புயலிடம் வீழ்ந்த தென்றல்!

டந்த சில வாரங்களாகப் பத்திரிகையுலகை மட்டுமின்றி, இந்திய அளவிலேயே மீடியாக்களில் சாமியார் நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தரும் படுக்கறையறையில் இருப்பது போன்ற காட்சிகள் தனியார் சேனலிலும், இன்டர்நெட்டிலும் சூடு கிளப்புகின்றன. இதனால் பொது ஜனங்கள், தர்ம சங்கடத்தில் நெளிவது வேறு விஷயம். சாமியார் போர்வையில் ஒளிந்துகொண்டு காமக் களியாட்டங்களை நித்யானந்தர் நடத்தியதால் அவரது பக்தர்கள் மற்றும் பக்தைகள் அவரது சொத்துக்களைத் தாக்கி அழிப்பதும், அவரது உருவப் படங்களை எரிப்பதுமாக வன் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று நித்யானந்தர் தொலைக்காட்சிகளில் தோன்றி, ""இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்று கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையோடு மழுப்பினார். வெயில் தலைக்காட்டி மக்களை சூடேற்றுவது ஒரு பக்கம் நிகழ்ந்தாலும், ஒரு சாமியாரின் ஒழுக்கமற்ற செயல்கள் மக்களை அதிகம் சூடேற்றி, மறு விவாதத்திற்கு ஆன்மீகத்தைத் தள்ளியிருக்கிறது. ""மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்க வேண்டும். அடிமனதில் அமைதியை உருவாக்குவதன் மூலம் இறைவனை அடையலாம்'' போன்ற "ஊருக்கு உபதேசங்கள்' மூலம் மக்களிடையே பிரபலமான நித்யானந்தர், திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்டவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ மாணவரும் கூட! எட்டு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டமுடையவராக இருந்தாராம். "நித்யானந்த தியான பீடம்" என்னும் பெயர் கொண்ட ஆன்மீக அமைப்பைத் தொடங்கி அதில் தியானம், யோகம் போன்றவற்றை பக்தர்களுக்கு கற்றுத் தந்ததோடு, தனது மயக்கும் சொற்பொழிவுகளால் உலகமெங்கும் ஏராளமான பக்தர்களை தன்வசம் ஈர்த்தார். (இந்தப் பட்டியலில் பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் அண்டை மாநில முதல்வர்கூட அடக்கம் என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன) நித்யானந்தரின் சொற்பொழிவுகளில் மனம் கிறங்கி, தங்களது சொத்துக்களை வாரி வழங்கினர் பலர். இதனால் இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் குவிந்தன. அத்துடன் உலகம் முழுக்க, தனது அமைப்பின் கிளைகளையும் நிறுவினார் "நித்தி'. தனது சொற்பொழிவுகளைப் புத்தகங்களாகவும், சி.டி.க்களாகவும் வெளியிட்டிருக்கிறார் இந்தக் காமுகச் சாமியார்! நித்யானந்தரிடம் மன அமைதியை தேடிவந்த நடிகை ராகசுதா, பின்பு அவருடைய நம்பிக்கைக்குரிய பக்தையானார் என்று சொல்லப்படுகிறது. ""நித்யானந்தரின் உபதேசத்திலுள்ள பேருண்மைகளையும், தியான, யோகாசனப் பயிற்சி முறைகளையும் வீடியோ காட்சிகளாக மாற்றி, பக்தர்களிடம் கொண்டு செல்ல நடிகை ரஞ்சிதாவை பயன்படுத்திக்கொள்ளலாம்'' என்று நித்யானந்தரிடம் ராகசுதா சொல்லியதாக ஒரு வதந்தி உலவுகிறது. அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டினாராம் நித்யானந்தர். ராகசுதாவின் வழிகாட்டுதலின்படி தியான பீடத்திற்கு வந்தார் நடிகை