""என்னவளே அடி என்னவளே'' - ராகம் திசை மாறிய பின்னணி!

"மனைவிக்குக் கொடுக்கிற முத்தம் உணர்ச்சி இல்லாத ஐக்கியம்; நடிகைக்குக் கொடுக்கிற முத்தம் ஐக்கியம் இல்லாத உணர்ச்சி'' - திரைக்கதை மன்னர் பாக்யராஜ் ஒரு கேள்விக்கு அளித்த முத்தாய்ப்பான பதில் இது. ஆனால் நடிகையின் சிநேகத்தால் மனைவியின் தொடர்பையே துண்டிக்கும் அதிர்ச்சிகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. லேட்டஸ்ட்டாக தென்றாய் நடந்துகொண்டிருந்த நடனப் புயல் பிரபுதேவாவின் வாழ்க்கையில் நயன்தாரா என்னும் சூறாவளி மையம் கொள்ள, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முதல் மயக்கம்! திரைத்துறையில் நடன இயக்குநராக கால்பதித்து வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் தனது குழுவில் ஆடிக்கொண்டிருந்த ரமலத்தின் மீது காதல் ஏற்பட்டு அவரையே பல பிரச்சினைகளுக்கு இடையே மனைவியாக்கிக் கொண்டார் பிரபுதேவா. ரமலத்தும் தன் காதல் கணவருக்காக இந்துவாக மதம் மாறி, லதா எனப் பெயர் மாற்றிக் கொண்டார். இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா - ரமலத் ஜோடி, தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் முத்தான மூன்று மகன்களைப் (பசவராஜு, ரிஷி ராகவேந்திரா, ஆதித் தேவா) பெற்றெடுத்தனர். தன் குடும்பத்தின் மீதும், நடனத்தின் மீதும் அளவறியா காதலுடன் செயல்பட்டு வந்த பிரபுதேவாவின் வளர்ச்சி திரைத்துறையில் படிப்படியாக வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது.
துக்கத்தில் தோன்றிய காதல்!
நடன இயக்குநராக இருந்த பிரபுதேவா பிறகு, திரைப்பட நாயகனாக மாறி அதிலும் வெற்றி வாகை சூடினார். அதன் தொடர்ச்சியாக திரைப்பட இயக்குநராகவும் சாதித்தார். இந்த சூழ்நிலையில்தான் பிரபுதேவாவின் இயக்கத்தில், தமிழில் அவரது இரண்டாவது படமாக வெளிவந்தது "வில்லு'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இப்படத்தின் மூலம் நயன்தாராவின் அறிமுகம் கிடைத்தது பிரபுதேவாவிற்கு! படப்பிடிப்பு இடைவேளைகளில் மனம் விட்டுப் பேசியவர்களுக்கிடையே ரசனை ஒத்துப் போனதால் அவர்களுக்குள் நட்பு முளைவிடத் தொடங்கியது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது பிரபுதேவாவின் மூத்த மகனான பசவராஜு புற்றுநோய் பாதிப்பால் அகால மரணமடைந்தார். இது பிரபுதேவாவை மிகுந்த மனக்கலக்கத்தில் ஆழ்த்தியது. துக்கம் விசாரிக்க வந்த நயன்தாரா, பிரபுதேவாவின் மனதைத் தேற்றி ஆறுதல் வார்த்தைகள் கூற, துக்கத்தில் வீழ்ந்து கிடந்த பிரபுதேவா பிறகு நயனின் காதலில் வீழ்ந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களது நெருக்கம் கோடம்பாக்கத்தில் சர்ச்சையை உண்டு பண்ண, மறைமுகமாகவும், நேரடியாகவும் தன்னுடைய கணவருடன் சண்டையில் ஈடுபட்டு வந்தார் ரமலத். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பாகிப்போன பிரபுதேவா வீட்டிற்கு வருவதையே நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார். இந்தப் பிரச்சினை மீடியாவின் மூலமாக வெளிச்சத்திற்கு வர பிரபுதேவாவோ, நயனோ இது குறித்து அலட்டிக் கொள்ளாமலேயே இருவரும் தனியே வாழ்ந்து வந்தனர்.
ஊடல்!
தமிழ் சினிமாவில் பிரச்சினைகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருந்ததால் பிரபுதேவா - நயன்தாரா பிரச்சினை சற்று மேக மூட்டமாகவே இருந்து வந்தது. அவர்களுக்குள் ஊடல் உறவாடிக் கொண்டிருந்தது பலருக்கும் தெரியாமல் இருந்தது. நயன்தாராவை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஆசை நாயகியாகவே வைத்துக் கொள்ள விரும்பிய பிரபுதேவாவின் மீது உச்சபட்ச கோபத்தில் இருந்த நயன்தாரா, நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தன்னுடைய உடல் எடையைக் குறைத்து தான் நடிக்கும் பாத்திரத்தில் ஈடுபாடு காட்ட, சரிந்து போன அவரது மார்க்கெட் மறுபடியும் நிமிரத் தொடங்கியது. இவர்களுக்கு இடையேயான ஊடலை அறிந்த நயன்தாராவின் தோழி ஒருவர் இவர்களை மறுபடியும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
பிரிவும், நெருக்கமும்!
