"அங்காடித் தெரு' வும் அதிர்வலைகளும்...

மிழ் சினிமா ஆரோக்கியமான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு நம்பிக்கையாக சமீபத்தில் திரையில் மலர்ந்திருக்கிறது "அங்காடித் தெரு'. தமிழ் சினிமாவில் முதன் முறையாக சென்னை தி-நகரிலுள்ள ரெங்கநாதன் தெரு கதையின் நாயகனாக முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறது. இல்லையில்லை வாழ்ந்திருக்கிறது. சமகால மனித வாழ்க்கையின் ஆவணமாக படத்தை தொகுத்திருக்கிறார் (கவனிக்க...அவர் இயக்கவில்லை) இயக்குநரான வசந்தபாலன். ஏற்கனவே "வெயில்' திரைப்படத்தின் மூலம் தன்னை யதார்த்த பாதைக்கு மாற்றிக் கொண்டவரின் பயணம், சற்று கூடுதலான பொறுப்புணர்வோடும், சமூக பிரக்ஞையோடும் "அங்காடித் தெரு'வில் தொடர்ந்திருக்கிறது. இந்தப் படைப்பை மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு அவர் நிறைய இழப்புகளைச் சந்தித்திருந்தாலும், அந்த இழப்புகள் எல்லாம் தற்போது தியேட்டரில் ரசிகனின் கைத்தட்டலில் கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன. தரமான கதைகளை சொல்கிற விதத்தில் சொன்னால், கதையின் எந்த முகமும், எங்களுக்கு ஸ்டார் முகம்தான் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார்கள் மேன்மை பொருந்திய ரசிக பெருமக்கள். (உதாரணம்: விபச்சார பெண் தன் குழந்தையை வைத்துக் கொண்டு பேசும் காட்சி). இப்படத்தின் திரையிடலைத் தொடர்ந்து அரசே பல வணிக நிறுவனங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியிருப்பதும், அதைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்யாத தனிச் சாதனை! சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்பதை நமது செவிகளில் ஓங்கியறைந்து சொல்லியிருக்கிறது "அங்காடித் தெரு'. இப்படம் குறித்து பிரபலங்கள் சிலரிடம் பேசியபோது....
எஸ்.பி.ஜனநாதன்(திரைப்பட இயக்குநர்)
மனிதனுடைய அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் பற்றிய போராட்டத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது "அங்காடித் தெரு' திரைப்படம். பெரும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் உணவுக்காக அடித்துக் கொள்ளுதல், ஆட்டு மந்தைகளைப் போல் ஓரிடத்தில் அனைவரும் உறங்குதல், கழிப்பிட வசதி இல்லாமல் தவித்தல் என அடிப்படை வசதிகளே புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் வாழ்க்கை மோசமான சூழலில் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது இப்படம். இப்பிரச்சினை ரெங்கநாதன் தெருவில் மட்டுமல்ல. சென்னையைப் போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் கிளைப் பரப்பியிருக்கும் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களிலும்கூட தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய பெரிய மால்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கென்று எந்த யூனியனும் இல்லை. அதையும் மீறி ஆரம்பித்தாலும் அவற்றிற்கு தடை விதிக்கிறார்கள் இந்நிறுவனங்களின் பெரு முதலாளிகள். ஆகவே, பெரும் வணிக நிறுவனங்களில் தங்களது உழைப்பைக் கொடுக்கும் இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வித பாதுகாப்புமின்றி நிர்கதியாய் நிற்கின்றது என்பதை மிகக் கச்சிதமாக படம் பிடித்துள்ளார் இயக்குநர்! "அங்காடித் தெரு' படத்தில் கனி என்கிற பாத்திரத்தில் வரும் அஞ்சலியின் தங்கைக்கு நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறை அதிர வைக்கிறது. தங்களது பொருளாதாரத் தேவைக்காக அயல்நாடுகளுக்கு குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டு வேலைகளுக்காக செல்லும் நமது பெண்களின் வாழ்க்கை என்னவாக இருக்கும்? மொழி தெரியாத இடத்தில் அவர்கள் எப்படி வாழ்வார்கள்? அங்கே அவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்? என்பதையெல்லாம் கனியின் தங்கைப் பாத்திரம் மூலமாக நம் யூகத்திற்கே விட்டு விடுவதன் மூலமாக, இயக்குநர் வசந்தபாலன் இப்பிரச்சினையின் ஆழத்தை நோக்கி நம் சிந்தனைக் கிளறி விடுகிறார். கிராமப்புறங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால் தங்கள் குடும்பங்களில் நிலவும் வறுமையை ஒழிப்பதற்காக நகரங்களில் இருக்கும் வணிக நிறுவனங்களில் வேலைக்குச் செல்கிறார்கள் இளைஞர்கள். பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்களே பெற்றிருந்தாலும்கூட அவர்களது வாழ்க்கை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பெரும்பாடாய் இருக்கிறது. இந்நிலையில் சில வணிக நிறுவனங்கள் இக்கிராமங்களின் குடும்பங்களில் நிலவும் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட சில தொகையை டெபாசிட் பணமாக அவர்களது குடும்பத்திற்குக் கொடுத்து, அவர்களை வேலைக்கு அழைத்துச் செல்கிறது. அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறது. "அங்காடித் தெரு' திரைப்படத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை இதுவரை இவ்வளவு டெடிகேஷனாக யாரும் திரையில் சொன்னதில்லை. அதுமட்டுமில்லை "அங்காடித் தெரு' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையில் உதவி இயக்குநர்கள் மத்தியிலோ "இந்த மாதிரியான ஒரு படத்தைத் தைரியமாகவே எடுக்கலாம்' என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்து இவ்வளவு பவர்ஃபுல்லான அதிர்வலையை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய முதல் திரைப்படம் "அங்காடித் தெரு'வாகத்தான் இருக்கும்!
பழ. கருப்பையா(அரசியல் விமர்சகர் - நடிகர்)
முந்நூறு, நானூறு பேர் ஒரு நிறுவனத்தில் ஆடு, மாடுகளைப்போல அடைக்கப்படுவதும், அவர்களை மிகக் குறைந்த சம்பளத்தில், மிகக்கூடுதலான நேரம் வேலை வாங்குவதும் கொடுமையானது. சென்னை நகரத்திற்குள் இது போன்ற வேலைக்காக, வேலைக்காரர்களை இந்த அளவு குறைவான சம்பளத்திற்குப் பிடிக்க முடியாது. அப்படிப் பிடித்தால் இவர்கள் அவர்களின் கட்டுக்குள் இருக்க மாட்டார்கள். ஆகவே, தேரிக்காடுகளில், விவசாயம் அற்றுப்போன பகுதிகளில் இருந்து ஆண்களும், பெண்களும் இங்கே வேலைக்கு அழைத்து வரப்பட்டு, அடைத்து வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் இல்லை. கூடுதல் நேரம் வேலைப் பார்ப்பதற்கான கூடுதல் சம்பளம் இல்லை. இத்தகைய நிலையில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்காக ஒரு கதை செய்து, அதை ஒரு காவியமாகவும் ஆக்கியிருக்கிறார் வசந்தபாலன். நல்ல படம் எடுப்பது அரிதான ஒன்று. அந்த நல்ல படமும் யாருக்காக பேசுகிறது? என்பதைப் பொருத்துத்தான் அந்தப் படத்தின் சிறப்பு அறியப்பட முடியும். அந்த வகையில் இது போன்றதொரு பின்புலத்தில் இரு காதலர்கள் எல்லா இழப்புகளிலும், ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு நிற்கின்ற உயர்த் தமிழ்க் காதலை வசந்தபாலன் வடித்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது!
