விட்டுக் கொடுத்தால்கெட்டுப் போகாது!

மிழ் சினிமாவிற்கு நேரம் சரியில்லை போலும்! தற்போது கோலிவுட், சினிமா தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கிச் சின்னா பின்னமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக நடிகர் அஜீத்தை மையமாக வைத்து எழும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சரியான உடலமைப்பும், பட வாய்ப்புகள் கிடைத்தும், பல படங்களில் நடித்து, வெற்றியை அடைந்தாலும்கூட நட்சத்திர அந்தஸ்து கிடைக்காமல் போன பலரைப் பற்றிய சரித்திரங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால், அஜீத் வந்த பாதை அப்படியில்லை. தனது தொடர்ச்சியான படங்களின் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடிக்க அவருக்கு சில வருடங்களே தேவைப்பட்டன. எந்தப் பின்னணியும் இல்லாமல், தனது திறமையை நம்பி திரைத்துறையில் நுழைந்தவர் என்கிற அடையாளமே உளவியல் ரீதியாக அவருக்கு ரசிகர்களிடம் நெருக்கத்தை உண்டாக்கக் காரணமானது. அவருடைய ஆரம்பகால படங்கள் சுமாராகத்தான் போனது என்றாலும், பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த "காதல் கோட்டை', "ஆசை',"வாலி' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரிய செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தன. வழக்கம் போல் இரு பிரிவுகளாக நட்சத்திரங்களைப் பிரித்துப் போட்டி மனப்பான்மையுடன் அவர்களை வளர்க்கும் போக்கும் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. இதனால் அஜீத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. "தீனா' படத்தின் மூலமாக அவருக்கு ரசிகர்களால் "தல' பட்டமும் கிடைத்தது. இதன் பிறகு அவருடைய சில படங்கள் தோல்வியடைந்தாலும், வெற்றியடைந்தாலும் அவரது செல்வாக்கும், புகழும் இன்றளவிலும்கூட ரசிகர்களிடம் நீடிப்பதை பார்த்துத் திரையுலகமே வியந்து கிடக்கிறது! ரசிகர்கள் மத்தியில் அஜீத் தொடர்ந்து செல்வாக்குடன் நிற்பதற்கு பின்னால் அவரது நடிப்பு திறமை மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட சில குணநலன்களும் உதவுகின்றன என்கின்றனர் திரைத்துறையினரில் பலர். விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது (குறிப்பாக சில குளிர்பான விளம்பரங்களில் நடிக்க, முதலில் அஜீத்திடம்தான் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது), விழாக்கால தொலைக்காட்சி பேட்டிகளைத் தவிர்ப்பது, பொது மேடைகளில் அதிகம் தலைகாட்டித் தன்னை பிரபலபடுத்திக் கொள்ளாதது போன்றவற்றோடு தான் நடிக்கும் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை கெüரவிப்பது, இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பரிசுப் பொருட்களோடு, உரிய சம்பளமும் பெற்றுத் தருவது (சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படத்தின் உதவி இயக்குனர்களுக்கு சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் வரைப் பெற்று தந்திருக்கிறாராம்) என்று அவர்கள் கூறும் நற்பண்புப் பட்டியல்கள் நீளமானவை. இவை மட்டுமின்றி, அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி இரு தரப்பு ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கிய சூழலில் அஜீத்திற்கும், ரஜினிக்கும் இடையே நடந்த சந்திப்புகள் வாயிலாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும் அவரின் மீதான மதிப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. இதனால் ரஜினியின் ஆதரவைப் பெற்றவராக அஜீத் வலம் வந்து கொண்டிருப்பது நாமறிந்ததே! இந்தச் சூழலில்தான் தமிழ்த் திரையுலகத் தொழிலாளர்கள் வசிப்பதற்காக பையனூர் அருகே தமிழக அரசு இடம் ஒதுக்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, தமிழ்த் திரையுலகம் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். வெள்ளைப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில், (வழக்கமான தனது கோட், சூட்டிலிருந்து மாறி தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்திருந்தது, ரசிகர்களைப் பெருமளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது) திருத்தப்பட்ட தலைமுடியுடன், கருப்பு நிறக் கண்ணாடி அணிந்து தன் மனைவி ஷாலினியோடு கலந்து கொண்ட அஜீத், விழாவில் பேசும்போது சிலர் தன்னை குறிப்பிட்ட சில விழாக்களுக்கு வர வற்புறுத்துகிறார்கள் என்றும், அப்படி வர இயலாத சூழ்நிலையில் தன்னை மிரட்டவும் செய்கிறார்கள் என்றும் பேசி அதிர வைத்தார், மேலும் சில தனது ஆதங்களையும் பகிரங்கமாக மேடையில் வெளிப்படுத்தினார். இதனால் அரங்கத்தில் பலத்த அமைதி நிலவியது. அஜீத்தின் அந்தப் பேச்சை வரவேற்கும் பொருட்டு விழா அரங்கினுள் இருந்தவர்களில் முதலில் எழுந்து