"புதிய திசையில் தமிழ் சினிமா' - 2

புதிய திசையில் தமிழ் சினிமா அலசல் கட்டுரையில் சாதனைப் படைத்த, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பல படங்கள் குறித்தும், அதில் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகையர் குறித்தும் அலசியிருந்தோம். தற்போது அதன் தொடர்ச்சியாக இக்கட்டுரை வெளி வருகிறது.
சென்ற ஆண்டில் 133 நேரடித் தமிழ் படங்கள் வெளி வந்திருக்கின்றன. இவற்றில் தரமான படைப்புகள் சிலவற்றை குறித்து சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். படைப்பு ரீதியாக வெற்றிப் பெறாமல், கமர்ஷியல் ஃபார்முலாக்களினால் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சில படங்களும் சென்ற ஆண்டு வெளி வந்திருந்தன. "சிவா மனசுல சக்தி', "அயன்', "மாசிலாமணி', "கந்தசாமி', "கண்டேன் காதலை' போன்ற திரைப்படங்களை அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லலாம். திரைக்கதையில் சுவராஸ்யம், சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொன்னது, விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மற்றும் பிரம்மாண்டத்தை சரியாகப் பயன்படுத்தியது என்று இப்படங்களின் வெற்றிகளுக்கு காரணமாகச் சொன்னாலும், கதையிலும் இப்படத்தின் இயக்குனர்கள் சிறிது கவனம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
குழந்தையை கொண்டாடிய இயக்குனர்கள்!
அறிமுக இயக்குனர்கள் ஏறக்குறைய 69 பேர் தமிழ் சினிமாவிற்கு கதை சொல்ல வந்திருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பெற்றவர்கள் என்ற முறையில் ராஜ்மோகன் (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்), பாண்டிராஜ் (பசங்க), அழகப்பன்.சி (வண்ணத்துப்பூச்சி), அறிவழகன் (ஈரம்), பன்னீர் செல்வம் (ரேனிகுண்டா) ஆகியோரே நிற்கிறார்கள். இவர்களின் வரவு தமிழ் சினிமாவை சற்று தலைநிமிர செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. முதல் படத்திலேயே இவர்கள் வழக்கமான தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஃபார்முலாக்குள் சிக்கிக் கொள்ளாமல், புதிய கதை சொல்லல் முறை, மாறுபட்ட கதைகள் என மற்றவர்கள் சொல்ல தயங்குகிற விஷயங்களை தங்களது படங்களில் வெளிப்படுத்தியது இவர்களின் ஆளுமையை காட்டியது! குறிப்பாக, குழந்தைகளின் இயல்பை சரியாக தங்களது படங்களில் பதிவு செய்து, அவர்களை கொண்டாடிய இயக்குனர்கள் சர்வேதச கவனத்தை ஈர்த்தார்கள்! முதலிடம் பிடித்த சுந்தர்.சி!
ஒவ்வொரு ஆண்டும் நான்கு அல்லது ஐந்து படங்கள் நடித்தவர்களே அதிகப் படங்கள் நடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக, பரத்தும், சத்யாராஜும் அந்த இடத்தைப் மாறி மாறிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். 2009ல் சத்யராஜ் நடித்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் பரத் நடிப்பில் "ஆறுமுகம்', "கண்டேன் காதலை' ஆகிய இரண்டு படங்களே வெளிவந்தன. இவருக்கு அடுத்ததாக விஜய், சூர்யா, ஆர்யா, ஜெய், நகுலன், அஜ்மல் ஆகியோர் தலா இரண்டு படங்களில் நடித்தனர். கமல், தனுஷ், விஷால் போன்றவர்கள் நடிப்பில் தலா ஒரு படமே வெளிவந்தன. ரஜினி, அஜித் நடித்த எந்தப் படமும் வெளிவராத நிலையில், "தீ', "ஐந்தாம் படை', "பெருமாள்' ஆகிய மூன்று படங்களில் நடித்ததன் மூலமாக, 2009ல் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையை இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி பெற்றுக்கொண்டார். இப்படங்களில் குறிப்பிடத்தக்க சிறந்த கதையமைப்பு, திரைக்கதை உத்தி, மாறுபட்ட கதாபாத்திர வடிவமைப்பு போன்ற விஷயங்கள் சற்று குறைவாக இருந்ததால் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெறவில்லை. கதையின் நாயகர்களே வெற்றியின் நாயகர்கள்!