ரஞ்சிதா. அவர் வாழ்க்கையில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த சில கசப்பான சம்பவங்களும் அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன. தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவால் அடையாளம் காணப்பட்டு சில வெற்றிப் படங்களிலும் நடித்த ரஞ்சிதா, ஒரு ராணுவ அதிகாரியை மணந்து கொண்டார். பெரும்பாலான நடிகைகளுக்கு ஏற்படுவதைப் போலவே "நாடோடித் தென்றல்' புகழ் ரஞ்சிதாவின் திருமண வாழ்க்கையிலும் புயல் வீசத் தொடங்கியது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார் ரஞ்சிதா. அதன் பிறகு பொருளாதார ரீதியாக கொஞ்சம் சிரமப்பட்டவர், தன் வீடுகளை வாடகைக்கு விட்டும், தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றில் நடித்தும் வாழ்க்கையை ஓட்டி வந்தார். இதனிடையே அவருக்கு உடல் நலத்தில் சிறிது பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த ரஞ்சிதாவிற்கு, ஏற்கெனவே நடிகை ராகசுதா பழக்கமாகியிருந்ததால் எளிதாக நித்யானந்தரின் ஞான பீடத்திற்குள் அவரால் நுழைய முடிந்ததாம். பீடத்தின் அமைதியும், மயக்கும் நித்யானந்தரும் ரஞ்சிதாவின் மனக்காயங்களுக்கு மருந்தாயினர். ஞான பீடத்தில் அவருடைய சேவை, நித்யானந்தருக்கு மசாஜ் செய்யுமளவிற்கு நெருக்கமானது. சேலத்தைச் சேர்ந்த லெனின் என்கிற தர்மானந்தா, தனது காந்தப் படுக்கை வியாபாரத் தோல்வியால் மனம் நொந்து போயிருந்த நிலையில் நித்யானந்த தியான பீடம் அடைக்கலம் கொடுத்தது. பீடத்திற்குள் பக்தராக நுழைந்து, தனது விசுவாசத்தால் நித்யானந்தரின் நம்பிக்கைக்கு உரியவரானார். நித்யானந்தரின் ஆன்மீகச் சொற்பொழிவுகளை மீடியாக்களின் மூலமாக மக்களிடத்தில் கொண்டு செல்ல பெருமளவு உதவுபவர் என்பதால் அவருக்கு சிறப்பான இடம், பீடத்தில் அளிக்கப்பட்டிருந்தது. நித்யானந்தரிடம் குவிந்திருக்கும் பொருளாதாரம் தர்மானந்தாவை கலக்கியதாகச் சொல்கின்றனர். வெளிநாட்டு பக்தை ஒருவருடன் "நாற்பத்தெட்டு மணிநேரத் திட்டம்' ஒன்றை வகுத்து, மிகச் சாதுர்யமாக நித்யானந்தாவின் காம லீலைகளை படம் பிடித்தார் லெனின். இதன் பின்னணி, மக்களுக்கு உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக என்கிறார் அவர். ஆனால், "நித்யானந்தரிடமிருந்து நிறைய கரன்ஸியை கறக்கத்தான்' இப்படி "புரூட்டஸ்' ஆக மாறினார் லெனின் என்றும் பேசிக் கொள்கின்றனர். இதற்காக பீடத்தின் முக்கிய நிர்வாகிகளிடையே ஒரு விவாத அரங்கே நடந்து முடிந்ததாகவும் ஒரு தகவல்! ஐம்பது கோடிக்கு பேசப்பட்ட பேரம், இறுதியில் பதினைந்து கோடிக்கு வந்து நின்றதாம். ஆனாலும் "பேரம்' பேசப்பட்ட பணம் முறையாக தர்மானந்தாவின் கைகளுக்கு வராததால், தன்னிடமிருந்த ஆபாச சி.டி.க்களை மீடியாக்களுக்கு மிகக் கவனமாக அனுப்பி வைத்திருக்கிறார் லெனின் என்னும் தர்மானந்தா! ஒரு பிரபல பத்திரிகையும், தொலைக்காட்சியும் வரிந்து கட்டிக்கொண்டு விளக்கத்தோடு சி.