ச.தமிழ்ச்செல்வன்(த.மு.எ.க.ச. மாநில செயலாளர்)
தமிழ் சினிமா வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த படங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிட முடியும். "அந்த நாள்', "பதினாறு வயதினிலே', "அழியாத கோலங்கள்', "வீடு', "அழகி' என அந்த வரிசையில் அந்தப் படங்களின் தோள் மீது ஏறி நின்று பேசும்படமாக வந்திருப்பது "அங்காடித் தெரு'. ஒரு தெருவைக் கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது. அதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் வந்து புழங்கும் ஒரு பரபரப்பான தெருவின் கதை. ஒரு செந்தில் ஆண்டவர் ஸ்டோர்ஸ் என்னும் பல்பொருள் அங்காடியில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் தொழிலாளிகளைப் பற்றிக் கதை சுழன்றாலும் அது அந்த ஒரு கடையைப் பற்றிய படமாக இல்லாமல் அந்தத் தெருவில் - தமிழகத்தில் - இந்தியாவில் - ஏன் உலகின் எந்த மூலையிலும் வெறும் சோற்றுக்கு வந்த பஞ்சத்தால் இடம்பெயர்ந்து எங்கெங்கோ அடிமை வாழ்வு வாழும் மனிதக் கூட்டத்தைப் பற்றிய படம் இது என்று சொல்லும்படியாக வந்துள்ளது. ஆகவே இது ஓர் உலக சினிமா என்கிற தகுதியைப் பெற்றுவிட்ட படம் என்பேன். அதனால் மட்டுமல்ல. உள்ளடகத்தால் - கதையால் மட்டுமல்ல. கலைத் தரத்தாலும் "அங்காடித் தெரு' உலக செவ்வியல் சினிமாக்களின் வரிசையில் இடம்பெறத் தகுதியானதாக அமைந்துவிட்டது. நான் இப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது முதன்முதலாக "பேட்டில்ஷிப் பொட்டெம்கின்' படத்தை "பைசைக்கிள் தீவ்ஸ்' படத்தை பார்த்தபோது அடைந்த அதே துயரத்தை, அதே மனக்கிளர்ச்சியை, அதே மன எழுச்சியை அடைந்தேன். தமிழ் சினிமாக்களில் மிக அபூர்வமாகவே இத்தகைய தருணங்கள் அமையும். ஒரு நொடியில் கடந்து சென்றாலும் நம் கவனத்தை ஈர்க்கும் பல காட்சிகளை நாம் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. துவக்கக் காட்சிகளில் நம் கண்முன்னே விரியும் ப்ளாட்ஃபார வாசிகளின் வாழ்க்கைச் சித்திரங்களின் பின் சுவரில் "கர்த்தர் ஒரு போதும் உன்னை கைவிட மாட்டார்' என்கிற வாசகம். பஸ் ஸ்டாப்பில் செல்ஃபோன் பேச்சுகள். கிராமத்தில் ""பரீட்சையைக் கண்டுபிடிச்சவன் நாசமாகப் போக'' என்று தோற்ற மாணவன் விடும் சாபம் எனப் பலவற்றை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருவில் ஒரே கேமரா கோணத்தில் ஒரே ஷாட்டில் வந்து வந்து போவது பிரமிப்பூட்டும் பதிவாகும். ஜனத்திரளை இப்படி நம் கண்முன் கொண்டு வந்த முதல் இந்திய சினிமா இதுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்த மேதைகள் முதல் படிக்க வாய்ப்புக் கிட்டாத பாமர மக்கள் வரை அனைவர் நெஞ்சையும் அறுக்கும் படமாக "அங்காடித் தெரு' அமைந்துள்ளது. நாம் வாழும் இதே நகரில் இதே தமிழகத்தில் நம் சக மனிதர்களாக, கடைகளில் ஊழியம் பார்க்கிறவர்களாக, காட்டு வெளிகளில் அமைந்த மில்களில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் அடைப்பட்டுக் கிடக்கும் பல்லாயிரம் பெண் பிள்ளைகளாக, ஐ.டி. துறையில் எவ்வித உரிமையும் அற்று அல்லலுறும் படித்த இளைய தலைமுறைகளாக எனப் பலரைப் பற்றியும் எண்ணிப்பார்க்க வைக்கிறது. "அங்காடித் தெரு' என்கிற மிகச் சிறந்த கலைப்படைப்பின் அடிப்படை லட்சணமே இதுதான். ஒன்றைச் சொல்வதன் மூலம் ரசிகனின் - வாசகனின் - உள்ளத்தில் ஓராயிரம் உணர்வுகளை, வாழ்வனுபவங்களை கிளப்பி விடும் வல்லமை கொண்டதாக இருப்பதே ஒரு ஆகச்சிறந்த கலைப்படைப்பின் பலம் ஆகும். "பேட்டில்ஷிப் பொடம்கின்' படத்தில் வரும் ஒடெஸ்ஸô படிக்கட்டு கல் காட்சியைப்பற்றி