புதிய திசையில் தமிழ் சினிமா! - 1

மிழ் சினிமாவிற்கு மகுடம் சூட்டிய ஆண்டாகச் சென்ற ஆண்டு (2009) மலர்ந்தது என்று சொல்லலாம். புதிய இயக்குனர்களின் வரவு, சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றி, இதுவரை திரையில் காணாத புதிய முகங்களுக்கு ரசிகர்களிடையே கிடைத்த அமோக வரவேற்பு, ஆஸ்கர் விருது, தங்க யானை விருது, முன்னணி நாயகர்களின் கமர்ஷியல் ஃபார்முலா படங்களின் தோல்வி என இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத பல திடீர் திருப்பங்கள், சென்ற ஆண்டில் அரங்கேறின. அரிய முயற்சிகள் வெற்றிகளைக் குவித்த ஆண்டாகவும் 2009 விடைபெற்றிருக்கிறது. தமிழ் ரசிகர்களின் ரசனையைத் தடம் புரள வைத்து, பரவலான கவனம் ஈர்த்த நிகழ்வுகளில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு சில விடுபட்டிருக்கலாம். ஆனால் மறக்கப்படவில்லை!
தமிழ் சினிமாவின் நம்பிக்கையளிக்கும் புதிய வரவுகளாக "பசங்க' - பாண்டிராஜ், "வெண்ணிலா கபடிக் குழு' - சுசீந்திரன், "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' - ராஜ்மோகன், "யாவரும் நலம்' - விக்ரம் கே.குமார், "ஈரம்' - அறிவழகன், "ரேனிகுண்டா' - பன்னீர் செல்வம் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஏற்கனவே இயக்குனர்களாக அறிமுகமாகிய "சுப்ரமணியபுரம்' சசிக்குமார், "நடோடிகள்' சமுத்திரக்கனி, "பேராண்மை' - எஸ்.பி.ஜனநாதன், "நான் கடவுள்' - பாலா, "யோகி' - சுப்ரமணிய சிவா ஆகியோரின் படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளிச் சென்றன. மாறுபட்ட கதைகளை எடுத்துக்கொண்டது, துணிச்சலாகப் புதிய கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்தது, திரைக்கு உதவாதவை எனப் புறக்கணிக்கப்பட்ட முகங்களைத் திரையில் உலவ விட்டது, திரைக்கதையின் வலிமையைப் புரிந்து கொண்டது, புதிய கதை சொல்லும் பாணியைக் கையாண்டது, பாத்திரப் படைப்பு, பின்னணி இசை போன்றவற்றில் கவனம் செலுத்தியதன் விளைவாக மேற்கூறிய படங்கள் ரசிகர்களின் மனதைத் தொட்டன. இந்தப் படங்களின் வெற்றி, "யதார்த்தவாதம்' என்னும் கோட்பாட்டை பறைசாற்றி, தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களின் மசாலா படங்களை படுதோல்விக்குத் தள்ளியது. பறந்து பறந்து அடிப்பது, பஞ்ச் டயலாக் பேசுவது, கவர்ச்சி நாயகிகளுடன் குத்தாட்டம் போடுவது போன்ற மசாலாக்களை பார்த்துப் பார்த்துச் சலித்து, வெறுத்துப்போன ரசிகர்கள், இத்தகைய மெகா பட்ஜெட் படங்களை புறந்தள்ளினர். இதனால் தமிழ் சினிமா மறுபடியும் உயிர்த்தெழுந்தது. "தரமான சினிமாவை எப்போதும் நாங்கள் ஆதரிக்கத் தயாராகத்தான் இருக்கிறோம்' என்று மறுபடியும் நிரூபித்தார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்!
கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, ரசிகர்கள் தங்களின் ரசிகத் தன்மையை வெளிப்படுத்தி, படங்களை வெற்றி பெறச் செய்ததால் பல பெரிய ஸ்டார்களின் படங்கள் கூட இரண்டொரு நாட்களில் தியேட்டர்களிலிருந்து எடுக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாயின. தொடர் வெற்றிகள் என்று யாருக்கும் முன்னிலை கிடைக்காமல் போயிற்று. தமிழின் முன்னணி நாயகர் ஒருவர் இடையில் திடீரென அரசியலில் பிரவேசிக்கப் போவதாக கூறி, எல்லோரையும் திகைக்க வைத்தார். இதற்காக அவர், டெல்லிக்கும் போய் வந்தார். ஆனால் எதுவும் மக்களிடத்தில் பலிக்கவில்லை. இதனால் அவர் நடித்து வெளிவந்த படம் பரபரப்பாக பேசப்பட்ட அளவிற்கு வெற்றியடையவில்லை. மேலும், இதுவரை தமிழ் சினிமாவில் இந்தப் படத்திற்காக வந்த எதிர்மறை குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) போல வேறு எந்தப் படத்திற்கும் வந்ததில்லை. இதனாலும் பலத்த அடி வாங்கினார் இந்த முன்னணி நடிகர்! இதில் நமக்கு ஆழ்ந்த வருத்தம். இதை ஒப்புக்காகச் சொல்லவில்லை. திறமையுள்ள ஒரு கலைஞருக்கு "திசை மயக்கம்' உண்டாகும் வண்ணம், மற்றவர்கள் அவரை வீணடிப்பது நியாயம்தானா என்பதே நமது கேள்வி.
2009ல் நடிகைகளுக்குப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் எதுவும் நடக்கவில்லை. என்றாலும், எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் சில அமசங்களோடு தெலுங்கிலிந்து தமிழுக்கு வந்த ஐஸ்கிரீம் பேபி தமன்னா, தனது மிகைப்படுத்தாத நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அவரே சென்ற வருடம் அதிக படங்களில் நடித்து முன்னிலை வகித்தார். "படிக்காதவன்', "அயன்', "கண்டேன் காதலை' போன்றவற்றில் அவரின் பன்முக ஆற்றல் வெளிப்பட்டது. வயது வித்தியாசம் பாராமல் அவரால் சக நடிகர்களுடன் இணைந்து சிறப்பாக நடிக்க முடிந்ததால், அவருக்கு சிறந்த நாயகிக்கான பட்டம் வழங்கி மகுடம் சூட்டினார்கள் பரந்த மனம் படைத்த தமிழ் சினிமா ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான புவனேஸ்வரி, பாலியல் சம்பந்தமான வழக்கில் கைதானதும் இந்த ஆண்டில் திரையுலகம் சார்ந்த திடுக் சம்பவம். காவல் துறையிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்களின் பட்டியலை அவர் சொன்னதாக தினசரி ஒன்று செய்தி வெளியிட்டது. அவ்வளவுதான்... தீப்பிடித்துக்கொண்டது கோலிவுட்! கண்டனக் கணைகள் புறப்பட்டன. நடிகர்களுக்கும், பத்திரிகைகாரர்களுக்கும் இடைய பிரச்சினை வெடித்தது. நடிகர், நடிகைகளில் சிலர் ஒன்று சேர்ந்து நடிகர் சங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை எல்லை மீறி வாசித்தனர். அதை எதிர்கொள்ளும் விதமாக இதுவரை அடைகாத்து வைத்திருந்த ரகசியங்களை எல்லாம் வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் கோடி காட்டி, மறுபடியும் தங்களது ஜனநாயகக் கடமையை செம்மையாக நிறைவேற்றினார்கள் சில பத்திரிகையாளர்கள். இதையடுத்து தங்களைத் தவறாகப் பேசிய சில நடிகர், நடிகைகளின் மீது சில பத்திரிகையாளர்களால் வழக்கும் தொடரப்பட்டது. தமிழின் முக்கிய நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் பத்திரிகையாளர்கள். அடுத்தடுத்து அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பை ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர் தவிர்க்க, அப்செட் ஆன அந்த நகைச்சுவை நடிகர், பின் வாங்கினார். இந்தப் பிரச்சினையில் கடைசி வரை ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் பக்கம் நின்று தோள் கொடுத்தனர் என்பது இந்த ஆண்டின் மறக்க முடியாத ஹைலைட்.
