சினிமா: 19
(நாளைக்கு மழை பெய்யும்)


சுமையான நினைவுகள் பெருகிக் கிடந்த கல்லூரிக் காலங்களில் முதல்வர் அறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போதெல்லாம் ஒரு காட்சி கண்களுக்கு படாமல் போனதில்லை. தொழில்நுட்பப் புத்தகங்களாலும், ஆய்வேடுகளாலும் நிரம்பியிருக்கும் கல்லூரி முதல்வரின் அகண்ட மேஜையின் மீது தனித்து வீற்றிருக்கும் குளோப். முதல்வர் எங்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே குளோபை சுற்றும்போது எந்த நாடுகள் நம் கண்களுக்குள் தெரிகிறதோ இல்லையோ? நிச்சயம் பச்சை நிறத்தைப் போர்த்திக் கொண்டிருக்கும் இந்திய வரைபடம் மட்டும் தெளிவாக நம் கண்ணில் படும் (பெரும்பாலும் பேசுவதற்கு முன்பாக குளோபை சுற்றிவிட்டுப் பேசுவது எங்களது முதல்வருக்குப் பிடித்த அனிச்சை செயல்களில் ஒன்றாக இருந்தது. ஒருவேளை உலகை சுற்றி வர வேண்டும் என்கிற அவரது ஆசையின் இயலாமை கூட இப்படி வெளிப்படுகிறதோ என்றும் கூட சில சமயங்களில் யோசித்ததுண்டு!) இந்திய வரைபடம் கண்ணில் தட்டுப்படும் போதெல்லாம் பச்சைப் பசேல் எனப் போர்த்திக் கொண்டு நிற்கும் நெற்கதிர்களின் காட்சிதான் மனதில் வந்து போகும். பள்ளி நாட்களில் கூட்டம் மிகுந்த பேருந்து பயணங்களில் ஜன்னல் ஓர இருக்கையைத் தேடி உட்கார்ந்து கொண்டு பயணிக்கையில் கடந்து போகும் பச்சை வயல் வெளிகளைக் காணக் கண் கோடி வேண்டும் நண்பர்களே! அதிகாலைப் பனியிலும், அந்தி சாயும் பொன்மாலைப் பொழுதிலும் வயல்வெளிகளைக் காணுகிற சுகமிருக்கிறதே! எத்தனை முறை எழுதினாலும், விவாதித்தாலும் அடைய முடியாத சுகம்தானப்பா அது! விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் சேற்றில் கால் வைக்கத் தயங்கும் பிள்ளைகளாகத்தான் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். இல்லையில்லை நாம் அப்படித்தான் வளர்க்கிறோம். வயல் வரப்பில் நின்று நெற்கதிர்களைப் பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் சேற்றில் இறங்கி பசுமையான நெற்கதிர்களைத் தொட்டுப் பார்ப்பதில் கிடைப்பதில்லையோ? விவசாயத்தை நம்பி வாழும் எல்லாத் தகப்பன்களுக்கும் ஒரே கனவுதான் இருக்கும் போல! தம் மகன்களை டிஜிட்டல் தொழில்நுட்பப் புரட்சிக்கு தயார் செய்யும் அவர்களால் பசுமைப் புரட்சிக்கு தயார்படுத்த ஏன் முடிவதேயில்லை? கணினித் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள இருந்த ஆர்வம் ஏன் விறகால் விதைக்கவும், ஏறு பூட்டி உழவும் நம் இந்திய இளைஞர்களுக்கு எழாமல் போனது? விவசாயத்தின் மீது பற்றற்றுப் போன இளைஞர்களைக் கொண்டிருக்கும் இந்திய தேசத்தில் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளின் நிலைமை பரிதாபத்துக்குரியதுதான். அதிகாலையில் எழுந்து வயல்வெளிக்கு சென்று தன் பயிர்களின் செழுமையைக் கண்டு ஆனந்தமடையும் உன்னத விவசாயிகளால் நிரம்பிய நாடு இது. விவசாயத்தை மட்டுமே அதிகமாக நம்பி வாழும் மக்கள் நிரம்பிய இந்த தேசத்தில் எந்த விவசாயி வாழ்க்கையில் எல்லாம் நிரம்பப் பெற்றவனாக இருக்கிறான்? இடைத்தரகர்களால் சுரண்டப்படும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையில் முக்கால் பங்காக இருக்கிறது. என்னதான் அரசுகள் மானியம் வழங்கி, இலவசங்களை அறிவித்து, விவசாயத்தை சீர் தூக்கி நிறுத்த எவ்வளவு திட்டங்களை வகுத்தாலும் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைத்தான் பாவம் எந்த அரசாலும் காப்பாற்ற முடிவதேயில்லை!
