சினிமா: 14


திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தவுடன், சென்னை பல்கலைக் கழகத்தில் பத்திரிகை தொடர்பான இரண்டாண்டு படிப்பை படித்தேன். அதே சமயத்தில் பகுதி நேரமாக "டிபார்ட்மெண்ட் ஆஃப் டூரிஸம்' குறித்தும் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் படிப்பையெல்லாம் முடித்தக் கையோடு சொந்த ஊருக்கேத் திரும்பி விட்டேன். பிறகு, நான் பூனே திரைப்படக் கல்லூரியில் தயாரிப்பு நிர்வாகியாக சேருவதற்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த வேலைக்கான நேர்காணலுக்காக பூனே போவதற்காக சென்னை வந்திருந்தபோது இயக்குநர் ருத்ரைய்யாவைச் சென்று சந்தித்தேன். அப்போது அவர் "அவள் அப்படித்தான்' படத்திற்கான வேலைகளில் மூழ்கியிருந்தார். நான் வேலைக்காக பூனே போவதை அறிந்தவர், ""நீ வேலையை வேறு எங்கும் தேட வேண்டாம். என்னோடு சேர்ந்து பட வேலைகளைப் பாரு...'' என்று கூறி "அவள் அப்படித்தான்' படத்தின் இணை இயக்குநருக்கான பணியை எனக்கு கொடுத்து விட்டார். இந்தப் படத்தில் வேலைப் பார்த்தது எனக்கு மிகப்பெரிய திரைப்பட அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தின் மூலமாக சிறந்த திரைக்கதையாசிரியரான அனந்து, எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் ராஜேஷ்வர் போன்றோரின் நட்பு கிடைத்தது. இந்த இடத்தில் திரைக்கதையாசிரியரும், இயக்குநருமான அனந்து ஸôரைப் பற்றி கொஞ்சம் சொல்லியாகணும். அனந்து, பல்வேறு இலக்கியங்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டுத் திரைப்படங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருந்தார். இந்தியாவில் எங்கு திரைப்பட விழாக்கள் நடந்தாலும் அதில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களில் அனந்து ஸôரும் ஒருவராக இருப்பார். திரையிடப்படும் படங்களில் ஒன்றையும் விடமாட்டார். பார்த்த படங்களில் சிறந்த கதையமைப்பு உள்ள படங்கள், சிறந்த காட்சிகள் இடம் பெற்ற படங்கள் போன்றவற்றிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு வந்து நமது தமிழ்த் திரைப்படங்களில் முக்கியக் கதைகளில் இணைத்து விடுவார். அப்படித்தான் தமிழ் சினிமாவிற்கு சிறந்த கதைகளும், சிறந்த காட்சிகளும் அனந்து ஸôர் மூலமாக கிடைக்கப்பெற்றன. அவர் பங்கு பெற்ற பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடியிருக்கின்றன. சினிமா குறித்த பரந்துப்பட்ட அறிவு அனந்து ஸôருக்கு இருந்தது. இயக்குநர் பாலசந்தருக்கு மிகப்பெரிய பலமே அனந்து ஸôர்தான் என்பது தமிழ் சினிமாவை நன்கு உணர்ந்த அனைவருக்குமே தெரியும்! அப்படித்தான் நானும் அனந்துவை அறிந்து கொண்டேன். "அவள் அப்படித்தான்' திரைப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்து கொடுத்ததில் அனந்துவின் பங்கு முக்கியமானது. அதேபோல வண்ணநிலவனின் பங்களிப்பையும் மறந்து விட முடியாது. இவற்றோடு இயக்குநர் ருத்ரைய்யாவிற்கு இடதுசாரி அரசியல் மீது ஒரு ஆழமான பார்வையும் நம்பிக்கையும் இருந்தது. அதனால்தான் அவருடைய மாறுபட்ட முயற்சிக்கு பலரும் உறுதுணையாக இருந்தனர். படத்தின் படப்பிடிப்பின்போது