ஆஸ்கர் என்னும் கனவு, முதன்முறையாக இந்திய கலைஞர்களுக்கு சாத்தியமானது இந்த ஆண்டில்தான். அவ்வகையில் 2009ம் ஆண்டு, இந்திய சினிமா வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. "ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தின் சிறந்த இசையமைப்பாளராக உலகத்தின் முன் அடையாளம் காட்டப்பட்டார்€ ஏ.ஆர்.ரஹ்மான். லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் மேடையில் ஏறி, ""எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என அவருக்கும், நமக்குமான தமிழ்க்கொடியை பறக்கவிட்டார் இசைப்புயல். அவர் தமிழில் பேசிய அந்த ஒற்றை வாக்கியம்தான் அனைத்து இந்தியப் பத்திரிகைகளின் முகப்புகளிலும் தலைப்புச் செய்தியானது. மும்பையின் குடிசைப் பகுதி சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, சீரான திரைக்கதையுடன் வந்து, பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்திற்கு சிறந்த ஒலிப்பதிவு செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டிக்கும் ஆஸ்கர் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் இறுதியில்தான் தமிழ் சினிமாவை இன்னும் தலைநிமிரச் செய்யும் விதமாக, ஆசியா சினிமா விழாவில், சிறந்த குழந்தைகளுக்கானப் படமாக "பசங்க' தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் இயக்குனரான பாண்டிராஜிக்கு "தங்க யானை' விருது அளிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் காதல் தூதுவர்களாக மாற்றப்பட்டிருந்த மழலைச் செல்வத்தை, முதன் முறையாக அதன் பால் மனம் மாறாமல் திரையில் மிக இயல்பாகச் சித்தரித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாண்டிராஜ், தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சி.அழகப்பன் தயாரித்து, இயக்கிய "வண்ணத்துப்பூச்சி' சிறந்த குழந்தைகளுக்கான மற்றொரு படமாக அடையாளம் காணப்பட்டது. இதில் நடித்திருந்த ஸ்ரீலட்சுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
தரமான சினிமாவைத் தயாரிப்பவர்கள் பட்டியலில் தொடர்ந்து இந்த வருடமும் இயக்குனர் ஷங்கரே முதலிடம் பிடிக்கிறார். அவருடைய தயாரிப்பில் வெளிவந்த "ஈரம்' படத்தைப் பார்த்து ரஜினி பாராட்டியதுடன், ஷங்கருக்கு பாராட்டுப் பத்திரமும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா, இந்தப் படத்தை வெகுவாக ரசித்ததுடன், இப்படத்தின் நாயகனான ஆதிக்கு, தனது அடுத்தப் படைப்பான "ஓம்காரம்' படத்தில் நாயகன் வாய்ப்பை வழங்கி கோலிவுட்டை தலை நிமிரச் செய்திருக்கிறார். நம்பிக்கையான திருப்புமுனை இது. அடுத்ததாக ஐங்கரன் நிறுவனத்தைச் சொல்லலாம். "பேராண்மை', "அங்காடித் தெரு', "நந்தலாலா' போன்ற படைப்புகளை இந்நிறுவனம் தயாரித்தது. அதில் "பேராண்மை' மட்டும் வெளிவந்து பலத்த வரவேற்பையும், பொருளாதார ரீதியான வெற்றியையும் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறது. மூன்றாவதாக மோசர் பேர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த "பூ' மக்களுக்கான சிறந்த சினிமாவாகப் பலராலும் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலமாக எழுத்தாளர்களின் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சி அதிகரிக்கத் தொடங்கியது என்றால் மிகையில்லை! எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், நீல.பத்மநாபன் போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்த வருடத்தில் சிறிய பட்ஜெட் படங்களின் வரத்து அதிகரித்து, கோடம்பாக்கத்தின் கனவுத் தொழிற்சாலையை சுறுசுறுப்பாக வைத்திருந்தது என்றாலும், மற்றொரு புதிய முயற்சியும் இந்த வருடத்தில் நிகழ்ந்தது. தயாரிப்பாளர்களாக, தமிழகத்தின் முக்கிய சில அரசியல்வாதிகளின் வாரிசுகளும் களம் இறங்கியதுதான் அது. இவர்களின் வரவு தமிழ் சினிமாவுக்கு சாதகமா? பாதகமா? என்று கோடம்பாக்கத்தில் பலத்த விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. காரணம், நடிகர்களின் கால்ஷீட் விஷயத்தில் இவர்களின் வரவால் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, பெரிய பெரிய நிறுவனங்களின் தயாரிப்பாளார்களும்கூட நேரடியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆங்காங்கே தகவல்கள் கசிகின்றன. அது மட்டுமின்றி, சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காமல் திண்டாடிய நிகழ்வுகளும் நடந்தேறியது. முக்கியமாக பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்புதான் இந்த வருடத்தில் தயாரிப்பாளர்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய படிப்பினையாகும். ஒரே நேரத்தில் சிறிய தயாரிப்பாளர்களை இணைத்துக்கொண்டு இருபத்தைந்து படங்கள் தயாரிக்க முன்வந்தது, தமிழகத்தின் முக்கிய தியேட்டர்களை வாடகைக்கு எடுத்தது என்று அதிரடி நடவடிக்கையில் இறங்கியதும், சரியான திட்டமிடல் இல்லாததும், தமிழ் சினிமா ரசிகர்களை குறைத்து மதிப்பிட்டதும், அவர்களது சரிவுக்குக் காரணங்களாக அமைந்தன.
