தரமான மறுபதிப்பா "யோகி'?

"காதலையும், காதலிப்பவர்களையும் வெறுக்கும் இளைஞனுக்குக் காதல் வந்தால் என்னவாகும்?' என்பதைத் தனது முதல் படைப்பான "மெüனம் பேசியதே' திரைப்படத்தின் மூலமாகச் சொல்லி, தன்னை அற்புத இயக்குனராக அடையாளம் காட்டிக்கொண்டவர் அமீர். ஆனால் அன்று பெரிய அளவில் அவரை திரையுலகம் கண்டு கொள்ளாதது, கலையுலகிற்கு நஷ்டமே! அவரது அடுத்த படைப்பான "ராம்' மெல்ல ரசிகர்களை மட்டுமின்றி, திரை ஆய்வாளர்களையும் கவனிக்க வைத்ததோடு சர்வதேசத் திரைப்பட விழாவில் "தங்க யானை' விருதையும் தட்டி வந்து, தமிழ் சினிமாவிற்கு பெருமைச் சேர்த்தது. அமீர் என்கிற கலைஞன் மெல்ல திரை வெளிச்சத்தில் பரவலானார். தாயுக்கும், மகனுக்குமான நேசத்தை மிகக் கவித்துவமாக சொன்ன படம்தான் "ராம்'. இப்படத்தின் திரைக்கதை உத்தி, பரவலாகப் பேசப்பட்டது. பல மேடைகளில் அமீர், தனது வெளிப்படையான பேச்சால் சினிமா மீதான தன் அக்கறையை வெளிப்படுத்தியபோது, "அட! யாரப்பா இவர்?' என்று எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். அச்சமயத்தில்தான் வெளிவந்தது அவருடைய இயக்கத்தில் "பருத்தி வீரன்'.
தன் அசல் முகத்தைத் தொலைத்திருந்த தமிழ் சினிமாவை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சியாக, திரைப்படத்தின் கலைத்தன்மையிலான அனைத்துக் குணாம்சங்களோடும் வெளி வந்திருந்தது "பருத்தி வீரன்'. தமிழர்களின் கலாச்சார மரபு, திருவிழாக்கள், சாதிகளுக்கு இடையேயான கருத்து மோதல்கள், காழ்ப்புணர்ச்சிகள், உறவுச் சிக்கல்கள் என ஆய்வுக்குரிய பல அம்சங்களைக் கொண்டிருந்தது இப்படம். சினிமாவை எப்போது எடுத்துத் தொகுத்தாலும் அதில் பங்களிக்கக் கூடிய படங்களில் "பருத்தி வீரன்' ஒன்றாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிகரத்தில் வைத்து அழகு பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று அது. உலக சினிமாவிற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை தமிழ் திரைப்படங்கள் என்பதை இந்தப் படம் மூலம் அழுத்தமாக நிரூபித்தார் அமீர். அதன் தாக்கமாகத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் வரத்து அதிகரித்தது.
இத்தகைய சூழலில்தான் அமீர் தன்னுடைய நிறுவனத்தின் சார்பாகத் தயாரித்து, அவரே நாயகனாகவும் நடித்து வெளிவந்திருக்கிற படம் "யோகி'. இயக்குனர்கள் நடிகர்களாவது தமிழ் சினிமாவிற்குப் புதிதில்லை என்றாலும், அமீரின் நடிகர் அவதாரம் திரை ரசிகர்களிடையேயும், திரை ஆய்வாளர்களிடையேயும் தற்போது சலசலப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பதை மட்டும் மறுக்கலாகாது. காரணம், படம் ஒரு உலகப் படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்டிருப்பதும், அப்படம் கமர்ஷியல் காரணங்களுக்காக சிதைக்கப்பட்டிருப்பதும்தான்! சிறந்த இயக்குனர்கள் அரிதாரம் பூசும்போது பெரும்பாலும் புதிய கதைகளையும், கதைக் களன்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். ஆனால் அமீரின் இந்த முயற்சி அந்த வகையானது இல்லை.
2005-ம் ஆண்டின் சிறந்த படமாக, உலக திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென் அமெரிக்க படமான "சோட்ஸி' திரைப்படத்தின் தழுவல்தான் "யோகி'. ஆனால், சோட்ஸியின் கதையை தமிழுக்கு இடம் பெயர்த்தவர்கள், அப்படத்தின் சாரம்சத்தில் கோட்டை விட்டிருப்பதுதான் வருத்தமளிக்கிறது.
