சினிமா:18
(அதே வழி...)

மூகத்தின் மோசமான விஷயங்களில் குடிக்குதான் மிகப் பெரிய பங்கிருக்கிறது. "மது விற்பனையால்தான் அரசுக்கு பெருத்த லாபம் கிடைக்கிறது' என்கிற புள்ளி விபரங்களைக் கேட்கும்போது மனம் அதிரத்தான் செய்கிறது. இரவு, பகல் பாராமல் கண்மூடித்தனமாக குடித்துவிட்டு ரோட்டோர ப்ளாட்ஃபார்ம்களில் தலை கவிழ்ந்து கிடக்கும் "குடிமகன்'களை பார்க்கும்போது அவனின் குடும்பம் எந்த இழி நிலைக்கு தள்ளப்படுமோ? என்று மனதில் எழும் அச்சத்தை தவிர்க்கவே முடிவதில்லை. தொடர்ந்து செய்தித்தாள்களை வாசிப்பவர்களுக்கு "பள்ளியில் மாணவி பாலியல் பலாத்காரம் - ஆசிரியர் கைது!' என்னும் செய்தி சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், அப்பள்ளியில் அந்த மாணவியுடன் பயிலும் சக மாணவிகளின் மனோநிலை என்னவாக கட்டமைக்கப்படும்? என்பதும், அம்மாணவிகளின் எதிர்காலம் எந்த திசையில் பயணிக்கும் என்பதும் சாதாரண விஷயமில்லை. இதுக்குறித்து எப்போதாவது ஏன் அரிதாகவாவது நாம் யோசித்திருக்கிறோமா? "அகத்தை புறமே தீர்மானிக்கிறது' என்கிறது அறிவியல் சித்தாந்தம். அப்படியான அகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நம்மை சுற்றியிருக்கும் சூழலும் சரியாக இருக்க வேண்டும் இல்லையா? சூழலை மோசமாக வைத்துக்கொண்டு ஒழுக்கத்தை எவ்வளவுதான் நாம் போதித்தாலும் குற்றங்கள் பெருகிக்கொண்டேயிருப்பதை யாராலும் தடுக்க முடியாது. வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறிப் போனால் கடைப்பிடிப்பவர்களும் கண்மூடித்தனமாய்தான் வளருவார்கள். மற்ற எல்லாப் பணிகளையும் விட ஆசிரியப் பணி என்பது உயர்வான ஒன்று. அந்தப் பணியின் மகத்துவம் அறிந்து ஆசிரியர்கள் நடந்து கொள்ளாவிடில் அவர்களைப் பின்பற்றி வளரும் மாணவச் சமுதாயமும் அதே வழியில்தான் நடக்கும். கவனிப்பீர்களா ஆசிரியர்களே?