உலகப் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர் எரிக் ஹோப்ஸவாம் இது உலக வரலாற்றின் மிக முக்கியமான பக்கம் என்று குறிப்பிடுகிறார். அவர், உலக சினிமா வரலாற்றில் என்று குறிப்பிடாமல் உலக வரலாற்றில் என்று குறிப்பிட்டார். அதுபோல தமிழ்ச் சமூக வரலாற்றில் அழுத்தமான இடத்தைப் பிடித்துவிட்ட பல காட்சிகள் இப்படத்தில் உள்ளன. ஊழியர்கள் உணவருந்தும் காட்சி. அவர்கள் பிணங்களைப் போலக் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி, ""என் மாரைக் கசக்கினான் நான் பேசாம நின்னேன்'' என்று கனி சொல்லும் காட்சி, நீ யாரு? யாருன்னு? என் தங்கச்சி கேட்டாள்... நீ என்ன சொன்னே?... நான் ஒண்ணும் சொல்லலே... சிரிச்சேன்... என்று மகேஷிடம் கனி சொல்லும் காட்சி, வயதிற்கு வந்த கனியின் தங்கை நாய் அறையின் அடுத்த அறையில் படுத்துக் கிடக்கும் காட்சி எனப் பல காட்சிகள் மீண்டும் மீண்டும் நம் நினைவுகளில் வந்து குற்றவுணர்வு கொள்ள வைக்கின்றன. சொந்த சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டு நம் சிந்தை கலங்கி நிற்கிறோம். இவ்வளவு கொடுமையாகவா இருக்கும்? வசந்தபாலன் கொஞ்சம் ஓவராக எடுத்து விட்டார் என்று புறம்பேசி இந்த குற்றவுணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள நம்மில் பலர் முயற்சிக்கிறவர்களாகி நிற்கிறோம். அவ்வளவு அழுத்தமான தாக்கத்தை படம் நமக்குள் ஏற்படுத்தி விட்டதுதான் உண்மை. பாட்டும், டான்சும் இல்லாவிட்டால் இது என்ன டாகுமெண்டரி படமா? என்று தமிழ் சினிமா ரசிக மனம் கேட்டுவிடும் அபாயம் ஒரு கத்தி போல் நம் நல்ல இயக்குநர் ஒவ்வொரு தலைக்கு மேலும் தொங்குவதால் பாடல்களும் இப்படத்தில் உள்ளன. ஆனாலும் அவை நெருடல் இல்லாமல் மனதைப் பிழியும் துயரமாகவே அமைக்கப்பட்டுப் படத்திற்கு வலு சேர்க்கின்றன. பல்லாண்டு காலமாக அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள் பற்றி நம் நாட்டில் தொழிற்சங்க இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து பேசி வந்தாலும் அவையெல்லாம் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை இந்த ஒரு படம் ஏற்படுத்தி விட்டது. வணிகர் குழாம் இன்று பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை இப்படம் ஏற்படுத்தி விட்டது. அதுதான் ஒரு கலைப்படைப்பின் சக்தி!
ச.விஜயலட்சுமி(கவிஞர் - பெண்ணிய ஆர்வலர்)
பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற பதினான்கு வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில், முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு பத்து சதவிகிதம் கூட இல்லாத நிலையில், இளைய சக்திகளை சமூக ஈடுபாட்டிலிருந்து திசை திருப்பும் பொருட்டாக காட்சி ஊடகங்களில் பெண்கள் அரை நிர்வாணத்தோடு வளைய வருவதற்கு தாராள இட ஒதுக்கீடு எழுதா சட்டமாக இருக்கிறது. பெண்களைக் கவர்ச்சிக்காகப், பயன்படுத்துவது மட்டும் இவர்கள் நோக்கமன்று. வைக்கோல் அடைபட்ட கன்றை வைத்து இரக்கத்தையும், காமத்தையும் சுரக்க வைக்கும் தொழில் அரசாங்கத்தின் பரிபூரண சம்மதத்தோடு (சென்சார் போர்டு) நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பெண்களின் உடலை சந்தைப்படுத்தும் போக்கைக் கொண்ட திரைப்பட ஊடகத்தில் பெண்களுக்கான காட்சியமைப்பு ஆபாசத்தைத் தூண்டாதவகையில் பெண்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் "அங்காடித் தெரு' திரைப்படம் கவனத்திற்குரியது. வியாபார உத்திக்கு பயன்படும் மூலதனமாக பெண்களைக் காட்சிப்படுத்தாமல் டூ-பீஸ் உடையுடன் நடிகர்களோடு டூயட் பாடினால் போதும் நடிப்பு இரண்டாம் பட்சம் என்ற உத்தியை