நாற்பதிற்கும் மேற்பட்ட அறிமுக நாயகர்கள் தமிழ் சினிமாவிற்குள் வந்தாலும் அவர்கள் யாருக்கும் பிரபல அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதே உண்மை. மாற்றாக கதையின் நாயகர்களாக, தங்களின் பாத்திரம் உணர்ந்து நடித்த விஷ்ணு (வெண்ணிலா கபடிக்குழு), ராமகிருஷ்ணன் (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்), விமல் (பசங்க), ஜானி (ரேனிகுண்டா) ஆகியோர் மட்டுமே வெற்றி நாயகர்களாக அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்து இவர்களுக்கு அடுத்தப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளன. அமீர் (யோகி), தருண்கோபி (மாயாண்டி குடும்பத்தார்) போன்ற பிரபல இயக்குனர்களின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. பாடலாசிரியரான பா.விஜய்யும் ரசிகர்களிடத்தில் ஏற்கப்படாமலேயேப் போனார். மக்களின் மனமாற்றத்தை இவர்களின் வெற்றிகளும், தோல்விகளும் வெளிச்சமிட்டுக் காட்டின!
அதிர்வலையை ஏற்படுத்திய அனன்யா!
தமிழ் சினிமாவில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு 2009ல் கதாநாயகிகளின் வரத்து அதிகமாகவே இருந்தது. சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாயகிகள் தமிழில் களம் இறங்கினாலும், நடிப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றவர்கள் பட்டியலில் மிகச் சிலரே நிற்கின்றனர். அவ்வகையில் அனன்யா, அபிநயா (நாடோடிகள்), அனுயா (சிவா மனசுல சக்தி), நீது சந்திரா (யாவரும் நலம்), மீரா நந்தன் (வால்மீகி), ஹேமமாலினி (இந்திரவிழா), பூங்கொடி (மாயாண்டி குடும்பத்தார்), தனன்யா (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்) போன்றவர்களே ரசிகர்களின் ஆதரவைப் பெற்றனர். "நாடோடிகள்' திரைப்படத்தில் தோன்றி, தமிழக இளைஞர்களின் இதயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அனன்யாதான் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்த சென்ற ஆண்டின் சிறந்த புதுமுகம். கேரளத்து வரவான அனன்யாவிற்கு வட்ட முகம், அழகான விழிகள், கோவைப்பழ உதடுகள் கொண்டவராக, தமிழ்ப் பெண்களுக்கே உரிய குறும்பும், நாணமும், வெட்கமும் என எல்லாம் ஒரு சேரக் கிடைத்த "குந்தாணி'யாக, ("நாடோடிகள்' படத்தில் அவருடைய பாத்திரப் பெயரும் இதுதான்!) எமது கவிஞர்களின் கவிதை வரிகளில் ஊறிக் கிடந்த காவியத்திற்கு உயிர்க் கொடுத்த தேவதையாக, தனன்யா தமிழுக்குக் கிடைத்தார். இத்திரைப்படத்தைத் தொடர்ந்து பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தாலும், அவற்றில் தனது நடிப்பை வெளிப்படுத்தும்படியான பாத்திரப் படைப்புகள் இல்லாத காரணத்தினால் அவற்றை மறுத்து, சிறந்த பாத்திரங்களுக்காக காத்திருக்கிறார். தனது பாத்திரம் பற்றி கவலைப்படாமல் நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தனித்த நட்சத்திரமாக ஜொலிக்óகும் அனன்யா பாராட்டிற்குரியவரே. இவருடன் "நாடோடிகள்' திரைப்படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த அபிநயா மாற்றுத்திறன் உடையவராவார். தனது மிகைப்படுத்தாத நடிப்பால் இத்திரைப்படத்தில் தோன்றி எல்லோரையும் வியக்க வைத்தார்! தனது அழுத்தமான நடிப்பால் பெண்கள் மத்தியிலும் தனித்த கவனம் பெற்றவர் தனன்யா (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்). கிராமிய மனம் கமழும் வட்டார முகமும், மிரட்டும் விழியும், பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட காதலியின் பாத்திரமாக வந்து, பலரது மனங்களில் அழுத்தமான பாதிப்பை உருவாக்கினார். காதலித்தவனுக்கும், கட்டியவனுக்கும் இடையில் கிடந்து படும் அவஸ்தையை, இன்னல்களை மிகை யதார்த்தம் இன்றி, ரத்தமும், சதையுமாக நடித்திருந்தார்; இல்லை வாழ்ந்திருந்தார் தனன்யா! இப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் காத்திருக்கிறார். இன்னமும் தமிழ் சினிமாவில் பெண் பாத்திரப் படைப்புகள், நாயகனின் இடுப்பைச் சுற்றிவந்து டூயட் பாடும் நிலையிலேயே இருக்கிறது. இல்லையென்றால், சிறந்த நடிப்பை தமிழ் சினிமாவிற்கு வழங்கிவிட்டு இத்தைகைய நாயகிகள் காத்திருப்பார்களா?