நான் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வேன். படப்பிடிப்பு வேலைகளெல்லாம் முடிந்து படம் தியேட்டரில் வெளியாவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது நான் ஊருக்குப் போய்விட்டேன். அது தீபாவளி சமயம். அதையொட்டி "அவள் அப்படித்தான்' படமும் வெளியாகியிருந்தது. படம் வெளியான அன்று என் வீட்டில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். "அவள் அப்படித்தான்' படத்தில் நான் வேலைப் பார்த்தது எங்கள் வீட்டிலுள்ள எல்லோருக்கும் தெரியும் என்பதால், என்னைத் தவிர மற்ற எல்லோரும் படம் பார்க்க அன்று முதல் காட்சிக்கே சென்று விட்டனர். படம் பார்த்துவிட்டு நேராக வீட்டிற்கு வந்த என் அம்மா, தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, ""படமாடா பண்ணியிருக்கீங்க...'' என்று கூறி, நன்றாக திட்டி தீர்த்தார். கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீப்ரியா என நட்சத்திர பட்டாளம் அந்தப் படத்தில் நடித்திருந்ததால் வழக்கமான கமர்ஷியல் சினிமா மாதிரி இருக்கும் என்று நினைத்துப் போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதுமட்டுமின்றி அது ஒரு பெண்ணிற்கு சமூகத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருந்ததால், படத்தைப் பார்த்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதேமாதிரி "அவள் அப்படித்தான்' படத்தின் திரைக்கதையும், காட்சியமைப்பும் இதுவரை திரையுலகம் காணாதது. ஆகவே, படம் வெளியான சில நாட்களிலேயே தியேட்டர்களில் படத்தைப் பற்றிய தவறான பேச்சுக்களே எங்கும் பரவியிருந்தன. சில தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு வந்தவர்கள் அடுத்தக் காட்சிக்கு சென்றவர்களை உள்ளே போக விடாமல் தடுத்த நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தன.

இந்த சமயத்தில்தான் பிரபல இயக்குநரான மிருணாள்சென் சென்னை வந்திருக்கிறார். அவர் அப்போது வெளியான திரைப்படங்கள் குறித்து விசாரித்தபோது "அவள் அப்படித்தான்' திரைப்படம் குறித்த எதிர்மறை செய்திகளைக் கேட்டுவிட்டு, "அப்போ... உடனடியாக அந்தப் படத்தைதான் பார்க்க வேண்டும்...' என்று கூறி தியேட்டருக்குச் சென்று அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். இவர் "அவள் அப்படித்தான்' படம் பார்க்க சென்றிருக்கும் விஷயம் அறிந்த பத்திரிகையாளர்களில் சிலர், மிருணாள்சென் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது படம் குறித்து கேள்விகள் எழுப்பியிருக்கின்றனர். படம் குறித்து பெரிய அளவில் அவர் பேச, அந்த செய்தியானது அந்த வாரமே ஒரு பிரபல வார இதழில் வெளியாகி படத்தைப் பற்றிய பார்வையை ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களும் இப்படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்தடுத்து இப்படம் குறித்த தங்களது விமர்சனங்களை பத்திரிகைகளில் தெரிவிக்கவே படம் பற்றிய நல்ல பேச்சு படிப்படியாக எல்லா இடங்களுக்கும் பரவி படத்தை தூக்கி நிறுத்தியது. அப்படித்தான் "அவள் அப்படித்தான்' திரைப்படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.

