நட்சத்திர யுத்தம்!

மிழ் சினிமாவில் தொழில்நுட்பப் புரட்சியும், சிறந்த திரைப்படங்களின் வரத்தும் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் அதனை தவறாகப் பயன்படுத்தும் போக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது தீர்வு காண முடியாததாக, விஸ்வரூபம் எடுத்துள்ளது திருட்டு சினிமா வி.சி.டி பிரச்சினை! கொலைக் குற்றத்திற்கு நிகராகப் பார்க்கப்படும் இப்பிரச்சினையின் சமீபத்திய பரபரப்பு "ஜக்குபாய்'. இத் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தயாரிப்பாளரும், நடிகையுமான ராதிகா மற்றும் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், இதற்கு எதிர்வினையாற்றும் பொருட்டு பிரபல நடிகர்களை அழைத்துக் கண்டன கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். "இப்பிரச்சினைக்குக் காரணமானவர்களை காவல்துறை கைது செய்திருந்தாலும், இப்பிரச்சினை இத்தோடு முடிந்துவிடுமா?' என்பதுதான் நம்முன் எழுந்துள்ள கேள்வி! "புதுவகைத் தொழில் நுட்பம் எப்போது சினிமாவை நோக்கி வந்தாலும், உடனடியாக அது சினிமாவைப் பாதிப்புள்ளாக்குகிறது' என்று ஒரு பகுதியினர் தொடர்ந்து போர்க்கொடி தூக்குவதை வாடிக்கையாக்கியுள்ளனர். சினிமா எல்லா வகையான கலைகளையும் தனக்குள் உள்ளடக்கிக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளுகின்ற மாற்றத்திற்கு உள்ளாகுமே தவிர, ஒருபோதும் அது தன்னை அழித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தவர்கள் மட்டும் தங்களது படைப்புகளில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
முதலில் தொலைக்காட்சி வந்தபோது, அது சினிமாவைப் பாதிக்கும் என்றார்கள். பிறகு, அதனால் பாதிப்பு இல்லை; அது சினிமாவிற்கு மேலும் வரவேற்பே என்பதை உணர்ந்து அமைதியானார்கள். ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. திரைப்படங்கள் வீடியோ கேசட்டுகளாக வரத் துவங்கியதும், மறுபடியும் வெகுண்டெழுந்தார்கள். ஆனால், பாமர ரசிகர்கள் நல்ல திரைப்படங்களுக்காக தியேட்டர் நோக்கி வந்து தங்களுடைய ஆதரவுக் கரங்களை நீட்டினார்கள். இதனால் வி.எச்.எஸ்.ஸþக்கான எதிர்ப்பும் முனை மழுங்கியது.
தொலைக்காட்சி என்பது ஏராளமான சேனல்களாக உருவாகத் துவங்கியது. பிறகு, அத்தொலைக்காட்சிகளில் வருடக்கணக்கில் மெகா தொடர்கள் ஒளிபரப்ப ஆரம்பித்தனர். இதனால் தியேட்டரில் கூட்டம் குறைகிறது, வசூல் பாதிக்கிறது என்ற பேச்சுக்களும் ஆங்காங்கே கேட்கத் துவங்கின. ஆனால், நல்ல கதையமைப்புடன், தரமாக எடுக்கப்பட்ட படங்களை தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் திரை ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து சினிமாவின் மறைமுக எதிரிகளுக்குக் கிடைத்த ஆயுதம் திருட்டு வி.சி.டி. இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே கள்ள மார்க்கெட்டுகளில் படங்கள் குறைந்த விலைக்கு கிடைத்துவிடுவதால் தியேட்டரில் படங்கள் டல்லடிக்கின்றன என்பதும் உண்மை. ஆனால், அதனையும் தற்போது முறியடித்திருக்கிறது "நாடோடிகள்', "பேராண்மை' போன்ற திரைப்படங்கள்! இவை தியேட்டரில் 80 நாட்களைத் தாண்டித் தொடர்ந்து ஓடியதே அதற்குச் சான்று!