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தின் ஒரு கல்லு வீட்டிலிருந்து வேட்டி, சட்டை அணிந்த பெரியவர் ஒருவர் தன் மனைவியிடம் சாப்பாட்டு பையை கேட்டு வாங்கிக் கொண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு, தெருவில் இறங்கி செல்கிறார். ஒரு அரசு துவக்கப் பள்ளியின் வெளியே சிறுவர்களும், சிறுமிகளும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளியின் அழைப்பு மணி ஒலிக்க அந்த சிறுவர், சிறுமியர் கூட்டம் உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் நுழைய, அந்த பெரியவரின் சைக்கிள் இப்போது அந்தப் பள்ளி வளாகத்தினுள் வந்து நிற்கிறது. அவர் அப்பள்ளியின் ஆசிரியர் என்பது அப்போதுதான் நமக்குத் தெரிய வருகிறது. வகுப்பறைக்குள் நுழையும் அவர், வருகைப் பதிவேட்டை சரி பார்த்தப் பிறகு, மாணவர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்குகிறார். ""தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...'' என்று அவர் போர்டில் சாக்பீஸôல் எழுதி மாணவர்களை வாசிக்க சொல்லும்போது ஒரு மாணவன் எழுந்து, ""காலாண்டுத் தேர்வு ஒரு பாவச்செயல்...'' என்று சொல்ல, ஒரு மாணவி எழுந்து, ""அரையாண்டுத் தேர்வு ஒரு பெருங்குற்றம்...'' என்கிறாள். மற்றொரு மாணவனோ, ""முழுஆண்டுத் தேர்வு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...'' என்கிறான். ஆசிரியர், அவர்களைப் பார்த்து கண்டித்து, போர்டில் இருந்த அந்த வாசகங்களை அழித்துவிட்டு இப்போது மாற்றி, ""குடி குடியைக் கெடுக்கும்... குடியினால் உடல்நலத்திற்கு கேடு...புகை நமக்குப் பகை...'' என்று எழுதிவிட்டு எல்லோரையும் உரக்க படிக்கச் சொல்கிறார். மாணவர்கள் ஒவ்வொரு வாசகத்தையும் மிகுந்த சப்தத்துடன் வாய்விட்டு சொல்லும்போது, ஒரு மாணவன் மட்டும் "க்ளுக்' என்று சிரித்துவிடுகிறான். ஆசிரியர் அவனை எழுந்திருக்கச் சொல்லி, சிரித்ததற்கான காரணம் கேட்டு, அவன் கையில் பிரம்பால் அடிக்கிறார். காட்சி மாறுகிறது.


அடர்ந்த முந்திரிக்காட்டின் மரங்களுக்கு இடையிலிருந்து சாராயக் கேனை எடுத்துக்கொண்டு, லுங்கி கட்டிய சிறுவன் ஓரிடத்தில் வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அமர்கிறான். அங்கே வரும் இருவர் அவனிடமிருந்து சாரயத்தை ஊற்றிக்கொடுக்கச் சொல்லி குடிக்கின்றனர். சாராயம் ஊற்றிக் கொடுக்கும் அச்சிறுவன் பள்ளியில் ஆசிரியரிடம் அடிவாங்கிய மாணவன் என்பது நமக்கு தெரிய வருகிறது. இடையில் உள்ளே வரும் அவனது தந்தை, ""யாருக்கும் கடன் கொடுக்காதே'' என்று சொல்லிவிட்டு செல்கிறார். அவர்கள் குடித்துவிட்டு சென்றவுடன் மேலும் நான்கைந்து பேர் வந்து அவனிடம் காசு கொடுத்து சாராயம் வாங்கி குடிக்கின்றனர். பின்பு அவர்கள் கலைந்து சென்றவுடன் அச்சிறுவன் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துவிட்டு, சாராயக் கேனையும், ஒரு க்ளாûஸயும் எடுத்துக்கொண்டு செல்கிறான். தனியே ஓரிடத்தில் அமர்ந்து யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா? என்று பார்த்துவிட்டு கேனிலிருந்து சாராயத்தை க்ளாஸில் ஊற்றி குடிக்க எத்தனிக்கும்போது ""டேய்...'' என்று ஒரு அதட்டலான குரல் அவனை மிரட்ட, குடிக்கப்போன அச்சிறுவன் அதிர்ச்சியில் க்ளாஸில் வைத்திருந்த சாராயத்தை கீழே கொட்டி விடுகிறான். அங்கே அதட்டியபடி வருவது அவனுடன் படிக்கும் சக மாணவன் என்பது தெரிந்தவுடன் அலட்சியமாய் சாராயக் கேனை கையில் எடுக்கிறான் சிறுவன். அப்போது அங்கே வந்த அவனுடைய வகுப்புத் தோழன், ""டேய்... ஸôரு க்ளாஸ்ல என்ன சொன்னாரு. குடிக்கிறது தப்புன்னு சொன்னாருல்ல. இப்ப நீ குடிக்கிற. இரு, நாளைக்கு ஸôருக்கிட்டேயே உன்னைப் பற்றி சொல்றேன்...'' என்று கூற, அவனை அலட்சியப்படுத்தியபடி கையில் சாராயக்கேனை வைத்திருக்கும் சிறுவன், ""போ...போ..நல்லா சொல்லு. அதற்கு முன்னாடி கொஞ்சம் அங்கேப் பாரு...'' என்று ஓர் இடத்தை சுட்டிக் காட்டுகிறான். அங்கே, காலையில் வகுப்பெடுத்த அந்த ஆசிரியர் போதையில் எதையோ உளறியபடி மண்ணில் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறார். அவரருகே சைக்கிளும், சாப்பாட்டு கூடையும் சிதறிக் கிடக்கிறது. எழுந்து நடக்க முயலும் அவர் போதையினால் நடக்க முடியாமல் "தொப்'பென்று மண்ணில் விழுவதோடு படம் நிறைவடைகிறது.