இப்படத்தைத் தொடர்ந்து "கிராமத்து அத்தியாயம்' என்ற படத்தில் இயக்குநர் ருத்ரைய்யாவுடன் பணிபுரிந்தேன். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்றாலும் திரை ரசிகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சில படங்களில் நான் பணிபுரிந்தாலும் அவை யாவும் பாதியிலேயே நின்று விட்டன. இதற்கிடையில் நான் சென்னை - தரமணியிலுள்ள திரைப்படக் கல்லூரியில் 1978லிருந்தே சிறப்பு ஆசிரியராக திரைக்கதை குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தேன். தொடர்ந்து பட வாய்ப்புகள் சரியாக இல்லாததால் 1981ற்குப் பிறகு தரமணி திரைப்படக் கல்லூரியில் முழு நேர ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டேன். கல்லூரியில் நான் பணியில் அமர்ந்தபோது என்னிடம் படித்த மாணவர்கள்தான் இயக்குநர்களான ஆபாவாணன், அரவிந்தராஜ், நித்தியானந்தம், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, யூகிசேது, ராஜாரவி, செல்வராஜ், தியாகராஜன் போன்றவர்கள். அதேபோன்று ஒளிப்பதிவாளர்களான பன்னீர்செல்வம், ரவியாதவ் ஆகியோரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். திரைப்படக் கல்லூரியில் பணியாற்றும்போது மாணவர்களுக்கும், எனக்குமிடையே காரசாரமான கருத்து யுத்தங்கள் அடிக்கடி நடக்கும். நான் கலைப்படங்கள் குறித்து பேசுவேன், மாணவர்களோ கமர்ஷியல் படங்கள் குறித்து சிலாகித்துப் பேசுவார்கள். ஆனால் இறுதியில் எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு சீக்கிரம் இறங்கி வந்து விடுவோம். பெரும்பாலும் மாணவர்களிடம் ஆவணப்படங்கள் குறித்துதான் அதிகம் விவாதிப்பேன். கல்லூரியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்தான் சர்வதேச திரைப்படங்களைத் தரமணி திரைப்படக் கல்லூரி மாணவர்களும் கண்டு களிக்குமாறு ஃபிலிம் சொசைட்டி என்னும் அமைப்பு ஒன்றை கல்லூரியிலேயேத் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள திரைப்படங்களைக் கொண்டு வந்து திரையிட்டு காண்பித்தேன். இத்தோடு சென்னையில் அமைந்துள்ள மற்ற நாடுகளின் தூதரகங்களுக்கும் சென்று அவர்கள் நாட்டுப் படங்களையும் கேட்டு, வாங்கி வந்து மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிப்பேன். இப்படித்தான் என்னுடைய மாணவர்கள் உலகத் திரைப்படம் குறித்தப் புரிதலை வளர்த்துக் கொண்டார்கள்.

பிறகு 1982-ல் மத்திய திரைப்பட பிரிவில் திரைப்பட இயக்குநராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்திய தேசிய ராணுவத்திற்கானப் பயிற்சிப் படங்களைத் தயாரிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய பதிமூன்று படங்களை இயக்கினேன். இந்தப் படங்கள் யாவும் ராணுவம் சம்பந்தப்பட்டதால் அதுக் குறித்து நாம் விரிவாக இங்கு பேச இயலாது. ஆனால் இந்த வகையானப் படங்களில் ஒவ்வொன்றையும் இயக்குவதற்கு சில வருடங்களாவது பிடிக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், அவர்களுக்குரிய உரிமைகள், கடமைகள் குறித்தும், அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும், அவர்களுடைய நோக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும்? போன்ற பல விஷயங்களையும் படங்களாக இயக்கியிருக்கிறேன். இவ்வகையானப் படங்களை சுமார் பதினெட்டிற்கும் மேலாக இயக்கியிருக்கிறேன். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றை மட்டும் பற்றி இங்கே சொல்லுகிறேன்.

