சினிமா - 20


திங்கள்

மூகத்தில் பெண்களுக்கான இடம் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியிருந்தாலும் அவர்களுடைய விருப்பம் சார்ந்த செயல்களுக்கான அங்கீகாரம் என்பது என்னவோ இன்னும் சிறையில் அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. அதுவும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்களின் விருப்பங்கள் என்பவை முற்றிலும் சமூகத்தாலும், உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்படுகிறது அல்லது ஒடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு, "பை சைக்கிள் தீவ்ஸ்' என்னும் பிரெஞ்சு மொழித் திரைப்படத்தை காணும் பொருட்டு சென்னை - ராயப்பேட்டை சாலையிலுள்ள சத்யம் தியேட்டருக்கு கிளம்பிப் போய்க் கொண்டிருந்தோம். கையில் அப்போது எங்கு சென்றாலும் கேமராவும் ஒரு துணையாக நம்முடன் வந்து கொண்டேயிருக்கும். திரைப்படத்தின் காட்சி மிக அதிகாலையிலேயே என்பதாலும், சினிமாவைச் சார்ந்த இலக்கியவாதிகளுக்கான சிறப்பு திரையிடல் என்பதாலும் சீக்கிரமாக அந்த இடத்திற்கு புறப்பட்டிருந்தோம். அது ஒரு ஞாயிறும் கூட! உடன் எழுத்தாளர் அஜயன்பாலாவும் வந்து கொண்டிருந்தார். சத்யம் தியேட்டரை அடைவதற்கு முன்னதாக நாங்கள் இருவரும் ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பாலத்தையொட்டிய நடைபாதையில் சில குடும்பங்கள் வசிப்பதை பார்த்தபடியே சென்று கொண்டிருந்தோம். இது ஒன்றும் சென்னைக்குப் புதிதில்லையே! காலைச் சூரியன் மெல்ல கிழக்கிலிருந்து தன்னுடைய அழகான, மெல்லிய தங்க நிறக்கதிர்களை முப்பது டிகிரிக்கும் குறைவாக வீசிக் கொண்டிருந்தான். அப்போதுதான் நாங்கள் இருவரும் அந்தக் காட்சியைக் கண்டு ஒரே நேரத்தில் திகைப்பில் ஆழ்ந்தோம். ஒரு அழகிய சிறுமியொருத்தி கையில் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள். சூரியனின் தங்க நிறக் கதிர்களின் அவளின் பின்புறத்திலிருந்து ஒளிவீசிக் கொண்டிருக்க, அவள் எந்தவித சலனமுமின்றி புத்தகத்திலேயே ஆழ்ந்திருந்தாள். பருவமெய்வதற்கு முன்பான ஒரு சிறுமியின் தோற்றம் என்னவாக இருக்குமோ? அப்படித்தான் அவளும் இருந்தாள். நடைபாதை, தங்க நிறச் சூரிய கதிர்கள், ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் அழகியச் சிறுமி இவைகள்தான் எங்கள் இருவரையும் நிறுத்தி வைத்துவிட்டது. கையில் வைத்திருந்த கேமராவில் உடனே நான் அந்தக் காட்சியை "க்ளிக்..' செய்ய ஆரம்பித்துவிட்டேன். பிறகே, நாங்கள் அந்த சிறுமியின் அருகே சென்று விசாரித்தோம். நாங்கள் கண்ட காட்சி கொடுத்த பரவசத்தைக் காட்டிலும் ஒரு பேரதிர்ச்சி எங்களுக்கு அவளிடம் காத்திருந்தது.
