சிலிர்த்தெழுந்த சிங்கம்!

னவுத் தொழிற்சாலையான திரைத்துறைக்குள் நுழைவதே கடினமான காரியம். அப்படியே நுழைந்தாலும் முன்னணி நாயகனாக தன்னை வளர்த்துக் கொள்ளுதல் என்பது மிகப் பெரிய விஷயமாகும். போட்டிகள் அதிகம் நிறைந்த இன்றைய சூழலில் நாயகர் ஒருவர் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் அதிக அக்கறையையும், ஈடுபாட்டையும், உழைப்பையும் கொடுத்தால் மட்டுமே அவரால் இந்த வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்; தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்தால் மட்டுமே கோடம்பாக்கத்தில் முன்னணி நாயகனாக வலம் வர முடியும். திரைத்துறைக்குள் குடும்பப் பின்னணியை மையமாக வைத்து எளிதாகப் பலர் உள்ளே நுழைந்தாலும், சிலரால் மட்டுமே காலூன்றி நிற்க முடிகிறது. அப்படியான சிலரில், யாரோ ஒருவருக்குத்தான் முன்னணி நாயக அந்தஸ்து கிடைக்கிறது. இதற்கு படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது போன்ற பல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதும், அவர்களுடைய சில தனிப்பட்ட திறமைகளும் முக்கிய காரணமாகும். தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து, அது ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றால் மட்டுமே அவர்களால் "மாஸ் ஹீரோ'வாக மாற முடியும். அப்படியான ஒரு உயர்ந்த இடத்தைப் பிடிப்பது, அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பதை இதற்கு முன் "மக்கள் திலக'மும், "சூப்பர் ஸ்டாரு'ம் செய்திருக்கிறார்கள். நடிகர் திலகமும், கமலும் வேறு ரூட்டில் பயணித்து,"வித்தியாச இமயங்கள்' ஆனார்கள். அந்த "மாஸ் ஹீரோ' இடத்தை நோக்கி தற்போது வேகமாக நகர்ந்திருக்கிறார் சூர்யா. தொடர் வெற்றிகள் மட்டுமின்றி, மாறுபட்ட பாத்திரங்களில் நடிப்பது, வேவ்வேறு ரசனை கொண்ட இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பது, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கேற்றவாறு தன்னுடைய சிகையலங்காரம், உடையலங்காரம், உடல்மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் மாற்றம் செய்வது எனத் தமிழ் சினிமாவில் தட தடவென சூர்யா முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றிருந்தவர்களின் சில படங்கள் சமீபத்தில் சரமாரியாக எதிர் பாராத வெற்றியைப் பெறாமல் போக தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் துவண்டு போனார்கள். ஆனால், சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "சிங்கம்' படம் இதுவரை அவர்கள் இழந்த நஷ்டத்தையெல்லாம் ஈடு கட்டியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
பிரபல இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் "நேருக்கு நேர்' படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் நுழைந்த சூர்யாவிற்கு, அவருடைய ஆரம்பக் காலப் படங்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என்பதை அவரே பல நேர்காணல்களில் ஒத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான பாத்திரங்கள் மென்தன்மை நாயகனுக்குரிய பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டிருந்ததும், அவருடைய முக பாவனைகள் ஒரே மாதிரியாக இருந்ததும் அவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமல் போவதற்குக் காரணமாக அமைந்திருந்தன. பிறகு, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த "நந்தா' திரைப்படம், ரசிகர்களை மட்டுமின்றி, திரையுலகினர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது! (இயக்குநர் பாலா தனது முதல் திரைப்படமான "சேது'வை எடுத்து, முடிக்க மிக பக்கபலமாக இருந்தவர்களில் நடிகர் சிவகுமாருக்கும் பங்கு உண்டு என்பதும், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே தனது இரண்டாவது படத்தில் வலிமையான பாத்திரத்தை அமைத்து அவருடைய மகனான சூர்யாவிற்கு ஒரு பிரேக் கொடுத்தார் பாலா என்கிற பேச்சும் அப்போது சாலிகிராமத்தின் பல டீக்கடைகளில்கூட விவாதமாக இருந்தது). பாலா என்கிற தீவிரக் கலைஞனும், அந்தக் கலைஞனது அழுத்தமான கதைப் பின்னலும், மாறுப்பட்ட களமும், பாத்திர வடிவமைப்பும், அதற்கு உயிர் கொடுத்திருந்த நடிகர்களது அங்க அசைவுகளும் (குறிப்பாக சூர்யாவின் காட் ஃபாதராக வரும் ராஜ்கிரணின் நடிப்பு) பெரிய அளவில் பேசப்பட்டன. இப்படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பு சூர்யாவிற்குக் கிடைத்தது. அதுமட்டுமின்றி தமிழின் சிறந்த முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்க முன் வந்தார்கள். இதற்கு முழு முதற்காரணம், தமிழ் சினிமாவில் ரிஸ்க் எடுக்கும் நாயகர்கள் பட்டியலில் சூர்யாவும் சேர்ந்து கொண்டதுதான்! இது அவருடைய வெற்றிக்கு முதற் படிக்கட்டாக அமைந்தது.