நின்று கைத்தட்டி தனது ஆதரவை தெரிவித்தவர் ரஜினிகாந்த். அப்போது அரங்கத்தில் எழுந்த ஆராவரம் அடங்குவதற்கு சில நிமிடங்கள் பிடித்தது. மேலும் அஜீத்தின் பேச்சிற்கு திரைப் பிரபலங்களில் சிலரும் ஆதரவு தெரிவித்தாலும், மறுநாளே பெரும்பாலானவர்கள் அவருடைய பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் பிறகு திரையுலகத்தில் இந்த சர்ச்சை தீ பற்றிக் கொண்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், பிரபல வார இதழ் ஒன்றில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ""தமிழ் நாட்டில் நடித்துக் கொண்டிருக்கிறாய். தமிழ் மக்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். தமிழனின் சாப்பாட்டை சாப்பிடுகிறாய். இப்படியிருக்கும்போது, தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் போராட வரமாட்டாயா?'' என்று கண்டனம் தெரிவித்தார். அடுத்து ஜாகுவார் தங்கம் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்தும், அவருடைய மனைவியை தாக்கியும் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். படப்பிடிப்பிலிருந்து திரும்பிய ஜாகுவார் தங்கம், இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தார். இப்பிரச்சினையில் ஜாகுவார் தங்கத்திற்கு ஆதரவாக "நாடார் சங்க'மும் அஜீத் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இச்சூழ்நிலையில், தன் மகள் செüந்தர்யாவின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்து சிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜினி, முதல்வரை கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பலர் சூழ்ந்துகொண்டு அஜீத்திற்கு ஆதரவாக எழுந்து நின்று கைதட்டியது குறித்து கேள்விகள் கேட்டபோது, ""அஜீத் பேசியதில் உண்மையுள்ளது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் "நடிகர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்கக்கூடாது' என்று அவர் கூறியது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் எழுந்து நின்று கைத்தட்டினேன். இப்போதும் அவரது கருத்துக்கு என்னுடைய ஆதரவு முழுமையாக உண்டு. விழாக்களுக்கு வர வேண்டும் என்று யாரும் நடிகர், நடிகைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களாகவே விரும்பி வருவதே நல்லது'' என்றார். இதற்கிடையே அஜீத் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ""எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலை விட்டே விலகி மீண்டும் மோட்டார் பந்தயங்களுக்குப் போய்விடுகிறேன். முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாலில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல! அந்த நேரத்தில் என் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன். என்ன நடந்ததோ அதைத்தான் சொன்னேன். எனவே அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அதைவிட நடிப்பை விட்டு விலகுவதையே விரும்புவேன். நடிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும், அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும். இங்கே எல்லாப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதே நேரம், "நடிகனுக்கு சமூகப் பிரச்சினையில் என்ன வேலை? அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும்' என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது நாங்கள்தான். யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரை தடுக்கப் பார்க்கிறார்கள். தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்? அது இங்கு மட்டுமல்ல, எல்லா இடத்திலும்தான் இருக்கிறது. ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது, அல்லது கிரிக்கெட் பார்க்கச் செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் ரசிகன் என்ன ஜாதி, என்ன மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன, வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்றவை கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம். கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் கேமராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரம் இல்லை. ஒரு நடிகன் திரையில் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன் வசப்படுத்த முயற்சித்தால், "நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள். எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்து விட்டதோ, அப்போதே இனியும் நடிக்க வேண்டுமா? என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது ஃபார்முலா-2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தரவே விரும்புகிறேன்'' என்று அஜீத் குமுறியிருந்தார். இந்த பேட்டியை படித்த ரஜினி, அஜீத்திடம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரை முதல்வரை சென்று பார்க்க வற்புறுத்தியதாகவும், அவரே அதற்கு ஏற்பாடுகள் செய்ததாகவும், அதன் காரணமாகத்தான் அன்று மாலை அஜீத், முதல்வரை சந்தித்துத் திரும்பினார் என்றும் கோடம்பாக்கத்தினர் மத்தியில் பேச்சு நிலவியது. இந்தச் சூழலில்தான் படம் ஒன்றின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் வி.