கதை எழுது - 27


(எம்.டி.வாசுதேவன் நாயர்)


1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.
2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு நாம் எழுத ஆரம்பிக்கும்போது, நாம் எங்கெங்கெல்லாமோ இழுத்துச் செல்லப் படுவோம். அப்போது நமக்கு நம்பிக்கை ஏற்படும். தொடக்கத்தில் எழுதத் துவங்கும்போது மழை வெள்ளம் இழுத்துச் செல்லும் காகித ஓடம் போல் சில முன்னோக்கிப் போகும். பல மூழ்கும். நம்மால் எழுத முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நாம் எழுதப் போகும் விஷயத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
3. 'எதைப்பற்றி எழுதவேண்டும்?' என, முதலில் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை முழுக்கக் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. வாழ்க்கை என்றாலே கநிதைகள்தானே! நாம் அடிக்கடி சொல்வோமே 'அவனுடைய கதை இதைவிட ரொம்பக் கஷ்டம்' என.
4. வாழ்க்கைப் பரப்பினூடே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்குரிய அம்சங்கள் ஏராளமாகக் கிடக்கின்றன. இவற்றுள் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்குரிய விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்றுதான்.
5. இலக்கிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் இளம் இலக்கியவாதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய புதிய புதிய எழுத்து முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். விடாமுயற்சி ஒன்றின் மூலமாக மட்டுமே இதை ஒருவரால் சாதிக்க இயலும். 'நாம் எழுதியது சரியல்ல' எனத் தோன்றுமானால் உடனே அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
6. இலக்கியப் படைப்பின்பொது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மொழியாகும். சாதாரண மனிதர்களுக்குப் புரியும்படியான மொழியிலேயே நாம் ஒரு படைப்பைப் படைக்க வேண்டும். ஒரு படைப்பாளி படைக்கும் படைப்பை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. அவர்களை வாசிக்குமாறு தூண்டிவிடவேண்டியது இலக்கியவாதிகளின் கடமையகும். இதயத்துக்குள் ஊடுருவிச் செல்லத் தக்கதாக இருக்கவேண்டும் இலக்கிய வாதிகள் பயன்படுத்தும் மொழி. வாசகர்களின் இதயத்துக்குள் நுழைந்து, புதியதொரு சிந்தனையைக் கிளறிவிடும் தன்மையும் வலிமையும் அதற்கு இருக்க வேண்டும்.
7. நாம் எழுதிய கதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள ஏதாவது 'கைடு' களைத் தேடிப் போகும்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது. காரணம், அம்மாதிரி கதைகளை வாசகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எழுதி எழுதி அவற்றை நாமே கிழித்துப் போட வேண்டும். பிறகு அவற்றிலிருந்து சிறந்த உள்ளடக்கம் கொண்டவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்த மொழியில் எழுதுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய ஒரேஒரு வழி இது ஒன்றுதான். அதாவது, சோர்வடையாமல் திரும்பத் திரும்ப எழுதுவது.
8. இலக்கியப் படைப்பில் 'உருவம்' ஒரு மேல் சட்டை போன்றதல்ல. ஒரு தோல் போன்றது. ஒரு படைப்பிற்கு சுலபமான புரிந்து கொள்ளக்கூடிய எளிய சொற்களாலான மொழிதான் மிக வலிமையினையும் அழகினையும் அளிக்கிறது. எளிமையான மொழிக்குரிய சிறப்பும் இதுதான். வார்த்தைகளுக்கு இடையே காணப்படும் இடைவெளிகளுக்குக்கூட அநேக அர்த்தங்கள் இருக்கிறது. உலகில் எத்தனை ஊடகங்கள் வந்தாலும் சரி, இலக்கியம் நிலைத்து நிற்பது உறுதி. காரணம் மொழிக்கு அவ்வளவு வலிமை உண்டு.
9. படைப்பின்போது அதற்குத் தோதுவான வார்த்தைகள் கிடைக்காமல் தேடித் திரிவது பண்டைக்காலம் தொட்டே உள்ள சிக்கல்தான். வார்த்தைகள்தான் பணிபுரிவதற்குரிய ஆயுதமும் தரத்தை நிச்சயிப்பதுமாகும். வார்த்தைகளோடு இழுபறி ஏற்பட்டால் ஒரு படைப்பு நன்றாக அமையும்.
10. இனி ஒரு முக்கிய விஷயம். நாம் ஒவொருவரும் புத்தகங்களைக் காதலிக்க வேண்டும். எனக்கு எழுதுவதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதே தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த வாசிப்புதான்.

Comments

Popular Posts