இந்த உலகத்தில் அன்பு காட்டவும், அரவணைக்கவும் ஆள் இல்லாத எல்லோருமே அநாதைகள்தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருந்தது "சோட்ஸி'. இப்படத்தின் பெரும்பாலான காட்சியமைப்புகள் வசனமின்றியே நமக்கு உணர்த்தும் வகையில் எடுத்திருப்பார் இப்படத்தின் இயக்குனரான கேவின் ஹுட்.
குறிப்பாக குழந்தையின் அழுகையை நிறுத்த, குழந்தைக்கு பால் பவுடரை வாயில் இட்டுவிட்டுச் செல்லும் சோட்ஸி, ஒரு இக்கட்டான சூழலில் வீட்டிலிருக்கும் குழந்தையின் ஞாபகம் வர, குழந்தையை நோக்கி ஓடிவரும் காட்சியும், பிறகு குழந்தை எறும்புகளால் மொய்க்கப்பட்டிருப்பதை அறிந்து பதறும் காட்சியும் முக்கியமானவை. அப்பகுதியில் கணவன் இன்றி தனியே வசிக்கும் பெண்ணை மிரட்டி குழந்தையின் பசியைப் போக்கும் காட்சியும் குறிப்பிடப்பட வேண்டியவையே! இக்காட்சிகள் "யோகி'யில் அப்படியே சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், இதையும் தாண்டி மனதில் நிற்கும் பல காட்சிகள் "சோட்ஸி'யில் உண்டு. குறிப்பாக "நாகரீகம்' பற்றி சோட்ஸியோடு அவனது நண்பர்களுக்குள் வரும் விவாதம், குழந்தையின் தந்தையைக் காப்பாற்றும் பொருட்டு உயிருக்குயிரான தன் நண்பனையே கொல்வது, இறுதியாகக் குழந்தையை அதன் தாயிடத்தில் சேர்க்கும் போது சோட்ஸிக்கு நேரும் முடிவு ஆகியவை கவித்துவத்துடன் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், "யோகி'யில் இவை கமர்ஷியல் ஃபார்முலாவினால் நிறம் மாறியிருக்கின்றன.
உலக சினிமாக்களை மாதிரியாகக் கொண்டு தமிழ்ப் படங்கள் உருவாவது புதிதல்ல என்றாலும் அவ்வகையான படங்கள் பெரும்பாலும் கமர்ஷியல் வெற்றிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அதிலிருந்து விலகி, நல்ல, தரமான மாறுபட்ட கதையம்சம் உள்ள படத்தை, தமிழில் கொண்டுவர வேண்டும் எனத் தயாரிப்பில் இறங்கிய அமீரைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அவ்வளவு தீவிரம் காட்டிய அமீர், ஏன் கதையின் இறுதிப் பகுதியை மட்டும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் நகர்த்திச் சென்றார் என்பது புரியவில்லை. அதுபோல தன்னை நாயகனாக முன்னிறுத்திக் கொள்ள திரைக்கதையில் அவர் சமசரத்திற்கு உள்ளாகியிருக்கும் சில காட்சிகள்தான், அவர் மீதான நம்பிக்கையை சற்று கேள்விக்குள்ளாக்குகிறது.
தமிழ் சினிமாவின் ரசிகர்கள், ரசனையில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. தரமான சினிமாவை அவர்கள் காலந்தோறும் கைத்தட்டி வரவேற்றே வந்துள்ளனர். அப்படி ரசிகர்களின் மீதிருந்த நம்பிக்கையால்தான் அமீரால் "பருத்தி வீரன்' போன்ற படங்களைத் தர முடிந்தது. "யோகி' படத்திற்கும் கண்டிப்பாக ரசிகர்களின் ஆதரவு அமீருக்கு நிச்சயம் உண்டு. ஏனெனில் "சோட்ஸி' திரைப்படத்தை சாமானிய ரசிகன் பார்த்திருப்பது அரிதுதான். ஆனால், அவரின் மீது பற்று வைத்திருக்கும் கோடம்பாக்கத்தின் உதவி இயக்குனர்களும், திரை ஆர்வலர்களும் இப்படம் பற்றி நன்கு அறிந்தவர்களே! அவர்களுக்கு "யோகி'யின் வரவு ஏமாற்றமே!
தமிழ் சினிமாக்களை உலக சினிமாவின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வழிகாட்டியவர்களில் அமீர் முக்கியமானவர். அவரிடம் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டுதான் பல இயக்குனர்கள், தங்கள் படங்களை உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகைய சூழலை ஏற்படுத்திய அமீர், உலக சினிமாவின் பாதிப்பில் படங்களை உருவாக்கலாம். ஆனால், உலக சினிமாக்களை தமிழில் மறுபதிப்பாக எடுப்பதற்கு அமீர் போன்ற ஜாம்பவான்கள் முயல்வதை என்னவென்று சொல்வதம்மா?

Comments

Popular Posts