தாறுமாறாக திசை மாறுகிறதா தமிழ் சினிமா?

"லக நாடுகள் எல்லாம் வரைபடத்தில் ஆனால் எனது தமிழ்நாடு மட்டும் திரைப்படத்தில்'' என்று எழுதினான் கவிஞர் ஒருவர். அந்த அளவிற்கு சினிமாவோடு இரண்டறக் கலந்துவிட்ட தமிழகம், இப்போது "வித்தியாசமான' நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. என்ன நெருக்கடி என்கிறீர்களா? வெள்ளித்திரை சார்ந்தவர்களின் மத்தியில் வெடிக்கும் குமுறல்களை இதோ உங்கள் பார்வைக்கே தருகிறோம். தமிழ் சினிமாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிறைய புதுமுகங்களை மையமாக வைத்து படங்களைத் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு உதவத்தான் விநியோகஸ்தர்கள் தயாரில்லை. தியேட்டர் உரிமையாளர்களும் ஒத்துழைப்புக் கொடுக்க இயலாத சூழ்நிலையில் உள்ளனர். "படங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகின்றன' என்கிற உப்புச் சப்பில்லாத காரணங்களையெல்லாம் காட்டி அவர்கள் மறுப்பதுதான் பெரும்பாலான சிறு தயாரிப்பாளர்களின் குமுறலாக இருக்கிறது. இதுமட்டுமின்றி தரமான, சமூக விழிப்புணர்வு தரக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள், இத்தகைய நெருக்கடிகளால் சினிமா எடுக்கும் எண்ணத்தையே மூட்டை கட்டி விடுகின்றனர். இதனால் தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகள் சப்தமில்லாமல் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சில சிறிய வகைத் தயாரிப்புப் படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவும் தவறவில்லை. "வெண்ணிலா கபடிக் குழு', "பசங்க', "நாடோடிகள்', "களவாணி' போன்ற படங்களை இந்த வகைக்கு உதாரணமாகச் சொல்லலாம். தமிழ் சினிமா ரசிகர்கள், திரைப்படங்கள் குறித்து போஸ்டரிலும், பத்திரிகையிலும், விளம்பரப் படங்களிலும் பார்த்துதான் அறிந்து கொள்கிறார்கள். என்றாலும், ஒரு படத்திற்குப் போகலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிப்பது இவை எல்லாவற்றையும் விட "மெüத் டாக்' என்று சொல்லப்படும் வாய் வழிச் செய்திதான்! "இந்தப் படங்கள் வெற்றி' என்பது அப்படங்களின் கதை சொல்லல் முறை, சிறந்த கதைக் கருவைக் கொண்டிருத்தல்,விரிவாக விளம்பரப்படுத்துதல் போன்றவற்றில்தான் அடங்கியிருக்கின்றன என்பதை அறியாமல் பல புதிய தயாரிப்பாளர்கள் படங்களை எடுத்துக் கையை சுட்டுக் கொள்கின்றனர். பொதுவாக ஒரு படம் பெரிய வெற்றியைப் பெற்றது என்றால் அதே மாதிரியான கதைக் களத்துடனோ அல்லது சிறிது மாற்றத்திற்கு உட்படுத்தியோதான் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதில் புதிதாக எந்த விஷயமும் இல்லாததால் பெரும்பாலான படங்கள் வந்த வேகத்திலேயே பெட்டிக்குத் திரும்பி விடுகின்றன. அந்த வகையில் சிறிய வகைப் படங்களைத் தயாரிக்க முன் வரும் தயாரிப்பாளர்களில் பலர் படு தோல்வியையே சந்திக்கிறார்கள். இந்த வருடம் (ஆகஸ்டு மாதம் வரை) மட்டும் இதுவரை நூற்று ஐம்பது தமிழ்ப் படங்களுக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்று கணக்கெடுத்தால் அவை வெறும் இருபது படங்களுக்குள்ளாகவே முடிந்து போய்விடும். இந்த இருபது படங்களுக்குத்தான் தியேட்டர்கள் எளிதாக கிடைக்கின்றன. இந்த இருபது