அண்டை மாநிலப் படங்கள் அவ்வப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிபெறுவது தமிழ் சினிமாவில் அரிதாக வே நிகழும். அவ்வகையில் மிகப்பெரிய வசூலையும், வரவேற்பையும் வாரிக் குவித்த படமாக இந்த ஆண்டில் "அருந்ததி' அமைந்திருந்தது. தெலுங்கின் முன்னணி இயக்குனரான கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்து, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும், குறிப்பாகப் பெண்களையும் கவர்ந்த இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அனுஷ்கா. அவரது மாறுபட்ட நடிப்பும், கவர்ச்சியும் தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, தமிழின் பிரபல நாயகர்களையும் தள்ளாட வைத்தது. விஜய்யுடன் ஆரம்பத்தில் ஜோடி சேர மறுத்த அனுஷ்கா, பிறகு அவருடன் "வேட்டைக்காரன்' திரைப்படத்தில் இணைந்து நடித்தார். "அருந்ததி' படம் அமானுஷ்ய சக்தியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
முன்பு தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களை, மறுபடியும் தமிழில் ரீ - மேக் செய்யும் பாணியில் வெளிவந்த படம் "நான் அவன் இல்லை பாகம் -1'. வியாபார ரீதியான வெற்றியை இப்படம் அடையவே, இதன் தொடர்ச்சியாக "பாலைவனச்சோலை', "ஜெகன் மோகினி', "நான் அவன் இல்லை பாகம் -2' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. திரைக்கதையிலும், பாத்திரப் படைப்பிலும் பழைய மசாலாவையே அரைத்திருந்ததால் இப்படங்கள் மண்ணைக் கவ்வின.
பாலிவுட்டிற்குச் சென்று நமது இயக்குனர்கள் அவ்வப்போது தங்கள் திறமையை நிரூபித்தாலும், வசூலில் பெரிய அளவு வெற்றி பெற்ற படங்களைக் கொடுத்ததில்லை. அதை இந்த ஆண்டு முறியடித்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். அவருடைய இயக்கத்தில், ஹிந்தியில் வெளிவந்த "கஜினி' வசூலில் இதுவரை பாலிவுட் காணாத எல்லையைத் தொட்டது. தமிழின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தைத் தொட்டார் முருகதாஸ். வெளிநாட்டு படங்களின் பாதிப்பு, பாத்திரப் படைப்பில் புதுமை, திரைக்கதையில் கூடுதல் கவனம், கமர்ஷியல் ஃபார்முலாக்களை கதையில் கவனமாகக் கோர்த்தது என தனித்த அடையாளத்துடன் தன்னை வெற்றிப்பட இயக்குனராக மாற்றிக்கொண்ட முருகதாஸிடம், எல்லோருக்கும் பிடித்த குணம் எளிமை! ஹாலிவுட் படங்களை முக்கிய நகரங்களில் மட்டுமே திரையிட்டுக்கொண்டிருந்த நிலையில் "2012' (ருத்ரம்) திரைப்படம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது. இந்தப் படம் பூமி வெப்பமயமாதல் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. "ருத்ரம்' வெளிவந்திருந்த சூழலில்தான் உலகின் பருவ மாறுதல் குறித்த "கோபன்ஹேகன் மாநாடு' டென் மார்க்கில் நடைபெற்றது இப்படத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்திருந்தது. அடுத்ததாக, பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூனின் கைவண்ணத்தில் வந்த "அவதார்' படம் தமிழின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு சவால்விட்டு வசூலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. திரை ரசிகர்களின் ரசனை மட்டம் உயர்ந்திருக்கிறது என்பதும், அவர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிவையே! தமிழ் சினிமாவை சிகரம் நோக்கி நகர்த்துவதற்கான பல ஆரோக்கியமான திருப்பங்கள் 2009ல் நிகழ்ந்தன. அதன் தொடர்ச்சி 2010லும் அரங்கேறும் என்று எதிர்பார்ப்போம்.

Comments

Popular Posts