திரை இலக்கியம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா இலக்கியவாதிகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணம் இது. மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், லோகிததாஸ் போன்ற சிறந்த கதை சொல்லிகளால் அங்குள்ள படங்கள் மேன்மையுற்றது. தமிழகத்திலும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என்று இலக்கியவாதிகளால் திரைத்துறை தன்னை பிணைத்துக்கொண்டு கவனிக்கத்தக்க படங்களை வெளியிட்டது. என்ன காரணங்களாலோ தொடர்ச்சியாக தமிழ் சினிமா இலக்கியத்தை கொண்டாட இடையில் மறந்துபோனது. ஆனால், தமிழ் இலக்கிய சூழலில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டேயிருந்தன. தொடர்ச்சியான இலக்கிய சந்திப்புகள் அதன்மூலம் பரவலான வாசகர் வட்டங்கள் மற்றும் ஆண்டுதோறும் புத்தகக் காட்சியினால் ஏற்பட்ட தாக்கங்கள் என்று நவீன இலக்கியம் தன்னை ஒருபுறம் மேம்படுத்திக்கொண்டது. விரல்விட்டு எண்ணும் அளவிலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்த இலக்கியவாதிகளின் எண்ணிக்கை இந்த தாக்கத்தினால் அதிகரிக்கத் தொடங்கியது. வெவ்வேறு ரசனைகள், எழுத்து முறைகள் கவனம் பெறத் தொடங்கின. தொடர்ந்து சினிமாவையும், இலக்கியத்தையும் நேசிக்கும் உன்னதமான உதவி இயக்குநர்கள், இயக்குநர் அவதாரம் எடுத்தபோது தாங்கள் படித்து, சிலாகித்த இலக்கியவாதிகளை தங்கள் படங்களில் பயன்படுத்திக்கொள்ள தொடங்கினர். கமர்ஷியல் ரீதியான வெற்றியும் அதன் மூலம் சாத்தியமானது. அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவிலும் இலக்கியவாதிகளின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி எஸ்.ராமகிருஷ்ணன் ஆவார். தொடர்ந்து இலக்கிய தளத்தில் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பவர். வெவ்வேறு பணிச் சூழல்களுக்கு மத்தியில் எழுதுவதைத் தவிர்த்து, எழுத்தின் மீது தீரா வேட்கை கொண்டு முழு நேரமும் எழுத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். "கதா விலாசம்', "யாமம்', "உப பாண்டவம்' "பதேர் பாஞ்சாலி', "உலக சினிமா' உள்ளிட்ட பல தரப்பட்ட நூல்களை எழுதியவர். தற்போது அவர் எழுதியிருக்கும் "செகாவின் மீது பனி பெய்கிறது' உள்ளிட்ட புதிய நூல்களும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. தொடர்ந்து இலக்கியம் மற்றும் சினிமா குறித்துப் பேசியும், எழுதியும் வரும் அவரை, சினிமா எக்ஸ்பிரஸின் தீபாவளி சிறப்பிதழ்க்காக, திரைப்படக் கல்லூரி மாணவர்களோடு ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினால் என்ன? என்று தோன்றியது. அதன் விளைவாக இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தோம். சென்னை - கே.கே.நகர், பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகேயுள்ள "டிஸ்கவரி புக் பேலஸி'ல், ஒரு காலைப்பொழுதில் மனம் மயக்கும் புத்தகங்களோடும், ஆர்வம் தாங்கிய கேள்விகளோடு வந்திறங்கிய திரைப்படக்கல்லூரி மாணவர்களோடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை பிணைத்துக் கொண்டார் (இடையில் கவிஞர் விக்ரமாதித்யனும் கலந்து கொண்டு மாணவர்களின் நிலையை கேட்டறிந்த நிகழ்வும் நடந்தேறியது). மிக நீண்ட ஆரோக்கியமான உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே...


மாணவர்: கலைகள் தோன்றிய காலத்திலிருந்து, தற்போது வரை விமர்சகர்களாலும், படைப்பாளிகளாலும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடுபொருளாக இருப்பது கலை கலைக்காகவா? அல்லது மக்களுக்காகவா? என்பதுதான். இதுபற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?