தான் அருகிலிருக்கும் மிகப்பெரிய பள்ளியில் படிப்பதாகவும், தன் வீடு இந்த நடைப்பாதைதான் என்றும், இரவுதான் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்றும் அந்தச் சிறுமி எங்களிடம் கூறிக்கொண்டிருந்தாள். அவருடைய தந்தை ஒரு கிருத்துவர், தாய் முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியவந்தது. தந்தை ஒரு வீட்டில் காவலாளியாகவும், தாய் சாலையோர குப்பைகளில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், அந்த சொற்ப வருமானத்திலும் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த வாரமே இந்த சிறுமியைப் பற்றிய தகவலுடன் ஒரு முன்னணி வார இதழில் நாம் எடுத்த புகைப்படம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வெளிவந்தது. பிறகு, வழக்கம்போல் எல்லா பத்திரிகைகளும் அந்த சிறுமி குறித்துப் பரவலாக செய்திகள் வெளியிட்டன. அந்த சிறுமிக்கு நிதி உதவியும் சிலரிடமிருந்து கிடைத்தது. நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த சிறுமி அந்த வார இதழுக்கு கொடுத்திருந்த பேட்டியில், ""இரவில் எங்களை யாருமே தூங்க விடமாட்டேங்குறாங்க அங்கிள்... இது ப்ளாட்பாரமாம்... நாங்க இங்க இருக்கக் கூடாதாம்... எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து நான் இங்கதான் இருக்கேன். இந்த பக்கம் ஏதாவது கட்சி மீட்டிங் நடந்தா போலீஸ்காரங்க எங்ககிட்ட கடுமையா நடந்துக்கிறாங்க அங்கிள்... இப்போ காலையில் தினமும் பீச் பக்கம் அப்பாவ கூட்டிக்கிட்டு ரன்னிங் போறேன்... எதுக்குன்னு கேட்கிறீங்களா?... எனக்கும் பெரிய போலீஸôகணும்னு ஆசையிருக்கு... அப்பத்தானே அங்கிள் தப்பு செய்றவங்களை கண்டிக்க முடியும்...?''என்றிருந்தாள். இந்த சம்பவம் நடக்கும்போது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அந்த சாலையை கடக்கும்போதெல்லாம் மறக்காமல் கண்கள் அந்த நடைபாதையின் மீது ஏனோ பதிந்து விடுகின்றன. நடைபாதையில் ஏதோ ஒரு குடும்பம் இப்போதும் அங்கே வசித்துக் கொண்டுதானிருக்கிறது. அந்த சிறுமியைத்தான் காணவில்லை.
அது ஒரு மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லும் விளையாட்டு மைதானம். அங்கே ஒரு பக்கம் இளைஞர்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மைதானத்தின் ஒரு பக்கம் நீல நிறப் படிக்கட்டுகள் கொண்ட நடை மேடை அடுக்கு ஒன்று இருக்கிறது. அந்தப் படிக்கட்டு ஒன்றில் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் பெயர் கோலப்பன். கண்களில் கருப்புநிற கண்ணாடி அணிந்து, கையில் உயர்தர நாய் ஒன்றுடன் கைகளில் ஸ்டிக்கைப் பிடித்தபடி எதையோ யோசித்தவராய் உட்கார்ந்திருக்கிறார். அவரின் நினைவலைகள் பின்னோக்கி நகர்கின்றன. அந்த மைதானத்திற்கு திங்கள் என்னும் பெயர் கொண்ட சிறுமி கால்பந்து விளையாட்டை காண தினம் வருகிறாள் (அவள் திங்கள் கிழமை பிறந்ததால் அவளுக்கு திங்கள் என்னும் பெயரை அவரது தந்தை சூட்டியிருக்கிறார்). அவளை மைதானத்திற்குள் நுழைய விடாமல் காவலாளி துரத்துகிறான். இந்த செயல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவள் மைதானத்திற்கு வருவதை நிறுத்தவில்லை. கால்பந்து விளையாட்டை காண வரும் திங்களை, கோலப்பனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. இருவரும் நண்பர்களாகிறார்கள். திங்கள் அந்த விளையாட்டு மைதானத்தின் அருகேயுள்ள குப்பத்தில் வசிக்கிறாள். அவளுக்கு கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வமிருக்கிறது. அதுமட்டுமின்றி அவள் கால்பந்தாட்டத்தின் மீது எல்லையில்லா ஆசையும் வைத்திருக்கிறாள். ஆனால், அவளுடைய தகப்பனுக்கு இது பிடிப்பதில்லை. அவளை