சினிமா - 21

"அ'
குழந்தைகள் இந்தப் பூமியின் அவதார தேவதைகள். பாசாங்கற்ற மனதோடு இப்பூமியில் பிறக்கும் அக்குழந்தைகளின் மனதில் தோன்றும் கனவுகளைப் பற்றி எடுத்தியம்ப யாராலும் இதுவரை முடிந்ததில்லை. மழலையின் சிரிப்பினாலும், அழுகையினாலும்தான் வீடுகள் அழகாகின்றன. குழந்தையின் கால் தடங்கள் படாத இப்பூமியின் நிலங்கள் யாவும் சபிக்கப்பட்ட வாழ்க்கையின் மிச்சங்களே. உலகில் மழலையின் சொற்களை மொழிப் பெயர்க்கத்தான் எந்த வரலாற்று ஆசிரியரனாலும் முடிவதேயில்லை. துயரத்தின் கனம் பொருந்திய வாழ்க்கையில் குழந்தைகளின் இருப்புதான் நம்மை சற்று நிம்மதியடையச் செய்கிறது. தம் பிள்ளைகளோடு வாழ்வின் நிமிடங்களை செலவிடும் பெற்றோர்கள் கெüரவிக்கப்பட வேண்டியவர்கள். இயற்கை தன் அழகை பூமியில் வாரி இரைப்பதெல்லாம் மழலைகளின் சந்தோஷத்திற்காகவே. தேவதைகள் பூமிக்கு சுற்றுலா வருகிறபோதெல்லாம் குழந்தைகளிடம்தான் அதிகமான வாஞ்சையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாம். கறைபடியாத மனதோடு மட்டுமே தேவதைகள் உறவாடுவார்கள் போலும். அச்சமின்றி, துயரமின்றி உற்சாகத்தின் பெரும் துள்ளலோடு தெருவில் கூடி விளையாடும் குழந்தைகளை காண கண் கோடி வேண்டும் நண்பர்களே! குழந்தைகளின் விளையாட்டில்தான் வெற்றியில்லை, தோல்வியில்லை. தேவதைகளோடு கூடி விளையாடும் சிறுவர்களின் விளையாட்டில் பெரியவர்கள் பெரும்பாலும் பங்கேற்பதேயில்லை. குழந்தைகளின் உலகத்தில்தான் ஆயிரமாயிரம் கற்பனை பாத்திரங்கள் உலவி வருகின்றன. தங்களின் பருவத்தின் பெரும்பாலான நேரங்களை அவர்கள் அந்தப் பாத்திரங்களிடம்தான் செலவழிக்கிறார்கள். குழந்தையின் கனவுகள் மீது எப்போது நம் கவனம் திரும்புகிறதோ அப்போதுதான் குதூகலமான ஒரு உலகத்தை நம் வீடுகளில் நாம் ஏற்படுத்த முடியும். குழந்தைகளை கொண்டாடுவோம்!
திரையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் பட்டியல் தெரிந்து கொண்டிருக்க... பின்னணியில் வாய்ஸ் ஓவரில் ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த சண்டை கணவனின் குடியால் என்பது அவர்களின் காரசாரமான உரையாடல்களில் இருந்து நமக்கு தெரிய வருகிறது. இருள் விலகி, திரை ஒளிர வீட்டின் பூஜையறையில் ஒரு சிறுவன் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறான். அவனது வேண்டுதல் தந்தையும், தாயும் சண்டையிடாமல் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதாக இருக்கிறது. காட்சி மாறுகிறது. வீட்டின் ஒரு ஓரத்தில் அந்த சிறுவனின் தந்தை உளறியபடி படுத்திருக்கிறான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. இரவு குடித்த குடியினால் அவனது உடல் சோர்வு தட்டியிருக்கிறது. மனைவியை அழைத்துப் பார்க்கிறான். அவள் வீட்டில் இல்லை. பிறகு,வயிற்றைப் பிடித்தபடியே எழுந்திருப்பவன், தனது மகன் ஒரு காலண்டரை மாற்றுவது அவனுக்கு தெரிகிறது. அன்று புதிய வருடம் என்பது காலண்டரின் மூலமாக காட்டப்படுகிறது. அந்த சிறுவன் சற்று மெüனம் போர்த்திய முகத்துடன் அறை ஜன்னலின் அருகே சென்று, மனதில் துயரத்தை சுமந்துகொண்டு நிற்கிறான். சிறுவனின் தந்தை எழுந்து நடக்க முயற்சிக்கையில் அறையில் படபடத்துக் கிடக்கும் நோட்புக்கை காண்கிறான். அதில் அவனது படம் ஒட்டப்பட்டு அந்த சிறுவனின் கையெழுத்தால் அழகாக "அப்பா' என்று கிறுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சர்யமும், குழப்பமும் நிறைந்தவனாக அவன், தனது மகனின் நோட்புக்கில் கிறுக்கிய பக்கங்களை சப்தமின்றி மனதிற்குள் வாசிக்கிறான். சிறுவனின் கனவுகள் நிறைந்த