டி. காட்சிகளைக் காட்டி விவரிக்க, தமிழகத்தில் நித்யானந்தரின் காமலீலைக் காட்சிகள் பற்றிக்கொண்டு எரிந்தன! இதனைத் தொடர்ந்து தலைமறைவானார் நித்யானந்தர்! இப்போது அவரை வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறது காவல் துறை! தமிழ் சினிமாவில் சில நடிகைகள் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்வதும், அதன் பின் எழும் விவாதங்களும் அவ்வப்போது நடந்து கொண்டுதானிருக்கின்றன. நித்யானந்தரின் வலைக்குள் சிக்கிய ரஞ்சிதாவை பற்றி கோடம்பாக்கத்து சினிமாப்புள்ளிகள் சிலர் தெரிவிக்கும் தகவல்கள், இதுவரை மீடியாக்கள் காட்டும் முகத்திற்கு நேர்மாறானவையாக இருக்கின்றன. சென்னை சாலிகிராமத்தில் தனக்குச் சொந்தமான வீட்டை, பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு விட்டு தி-நகரில் குடியிருக்கும் ரஞ்சிதாவிற்கு, திரைத்துறையில் மிகச் சொற்பமான நடிகைகளுடன் மட்டுமே நட்பு இருக்கிறதாம். பிரபல தொலைக்காட்சியில் வரும் அவருடைய நெடுந்தொடர், மக்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, பெருந்தொகை கொடுத்து பிரபல நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டபோதும்கூட உறுதியாக நடிக்க மறுத்து விட்டாராம் ரஞ்சிதா! நிலைமை இப்படியிருக்க, அவர் பணத்திற்கு ஆசைப்பட்டெல்லாம் இந்தச் செயலில் இறங்கியிருக்க வாய்ப்பேயில்லை என்று அடித்துச் சொல்லுகின்றனர் சில கோலிவுட் பிரமுகர்கள். மேலும், ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அவருடைய கால்ஷீட் கிடைக்காததால்தான் இந்தப் பிரச்சினையை பூதாகாரமாக்குகின்றனர் என்றும் சிலர் வருத்தப்படுகின்றனர். அண்மையில் ஒரு நடிகை பாலியல் விவகாரங்கள், மற்றும் ரேட் குறித்து தனது கருத்தை தெரிவித்ததாகச் சொல்லி, அதனை வெளிச்சமிட்டுக் காட்டிய பத்திரிகைக்கு எதிராக வெகுண்டெழுந்த சினிமா உலகம், இந்தப் பிரச்சினையில் மெüனம் காப்பதற்குக் காரணம், "கையும் களவுமாக ரஞ்சிதா வீடியோவில் சிக்கியதுததான்' என்றும் சிலர் பேசுகின்றனர். நிலைமை இப்படியிருக்க, தமிழ் சினிமா நடிகைகளில் சிலரை, நித்யானந்த ஞான பீடத்திற்குள் கொண்டு வருவதற்கான சதி வேலைகளும் பின்னணியில் நடந்ததாம். ஆனால், பிஸியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் அவர்கள் பீடத்திற்குச் செல்லும் வாய்ப்பைத் தள்ளிப் போட்டிருக்கின்றனர். தற்போது பீடத்தின் விபரீதம் புரிந்து, ""தப்பித்தோம் பிழைத்தோம்'' என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றனராம் அந்த நடிகைகள். இல்லையேல் ஆன்மீகத்தைத் தேடிப்போன அவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்க சதி வேலை நடந்திருக்கலாம் அல்லவா? இது ஒரு புறமிருக்க, ""நான் சேவை செய்யத்தான் நித்யானந்தரிடம் போனேன்'' என்று ரஞ்சிதாவே சொன்னதாக ஒரு வாரப் பத்திரிகை கூறியுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல, சேவையும் நஞ்சு என்பதை ரஞ்சிதாவால் பலர் உணர்ந்துள்ளனர். எது எப்படியோ... நிம்மதியைத் தேடிப்போன ரஞ்சிதாவின் இமேஜை நிர்மூலமாக்கியிருக்கிறது நித்யானந்தாவின் தியான பீடம். இனி போலிச் சாமியார்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு போஷாக்கு கொடுப்பவர்களும் கூடுதல் எச்சரிக்கையோடிருப்பார்கள் என்பதுதான் ரியாலிடி!

Comments

Popular Posts