முன்னிறுத்தாமல் பெண்களின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தருகிறது "அங்காடித் தெரு'. கதாநாயகிக்கு பலவண்ண உடைகளை அணிவிக்காமல் பகலில் பணிபுரியும் இடத்திற்குரிய சீருடையும், அடித்தட்டு வர்க்கப் பெண்களின் பொதுவான மாற்றுத்துணியாக அணிகிற நைட்டியும் பிரதான உடைகளாகின்றன. கடைநிலை வர்க்கத்துப் பெண்களின் வாழ்க்கை முறையில் நிறைந்திருக்கிற வலியை சந்திக்கும் விதமாக தன்னம்பிக்கை உடையவர்களாக காட்டுகிறது. நபர்கள் மீதான ஈர்ப்பை மையப்படுத்தாமல் கதையம்சத்தோடு பாத்திரங்கள் இயைந்து போவதற்குரிய இடத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. பலவண்ண உடைகளை விற்பனை செய்யும் வண்ணமயமான இடத்தில் சாயம்போன கந்தல் துணிகளாக உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாகும் பெண்களை மிகைப்படுத்தாமல் கோட்டோவியமாக காட்டியிருக்கிறது. இந்த வறுமையில் பூக்கும் அழகிய காதலை, அது தரும் ஆறுதலை மெல்லிய நீர்வீழ்ச்சியாக்கி மனதெங்கும் வடிய விடுகிறது. நிலவுடமை சிந்தனையில் பெண்கள் நடத்தப்படும் முறைக்கும் முதலாளியத்தின் உறிஞ்சி சக்கையாய்த் துப்பும் உழைப்புச் சுரண்டலுக்குமிடையே அல்லல்படும் பெண்ணின் வாழ்வை நுட்பமாய்ப் பேசுகிறது. நின்றுகொண்டே பலமணி நேரம் பணியாற்றுதல், காதலின் பெயரால் நம்பிக்கை துரோகம் ஏற்படுகையில் உயிரை துச்சமெனக் கருதும் பெண், மாதவிலக்கின் ஆசாரத்திற்கு நாயைப்போல் ஒதுக்கப்படும் நிலையிலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமி, போதிய சத்துணவு இல்லா நிலையிலும் தன்னம்பிக்கையே சத்தாக இவர்களை இயக்குவது, பெண் பாலியல் தொழிலாளி பொதுப் புத்தியிலிருந்து விலகி நின்று ஏற்கின்ற பிள்ளைப்பேறு, காலற்ற நிலையில் வாழ்க்கை வேர்விட்டு துளிர்க்கும் கதாநாயகி கனியின் பாத்திரப்படைப்பு என பெண்களின் இயல்பான குணாம்சத்தை பதிவு செய்திருக்கிறது. பெண்களுக்கான முக்கியத்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடிய விடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப்படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக்கியிருக்கிறது அங்காடித் தெரு.
எஸ்.சுரேஷ்(வரைபட இன்ஜினியர் - பொறியியல் துறை)
இந்தப் படத்தை நண்பர்களோடு சேர்ந்து, தியேட்டரில்தான் பார்த்தேன். படம் ஆரம்பித்ததிலிருந்து, முடியுறவரைக்கும் எங்கேயுமே போராடிக்காம, ஒரே ஃப்ளோவிலேயே படம் சென்றது. படத்தில் மகேஷ், அஞ்சலி, பாண்டி என அனைவரின் நடிப்பும் பார்க்க யதார்த்தமாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது. குறிப்பாக, படத்தினுடைய இறுதிக் காட்சியில் அந்த அஞ்சலிப் பொண்ணு, ""வீட்டுக்கு பணம் அனுப்பிச்சிட்டியா?'' கேட்கறதும், அதற்கு மகேஷ் சொல்லும் பதிலும் எங்கள் டீமிலிருந்த எல்லோரையுமே கவர்ந்தது. வழக்கமாக நாங்கள் பத்து படம் பார்த்தோம்னா அதில் ஒரு படத்தைப் பற்றி இரண்டு நாள் பேசறதே பெரிய விஷயம். அந்த வகையில் இந்தப் படம் எங்களை ஒரு வாரத்திற்கும் மேலாக பேச வைத்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லணும்னா "அங்காடித் தெரு' எங்களோட வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கனமான பாதிப்பை உண்டாக்கிய யதார்த்தமான படம்னு சொல்லுவேன்!
""ரசிகனுக்கு மிக நெருக்கமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, சரியான திரைக்கதையமைப்புடன் சொன்னால், நாங்கள் படைப்பாளியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடத் தயங்குவதில்லை'' என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ரசிகர்களுக்கு தமிழ்த் திரையுலகம் தலை வணங்கலாம்!

Comments

Popular Posts