தெலுங்கில் முக்கிய திரைப்பிரபலம் நடத்தும் பத்திரிகையில் பணிபுரிபவர்தான் நயன்தாராவின் இந்தத் தோழி. அந்தப் பத்திரிகையில் வருடந்தோறும் சிறந்த சினிமா சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து கெüரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வு பட்டியலில் நயன் - பிரபுதேவாவின் பெயரை முன்மொழிய அவர்கள் விருதுக்குத் தேர்வானார்கள். இதன்மூலம் ஊடலில் இருந்த ஜோடியை சேர்த்து வைத்தார் அந்தத் தோழி என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். இவர்களின் காதலை முதன் முதலாக இணையத்தில் வெளியிட்டவரும் இந்தத் தோழிதான் என்று கூறப்படுகிறது. இந்தத் தோழியின் முயற்சியால்தான், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபுதேவாவும், நயனும் ஒருசேர வந்து "சிறந்த தம்பதி விருதை'ப் பெற்றுக் கொண்டார்களாம். அதன்பிறகு நடந்த கொண்டாட்டத்தில் இருவரது ஊடலும் ஒரு முடிவுக்கு வந்து நெருக்கமாகியிருக்கின்றனர். இந்த நெருக்கம் அந்த வாரமே மீடியாவில் பலவாறாக அலசப்பட்டது. லதா என்கிற ரமலத்தும் இந்த நெருக்கத்தை அறிந்து மேலும் கலக்கமடைந்தார்.
லண்டனில் புதிய வாழ்க்கை!
நயனின் நெருக்கத்தைப் பற்றி நெருங்கிய வட்டாரங்களும், பத்திரிகைகளும் ரமலத்தைக் கேள்விகள் கேட்டுத் துளைக்க, "விரைவில் நயனுடன் டும் டும் டும்' என ஒரு இணையதளத்துக்கு பேட்டியளித்தார் பிரபுதேவா! நயனை சமாதானப் படுத்துவதற்காகத்தான் இந்தப் பேட்டி எனவும் ஒரு பேச்சு அடிபட்டது. அதுமட்டுமின்றி லண்டனில் பிரபுதேவாவும் நயன்தாராவும் செட்டில் ஆவதற்காக தனியே வீடு பார்த்து உள்ளதாகவும், அங்கே நடனப்பள்ளி ஒன்றைத் தொடங்கி அதில் நயனை பொறுப்பேற்க வைத்து, தங்களது தாம்பத்ய வாழ்க்கையைத் தொடங்க பிரபுதேவா திட்டமிட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் கசிந்து கொண்டிருந்தது.
மனு தாக்கலும் எதிர்வினையும்!
பிரபுதேவாவின் ஸ்டேட்மெண்டும், லண்டன் திட்டமும் ரமலத்தை திக்குமுக்காடச் செய்து விட்டன. இனியும் பொறுமையாக இருப்பது தனக்கு ஆபத்து என்றெண்ணியவர் நீதிமன்றப் படியேறி, ""எனது கணவரோடு சட்டத்திற்குப் புறம்பான உறவு வைத்திருக்கிறார் நயன்தாரா. அவரிடமிருந்து எனது கணவரை மீட்டுத் தாருங்கள்'' என்று மனுத்தாக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் குடும்பச் செலவுகளுக்கு பிரபுதேவா பண உதவி செய்வதில்லை என்றும் புகார் அளித்தார் ரமலத். மேலும் சிறந்த ஜோடியாக தேர்வு செய்யப்பட்டு, ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்றுக் கொண்டதையும் கண்டித்தவர், இதனால் எனது குடும்பம் பாதிக்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களிடத்தில் கூறி மனமுடைந்து அழுதார். இந்த செய்தி தமிழ்நாட்டில் சில பெண்கள் அமைப்புகளிடையே ரமலத்தின் மீது பரிதாபத்தைத் தோற்றுவித்தது. இதன் காரணமாக அந்த அமைப்பினர் கடந்த வாரம் நயன்தாராவிற்கு எதிரான வாசகங்களை ஏந்தியும், அவரது உருவப் படத்திற்கு தீ வைத்து கொளுத்தியும் தங்களது எதிர்ப்புணர்வைக் காட்டியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் நயன்தாரா வேறு எந்த நிகழ்ச்சியில் பிரபுதேவாவோடு கலந்து கொண்டாலும் அங்கே கறுப்புக் கொடி ஏந்திப் போராடப் போவதாகவும் இந்த அமைப்பினர் செய்தி வெளியிட்டுள்ளனர். இதன் விளைவாக தற்போது தீவிர நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள் பிரபுதேவாவும், நயன்தாராவும்!