படங்களில் எத்தனைப் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது ரசிகர்களுக்கே தெரியுமே! இந்த இருபது படங்களின் வெளியீட்டிற்குப் பிறகுதான் மற்ற படங்கள் தியேட்டரை நோக்கி வர முடிந்தது; வர முடியும் என்ற நிலையும் இருக்கிறது. திரைத்துறையில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் போதிய ஊதியம் அவர்களுடைய வேலைக்கேற்ப உடனடியாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், புதிய தயாரிப்பாளர்களின் நிலைமைதான் படு மோசமாக இருக்கிறது. "தொடர்ந்து இந்த நிலைமை நீடித்தால் என்னவாகும்? இந்த நிலைமை மாற என்ன செய்ய வேண்டும்?' என்பது குறித்து திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் வி.சி.குகநாதனிடம் பேசினோம்... ""தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகின்றன என்பது மட்டும் ஆரோக்கியமான விஷயமாக இருக்க முடியாது. அப்படங்கள் வசூல் ரீதியாகவும் ஜெயித்தால்தான் நல்லதென்று எடுத்துக்கொள்ள முடியும். கட்டை விரல் மாதிரி சிறு விரலும் வீங்கினால் அது வியாதிதானே? ஆகவே, சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள், கதை விஷயத்தில் தீவிரக் கவனம் செலுத்துவது நல்லது. நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அக்கதையை மாதக் கணக்கில் அலசி, ஆராய்ந்து திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்தால்தான் மோசமான தோல்விகளை அவர்கள் தவிர்க்க முடியும்'' என்றார். ""எல்லாத் தொழிலுக்குமே மறுசீரமைப்பு என்று ஒன்று இருக்கிறது. நம்ம நாட்டுக்கு ஐந்தாண்டு திட்டங்கள் போட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அடுத்து என்ன பண்ணலாம்னு நினைக்கிற மாதிரி, சினிமாவுக்கு என்றும் சில திட்டங்கள் போடணும். அப்போதுதான் இந்தத் துறை நசுங்காமல் இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ஒரு காலத்தில் அரசு வானொலி நிலையங்கள் மட்டும்தான் இருந்தன. அதன்மூலம் பாடல்களுக்கு ஒரு ராயல்டி கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது தனியார் வானொலி மட்டுமே இருபத்தைந்திற்கும் மேலாக இருக்கின்றன. அவையெல்லாமே பாடலை நம்பி மட்டுமே உள்ளன. அப்படிப் பாடலை நம்பியுள்ள எஃப்.எம். சேனல்கள் பாடல் இடம்பெற்ற படத்தைப் பெரும்பாலும் சொல்வதேயில்லை. ஏன் என்று கேட்டால், "கமர்சியல்...' என்கிறார்கள். அதேசமயத்தில் பத்து செகண்ட்ஸ்க்கு நாம் ஒரு விளம்பரம் கொடுத்தால் அதுக்குப் பெரிய தொகையைக் கேட்கிறார்கள். நம்முடைய நான்கு நிமிடப் பாடல்களை மட்டும் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாம். ஆனால் நமக்கு எந்தச் சலுகையும் காட்ட மாட்டார்களாம். என்ன கொடுமை ஸôர் இது? இதற்கெல்லாம் தயாரிப்பாளர்களாகிய நாங்களும் ஒரு காரணம்தான்! பப்ளிசிட்டி என்கிற பெயரில் எல்லாத்தையும் இலவசமாகவே கொடுத்துட்டு, படம் ஓடவில்லை...ஓடவில்லையென்றால் என்ன செய்ய முடியும்? முதலில் நம்ம படத்தோட பாடல்களைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு எஃப்.