வாழ்க்கையின் பக்கங்கள் அதில் துயரம் நிறைந்த வார்த்தைகளால் வடிக்கப்பட்டிருக்கிறது. சிறுவன் ஜன்னல் வழியே தெருவில் எதையோ பார்த்தபடி நிற்கிறான். நோட்புக்கை வாசிக்கும் அவனின் தந்தைக்கு தனது மகனின் ஏக்கங்களும், ஆசைகளும் தெரிய வருகிறது. தன்னை நேசிக்கும் மகனோடு வாழ்க்கையின் எந்த தருணத்தையும் செலவிடமால் குடியின் பிடியில் சிக்கிக்கொண்டதற்காக தன்னையே நொந்துகொள்கிறான் அச்சிறுவனின் தந்தை. அவனது மனம் வாழ்வின் உண்மையை அருகில் சென்று தரிசிக்க, அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன்னுடைய மகனைப் பார்க்கும் அவனுக்கு, அவன் தெருவில் எதையோ தீவிரமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அருகில் சென்று ஜன்னலின் வழியே தெருவைப் பார்க்கிறான். தெருவில் எதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தங்களது குழந்தைகளுடன் உற்சாகமான அந்த புதிய வருடத்தைக் கொண்டாடுவதற்காக இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. தனது மகனின் ஏக்கத்தை வாஞ்சையோடு பார்க்கிறான். காட்சி மாறுகிறது. பின்னணியில் அச்சிறுவனின் உற்சாகமான வசனங்களின் வழியே அவனது அம்மா வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டது உணர்த்தப்படுகிறது. தனது தந்தை மற்றும் தாயோடு அந்த சிறுவன் சந்தோஷமாக வெளியே கிளம்புவதோடு படம் நிறைவடைகிறது.
குடும்பப் பொறுப்புள்ள தகப்பன் குடிக்கு அடிமையானால் அவனது குழந்தையின் மனவுலகம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகும்? என்பதை சொல்லும் குறும்படம்தான் "அ'. பெரும்பாலான குடும்பங்களில் சிறுவர்களின் கனவுகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதேயில்லை. அவர்களின் சின்ன சின்ன ஆசைகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. கனவு நிறைவேறாமல் அவர்களுடைய மனம் காயப்படுத்தப்படுகிறது. குடியை மறந்து குடும்பத்தின் நலனை கவனித்தால் வாழ்க்கை இன்பகரமாக இருக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் பா.தயா. குறைந்த நிமிடங்களுக்குள், குறைவான பாத்திரங்களைக் கொண்டு, வலிமையான கதையை சொல்ல முற்பட்டிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை போன்றவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறுவனாக நடித்திருக்கும் ஷனாவின் நடிப்பில் யதார்த்தம் வெளிப்படுகிறது. சரியான பாத்திரத் தேர்வு. காட்சிகளுக்கேற்ற ஒளிப்பதிவை நிறைவாக செய்திருக்கும் குமார், கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கும் எம்.வி.ராஜேஷ், காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் ஆர்.பாலகுருநாதன் ஆகியோர் பாராட்டிற்கு உரியவர்களாவார்கள். ஜன்னல் வழியே தந்தையும், மகனும் பார்க்கும் காட்சி கவித்துவமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. குறைவான வசனங்களில் படத்தை கொண்டு சென்றிருக்கும் பாங்கு இயக்குநரின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. "அ' என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கும் பா. தயா, இயக்குநர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தனியாத ஆர்வம் கொண்டு நடிகனாக வேண்டும் என்ற முயற்சியோடு இருந்தவருக்கு "நினைத்தாலே இனிக்கும்', "வால்மீகி' உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகனாக அடையாளம் காணப்படுவதோடு, கவனிக்கத்தக்க இயக்குநராகவும் உருவாக வேண்டும் என்பது பா.தயாவின் கனவு. வரவேற்போம்.

Comments

Popular Posts