மக்களுக்கு சிறந்த சேவைக்கான வேலைகளை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சஞ்சய்தாஸ் குப்தாவும் குறிப்பிடத்தகுந்தவர். இவர் கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தின் மாவட்ட அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார். இவர்தான் அரசு துறைகளுக்குள் முதன்முதலாக கணினி - தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். தகவல்களை கணினியில் சேமித்து வைத்துக்கொண்டு தேவைக்கேற்ப எடுத்துப் பயன்படுத்தக்கூடிய வழிமுறை அவருக்கு பெரிதும் பயன்பட்டது. இவரைப் பற்றி கேள்விப்பட்டு, நேரில் சென்று அவரைப் பற்றியும், அவருடைய செயல்பாடுகள் பற்றியும் நான் எடுத்தப் படம் அரசின் பார்வைக்கு செல்ல, அவரை அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கண்டு கொண்டார். அவருக்கு அரசுத்துறை இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்து, இந்தியா முழுவதும் கணினி தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். கட்டைவண்டி ஓட்டுபவனின் வாழ்க்கைத்தரம் கணினி மூலமாக எப்படியெல்லாம் மாறும்? என்பதை மையமாக வைத்து எடுத்த இப்படம் மத்திய அரசிடமிருந்து எனக்கும் நற்பெயரை வாங்கிக் கொடுத்தது. இதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் எரவாடா சிறைச்சாலையில் கைதிகளின் வாழ்வை மாற்றியமைக்க அரசு மேற்கொண்ட "கைதிகள் மறுவாழ்வு' குறித்தப் படத்தையும் எடுத்தேன். இந்த சிறைச்சாலை கைதிகளை தன்னம்பிக்கையுள்ள மனிதனாக மாற்றி, சமூகத்திற்குப் பயன்படுபவனாக உருவாக்கும் பயிற்சிகளை கொடுத்தது. இந்த வகையானப் படங்களையெல்லாம் "அரசு சார்ந்த தகவல் படங்கள்' என்ற தலைப்பின் கீழ் நாம் கொண்டு வரலாம். ஏறக்குறைய பதினேழு வருடங்கள் மத்திய அரசின் திரைப்பட இயக்குநராப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளராகவும் ஒருபுறம் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிறகு மத்திய திரைப்படப் பிரிவின் தயாரிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்று பணியாற்றினேன்.

இந்த சமயத்தில் நான்கு திரைப்பட விழாக்களை நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலகின் சிறந்த இயக்குநர்களும், திரைப்பட ரசிகர்களும் மும்பை சர்வதேச திரைப்பட விழாவை உலக சிறந்த திரைப்பட விழாக்களின் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தேர்வு செய்தனர். இத்துறையில் சுமார் எட்டு வருடங்கள் பணியாற்றிய பிறகுதான் சென்னையில் மத்திய திரைப்படக் குழுவின் மண்டல அதிகாரியாக 2002-ல் பொறுப்பேற்றுக் கொண்டேன். நான் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாமாண்டிலேயே ஏறக்குறைய 1009 படங்களையும், 250 முழு நீளப் படங்களையும் தணிக்கை செய்து அனுப்பினேன். அடுத்த ஆண்டு அரசு எனக்கு உதவியாக ஒரு உதவியாளரை நியமித்தது. அதற்கடுத்த ஆண்டு மேலும் ஒரு உதவியாளரை நியமித்தது. இதன் மூலம் மூன்றாவது ஆண்டில் எங்களது குழு சுமார் 2200 படங்களைத் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியது. அதற்கு முன் சொற்ப அளவிலேயே படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வந்து கொண்டிருந்தன. நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகுதான் படங்கள் தணிக்கைக் குழுவால் தாமதம் என்கிற பேச்சிற்கு இடமில்லாமல் போனது. என்னுடைய பணி காலத்தில் அதிகமான வசூலை அரசுக்கு பெற்றுக் கொடுத்தது, துரித முறையில் தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, பிறமொழிப் படங்களையும் தணிக்கை செய்தது. சோனி பிக்சர்ஸ், ஸ்டார் மூவிஸ் போன்ற தொலைக்காட்சி சேனல்கள் அளிக்கும் படங்களைத் தணிக்கை செய்தது, உறுப்பினர்களுக்கு படத்தைத் தரம் பிரிப்பது குறித்த பயிற்சிகளை வழங்கியது, தணிக்கைக் குழுவின் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, செலவினங்களை குறைத்து அரசுக்கு லாபத்தை ஈட்டியது, திரைப்படங்களில் வன்முறை, ஆபாச நடனங்களை கட்டுப்படுத்தியது போன்றவை என்னுடைய பணி காலத்தில் நடந்தேறின.