கவர்ச்சி சுனாமி!
மீரா நந்தன், அனுயா, பூங்கொடி ஆகியோர் பரவாயில்லை ரகத்தில் சேர்கிறார்கள். நடிப்பில் தங்களது முத்திரை பதிக்கவில்லையென்றாலும், கொடுத்த பாத்திரத்தை செம்மையாக செய்து முடித்திருந்தார்கள். இதில் பூங்கொடி தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் தமிழ் நாயகிகள் இல்லாத குறையைப் போக்க வந்த வகையில் பூங்கொடியின் வரவு வரவேற்கத்தக்கதே! அடுத்து தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியை திரையில் வாரி இறைத்து, காளையர்களின் கனவில் கல்லை விட்டெறிந்து, கலவரத்திற்கு உள்ளாக்கினார் கவர்ச்சி சுனாமியான ஹேமமாலினி. தமிழகத்தில் "மச்சான்'களுக்கு சொந்தக்காரரான நமீதாவிற்குப் போட்டியாக, கவர்ச்சியில் களம் இறங்கிய ஹேமமாலினியை வைத்து, தமிழகத்தில் பட்டிமன்றம் நடத்தாதுதான் குறை! மற்றபடி சென்ற ஆண்டின் சிறந்த கவர்ச்சி கன்னிக்கான பட்டத்தை இவரே தட்டிச் செல்கிறார்.
கமல் வளர்த்த பியானோ குயில்! இசையமைப்புத் துறையில் 2009ம் ஆண்டில் நாற்பத்தைந்து பேர் அறிமுகமாகி தங்களது இசைப்பயணத்தைத் தொடங்கினாலும், வெற்றிக்கனி என்னவோ வி.செல்வகணேசன் (வெண்ணிலா கபடிக்குழு), தமன். எஸ் (ஈரம்), ஸ்ருதி கமல் (உன்னைப்போல் ஒருவன்) ஆகியோருக்குத்தான். இதில் கவனிக்க வேண்டிய புது வரவு ஸ்ருதி கமல். உலக நாயகனான கமலின் வாரிசு. புகழுக்கு புகழ் சேர்த்த, இந்த தங்க மங்கை தனது முதல் படத்தை, தனது தந்தைக்கு சமர்பித்து, அவருடைய நடிப்பில் வெளிவந்த "உன்னைப்போல் ஒருவன்' படத்திலேயே தன்னை தனித்து அடையாளம் காட்டிக்கொண்டார். இந்திய இசையின் பிதாமகன்களின் வாழ்த்தைப் பெற்ற இந்த பியானோ குயில் வழங்கிய பின்னணி இசையும், புரோமோட் பாடல்களும் தமிழகத்தை தற்போதும் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் நவீன இசையை, தேன் தமிழோடு கலந்து கொடுத்த (உதாரணம்: "வானம் எல்லை...என்பது இங்கில்லை...' எனத் தொடங்கும் பாடல்) இந்த தங்க மங்கை தனது நடிப்பை முதன் முதலாக பாலிவுட்டில் பதிய வைத்தாலும், தமிழகம்தான் அவரை அரவணைத்துக் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!
2009ம் ஆண்டு சினிமா தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கும், துணை நடிகர்கள், நடிகைகளுக்கும், மற்றும் பிற துறையை சார்ந்தவர்களுக்கும் சிறப்பான ஆண்டாகவே அமைந்திருந்தது. காரணம், தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துதான்! அவ்வகையில் தமிழ் சினிமாவிற்கு 2009 நல்வரவே!

Comments

Popular Posts