கடைசியாக வந்து சேர்ந்திருக்கிறது, "தியேட்டரில் படம் வெளியாகும் முன்பே, படம் இணையத்தில் வெளியாவது' என்கிற புதுப் பிரச்சினை. "தற்போது இதை எப்படி எதிர்கொள்வது?' என்பதில் பெரிய விவாதமே கோலிவுட்டில் நடந்து கொண்டிருக்கிறது. "உண்மையில் இந்தப் போக்கு சினிமாவுக்கு ஆபத்தானதா? என்று சில தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் அளித்த பதில் சற்று நமது புருவத்தை உயர்த்தத்தான் செய்தது. காரணம், முன்பு படங்களை தியேட்டரில் மட்டும்தான் திரையிட முடியும். அவ்வகையில் மட்டுமே படத் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று, தியேட்டரில் படம் வெளியாகி கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி, வெளிநாட்டு உரிமை, இணையதள உரிமை, டி.வி.டி. உரிமை, செயற்கைக்கோள் உரிமை, ரீ-மேக் உரிமை, டப்பிங் உரிமை, பண்பலை உரிமை, மற்றும் படங்களின் சிறந்த பாடல்களை பெரிய செல்பேசி நிறுவனங்களின் "ரிங்டோன்' சேவைக்கான உரிமை என்று பல வகையிலும் தற்போது தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இதில் திருட்டு வி.சி.டி. பிரச்சினை என்பது பெருமளவு தயாரிப்பாளர்களைப் பாதிப்பதில்லை. மாறாக அது ஒரு வகையில் படத்திற்கு விளம்பரமாகத்தான் செயல்படுகிறது. காரணம், பொதுமக்கள் திருட்டு வி.சி.டி.யில் படங்களைப் பார்த்து அவை சிறந்த படங்கள் என்று தெரிய வந்தால், அப்படத்தைத் தியேட்டரில் வந்து பார்க்கும் வழக்கத்தை தற்போது கடைப்பிடிக்கின்றனர். அது மட்டுமின்றி, திருட்டு வி.சி.டி.க்களை வெளியிடுவோர் முன்பு இருந்தது போல எல்லா வகைத் திரைப்படங்களையும் வெளியிடுவது கிடையாது. காரணம், மக்கள் அவற்றை நிராகரிக்கிறார்கள் என்பதுதான். மிகச் சிறந்த பிரம்மாண்டத் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வரும் "ருத்ரம்' (2012) மற்றும் "அவதார்' போன்ற ஹாலிவுட் படங்களின் தரமான டி.வி.டி.க்கள் தற்போது சந்தையில் கிடைத்தாலும், ரசிகர்கள் இவ்வகையானப் படங்களை தியேட்டரிலேயே வந்துப் பார்க்க விரும்புகின்றனர். இந்தப் படங்கள் தியேட்டரில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன'' என்று புதிய கோணத்தில் இப்பிரச்சினையை அலசினார்கள்.
இத்துடன் பல வருடங்களாக கோடம்பாக்கத்தில் புகைந்து வரும், ஆனால் அதிகம் கவனத்தைப் பெறாத மற்றொரு விஷயமும் இருக்கிறது. அது "கதைத் திருட்டு'. பெரும்பாலான இயக்குனர்களின் கதை விவாதங்கள் நான்கு சுவர்களுக்குள்ளாகவோ அல்லது ஐந்து நட்சத்திர விடுதிகளிலோதான் நடக்கிறது. அவ்விவாதங்களில் எல்லாம் களையிழந்த முகத்துடன் இயக்குனருக்கு பெரும் பக்கபலமாக செயலாற்றுபவர்கள் உதவி இயக்குனர்கள்தான்! என்னதான் கடுமையான உழைப்பை அவர்கள் கொடுத்தாலும், அவர்களுக்கு அடிப்படைச் சம்பளமோ,பேட்டாவோ பெரும்பாலான இயக்குனர்கள் மனமுவந்து கொடுப்பதில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மையும் கூட. இதனால் இங்கே விவாதிக்கப்படும் நல்ல கதைக்கருவோ, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்களோ மற்ற இயக்குனர்களின் கதை விவாதத்திற்குள் எளிதாக சென்று அடைந்து விடுகின்றன. இங்கே குறிப்பிட்டுள்ளபடி தங்கள் கதைகளைத் தொலைத்த இயக்குனர்களின் வரலாற்றை சாலிகிராமத்தின் டீக்கடைகளில் சர்வசாதரணமாக நீங்கள் கேட்க முடியும். கதாநாயகன், கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, படத்தின் கரு துவங்கி, நூறாவது நாள் வெற்றிவிழா வரை உழைக்கும் உதவி இயக்குனர்களுக்கு சரியான சம்பளத்தை ஏன் வழங்கக்கூடாது? இவர்களைக் கண்டு கொள்ளாததும் கூடத்தான் இவ்வகையான பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது என்பதை திரையுலகம் உணர்ந்து தீர்வு காண முற்பட வேண்டும்.