மலையடிவாரத்தில் இருக்கும் கிராமம் அது. அந்தப் பகுதியைச் சாரந்த மக்களுக்குப் பூப் பயிரிடுவது பிரதான தொழிலாக இருக்கிறது. அந்தப் பகுதியில் வாழும் இளைஞன் ஒருவன் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையோடு வாழ்ந்து வருகிறான். குடும்பத்தில் வறுமையின் நிழல் படிவதால் ஏதேனும் வேலைக்குச் சென்று பிழைக்கலாம் என்று எண்ணி, நண்பர்களுடன் பக்கத்து ஊருக்கு கூலி வேலைக்குச் செல்கிறான். செல்லும் வழியில் அவனைப் பற்றி விசாரிக்கும் நண்பர்கள் இரண்டு நாட்களாக அவன் சாப்பிடாமல் இருப்பதையறிந்து அவனுக்கு உதவ முன் வருகின்றனர். பக்கத்து நகரத்தில் இருக்கும் பூக்களை வாங்கி விற்கும் பூ வியாபரி ஒருவரிடம் அறிமுகப்படுத்தி, அவனுக்கு வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுக்கின்றனர். வட்டிக்கு வாங்கிய பணத்தில் பூச் செடிகளை வாங்கி வந்து பதியம் போடுகிறான் அந்த இளைஞன். பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்துப் போவதால் வேறு வழியின்றி தன் பூப்பயிர்களுக்கு பணம் கொடுத்து மோட்டார் கொண்டு தண்ணீர் பாய்ச்சுகிறான். கணவன், மனைவி இருவரும் வயலில் இருக்கும் பூத்தோட்டத்தின் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்ளுகின்றனர். அந்த இளைஞனின் நம்பிக்கையைப் போன்றே பூக்களும் எல்லாச் செடிகளிளும் பூத்துக் குலுங்கத் தொடங்குகின்றன. பூத்தப் பூக்களை செடியிலேயே வைத்துக் கொண்டு பார்த்து, ரசித்திருக்க முடியாது இல்லையா? ஆகவே, அப்பூக்களை செடியிலிருந்து எடுத்து அருகில் இருக்கும் நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்றுப் பிழைக்கலாம் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும்போது அவன் கடன் வாங்கியிருக்கும் பூ வியாபாரி அவனைத் தொடர்பு கொண்டு நகரத்தில் நடக்கும் முக்கிய விழாவிற்கு வரும் பிரபல கட்சியைச் சேர்ந்த தலைவரை வரவேற்பதற்கு ரோஜா மலர்களின் உதிரிகள் அதிகம் தேவைப்படுவதாக கூறுகிறார். வயலில் இருக்கும் ரோஜாக்கள் அனைத்தையும் கொண்டு வந்தால் நல்ல விலைக்குப் போகும் என்றும் அவர் மேலும் கூறுகிறார். அந்த இளைஞனுக்குத் தன் வயலில் பூத்திருக்கும் ரோஜாக்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தனது குலத்தெய்வத்தின் கோயிலுக்கு சென்று தன் குழந்தையின் முடி செலுத்தி வர வேண்டும் என்பதோடு மேலும் சில ஆசைகளும் அவனிடம் இருக்கிறது. ஆகவே, அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் அன்றிரவே கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் தன் மனைவியோடு வயலில் பூத்துக் குலுங்கும் எல்லா ரோஜாக்களையும் பறிக்கிறான். விடிந்ததும் மிகுந்த உற்சாகத்துடன் இரவு பறித்த ரோஜாக்களை இரண்டு பெரிய கோணியில் எடுத்துக்கொண்டு நகரத்தை நோக்கி செல்லுகிறான். மிகுந்த சிரமங்களுக்கிடையே அவன் பூ அங்காடியை அடையும்போது அங்கே இவனைப் போலவே வேறு சிலரும் பூக்களோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் பூ வாங்க வரும் அந்த முக்கிய நபருக்காகக் காத்திருக்கிறார்கள். செல்பேசியில் தொடர்பு கொள்ளும் பூ வியாபாரி சற்று நேரத்தில் நேரில் வருவதாக கூறுகிறார். இதற்கிடையில் சோர்ந்து போயிருக்கும் அந்த