எம். சேனல்கள் முறைப்படி ரைட்ஸ் வாங்க வேண்டும் என்று முடிவெடுங்கள். இப்போது அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு தொகை வந்து சேரும் இல்லையா? அதேபோல இணையதளங்களில் நமது படத்தை டவுன்லோடு செய்கிறார்கள். அதற்கு ஒரு சட்டம் கொண்டு வந்து அதை முறைப்படுத்தலாம். அதன் மூலமும் நமக்கு ஒரு தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இப்போதெல்லாம் சில ஆடியோ வெளியீட்டு நிறுவனங்கள் வாய் கூசாமல் "ஆடியோ சி.டி.க்கள் விற்பதேயில்லை...' என்று பொய் சொல்கின்றன. ஆனால், பெரும்பாலான கார்களில் நிறைய பேர் சி.டி.க்களை வாங்கிப் பாட்டுக் கேட்டுக்கொண்டேதான் போகிறார்கள். இப்போதெல்லாம் செல்ஃபோன் எல்லோரிடமும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. சாதாரண படத்தின் பாடல் ரிங்டோன் மூலம்கூட செல்ஃபோன் நிறுவனங்கள் பல லட்சம் சம்பாதிக்கின்றன. அதையும் ஒழுங்குபடுத்தினால் தயாரிப்பாளர்களுக்கு இதன் மூலமும் வருவாய் கிடைக்க வழி இருக்கிறது'' என்று விவரமாகவே வெளுத்துக் கட்டினார் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு பிரபல தயாரிப்பாளர். ""உலகளவில் மற்ற மொழிகளை விட தமிழகத்தில் மட்டும்தான் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. நகைச்சுவை, பாடல், படங்கள் என்று எல்லாவற்றிக்கும் தனித்தனி சேனல்கள் இருக்கின்றன. அதனால் ஒருமுறை ஒளிபரப்ப மட்டுமே சாட்டிலைட் உரிமை கொடுக்கப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு பத்து வருடங்கள், தொண்ணூற்று ஒன்பது வருடங்கள் என்று கொடுக்கக்கூடாது. இதனால் உரிமையை ஒரு தொலைக்காட்சிக்கு மட்டுமின்றி ஏனைய தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்து, தயாரிப்பாளர் வருமானம் பெறுவதற்கு வழி இருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தங்களது இழப்பிலிருந்து பெருமளவு தப்பிக்கலாம். தமிழ்ப் படங்கள், உலக நாடுகள் சிலவற்றிலும் திரையிடப்படுகின்றன. அப்படி வெளிநாட்டிற்கு விற்கப்படும் உரிமையை மொத்தமாக ஒருவரிடம் மட்டுமே கொடுக்காமல் பிரித்து ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுத்தால் அதிலிருந்தும் வருமானத்தைப் பார்க்கலாம்'' என்கின்றனர் கோலிவுட்டைச் சேர்ந்த சில மூத்த தயாரிப்பாளர்கள். இந்த நிலைமையில் மாற்றம் வருவதற்கு வேறு ஏதேனும் வழியிருக்கிறதா என்று சில திரைத்துறை ஆய்வாளர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, ""தமிழக அரசு நினைத்தால் இந்த நிலைமை மாற வழி இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் அரசு இடங்கள் பல பயன்படுத்தப்படாமல் காலியாகத்தான் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் அரசே தன் சொந்தச் செலவில் தியேட்டர்களைக் கட்டலாம். தமிழகத்தில் குறைந்தது மாவட்டங்கள் தோறும் ஆறு திரையரங்குகளும், தலை நகரத்தில் பத்து திரையரங்குகளும், மாவட்டத் தலைநகரங்களில் ஐந்து திரையரங்களும் தமிழக அரசு கட்டி, அதற்கான உரிய வாடகைகளைப் பெற்றுக்கொண்டு, புதிய தயாரிப்பாளர்களுக்கு உதவுமேயானால், குறைந்த கட்டணத்தில் திரைப்படங்கள் வெளியாகும். ரசிகப் பெருமக்களும் திரையரங்குகளை நோக்கி வருவார்கள். தயாரிப்பாளர்களும் தங்களுடைய முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்ட மனநிலையில் நிம்மதியாக இருப்பார்கள். ஆகவே, இந்த விஷயத்தை அரசு தாமதப்படுத்தாமல் நடவடிக்கை