அடுத்து பொதுமக்களின் மீதே தொடர்ந்து சுமத்தப்படும் திருட்டு வி.சி.டி. அல்லது டி.வி.டி. குற்றச்சாட்டையே சில திரை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம், ""உழைக்கும் பாமர ஜனங்கள் எந்தக் கடையிலும் அல்லது வீட்டிலும் யாருக்கும் தெரியாமல் இவ்வகையான டி.வி.டி.க்களை திருடுவது அல்லது மறைமுகமாக வாங்குவது கிடையாது. அவர்கள் காலையிலிருந்து மாலை வரை கடுமையான உடலுழைப்புக்கு ஆளாகிறார்கள். அதன்மூலமாக கிடைக்கும் வருமானத்தில் ரூபாய் நாற்பதோ அல்லது ஐம்பதோ கொடுத்துத்தான் டி.வி.டி.க்களை வாங்கி அவர்கள் பார்க்கிறார்கள். ஆக, ஒரு வகையில் அவர்கள் நுகர்வோர்களாக இருக்கிறார்கள். டி.வி.டி.க்களை நாம் விற்றாலும் அவர்கள் வாங்கத்தான் செய்வார்கள். இதில் பாமரனைக் குற்றம் சொல்லக்கூடாது. இன்றைய சூழலில் விலைவாசி பிரச்சினை விண்ணைத் தாண்டி நிற்கிறது. ஒரு குடும்பம் தியேட்டரில் வந்து படம் பார்ப்பது என்பது மிகுந்த செலவாகும் விஷயம் என்பதாக நாம் ஆக்கி வைத்திருக்கிறோம். காரணம், தியேட்டர் கட்டணம் அதிக அளவில் இருப்பதுதான். டி.வி.டி. வாங்கும் பணத்தில் அவர்களால் தியேட்டரில் வந்து படம் பார்க்க முடியும் என்றால், அவர்கள் ஏன் டி.வி.டி. வாங்கிப் பார்க்கிறார்கள்? இந்தப் பிரச்சினையில் குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்கள் திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் நபர்களே அன்றி பொதுமக்களல்ல!'' என்று தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு கருத்தும் இவர்களிடையே நிலவுகிறது. ""திருட்டு வி.சி.டி. அல்லது டி.வி.டி. பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் பெரும்பாலான படங்கள் வேறு மொழித் திரைப்படங்களிலிருந்து எடுத்து உருவாக்கப்படுபவையே. அப்படி இவர்களே மற்றொரு இடத்திலிருந்து களவாடிய கதையை, இவர்களிடமிருந்து இன்னொரு கும்பல் களவாடுகிறது. அப்படி இது திருட்டுத்தனமான தொழில் என்றால், முன்னவர் செயல்களை என்னவென்று சொல்வது? முதலில் இவர்கள் சொந்த கற்பனையில் உதிக்கும் கதைகளைத் திரைப்படமாக எடுக்கட்டும்? பிறகு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கலாம்'' என்று புதிய வெடியைக் கொளுத்திப் போடுகின்றனர் சிலர்.
இது ஒரு புறமிருக்க, கோடம்பாக்கத்திலிருந்து வேறு சில தகவல்களும் நம் கவனத்திற்கு வந்தது. பிரபல நடிகர்களின் படங்கள், பெரும்பாலும் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு கிடைக்காமல் அவர்கள் வியாபரத்தில் நலிவடைந்து வருகின்றனர். ஆகவே அவர்களும் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்கிறார்கள்.
