உதவி இயக்குநர்

விதவிதமான கனவுகளோடு
கனவு தொழிற்சாலையின்
படியேறி வருகிறது
ஒரு ஜந்து
உடலை குறுக்கி
பவ்யமாய்
பார்வையை அறையெங்கும்
தவழ விடுகிறது
எதையோ தேடியபடி
கண்களில் மாயை ஒளி
கனவுகளை விற்பனை
செய்பவன் சாவகாசமாய்
புகைத்துக் கொண்டிருக்கிறான்
இரவுகளில்
எச்சமிட்ட சொற்களை
தேடி எடுத்து
எகிறி வீசுகிறான்
அறையெங்கும்
மரண ஓலங்கள்
எக்களிக்கின்றன
கொடிய நாகங்கள்
பல்லிளித்து
கபளீகம் செய்ய
வாய் திறக்கின்றன
கொடூர பசியில்
அறையில் விழத்
தொடங்கியவன்
சட்டைய மட்டும்
எடுத்துக் கொண்டு
வீதியில் இறங்கி நடக்கிறான்
அறையெங்கும் அவன்
உடல் பங்கிடப்பட்டு
எலும்புகள் மட்டும்
மிச்சமிருக்கின்றன.

Comments

Popular Posts