எஸ்.ரா: இதற்கான பதிலைவிட இந்த கேள்வி எப்படி உருவானது என்று பார்ப்பது முக்கியம். கலை கலைக்காகவா? அல்லது மக்களுக்காகவா? என்ற கேள்வி அதன் பயன்பாடு சார்ந்தே எப்போதும் கேட்கப்படுகிறது. ஒரு எழுத்தாளனுக்கு கதையோ, கவிதையோ, நாவலோ எதுவாயினும் அது கலை சார்ந்த செயல்பாடே. எதை எழுதுகிறான், ஏன் எழுதுகிறான், அது ஏன் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்பதில்தான் கேள்வி எழுகிறது. உண்மையில் எல்லா கலைகளும் மக்களுக்கானது. ஆனால் ஒரே ஆளுக்கானதில்லை. வெவ்வேறு ரசனை கொண்டவர்கள் அதன் வாசகர்களாக இருக்கிறார்கள். ஆகவே படைப்பின் எளிமை வேறு; பிரச்சாரம் என்பது வேறு. என் வரையில் கலை கலைக்கானதா அல்லது மக்களுக்கானதா என்ற எதிர்நிலை அர்த்தமற்ற ஒன்று. இரண்டும் இணைந்த ஒன்றாகவே காண்கிறேன். கலை கலைக்காகவா என்ற கேள்வியை யார் முதலில் கேட்டது? எப்போது முதன்முதலில் இந்த கேள்வி வந்தது? அதற்கு என்ன வரலாறு இருக்கிறது, ஏன் ஒரு கேள்வி பல நூறு வருடமாக இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த கேள்விக்கு எவ்வளவோ பதில்கள் இருக்கின்றன. அத்தனையும் ஓட்டைப்பானைக்குள் ஊற்றிய நீரை போல காணாமல் போய்விட்டன. கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது, என்றால் இது எளிய கேள்வி இல்லை. ஒரு திகைப்பு, ஒரு புதிர், ஒரு விசாரணை, ஒரு தர்க்கம், இப்படி எடுத்துக் கொள்ளலாம். மனிதனுடைய மனம் எப்போதெல்லாம் துயரமடைகிறதோ? எப்போதெல்லாம் வலியிலும், வேதனையிலும் இருக்கிறதோ அப்போதெல்லாம் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. அதற்காக முயற்சிக்கிறது. அப்போது ஒரு ஆதாரமான கேள்வி எழுகிறது. அந்த கேள்விகள் வலிமையானவை. அதுபோல வாழ்வின் கொண்டாட்டம் எதிர்பாராமை வீழ்ச்சி நிலை தடுமாற்றம் என்று புரிந்துகொள்ள முடியாதவை கேள்வியாக எஞ்சுகின்றன, கலை குறித்த இந்தக் கேள்வியும் அப்படியான ஒன்றே. கேள்வியின் மீது ஆயிரம் வருட சுமை சேர்ந்து போயிருக்கிறது. அது முடிவில்லாத பதில்களை தின்றும் பசி ஆறாதது. நான் கேள்வியின் சிறகை தடவி கொடுத்து அதை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறேன். பதில் சொல்லி அதை வெல்ல ஒருபோதும் முயற்சிப்பதில்லை.

மாணவர்: பின்பு எதற்காக இப்படியொரு கேள்வி இருந்து கொண்டேயிருக்கிறது. ஏன் படைப்பாளிகள் பதில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்?

எஸ்.ரா: கேள்வி என்பது எல்லா நேரத்திலும் பதிலுக்காக மட்டுமே கேட்கப்படுவதில்லை. கேள்வியின் ருசி பல நேரம் பதிலில் இருப்பதில்லை. கேள்வி ஒரு சுய விசாரணை. இதற்கு பதில் வெளியே சொல்லப்படுவதில்லை. நாமாக அறிந்துகொள்ள வேண்டியது, கேள்வி ஒன்றினை சுட்டிகாட்டுகிறது, அது முக்கியம், பதில் ஒரு எத்தனிப்பு மட்டுமே. கேள்வி என்னை உற்சாகப்படுத்துகிறது. தூண்டுகிறது. பதில் சொல்வதன் வழியே நான் கேள்வியை கடந்துபோக முயற்சிக்கிறேன். கேள்வி என்பது சண்டையோ, சமாளிப்போ இல்லை. அது ஒரு முயற்சி. ஒரு எத்தனிப்பு. நல்ல கேள்விகள் நமது அக உலகை அடையாளம் காட்டுகின்றன. பதில் சாதுர்யமான ஒன்றால் சமாளிக்கப்படலாம். கேள்வி ஒரு பூமாரங் போல திரும்பி விடுகிறது. கலைப்படைப்பை ஒரு நுகர்வு பொருளாக