பெருமன்றம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளால் பல முறை திரையிடப்பட்டிருக்கிறது என்பதும், தொடர்ந்து திரையிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதும் இக்குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகும். பொன்.சுதா தற்போது தீவிரமாக திரைப்படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.
Comments
Post a Comment