கண்டிக்கவும் செய்கிறார். திங்கள் தந்தையின் கண்டிப்பையும் மீறி கால்பந்தாட்ட மைதானத்திற்கு தினமும் வருகிறாள். அவளுக்குள் ஒரு கால்பந்தை வாங்க வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. ஒரு கால்பந்தை வாங்குவதற்கு அவளிடம் காசு இல்லாததால், அவளே ஒரு காகிதப் குப்பைகளால் ஆன ஒரு வெள்ளை நிறப் பேப்பர் பந்தை உருவாக்கி, அதை ஒரு தோழியைப்போல தன்னுடனே வைத்திருக்கிறாள். யாருமற்ற நேரங்களில் அதனுடன் பேசுகிறாள், விளையாடுகிறாள், அந்தப் பந்தையே மிகுந்த நேசத்துடன் கட்டிக்கொண்டு தூங்கவும் செய்கிறாள். அவளுக்கு மிக நெருக்கமான தோழியாக அந்த பேப்பர் பந்து இருக்கிறது. அவள் தானும் ஒரு கால்பந்தாட்ட வீராங்கனையாக ஆக வேண்டும் என்று விரும்புகிறாள். தன்னை ஒரு கால்பந்தாட்ட வீராங்கனையாகவே கற்பனை செய்துகொள்கிறாள். ஆனால், சமூகம் அவள் கால்பந்து விளையாட்டை பார்ப்பதைக் கூட தடுக்கிறது. கோலப்பன்தான் அவளுடைய கனவை ஆதரிக்கும் ஒரே நபராக இருக்கிறார். கோலப்பனுக்கு கண்கள் இல்லை. ஆனால், உலகத்தை உற்றுப் பார்க்கும் திறமையிருக்கிறது. ஒருமுறை திங்களும், கோலப்பனும் சூரியன் தங்க நிறத்திலான கதிர்களை சுமந்துகொண்டு மறையப்போகும் ஒரு மாலை வேளையில் சாலையின் ஓரமாக இருக்கும் மேசையின் மீது உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் கவித்துவம் வாய்ந்த காட்சி அது. திங்கள் தன் கனவைப்பற்றி கோலப்பனிடம் சொல்லிக்கொண்டேயிருக்கிறாள். கோலப்பன் தலைகுனிந்து அதனை மெüனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அவளுடைய கனவு எளிமையானது; ஆனால் எல்லையற்றதாக இருக்கிறது. அப்போது திங்கள், ""ஒரு பந்து எவ்வளவு ரூபா இருக்கும் ஸôர்...?'' என்று கேட்கிறாள். கோலப்பன், ""நூறு ரூவா இருக்கும்... உனக்கு பந்து வேணுமா?'' என்கிறார். அவளோ, ""இல்லை... நானே சம்பாதிச்சு வாங்கிப்பேன்...'' என்கிறாள். குழந்தைகள் வளரும்போதே மிகுந்த சுயமரியாதையுடன்தான் வாழக் கற்றுக்கொள்கிறார்கள் போலும்! வறுமை வாட்டினாலும், அவர்கள் பிறரிடம் கையேந்துவதை தவிர்க்கிறார்கள். பசி என்ற ஒரு கொடிய மிருகத்திடம் மட்டும்தான் அவர்களின் சுயமரியாதை தோற்றுப்போகிறது. உன்னதமான காட்சி அது. பிறகு கோலப்பனிடம் அவருடைய மனைவி குறித்து திங்கள் கேட்கிறாள் ""அவ எப்போதும் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உட்கார்ந்திருப்பா... அவளுக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. ஒருவேளை ஸ்கூல் டேஸ்ல விளையாண்டிருப்பா...'' என்று பதிலளிக்கிறார். அவர் தலைகுனிந்தபடியேதான் இருக்கிறார். மேலும், புட்பால் ரசிகனான தான் ஏன் ஒருபோதும் ஒரு பந்தை வாங்க வேண்டும் என்கிற ஆசை எழாமல் போனது என்றும் யோசிக்கிறார். இந்த யோசிப்பினிடையே காவலாளி, கோலப்பன் அருகில் திங்கள் இருப்பதையறிந்து விரட்டுகிறான். திங்களும் அவனிடமிருந்து தப்பிக்க தலை தெறித்து ஓடுகிறாள். பிறகு, அவளுடைய கால்கள் அந்த மைதானத்தின் மண்ணை மிதிக்கவேயில்லை. மறுபடியும் காட்சி கோலப்பன் நினைவலைகளிலிருந்து மீண்டு பழைய நிலைக்கே வருகிறது. கோலப்பன் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவள் திரும்பி வரவேயில்லை. என்றாவது ஒருநாள் திங்கள் வருவாள்... அப்படி அவள் வரும்போது அவள் விரும்பிய கால்பந்தை வாங்கித் தர வேண்டும் என்று உள்ளுக்குள் யோசித்தவாறே அவர் மைதானத்தை விட்டு செல்கிறார். திங்கள் ஆசை ஆசையாக கையில் வைத்திருந்த அந்த வெள்ளை நிறப் பந்து மைதானத்தின் ஒரு ஓரம் யாருடைய கவனிப்புமின்றி, அநாதையாக கிடக்கிறது. அதன் மீது திங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு படம் நிறைவடைகிறது.

