ஃபைனான்சியர்களுக்குப் போதாத காலமா?

மிழ் சினிமாக்களில் கொலை சம்பவங்களை நிறையவே பார்த்திருக்கலாம். அதுவும் "குத்துமதிப்பாக' பத்து வருடப் படங்களை எடுத்துக் கொண்டால், ரத்தச் சிதறல்களால் வெள்ளித் திரையே சிவப்புத் திரையாக மாறுமளவு சினிமாவை மாற்றிவிட்டார்கள். ஆனால் தமிழ் சினிமாவுக்கு நிதி உதவி செய்த ஃபைனான்சியர் ஒருவரே கொலை செய்யப்பட்டுவிட்டதாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு இது சோதனைக் காலம் போலிருக்கிறது. அடுத்தடுத்து தோன்றும் பிரச்சினைகள் தமிழ்த் திரையுலகின் குரல் வளையைப் பிடித்து நெரித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே தயாரான படங்களைத் தியேட்டரில் வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பாளர்களுக்குப் படத் தயாரிப்பில் பெரிய அளவில் பண உதவி செய்யும் ஃபைனான்சியர்களுக்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது. சினிமாவுக்கு நிதி உதவி செய்யும் பல ஃபைனான்சியர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கொடுக்கும் ஆதரவினால்தான் தமிழ்த் திரையுலகில் மெகா பட்ஜெட்டில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இந்த ஃபைனான்சியர்கள் இப்போது சில நிழல் உலக தாதாக்களின் கைகளில் சிக்கிக்கொண்டு மிரட்டல்களுக்கு ஆளாகி இருப்பது, தமிழ் சினிமாவில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை மறைமுகமாக அச்சுறுத்தி வந்த இப்பிரச்சினை, இன்று பலருக்கும் தெரியும் அளவிற்கு பூதாகாரமாகி இருக்கிறது. அதாவது சில நிழல் உலக தாதாக்களின் பிடியில் திரையுலகம் சிறைபட்டுக் கிடக்கிறதோ என்ற ஐயத்தை "ஃபைனான்சியர் முத்துராஜா' பிரச்சினை "சாம்பிள்'போலக் காட்டுகிறது. தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் உதவி செய்து வந்தவர்களில் ஒருவர் முத்துராஜா. இவர், சென்னை, ராமாவரத்தில் மனைவி உஷாராணி மற்றும் ஒரு பெண் குழந்தையோடு வசித்து வந்தார். முத்துராஜா, தன் நண்பர்களின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டதாகவும், அந்தக் கொலையை அவருக்கு நெருக்கமான நண்பர்களான வக்கீல் சகோதர்களான பத்மநாபன், சுரேந்திரன் ஆகியோர் செய்ததாகவும், அவர்களை மலேசிய அரசு கைது செய்து விசாரித்து வருவதாகவும் பகீர் செய்திகள் வெளியாயின. ஆனால் பாதிக்கப்பட்ட முத்துராஜாவின் குடும்பத்தினரோ, ""முத்துராஜா சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறார். அவர் விரைவில் திரும்பி வருவார்'' என்று திடீர் திருப்பமாக நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். முத்துராஜாவின் மனைவி உஷாராணி, மலேசியாவிலிருந்து மர்மக் கும்பல் ஒன்று ரூபாய் பத்து லட்சம் கேட்டு தன்னிடம் பேரம் பேசியதாகத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் போலீஸிலும் புகார் தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க, ""முத்துராஜாவின் முதல் மனைவி நான்தான். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கிறோம். என்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்திகள் எனக்குக் கவலையளிப்பதாக உள்ளன. ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார். எனது கணவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்'' என்று ராஜலட்சுமி என்பவர் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுத, விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. இச்சூழலில் மலேசியாவில் வசிக்கும் வக்கீல் சகோதர்களின் வீட்டில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வக்கீல் சகோதரர்கள் ஏற்கனவே பலரைக் கொன்று புதைத்திருக்கின்றனர். அந்த வகையில் முத்துராஜாவையும் கொலை செய்திருக்கலாம் என்று சில செயதித் தாள்களில் வெளியாகியுள்ள விஷயம், பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்த வக்கீல் சகோதர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் மலேசியா போலீஸôரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ஊர்ஜிதமாகாத தகவல்கள் உலவுகின்றன. இது ஒருபுறமிருக்க முத்துராஜாவின் தந்தையோ, ""வக்கீல் சகோதரர்கள் என் மகனைக் கொன்றிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் முத்துராஜாவும், அவர்களும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். விரைவில் என் மகன் வீடு திரும்புவான்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், மலேசியா போலீஸôரோ, முத்துராஜா கொல்லப்பட்டு விட்டதாகக் கூறி ஒரு எலும்புக்கூட்டை அவருடைய மனைவி உஷாராணியிடம் காட்டியுள்ளனர். அந்த எலும்புக்கூட்டைப் பார்த்து அவர் கதறி அழுதுள்ளார். இருந்தபோதிலும் இப்பிரச்சினையில் மலேசிய போலீஸôர் அதிகார பூர்வமான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. எனவே, ""முத்துராஜா உயிருடன் இருக்கிறாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா?'' என்ற மர்மம் தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடு முத்துராஜாவினுடையதுதான் என்பதைத் தடய அறிவியல் சோதனை (டி.என்.ஏ.) மூலமாகத்தான் நிரூபிக்க முடியும். அப்போதுதான் முழு விவகாரத்தின் ஆரம்ப முனையாவது பிடிபடும்; கொலைக்கான காரணம் என்ன என்பதும் கண்டறியப்படும். மலேசிய போலீஸôர் வேறு வழக்கில்தான் வக்கீல் சகோதரர்களைக் கைது செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, தொடர் விசாரணையின் மூலம் முத்துராஜா குறித்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர் பார்ப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. அதுமட்டுமின்றி மலேசியாவில் தற்போது தங்கி இப்பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார் முத்துராஜாவின் மனைவி உஷாராணி. அவர் சென்னை வந்த பிறகு அவர் என்னென்ன சொல்லப் போகிறார் என்பதையும் இப்போதே அனுமானிக்க வழியில்லை. ஃபைனான்சியர்கள் சிலர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாவதும், அவர்கள் தாதாக்களின் பிடியில் சிக்கியிருப்பதும் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதல்ல. ஏராளமான திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துவரும் இத்துறைக்கு ஃபைனான்சியர்களே பக்க பலமாக உள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழலில் படங்கள் தயாரிப்பது குறைந்து போய், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். ஆகவே, அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு ஃபைனான்சியர்களையும், திரைப்பட உலகத்தையும் காக்க முன் வர வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா இன்னும் தழைத்தோங்க முடியும். நாம், நமக்குத் தெரிந்த சில ஃபைனான்சியர்களிடம் இந்த விவகாரம் பற்றி பேசிப் பார்த்தோம். "பெயர் வெளியிட வேண்டாம்' என்ற வேண்டுகோளோடு பேசிய அவர்கள், ""பாலிவுட்டில் தாதாக்கள் மிரட்டல் அதிகம். பல சந்தர்பங்களில் போலீஸôரிடம் போனால்கூட பிரயோஜனம் இருக்காது. சில பிரபல நட்சத்திரங்களே நிழல் உலகத்தினரால் அங்கே மிரட்டப்படுவதாகத் தகவல் உண்டு. இது பற்றி செய்தித் தாள்களில் வரும் விஷயம் கொஞ்சம்தான். உயிருக்குப் பயந்து பலர் அடக்கி வாசிக்கின்றனர். அதையெல்லாம் பார்க்கும்போது நம் "கோலிவுட்' எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் "பாலிவுட் அறிகுறிகள்' இங்கும் தலை காட்ட ஆரம்பித்திருப்பது என்னவோ உண்மை. ஆனாலும் தமிழக போலீஸôர் மீது நம்பிக்கை வைத்து, தொழில் நடத்துகின்றோம். இருப்பினும் வேலிகளே பயிரை மேயும் கதை இங்கேயும் ஆங்காங்கே நடக்காமலில்லை. ஆனாலும் பீதி அடையும் அளவு, நிலைமை இன்னும் மோசமாகவில்லை. ஆயிரம் சொன்னாலும் ஒரு சில விஷச் செடிகளை முளையிலே கிள்ளியெறிய வேண்டியது கட்டாயம்'' என்றனர். தமிழக அரசு, திரைத்துறை ஃபைனான்சியர்களின் நம்பிக்கைக்கு ஏற்றபடி நடக்கும் என்கிற நன்னம்பிக்கை நமக்கும் உள்ளது. பார்ப்போம்!

Comments

Popular Posts