அதுவரை தணிக்கைக் குழுவின் செயல்பாடுகள் என்பது மர்மமான முறையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது. அந்த மர்மத்தை நான் மாற்றியமைத்தேன். சரியாக சொல்ல வேண்டுமென்றால் உடைத்தேன். தணிக்கைக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும், அதன் விதிமுறைகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்களில் வெளிப்படையாகப் பேசினேன். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தணிக்கைக் குழு எப்படி ஒரு கவசமாக விளங்குகிறது? என்பதை பல சந்திப்புகளில் விரிவாக எடுத்துரைத்தேன். "இயக்குநர்கள் தங்களுடைய படைப்பில் நேர்மையாகவும், அவர்களுடைய படைப்பு சிறந்த முறையில் இருந்தால் போதும். யாருக்கும், எதற்காகவும் பயப்பட வேண்டாம்' என்று கூறி அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தேன். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் படங்களை தணிக்கைச் செய்தேன். எனக்கு சோறு போட்ட சினிமாவுக்கு நான் இப்படித்தான் நன்றிக் கடன் செலுத்தினேன். இப்பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு தற்போது பல திரைப்பட அரசு மற்றும் அரசு சாராத கல்லூரிகளில் சிறப்பு ஆசிரியராகத் திரைப்படம் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறேன். தொடர்ந்து அவர்களுக்குப் பாடம் எடுக்கும்போது நான் சில விஷயங்களை கவனித்தேன். அதாவது இன்றைய திரைப்பட சூழலில் ஒரு மாணவனுக்கு எது அவசியமானதோ? அதுக்குறித்து மட்டும் அறிந்து கொண்டால் போதுமானது. அதை தவிர்த்து ஒட்டு மொத்த சினிமா வரலாற்றையும், தொழில்நுட்பத்தையும் அவன் கற்றுக் கொண்டிருப்பது என்பது கால விரயமாகவும், அவனுடைய படைப்பு ஆற்றலை தள்ளிப்போடுவதாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு "சினிமாட்டோகிராஃபி' எனப்படும் ஒளிப்பதிவை எடுத்துக் கொள்வோம். ஒளிப்பதிவுக்கான அடிப்படையை ஒருவர் கற்றுத் தேறினாலும் அவரால் சிறந்த ஒளிப்பதிவாளராக விரைவில் உருவாக முடிவதில்லை. ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரிடம் சில காலங்கள் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிறகே அவரால் ஒளிப்பதிவாளராக மாற முடியும். அப்படியே அவர் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்தாலும் அது சிறந்த ஒளிப்பதிவாக மாற வேண்டுமென்றால் அவர் ஒளிப்பதிவு தவிர்த்தும் சில விஷயங்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக படத்தொகுப்பு குறித்து அவர் தெரிந்திருந்தால் படத்திற்கான ஒளிப்பதிவை அவர் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். படத்தொகுப்பின் அடிப்படைகளை ஒரு ஒளிப்பதிவாளர் அறிந்திருக்கும்போது படப்பிடிப்பின்போது சில விஷயங்களை அவர் இன்னும் தெளிவாக செய்ய முடியும். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் ஒளிப்பதிவிற்கான கோணங்களை வைக்கும்போது படத்தொகுப்பை மனதில் வைத்துக்கொண்டு சிறப்பான கோணங்களைத் தேர்ந்தெடுத்து வைக்க முடியும். ஆகவே, ஒரு ஒளிப்பதிவாளருக்கு படத்தொகுப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதுபோலவே அவர் திரைக்கதை குறித்தும் அறிந்து வைத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பை பெற முடியும். இதேபோல ஒவ்வொரு கிரியேட்டருக்கும் சில அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. அவர் எந்த பிரிவில் சிறந்து விளங்க விரும்புகிறாரோ அந்த பிரிவு குறித்து மட்டும் சிறப்பான பாடங்களை கொடுத்தால் அவருக்குப் போதுமானது. அதை தவிர்த்து எல்லா விஷயங்களையும் அவர் கற்றுத் தேர்ந்த பிறகே அவர் அந்த துறையில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அது அவருடைய