சி.குகநாதன், திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர், அஜீத், ரஜினியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ""திரையுலகினருக்கு எதிராகச் செயல்படுபவர்களின் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை'' என்றும் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து அஜீத் விவகாரம் குறித்து விவாதிக்கவும், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திரைப்படத் துறையின் கூட்டு கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் திரைப்படத்துறையின் பல சங்கங்கள் பங்கேற்றன. இக்கூட்டத்தின் முடிவில், ""தமிழ்த் திரையுலகினர் சார்பில் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி நடந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் அஜீத்தின் உண்மையற்ற பேச்சு, திரையுலகினர் அனைவரையும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அவர் தமிழ்த் திரைப்பட துறையினருக்கு நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்'' என்று முடிவு எடுத்தார்கள்; ரஜினிக்கும் கண்டனம் தெரிவித்தார்கள். "இப்பிரச்சினை தொடர்பாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாரும் தனிப்பட்ட முறையிலோ, அமைப்பு சார்ந்தோ எந்த அறிக்கையும் பத்திரிகைகளுக்குக் கொடுக்கக்கூடாது; பேட்டிகளும் இது விஷயமாய்த் தரக்கூடாது, என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஜீத் எந்தக் கருத்தையும் கூறாத நிலையில், திரைப்படத்துறையின் கூட்டமைப்பில் இருக்கும் நடிகர் சங்கம், அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகளுக்கு அஜீத் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. இது சம்பந்தமாக நடிகர் சங்கத்தின் செயற்குழு கூடி விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பொது மேடையில் அஜீத்தின் அந்தப் பேச்சிற்கு பின்னால், கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மிரட்டலைத் தாண்டி, வேறு சில பிரச்சினைகளும் இருப்பதாக கோடம்பாக்கத்தினர் மத்தியில் சுற்றும் செய்திகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமானது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அஜீத் நடித்த "அசல்' படத்தினை தங்களின் சேனலில் வெளியிட விரும்பியது அப்போது அஜீத், "சிவாஜி ஃபிலிம்ஸ்' நிறுவனத்தாரிடம் தன்னை அது சார்ந்த ஒப்பந்தங்களிலோ, விளம்பரங்களிலோ சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதனால்தான் சிலர் அஜீத்திற்கு வேறு வழியில் மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள் என்றும் பேச்சுக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
"திரையுலகத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பாக ஒரு நன்மை நடக்கும் சூழலில், அஜீத் அவ்வாறு பேசியது சரியா? தவறா?' என ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்க, இது இன ரீதியான பிரச்சினையாக வடிவெடுப்பது, நடுநிலையாளர்களை வருந்த வைத்துள்ளது. சமூகப் பொறுப்பு என்பது மற்றவர்களை விட கலைஞனுக்கு அதிகம் என்பதை உணர்ந்து அஜீத் செயல்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பதையும் சில திரையுலக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ""இந்த விவகாரத்தை மேலும் மேலும் பூதாகாரமாக்குவதால் பாதிப்புக்குள்ளாவது தனிப்பட்ட நடிகர் மட்டுமல்ல, திரையுலகமும்தான்! திரைப்படங்கள் உருவாவது கூட்டு முயற்சியால் என்பதை யாவருமே நன்கு அறிவோம். திரையுலகில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்க, அவற்றைத் தவிர்த்து, இதுபோன்றவற்றில் கவனம் செலுத்துவது திரைத்துறைக்கு மேலும் பின்னடைவையே தரும் என்பதில் ஐயமில்லை! ஆகவே தவறுகளை மன்னித்து, விட்டுக் கொடுத்து சம்பந்தபட்டவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது எல்லாத் தரப்பினருக்குமே நன்மையைத் தரும். விட்டுக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லைதானே!'' என்று சில கலையுலக முக்கியஸ்தர்கள் நம்மிடம் வருந்தியது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Comments

Popular Posts