மட்டும் மாற்றி விட முடியாது. அதே நேரம் அது ஒரு வெறும் மசியப் பொருளாகவும் ஆகிவிடக்கூடாது. படைப்பாளி, கலை கலைக்காக மட்டுமே என்று வீம்பாக சொல்வதில்லை. அது புரியவில்லை என்று நிராகரிக்கபடும்போதுதான் கலையின் மேன்மையைப் பற்றி பேச ஆரம்பிக்கின்றன. எழுதத்தெரியும் என்பதற்காக எவராலும் ஒரு பதினைந்து வரியை எழுதிவிட முடியும். ஆனால் அது கவிதையாகாது. அதற்கு தனித்துவமான கவித்துவம் தேவைப்படுகிறது. மொழி ஆளுமை அவசியமாகிறது. அதுபோல வடிவம், அகப்பார்வை, தொனி, மெüனம் இத்தனையும் தேவைப்படுகிறது. அவை கலையின் ஆதாரங்கள்தானே. சிற்பம் ஒன்றினை உருவாக்க இரண்டு வருடம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. இதைப் பார்ப்பவன் சிலையின் முன்னால் நின்று கைத்தட்டி ரசிப்பான் என்பதற்காக சிற்பி அதைச் செதுக்கவில்லையே? அவன் அந்த சிலையை செதுக்குவதன் மூலமாக தன்னை வெளிப்படுத்துகிறான். தனக்குள்ளே ஒரு படைப்பு மனம் செயல்படுவதை அடையாளப்படுத்துகிறான். ஒரு கலைஞனுக்கு தன்ன வெளிப்படுத்திக் கொள்ள ஒரு உபகரணம் தேவைப்படுகிறது. அது சொற்களாக இருக்கலாம். ஒரு தூரிகையாக இருக்கலாம், அல்லது ஒரு இசைக்கருவியாகவோ, கல்லாகவோ கூட இருக்கலாம். அதை வைத்து தன்னை வெளிப்படுத்துகிறான். தனது கற்பனையை உலகு அறியா செய்கிறான். உருவாக்கப்படும் நிலை முழுவதும் கலை கலைக்காகவேதான் இருக்கு. அதில் ஒவ்வொரு சிறு சிறு விஷயமும் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு சரியான சொல்லிற்காக கவிஞன் மாதக்கணக்கில் காத்து கொண்டிருக்கிறான். அது முட்டாள்தனமான வேலையில்லை. அங்கே கலைதான் செயல்படுகிறது. கலைமனம் காத்திருக்கிறது. கலைஞர்கள் சமூக அக்கறை சார்ந்து செயல்பட வேண்டும் என்பதைதான் கலை மக்களுக்கானது என்று சொல்லுகிறார்கள். சமூக அக்கறை என்பதை எப்படி புரிந்துகொள்வது, எது எல்லாம் சமூக அக்கறை என்ற பட்டியலிருக்கிறதா என்ன? மனிதமேன்மை குறித்து கலைஞர்களுக்கு எப்போதுமே அக்கறை இருந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். நிகழ்கால பிரச்சினைகளை மட்டுமே எழுத வேண்டும் என்று படைப்பாளியை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நல்ல படைப்பாளி தன்னை சுற்றிய உலகால் பாதிக்கப்படுவான். அதை தனது படைப்புகளில் நிச்சயம் வெளிப்படுத்துவான். அதுதான் எப்போதுமே நடந்து வருகிறது. ஒரே படைப்பை எண்ணிகையற்ற கண்கள் வாசிக்கின்றன. ஆகவே, ஒவ்வொருத்தருக்கென்று தனி ரசனை இருக்கிறது. தனிப்பட்ட புரிதல் இருக்கிறது. அந்த ரசனைக்கு ஒரு குறிப்பிட்ட கலாச்சார பின்புலம் இருக்க கூடும். அதைச் சார்ந்து அவர் வந்திருக்கலாம். அப்படியிருக்கும்போது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றை எப்படி படைக்க முடியும்? இயற்கையை புரிந்து கொள்வதிலேயே நமக்குள் எத்தனை பேதமிருக்கிறது பாருங்கள். ஒரு வீதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதை எல்லோரும் பார்க்கிறோம். ஆனால், எல்லோருக்கும் மழையைப் பிடிக்கிறதா என்ன? அது ஒருவருக்கு நோயை உண்டாக்குகின்ற விஷயம். மற்றொருவருக்கு அது சேகரிக்கப்பட வேண்டிய குடிநீர். இன்னொருவருக்கு தன் வியாபாரத்தை கெடுக்கிற சமாச்சாரம். விவசாயிக்கு அது