எடுத்தால் தாறுமாறாகப் போய்க் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்றுவதற்கு வழி இருக்கிறது. தமிழ்த் திரைப்படத் துறைக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்திருப்பதோடு, திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசு, தயாரிப்பாளர்களின் வாழ்க்கையிலும் வசந்தத்தை ஏற்படுத்த இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, தயாரிப்பாளர்களை அரசு காப்பாற்ற வேண்டும். சமூகத்தை நல்ல முறையில் வழி நடத்துவதற்கான படங்கள் வருவதற்கும், தயாரிப்பாளர்கள் நலம் பெறுவதற்கும் தமிழக அரசு முன்வந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது'' என்கின்றனர். ""ஆனால், பிரச்சினையின் விதையே இங்குதான் இருக்கிறது. எந்த அரசு திரைத்துறையின் வளர்ச்சி குறித்து யோசிக்க வேண்டுமோ அத்தகைய அரசேதான் திரைத்துறை வளர்ச்சி என்ற பெயரில் சில நடவடிக்கைகளை மட்டும் எடுத்துவிட்டு, தீர்க்க வேண்டிய பெரும் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் விட்டுள்ளது. உண்மையில் தயாரிப்பாளர்களின் பிரச்சினை அரசின் காதுகளுக்கோ, கவனத்திற்கோ செல்லாமல் இல்லை. தெரிந்தே அரசு இத்தகைய விஷயங்களைக் கண்டு கொள்ளாமலிருக்கிறதோ என்ற கவலை ஏற்படுகிறது. தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமான "தியேட்டர் ஒதுக்கீட்டின்' பின்னணியில் இருப்பவர்கள் "பெரிய இடத்தை' சேர்ந்தவர்கள். இவர்களுடைய தயாரிப்பு நிறுவனங்கள்தான் தற்போது ஒரு ஆக்டோபஸ் போல திரைத்துறையை ஆக்கிரமித்து வருகின்றன. இவர்களின் ஏகபோக நுழைவால்தான் தற்போது திரைத்துறை விழி பிதுங்கி நிற்கிறது. ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளுக்காகப் படங்களை வாங்கி, வெளியிட்டு வந்த இவர்கள், நாளடைவில் திரைப்படங்களின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கி வெளியிடும் வசதியைப் பெற்றுள்ளனர். திரைப்படத் துறையில் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகப் படங்களைத் தயாரித்து வந்த பிரபல நிறுவனம் ஒன்று, தான் எடுத்த படத்தை இவர்களிடம் விற்றது. இது கோலிவுட்டை மட்டுமின்றி மற்ற மொழித் தயாரிப்பாளர்களையும் மிரள வைத்தது. இதுதான் அவர்களுடைய உட்சபட்ச வெற்றியாகும். இந்த நிறுவனங்கள் தங்கள் கையில் மீடியாவை வைத்திருப்பதால் இவர்களின் தயாரிப்பில் வெளிவரும், அல்லது வாங்கி வெளியிடும் படங்களை (சில நேரங்களில் தரமில்லாத படங்களாக இருந்தாலும் கூட!) தொடர் விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று வியாபாரமாக்கி விடுகின்றன. இதனால் சில மோசமான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்றுள்ளன. தமிழகத்தின் ஏறக்குறைய 1400 தியேட்டர்களில் 90 சதவிகிதம் இவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்றே சொல்லிவிடலாம். ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அல்லது தினசரி வாடகை முறையிலோ இவர்கள் அத்தகைய தியேட்டர்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. "பெரிய இடத்தை' சேர்ந்த இவர்களின் வரவால் தமிழ்த் திரைத்துறைக்கு சில பிரச்சினைகள் இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் நடந்தேறத்தான் செய்கின்றன. புதிய சிந்தனைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து, புதிய இயக்குநர்களை ஊக்குவித்தது இவர்களுடைய வரவு. அதுமட்டுமின்றி இந்த நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்கும் இயக்குநர்கள் லொக்கேஷன் பிரச்சினை இல்லாமலும், பட்ஜெட் பிரச்சினை இல்லாமலும் தங்களது கற்பனையாற்றலை முழுவதுமாகச் செயல்படுத்தவும் முடியும். "பெரிய இடம்' சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவு இத்தகைய நிறுவனங்களுக்கு இருப்பதால், இவர்கள் மூலமாக உருவாகும் படங்கள் குறித்த சர்ச்சையை எழுப்பவோ, தியேட்டரில் கல்லெறியவோ, இயக்குநரை மிரட்டவோ எந்தத் தீய சக்திகளாலும் முடியாது. இதனால் திரைத்துறையில் பல புதிய நல்ல விஷயங்கள் வருவதற்கும் இவர்களது வருகை வழிகோலியுள்ளது. அத்துடன் நிறைய திரைப்படங்கள் உருவாவதால் அது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கும், புதுமுகங்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் புதுமுக நடிக, நடிகையரின் வரவால் முன்னணியில் இருக்கும் பிரபல நடிக, நடிகையரின் வாய்ப்புகளும் பறிபோகின்றன. இதில் குறிப்பாக பாதிக்கப்பட்டிருப்பது அசின், நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள்தான்! இவர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது'' என்கின்றனர் நடுநிலையான கலை விமர்சகர்கள். தமிழ்த் திரைத்துறை தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறியபடிதான் வந்துள்ளது. அந்தவகையில் தற்போதைய சூழலில் இருந்தும் அது தன்னை தற்காத்துக் கொள்ளும். பொதுவாக ரசிகர்கள் திரைப்படத்தின் பின்னணி விவகாரங்கள் குறித்து பெரும்பாலும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நல்ல கதையம்சம் அந்தப் படத்தில் இருக்க வேண்டும். அதுதான் அவர்கள் எப்போதும் எதிர்பார்ப்பது. பெரும்பாலான புதிய தயாரிப்பாளர்கள் பணத்திற்கும், சினிமாவினால் கிடைக்கும் வேறு சில சலுகைகளுக்காகவும்தான் இந்தத் துறைக்கு வருகின்றனர். எந்தத் துறையில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்றாலும், அந்தத் துறை பற்றிய தீர்க்கமான அறிவும், அனுபவமும் தேவை. அது இல்லாமல் வெறும் ஆசையை மட்டுமே வைத்துக்கொண்டு வந்தால் அவர்கள் மண்ணைக் கவ்வுவதைத் தவிர வேறு வழியில்லை. சின்ன பேனர் அல்லது பெரிய பேனர் என்று பிரித்துப் பார்த்தாலும் கடின உழைப்பும், போராட்டமும் எல்லோருக்கும் பொதுவானதுதான்! திரைத்துறையில் தொடர்ந்து திறமை மட்டுமேதான் வெற்றிக் கனியைப் பறிக்க உதவியிருக்கிறது. அந்த வெற்றிக்கனியைப் யார் வேண்டுமானாலும் ரசிகர்களின் ஒத்துழைப்போடு பெறலாம். அதற்கு சமீபத்திய உதாரணங்களாக "சுப்பிரமணியபுரம்', "பசங்க', "களவாணி' போன்ற திரைப்படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். மேற்கண்ட எல்லாப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு இத்தகைய வகையான படங்கள் வெற்றி வாகை சூட முடியுமென்றால், "பெரிய இடத்தின் தாக்கங்களை' மீறி ஜெயிப்பதும் சாத்தியம்தானே? அதனால், தற்போதைய தமிழ் சினிமா, தாறுமாறாக திசை திரும்புவது போலத் தெரிந்தாலும், "கடின உழைப்பு' என்ற உளி, மலைகளையும் தகர்த்தெறியும் என்பதே உண்மை!

Comments

Popular Posts