"திங்கள்' எனும் பெயர்கொண்ட இந்தக் குறும்படம் ஒரு சிறுமியின் கால்பந்தாட்ட கனவைப் பற்றி சொல்லுகிறது. நமது வீட்டில் வளரும் பெண்களுக்கு நாம் பலவிதமான பரிசுப் பொருட்களை வாங்கித் தருகிறோம். சுடிதார், புடவை, வளையல்கள், காதணிகள், காலனிகள், உள்ளாடைகள், விருப்பமான உணவு வகைகள் என்று பெரிய பட்டியலிட்டே அவற்றைச் சொல்லலாம். ஆனால், ஒரு முறையாவது அவர்களுக்கு விளையாட்டில் எது பிடிக்கும் அந்த விளையாட்டுப் பொருள் எது? என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அல்லது அந்த விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்வித்திருக்கிறோமா? என்றால் "இல்லை' என்றுதான் பலரது உதடுகளும் பிதுங்கும். சமூகம் நம்மை ஒரு குறிப்பிட்ட பாதையிலேயே தொடர்ந்து வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறது. பாதையிலிருந்து விலகி, புதிய சிந்தனைகளுக்குள் நம்மை உட்புகுத்திக்கொள்ள ஒருபோதும் அது சம்மதிப்பதேயில்லை. மைதானத்தில் யாருமற்று கிடக்கும் திங்களின் பேப்பர் பந்தைப் போலத்தான் நம் வீட்டு பெண்களின் கனவுகளும் யாருடைய கவனிப்புமின்றி அநாதையாக தெருவில் கிடக்கிறது என்பதை முகத்திலறைந்து சொல்லுகிறது இக்குறும்படம். இதன் கதையை எழுதியிருப்பவர் பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன். இப்படத்தை திரைப்படக் கல்லூரி மாணவரான சக்திவேல் இயக்கியிருக்கிறார். இவர் செங்கல்பட்டைச் சேர்ந்தவர். சென்னை - லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. கணிப்பொறியியல் பாடத்தை எடுத்துப் படித்துவிட்டு, திரைப்படத்தின் மீதான காதலால் அடையார் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் இயக்குநர் பிரிவை எடுத்துப் படித்திருக்கிறார். "திங்கள்' அவருடைய இறுதியாண்டு பயிற்சிப் படமாகும். படத்தின் பாத்திரங்களான கோலப்பன் (ஆவணப்பட இயக்குநர் அருண்மொழி), திங்கள் (அன்புமதி) ஆகியோரின் நடிப்பு பாராட்டிற்குரியது. அதேபோன்று டிங்கு எனும் பெயர்கொண்ட நாய்க்குட்டியின் நடிப்பும் மெச்சும்படி உள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கச்சிதமாக தொகுக்கப்பட்டுள்ளன. அதுவும் அன்புமதியிடம் தெரியும் அந்த துயரம் நிறைந்த கண்களின் அழகு படம் பார்க்கும் நம் மனதின் வழியே சென்று நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. அரிதாகவே தேவதைகள் மண்ணில் பிறக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கின்றன. "திங்கள்' படைப்பின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இது போன்ற கதைக்கருக்களை எடுத்து இயக்கினால் கவனிக்கத்தக்க படைப்புகளை பெற முடியும். அதற்கு "திங்கள்' குறும்படமும் ஒரு சாட்சி!

Comments

Popular Posts