கொண்டாட்டம். சிறுவர்களுக்கு அது வியப்பு. ஒரு குழந்தை அந்த மழையில்போய் தன்னை கரைத்துக்கொள்ள விரும்புகிறது. மழையில் போடப்பட்ட உப்பு கரைவதைப் போல நாம் ஏன் கரைந்து போக முடியவில்லை? என்று ஆதங்கப்படுகிறது. இப்படி ஒரே நிகழ்வு வெறுப்பு, பாராட்டு, ஆச்சரியம், கோபம், ஆத்திரம் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. யாராவது மழையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டால் ஆளுக்கு ஒரு பதிலிருக்கிறது என்பதுதானே உண்மை! இதுபோல தான் இலக்கிய படைப்புகளும். நீங்கள் யார் உங்கள் ரசனை, தேவை என்ன என்பதைப் பொருத்தே படைப்பு புரிந்து கொள்ளப்படுகிறது. எப்படி மழையில் நனைவது ஒரு அனுபவமோ அதுபோல படைப்பை வாசிப்பது ஒரு அனுபவம். அது முக்கியமானது. மழையைப் பற்றிய எல்லா முடிவுகளும் அவரவர் விருப்பம் மட்டுமே. ஒரு கலை தன்னுடைய உச்சநிலையை அடையும்போது அதை உருவாக்கியவரின் பெயரை எடுத்துவிட்டாலும் கூட அது கொண்டாடப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு மோஸôர்ட், பீதோவன் துவங்கி கம்பன், பாரதி, இளங்கோவடிகள், புதுமைபித்தன் வரை பலரையும் சொல்லலாம். அப்படி கலையின் உன்னதங்கள் என்றுமே மக்களுக்கானதாகவே இருக்கிறது. ஆகவே, உங்கள் கேள்வி மிக பழைய வாதபிரதிவாதங்களுக்கானது. அதற்கானப் பதிலைவிட கேள்வியை ஆழமாக உள்ளே சென்று புரிந்துகொள்ள பாருங்கள். ஏன் அப்படி ஒரு கேள்வி இருக்கிறது என்று ஆராயுங்கள்.

மாணவர்: உன்னதங்கள் மட்டும்தான் இலக்கியமா? எளிய விஷயங்களுக்கு படைப்புலகில் இடமில்லையா? அதை ஏன் யாரும் கண்டுகொள்வதேயில்லை?

எஸ்.ரா: எளிய மனிதர்களின் வாழ்வும் அவர்கள் சார்ந்துள்ள உலகமும் முக்கியமானவை என்பதைதான் இன்றைய இலக்கியங்கள் முன் வைக்கின்றன. ஆனால், பொதுபுத்தி இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தாஜ்மகால், இமயமலை, சீனப்பெருஞ்சுவர் என்று பிரம்மாண்டங்கள் மட்டும்தான் பொதுபுத்திக்கு அதிசயமாக இருக்கிறது. ஆனால், சீனப்பெருஞ்சுவரை விடவும் கிராமத்தில் ஒரு விவசாயின் குடும்பம் வாழ வழியில்லாமல் ஊரைவிட்டு போய்விட்டதால் இடிந்து கிடக்கும் வீட்டின் மண்சுவர் முக்கியமானதில்லையா? யாருமில்லாத வீட்டிற்குள் வெயில் போய் என்ன தேடுகிறது? எறும்புகள் கூட ஏன் அந்த வீட்டை புறக்கணித்துப் போகின்றன. அந்த வீடு ஒரு குடும்பம் வாழ்ந்து கெட்டதன் அடையாளமாக நிற்கிறது. அதை ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை. அது ஒரு துயர சின்னமில்லையா? நான் சீனப் பெருஞ்சுவர் முன் நிற்பதை விட இடிந்த வீட்டுச் சுவரின் முன்பு நின்று அதன் துயரக்கதையை, நினைவுகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவன். எங்கள் ஊரை சுற்றிய கிராமங்களில் அதிசயமான பெரிய கலைக்கோவில்கள், சிகரங்கள் எதுவுமில்லை. தமிழகம் அறிந்த ஆளுமைகள், அறிஞர்கள், ஞானிகள் எவருமில்லை. ஆனாலும் அது எங்கள் நிலவெளி எங்களுக்கு அதிசயமானதே! எங்களூரில் வாழ்ந்து, மடிந்துபோன மனிதர்கள் வேறு எந்த ஊரிலும் வாழலையே? எங்களூரின் வெயில் வேறு எந்த ஊரிலும் இல்லையே? எங்களூரில் உள்ள கிணறு, வீதிகள், வேப்பமரங்கள், தெருப்புழுதி, தனிமை உலர்ந்த ஆகாசம் எல்லாமும் எனக்கு வியப்பாகவே உள்ளது. யாரும் கவனிக்காமல் போய்விட்ட