சரி! விஷயத்திற்கு வருவோம். "ஜக்குபாய்' திரைப்படம், பிரெஞ்ச் திரைப்படமான "வாசபி' என்னும் படத்தின் தழுவல் என்று ரஜினியே மேடையில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "திருட்டு வி.சி.டி.க்கள் வெளிவருவதற்கு திரைத்துறையைச் சார்ந்தவர்களில் குறிப்பாக விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்தான் காரணம்' என குற்றமும் சாட்டியிருக்கிறார். இதனை மறுத்து அது சம்பந்தப்பட்டவர்கள் ரஜினியின் பேச்சிற்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை வெறும் திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களோடு முடிந்துவிடவில்லை. "இதற்குப் பின்னால் ஒரு பெரிய குழுவே இயங்குகிறதோ என்னும் ஐயத்தைத்தான் நமக்கு எழுப்புகிறது. இதில் எது உண்மை?' என்பதைக் காலம்தான் நமக்குச் சொல்ல வேண்டும்!
திரைத்துறையில் நாம் கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பார்த்தால், கமலின் சொந்தத் தயாரிப்பான "விக்ரம்' திரைப்படத்திற்கே இந்தப் பிரச்சினை வந்திருக்கிறது. இது குறித்து கமல், அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் முறையிட, அவரும் சம்பந்தபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய உத்திரவிட்டிருக்கிறார். ஆனால், என்ன? கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின் சந்து, பொந்துகளின் வழியாக மறுநாளே வெளிவந்திருக்கின்றனர். ஆக, இது தொடரும் பிரச்சினையாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
"திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்களை கடுமையான சட்டப்பிரிவுகளின் மூலம் தண்டிக்க முடியாதா?' என்றால் ""முடியாது!'' என்பதுதான் காவல்துறையின் மறைமுக பதிலாக இருக்கிறது. காரணம், திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தாலும், படத்தின் தயாரிப்பாளர் இந்த வழக்குகள் சம்பந்தமாக அலைவதற்கு தயாரில்லையாம். மேலும் இன்னொரு பிரச்சினையும் இதில் இருக்கிறது. அதாவது வெளிநாடுகளுக்கு விற்கப்படும் படங்களின் ஒரிஜினல் பிரிண்டிலிருந்தே பெரும்பாலும் வி.சி.டி.க்கள் தயாரிக்கப்படுவதால், இதன் மீது வழக்குத் தொடுக்க, வெளிநாட்டு விநியோக உரிமையாளருக்கே அதிக உரிமை இருக்கிறது என்று தங்கள் தரப்பு உண்மையை வெளிப்படுத்தினர்.
திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் வெறும் தயாரிப்பாளர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலையிலிருந்து தற்போது அந்தப் பிரச்சினை வேறொரு வடிவமும் எடுத்துள்ளது. திருட்டு வி.சி.டி.யின் மூலமாகக் கிடைக்கும் பணம், தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப் படுவதாகக் கருத்து தெரிவித்துள்ள கமலின் பேச்சையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பிரச்சினை என்று வந்துவிட்ட பிறகு கண்டிப்பாகத் தீர்வு இல்லாமல் போகாது இல்லையா? கமல் இப்பிரச்சினை தொடர்பாக பேசும்போது, ""திருட்டு வி.சி.டி. பிரச்சினையை ஒழிப்பதற்கு ஒரே வழி, தியேட்டரில் திரைப்படம் வெளியாகும் அன்றே, அப்படத்தின் ஒரிஜினல் டி.வி.டி.யையும் வெளியிட வேண்டும்'' என்றார். இவரின் இந்தக் கருத்தைப் பொதுமக்களும், பல திரைத்துறையினரும் வரவேற்று உள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"சரி! இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் வரத்து குறையவும், வசூல் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதே?' என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் இதனால் பாதிப்பு என்பது இல்லை என்றுதான் விவரமறிந்த சிலர் கூறுகின்றனர். பொதுவாக இளைஞர் பட்டாளம் கூட்டத்தோடு தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதையே விரும்புகிறது என்பதை யாவரும் அறிவோம். தியேட்டரில் வந்து படம் பார்க்கும் மனோபாவம் என்பது நமது இளம் பருவத்திலிருந்து தொடர்ந்து வரும் செயலாகும். மற்றொன்று, நாம் எப்போதும் கூட்டத்தோடு அமர்ந்தே கலையை ரசிக்கவும், சிலாகிக்கவும் ஆசைப்படுகிறோம், பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் என்னதான் நாம் டி.