தொடர்கதையாய் அம்மா

யிர்க்காவல் கொண்டு
உண்ண மறந்து
நித்திரையில் விழித்து
கனாக்களில் மெய்மறந்து
கருவில் வளர்த்தெடுப்பாள்
கயவனை நிலாக்காட்டி
அழுகையில் அணைத்து
வெயிலில் சுருங்கி
மழையில் துளிர்த்து
மார்போடுத் தழுவி
மறுகித் தவிப்பாள்
மழலையில்
கால்முளைத்து நடக்க
கைவீசித் திரிய
காற்றாடியாய் சிரிக்கும்
கரிய கள்வனை
காணும்போதெல்லாம்
காலம் மறப்பாள்
துயிலெழுப்பி
உடல்கழுவி உச்சிமுகர்ந்து
பள்ளிக்கு போனவனின்
பாதைகளின் மேல்
காத்துக் கிடப்பாள்
ஒற்றைப்பனையாய்
மீசை முளைக்க
இளமைத் திமிர
எடரிப்பேசும் எகத்தாளனை
இதயத்தில்
அடைத்து வைத்து
அடைக்காப்பாள்
மாலைமாற்றி
மணக்கோலம் பூணும்
மகனைக்கண்டு
மனக்கண்ணில்
தோன்றிமறையும்
கட்டியத்தாலியோடு
தொட்டுப்போன துணைவனின்
விட்டுப்போன கனவுகளை
மறைத்து வைத்து
மணவறையில்
மனமகிழ்வாள்
பேரனுக்கு
தொட்டில்கட்ட
தோள்சுருங்கி
தொடங்கிடுவாள்
வேலையை
தொடர்கதையாய் அம்மா.

Comments

Popular Posts