காலத்தையும், படைப்பு நேர்த்தியையும் பாழ்படுத்திவிடும் என்பதில் சிறிதளவும் ஐய்யமில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். பெரும்பாலான கல்லூரிகள் திரைப்படங்கள் குறித்த தங்கள் பாடத் திட்டங்களை மூன்று வருடங்கள் என வைத்திருக்கின்றன. ஒருவர் ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது கொஞ்சம் அதிகமான காலமாகும். ஆகவே, குறுகிய கால வகுப்புகளாக மாற்றி சினிமாவின் அடிப்படைகளை கற்றுக் கொடுக்க திரைப்படக் கல்லூரிகள் முன் வந்தால் நல்லது. மற்ற துறைகளில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிலர் இவ்வகையான படிப்புகளை எடுத்து படிக்க விரும்பும்போது முழு நேர வகுப்புகள் என்பது இடைஞ்சலையே ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக மாலை நேர வகுப்புகளை தொடங்குவது நலம் பயக்கும். ஒவ்வொரு தொழில்நுட்பம் குறித்த குறுகிய கால வகுப்புகளின் மூலமாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருந்தால், தமிழ் சினிமாவுக்கு இன்னும் சிறப்பான பல தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைப்பார்கள். சினிமாவை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், சமுதாயத்தில் இருக்கும் மனத்தளைகளையும், மனத்தடைகளையும் உடைத்தெறிந்து சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதுதான் சினிமா. என்னைப் பொருத்தவரை சினிமா என்பது ஒரு மோட்ச சாதனம்! என்னுடைய இதயக்கோளாறு பிரச்சினைக் குறித்து உங்களிடம் சொல்லாமல் விட்டுட்டேனே! என்னுடைய முதல் அறுவை சிகிச்சை 1960-ல் சென்னை- பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சி.எஸ்.சதாசிவம் தலைமையில் நடந்து, வெற்றிகரமாக முடிந்தது. இந்த சிகிச்சை நல்லபடியாக முடிந்ததால் நன்றி தெரிவிக்கும் பொருட்டு எனது தந்தை அப்போது ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு போய் டாக்டர் சதாசிவம் ஸôரிடம் கொடுத்தார். அவர் அந்த தொகையை வாங்கிக் கொள்ளாமல் ""இது என்னுடைய கடமை. போய் உங்க பையனுக்கு நல்ல காய்கறி, பழங்களை வாங்கிக் கொடுத்து, அவனை நல்லபடியாகப் பார்த்துக்க கொள்ளுங்கள்'' என்று திருப்பி அனுப்பிவிட்டார். இவர் பேரறிஞர் அண்ணாவிற்கே வைத்தியம் பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 1977-ல் டாக்டர் சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசனை பேரில், டாக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமையில் மேஜர் ஆபரேஷன் நடந்தது. இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னால் டாக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்கள் என்னைப் பார்த்து, ""இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவது மூன்று பேரின் கையில் இருக்கிறது. ஒன்று கடவுள், இரண்டாவது நோயாளியான நீங்கள், மூன்றாவது இந்த சிகிச்சையை செய்யப்போகும் நாங்களும், எங்களுக்கு உதவப்போகும் மருத்துவ தொழில்நுட்ப கருவிகளும்...'' என்றார். அவருடைய முயற்சியால் எனது இதயக் கோளாறு பூரணமாக சரி செய்யப்பட்டு இதோ நல்ல முறையில் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டாக்டர் ஸ்டான்லி ஜோன்ஸிடம் எனது தந்தை ஒரு பெரிய தொகையை கொண்டு போய் கொடுத்தார். அவரும் மிக நாகரீகமாக அதை வாங்க மறுத்து விட்டார். ""மருத்துவத்துறை என்பது சேவை மனப்பான்மையோடு இயங்க வேண்டும்'' என்று எத்தனையோ பெரிய அறிஞர்கள் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் இவர்களிடம்தான் நான் அதை கண்டு கொண்டேன். ""தெய்வங்கள் பூமிக்கு நேரிடியாக வருவதில்லை'' என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்த வார்த்தைகள் உண்மைதான்!

Comments

Popular Posts