அடுத்து சர்வதேச இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் "ஆய்த எழுத்து', அழகியல் இயக்குநரான கெüதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "காக்க காக்க', "வாரணம் ஆயிரம்', திரைக்கதையில் மாய வித்தைக் காட்டும் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் "கஜினி', பட்டித் தொட்டியெல்லாம் ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் "ஆறு' "வேல்' என மாறுபட்ட திறமைகளுடைய இயக்குநர்களுக்குத் தனது படப்பிடிப்புத் தேதிகளை ஒதுக்கி, தனது அடுத்தடுத்த வெற்றிப் படிக்கட்டுகளில் நிதானமாக ஏற வழி செய்து கொண்டார் சூர்யா. (இந்தச் சமயத்தில் அவருடைய தம்பியான கார்த்தி நடிப்பில் வெளியான "பருத்திவீரன்' மெகா வெற்றியடைந்தது. ""சூர்யாவிற்கு போட்டியாளர் வெளியில் இல்லை, அவருடைய வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்'' என்று வெளிப்படையாகவே பேசினார் இப்படத்தின் இயக்குநரான அமீர்!). ஆனாலும் சூர்யா நிதானமாகத் தனது இலக்கை நோக்கி நகருவதற்கு, பலரும் குறிப்பிட்டுச் சொல்வது அவருடைய தந்தையின் சிறப்பான வழிகாட்டலைத்தான். ஆக, சூர்யாவின் மிகப்பெரிய பலமே அவருக்கு நல்ல வழிகாட்டியாக அவருடைய தந்தையே அமைந்ததுதான்! (இந்த வெற்றிகளுக்கு இடையே சிவகுமார் காதலுக்கும் பச்சைக்கொடி காட்டி, சூர்யா - ஜோதிகா திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி முடித்தார்). இதன் பிறகு சூர்யாவிற்கு மறைமுகமாக அவருடைய துணைவியும், நடிகையுமான ஜோதிகாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றது அவருடைய அடுத்தடுத்த வெற்றிகளில் வெளியே தெரிந்தது. ("ஜோ' என்று செல்லமாக அழைக்கப்படும் ஜோதிகா, தான் ஒரு சிறந்த நடிகையென்பதை "மொழி' திரைப்படத்தில் சொல்லாமலேயே சொல்லியிருந்தார் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்). ஆக, சூர்யாவின் வெற்றிக்கு இவர்களும் பக்க பலம்!
தற்போது அதனுடைய தொடர்ச்சியாகத்தான் "சிங்கம்' படத்தில் வசூல் வாகை சூடியிருக்கிறார் சூர்யா. படத்தின் கதையைப் பொருத்தவரை எல்லோருக்கும் தெரிந்த "மசாலா ஃபார்முலா'தான் என்றாலும், அதனைப் போரடிக்காமல் மிகத் தெளிவான திரைக்கதையுடன், ஆக்ஷன் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம்தான் "சன் பிக்சர்ஸ்'க்கு மிகப்பெரிய வசூல் சாதனைப் படமாகும். இந்த நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த படங்கள் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தாதச் சூழலில் ("சுறா' உட்பட) இப்படம் நிகழ்த்தியிருக்கும் வசூல் சாதனை, அந்நிறுவனம் மேலும் பல படங்களைத் தயாரிப்பதற்கு உற்சாக வழிவகையைச் செய்துள்ளது. மேலும் சூர்யாவிற்கு இந்திய அளவில் வாய்ப்புகள் குவிந்துள்ளதையும் இங்கே கவனித்தாக வேண்டும். பிரபல ஹிந்தி பட இயக்குநரான ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் "ரத்த சரித்திரம்' படத்தில் மாறுபட்ட வேடத்தில் மூன்று மொழிகளில் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) நடித்து, முடித்துள்ளார் சூர்யா. இவரின் ஈடுபாட்டைப் பார்த்துவிட்டு தெலுங்கு பதிப்பிற்கு சொந்த குரலிலேயே டப்பிங் பேச வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. இப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இது சூர்யாவை இந்திய அளவில் பிரபலமாக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்து, இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து "ஏழாவது அறிவு' படத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து தெளிவான திட்டமிடலுடன் இயங்கிக் கொண்டிருக்கும் சூர்யாவிற்கு அடுத்தடுத்து வெற்றிக் கோப்பைகள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றன. தியேட்டர்களில் சிலிர்த்தெழுந்த இந்த "சிங்க'த்திற்கு சமீபத்தில் இரண்டாவதாக ஒரு மழலைச் சிங்கம் பிறந்திருப்பது சூர்யாவை மட்டுமில்லை, "சிங்க'த்தின் ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிங்கத்தின் வெற்றியைக் கொண்டாடுவோம்!

Comments