வி.டி.யில் ஒரு படத்தைப் பார்த்து ரசித்தாலும், தியேட்டருக்குச் சென்று பார்க்கும் அனுபவத்தை அது ஒருபோதும் தருவது கிடையாது. இன்றைய சூழலில் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது வெறும் படத்தோடு நின்றுவிடும் செயல் அல்ல! அதைத் தொடர்ந்தும் நாம் பல செயல்களில் ஈடுபடுகிறோம். அதாவது தரமான உணவகங்களில் உணவருந்துவது, ஷாப்பிங் செய்வது அல்லது அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு சுற்று வலம் வருவது என்று நாம் வாழ்க்கையை ரம்மியமாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறோம். ஒரு வகையில் சினிமாவிற்குப் போவது என்பது ஒரு மினி பிக்னிக் அனுபவமாகத்தான் நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. ஆகவே, தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதை ஒருபோதும் மக்கள் தவிர்க்க மாட்டார்கள். காலமாற்றத்திற்கு ஏற்ப, தியேட்டர்களை மாற்றிக்கொள்ளாதபோது மட்டுமே தியேட்டர்களுக்கு, மக்களின் வரத்து குறைய வாய்ப்பிருக்கிறது என்பதே இந்தத் தரப்பினரின் வாதமாக இருக்கிறது. ஆனால், "இப்படிப்பட்ட "பிக்னிக்' அனுபவங்களுக்காகும் செலவை நடுத்தர வர்க்கம் எப்படிச் சமாளிக்கும்?' என்ற கேள்விக்கு, மழுப்பலான பதிலே இந்த மேதாவிகளிடம் கிடைக்கிறது.
"சென்னையின் பல முக்கிய தியேட்டர்கள் வெறும் திரைப்படங்களை மட்டும் திரையிடுவதைத் தாண்டி, சினிமா€பார்க்க வரும் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல மாறுதல்களை செய்திருக்கின்றன. இத்தகைய தியேட்டர்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், படங்களை இங்கு வந்து பார்க்கும் மக்களின் கூட்டமும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, தியேட்டர்களின் தன்மையை மாற்றுவதும், திரைப்படம் வெளியாகும் அன்றே தரமான டி.வி.டி.க்களை வெளியிடுவதும் மட்டுமே இத்தகைய திருட்டு வி.சி.டி. அல்லது டி.வி.டி. பிரச்சினைகளை ஒழிக்க தீர்வாக இருக்க முடியும்' என்று சில அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியாயினும் திருட்டு வி.சி.டி.யை ஜீரணிக்கவே முடியாது என்பதே நமது உறுதியான கருத்து. சில ஆயிரம் பேர்களின் வியர்வையை நோகாமல் பல்லாயிரம் தத்தெடுப்பது, அதுவும் திருட்டுத்தனமாக என்பதை எந்த நியாயத்தின் அடிப்படையில் ஏற்பது?
ஏற்கனவே பல நூறு முறை விவாதிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம. நாராயணன், அபிராமி திரையரங்க உரிமையாளர் "அபிராமி' ராமநாதன், தயாரிப்பாளர் "சிவசக்தி' பாண்டியன் உள்ளிட்ட பலர் பகிரங்கமாக போர் தொடுத்திருக்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து, ""திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, திருட்டு வி.சி.டி. தயாரிப்போர் மற்றும் வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். பாடலில் வரும் வரிகள்போல், "திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்று நினைத்து, திரையுலகினர் எவரும் விலகி விடக் கூடாது. "நாடுகள் ஒன்றினைந்தால் பயங்கரவாதத்தையே கட்டுப்படுத்திவிடலாம்' என்ற கருத்து உலாவரும் இந்நாளில், திரையுலகினர் ஒன்று திரண்டு போரிட்டால் திருட்டு வி.சி.டி.யைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாதா என்ன? முயற்சித் திருவினையாக்கும்' என்ற வள்ளுவர் வாக்கினை, "பொங்கல் சபதமாக' திரையுலகினர் அனைவரும் ஏற்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றோம்.

Comments

Popular Posts