நடனப்புயலால் வந்த வினை!
இதற்கிடையே தெலுங்கில் பிரபல நடிகர் ஒருவருடன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்த நயன்தாரா, திடீரென்று அப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கவே தெலுங்குப் படவுலகிலும் அவருக்கு எதிர்ப்புகள் தலைக்காட்டத் துவங்கியிருக்கின்றன. "ஸ்ரீராம ஜெயம்' என்ற தெலுங்குப் படத்தில் நயன்தாரா "சீதை' வேடத்தில் நடிப்பதற்கு தேர்வு ஆகியிருப்பதை அறிந்த தெலுங்குப் பட உலகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் அவர் சீதையாக நடிப்பதற்குக் கண்டனம் தெரிவித்ததால்தான் நயன்தாரா அப்படத்தைத் தவிர்த்துவிட்டார் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்த அமைப்பினரின் கண்டனத்திற்கு நயன்தாராவின் மீதுள்ள தவறான இமேஜே காரணம் என்கின்றனர் தெலுங்குப் படவுலகத்தை நன்கறிந்த சில கோலிவுட் பிரபலங்கள். அதோடு நயன்தாரா பிரச்சினை முடிந்தபாடியில்லையாம். கோலிவுட்டில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மேலும் சில படங்களில் அவரை நாயகியாக நடிக்க வைக்க நயன்தாராவின் மேனேஜரை தொடர்பு கொண்டுள்ளனர். வழக்கம்போல் கால்ஷீட்டிற்காக மேனேஜர் நயனைத் தொடர்பு கொண்டு பேச, நயனோ தன்னுடைய கால்ஷீட் யாருக்கும் தற்போது இல்லை என்று கறாராகப் பேசியிருக்கிறார். ""உங்கள் குடும்பப் பிரச்சினையால் சினிமாவை கை விட்டுவிடாதீர்கள்...'' என்று அவரது மேனேஜர் ஆலோசனை சொல்ல, ""இனி யாருடைய ஆலோசனையும் எனக்கு அவசியமில்லை...'' என்று கடுமை காட்டிய நயன்தாராவை விட்டு தற்போது அவருடைய மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆகிய இருவரும் விலகியுள்ளனர். இதனால் நயனுடைய திரைத்துறை வாழ்க்கையும் தள்ளாட்டத்தில் நிற்கிறது!
சட்டம் என்ன செய்யும்?
இந்து திருமணச் சட்டப்படி கணவன் மனைவி சேர்ந்து வாழ உரிமை கோர இடமளிக்கிறது. அதனால் ரமலத் தன்னுடைய கணவரை மீட்டுத் தருமாறு வழக்கு தொடுத்துள்ளது சட்டப்படி நியாயமாகும். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது அவருடைய சம்மதமில்லாமல் இரண்டாவதாக திருமணம் செய்ய பிரபுதேவா முடிவெடுத்திருப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். விவாகரத்து பெறாமல் தனது திருமணம் குறித்து பிரபுதேவா அறிவித்திருப்பது அவருக்கு மேலும் பல சட்ட சிக்கல்களையே உருவாக்கும். அதுமட்டுமின்றி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே "சிறந்த தம்பதியர் விருதை' பிரபுதேவா - நயன் ஜோடி பெற்றிருப்பது கிரிமினல் குற்றமாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரமலத் மேலும் ஒரு மனுத்தாக்கலை செய்திருக்கிறார். அதில் "பிரபுதேவாவும் நயன்தாராவும் இணைந்து பத்திரிகைகளுக்கு பேட்டியோ, புகைப்படமோ கொடுக்கக் கூடாது' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கு வருகிற நவம்பர் மாதம் இறுதியில் விசாரணைக்கு வருகிறது. திருமண வாழ்க்கையென்பது இரண்டு மனங்களின் கூடலோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள் திருமணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. சமூகம் தொடர்ந்து தழைத்து வருவதற்குப் பின்னால் திருமணம் என்கிற அமைப்பின் பணி முக்கியமானது. சொந்த பந்தங்களின், தனக்கு வேண்டியவர்களின் ஆசீர்வாதங்களுடன் திருமண வாழ்க்கையில் நுழையும் தம்பதியினருக்கே இச்சமூகத்தில் மிகுந்த மரியாதையும், பாதுகாப்பும் கிடைக்கப் பெறுகிறது. இருவரில் யார் விலகிச் செல்ல நேர்ந்தாலும், விலகிச் சென்றாலும் அவர்களை தட்டிக் கேட்க உற்றார்கள் மட்டுமல்ல; சமூகமும் சேர்ந்து நிற்கும். உறவுகளையும், சமூகத்தையும் பகைத்துக்கொண்டு ஏற்கும் இல்லறம் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை என்பதற்கு சினிமாவில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இதைப் புரிந்து கொள்ளுமா இந்த ஜோடி? காத்திருப்போம்!

Comments

Popular Posts