இளைஞன் அருகிலிருக்கும் டீக்கடைக்கு முகம் கழுவச் செல்லுகிறான். முகத்தை கழுவிக் கொண்டு எழும் அவனது கண்களில் அந்த முக்கிய பிரபலம் வருவது ரத்தான செய்தி தெரிகிறது. மிகுந்த சோர்வுடன் கடைக்கு திரும்பிய சில நிமிடங்களிலேயே பூ வியாபாரியும் அங்கு வந்து சேருகிறார். நடந்த விஷயங்களை அறியும் அவர் செல்பேசியில் வாங்குவதாக கூறிய கட்சி பிரமுகர் ஒருவருக்கு ஃபோன் செய்கிறார். எதிர்முனையில் அதிக போதையில் இருக்கும் அந்தப் பிரமுகர் பூ வியாபாரியின் பேச்சைக் கேட்காமல், ""எனக்கும் ஏகப்பட்ட நஷ்டம்தான். உங்களை மாதிரி நானும் நாலு பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு. அரசியல்ன்னா ஒரு நாள் அல்வா வரும். ஒரு நாள் ஆப்பு வரும். ச்சும்மாவா ஓட்டுப் போட்டீங்க? காசு வாங்கிட்டுத்தானே போட்டீங்க...'' என்று கூறி பூக்களை வாங்க மறுத்து விடுகிறார். அந்த இளைஞனோடு வந்தவர்கள் தங்கள் உதிரிப் பூக்களை விற்க முடியாது என்பதால் குப்பையில் கொட்டி விட்டு செல்லுகின்றனர். ஆனால், அவர்களை விட அதிக அளவில் ரோஜாக்களை கொண்டு வந்த அந்த இளைஞன் இரவு வெகு நேரமாகியும் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மன கலக்கத்துடன் உட்கார்ந்திருக்கிறான். பிறகு, எதையோ முடிவு செய்தவனாய் ரோஜாப் பூக்களை தன் கோணிப் பயிலிருந்து எடுத்து நடுத் தெருவில் கொட்டிவிட்டு செல்லுகிறான். தெருவில் நடப்பவர்களின் காலில் மிதிப்பட்டு அவனது ரோஜாக்கள் நசுங்குவதை சகிக்க முடியாமல் அவனது மனம் மேலும் கலக்கமடைகிறது. வீட்டில் இரவில் தனியே அவன் மனைவி அவனுக்காக காத்திருக்கிறாள். விடிந்ததும் வீடு சேரும் அந்த இளைஞன் வேறு வழியின்றி மறுபடியும் கூலி வேலைக்கு செல்லுகிறான். மறுநாள் நம்பிக்கையோடு தனது வயலுக்குச் சென்று ரோஜாப் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்து அவள் கேட்க, ""பூக்கிற பூக்களை செடியிலேயே வைத்திருந்தால் நாளைக்கு செடி பூப்பதையே நிறுத்திடும். அதான் பூக்களை பறிக்கிறேன்....'' என்று கூறி வானத்தை நம்பிக்கையோடு அன்னார்ந்து பார்ப்பதோடு படம் நிறைவடைகிறது.
"நாளைக்கு மழை பெய்யும்' என்னும் கவித்துவம் அடங்கிய நம்பிக்கையான தலைப்பில் உருவாகியிருக்கும் இக்குறும்படம் "நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2010'ல் நடைப்பெற்ற குறும்பட போட்டியில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இளைஞன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ப்ரியனுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் விவசாய ஊடு பயிரான பூத் தொழிலை மையமாக வைத்து விவசாயிகளின் பிரச்சினையை சொல்லியிருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று. ஏறக்குறைய முப்பது நிமிடங்களுக்கு குறையாமல் இக்குறும்படத்தை ஒரு படத்தின் தரத்திற்கேற்ப இயக்கியிருக்கும் இயக்குநர்.................. மனம் திறந்து தமிழ் சினிமா வரவேற்கலாம். அதேபோன்று படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும், பின்னணி இசையும் படத்தின் தரத்திற்கு கரம் கோர்த்திருக்கின்றன. குறும்படச் சூழலில் வரவேற்கத்தக்க படைப்புகளில் "நாளைக்கு மழை பெய்யும்' குறும்படத்திற்கும் இனி ஓர் இடமுண்டு!

Comments

Popular Posts