இளைய சமுதாயம் எப்போதும் மூத்த தலைமுறையை பின்பற்றியே வளரும். வழிகாட்ட வேண்டியவர்களே தவறான பாதையில் போனால் அவர்களைப் பின்பற்றி வரும் இளையவர்களும் அதே வழியைத்தான் பயன்படுத்துவார்கள். அப்படி தவறான உதாரணங்களாக வழிகாட்ட வேண்டியவர்கள் இருக்கக்கூடாது என்பதை "அதே வழி...' என்னும் குறும்படம் மூலமாக ஆறே நிமிடங்களில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் வீ.மா.செந்தில்குமார். படத்தில் மிகக் குறைவான பாத்திரங்களை வைத்துக் கொண்டு சமூகப் பிரச்சினை சார்ந்த கருவை கையிலெடுத்திருப்பதும், கதையை நகர்த்தி சென்றிருக்கும் பாங்கும் செந்தில்குமாரின் இயக்குநருக்கான ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கும் ஆசிரியரும், மாணவனும் தங்களது இயல்பான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கின்றனர். மிக நேர்த்தியான ஒளிப்பதிவும், செறிவான படத்தொகுப்பும் படத்திற்கு பலம். முற்போக்கு சிந்தனையுடன் படம் இயக்க வரும் இளையதலைமுறை இயக்குநர்களில் இனி வீ.மா. செந்தில்குமாருக்கும் ஒரு இடமுண்டு!
"அதே வழி' என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வீ.மா.செந்தில்குமார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள காங்கேயன் குறிச்சியைச் சேர்ந்தவர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "மங்கை' நெடுந்தொடரில் இயக்குநர் அரிராஜனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பிறகு, இயக்குநர் வ.கெüதமினிடம் சேர்ந்து மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "சந்தனக்காடு', "ஆட்டோ சங்கர்' ஆகிய தொடர்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தற்போது "மகிழ்ச்சி' திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து வரும் இவர் விரைவில் திரைப்படம் இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். "அதே வழி...' என்னும் இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வ.கெüதமன் பாராட்டியதை வீ.மா.செந்தில்குமார் நன்றியோடு நினைவு கூர்கிறார். மேலும் இக்குறும்படம் குறித்து சத்யராஜ், ""வழக்கமான குறும்படத்துக்கே உண்டான காட்சியமைப்புகள் இல்லாமல் நகைச்சுவையோடு கொண்டு சென்று, கதையின் முடிவை நச்சென்று முடித்திருக்கிறார் இயக்குநர். ஆறு நிமிட குறும்படம் இரண்டு நிமிடத்தில் முடிந்துவிடுவது போன்ற உணர்வை தோற்றுவிக்கிறது. கூடுதலாக இன்னும் ஐந்து நிமிடம் இல்லையே என்று ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணுகிறது. அதேபோல் படத்தில் ஒளிப்பதிவும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்று பாராட்டியிருக்கிறார். வரவேற்போம்.

Comments

Popular Posts