கிராம உலகமே என்னை எழுதும்படி தூண்டுகிறது. இது என் ஊர் சம்பந்தப்பட்ட ஒன்றில்லை. எல்லா ஊர்களும் தனித்துவமானதே. மனிதர்கள் தாங்கள் வாழ்வதன் வழியே எல்லா பொருட்களின் மீதும் தங்கள் நினைவுகளை படிய விடுகிறார்கள். நினைவு படிந்திராத பொருள் ஒன்றுகூட ஊரில் இல்லை. அந்த நினைவுகள் எறும்பு ஊர்வதைபோல ஊரைச் சுற்றி அலைகின்றன. அதை எழுதும்படி யாசிக்கின்றன. அதனால் பிரம்மாண்டங்களை விட எளிமையும், இயல்புமான உலகே என்னை வசீகரிக்கிறது. அதைத் தேடி செல்கிறேன். எழுதுகிறேன். மனிதன் வாழ்க்கையென்கிற இந்த உடலோடு வாழக்கூடிய (ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் ப்ண்ச்யைத் எப்படி நீடித்துக்கொள்ள போகிறான். ஒரு மனிதனுடைய வாழ்க்கையென்பது என்பதோ,தொண்ணூறோ இருக்கும். இதைத்தாண்டி நீங்கள் வாழ்ந்ததற்கு என்ன அத்தாட்சி இருக்கப் போகிறது? உங்கள் மரணத்தின் பின்னால் உங்கள் குடும்பம் கூட நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏதாவது தடயங்களை விட்டுப் போக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதானிருக்கிறது. அதுதான் கலை! கலை படைப்புகளின் வழியே மனிதன் தன் இருப்பை, காலத்தை மீறி நிலைத்து விடுகிறான். அதனால் எல்லா காலத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவனாகிறான். எவ்வளவு உன்னதமான நிலையது. அதனால்தான் கலை கொண்டாடப்படுகிறது. அதுதான் கலையின் ஆதாரம். அதன்வழியே பிரபஞ்சத்தில் அவன் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறான். எல்லா உயர்ந்த கலைகளும் அதற்கான முயற்சிகளே. மாணவர்: அப்படியானால் கலை மட்டும்தான் மனிதனை மேம்படுத்தக் கூடியதா? வேறு அறிவு துறைகள் முக்கியமானதில்லையா? எஸ்.ரா: அப்படியில்லை. கலை எளிய மனிதர்களாலும் வெளிப்படுத்தக்கூடியது. மிகப்பெரிய சாதனைகள் செய்த இசைக்கலைஞர் ஐந்தாம் வகுப்பு வரை கூட படித்திருக்காமல் இருக்கக்கூடும். அப்படி விஞ்ஞானம், கணிதம் போன்ற அறிவுத்துறையில் ஒருவர் சாதனை செய்ய முடியாது. மாணவர்: ஏன் கலையை எப்போதும் கேளிக்கை என்று மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறோம். அது தவறில்லையா? எஸ்.ரா: கேளிக்கை என்பது தவறானதில்லை. கேளிக்கை எந்த வடிவத்தில் எப்படி நிகழ்கிறது. அது நிகழ்வதின் பின்புலத்தில் வேறு என்ன நோக்கமிருக்கிறது. ஏன் அது மனித உணர்ச்சிகளை மலினப்படுத்துகிறது என்பதில்தான் பிரச்சினைகள் உள்ளன. ஒரு காலத்தில் கேளிக்கை என்பதே கூடி களிப்பதுதான். அது தனிநபர் ரசனைக்கானதில்லை. மாறாக, அது ஒரு கூட்டு வெளி. பலர் கூடி அனுபவிப்பது. அந்த வெளியில் ஒரு கதை சொல்லி நின்று கதை சொல்லியிருக்கிறான். பின்பு அவனே இசையோடு பாடி, கதை சொல்லியிருக்கிறான். பின்பு ஒப்பனை அணிந்து ஆடி,பாடி நாடகமாக நிகழ்த்தியிருக்கிறான். பின்பு அதுவும் மாறி திரையில் ஒளிரும் பிம்பங்களுடன் சினிமா என ஆடிப்பாடி மகிழ்விக்கிறான். பார்வையாளனின் இடம் அப்படியே இருக்கிறது. நிகழ்த்துபவன் மாறிக்கொண்டேயிருக்கிறான். அதற்கேற்ப ரசனை மாறிக்கொண்டேயிருக்கிறது. டி.கே.சண்முகம் எழுதிய ஒரு குறிப்பில் வாசித்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் நாடகம் ஒன்றில் ஒருவன் பேண்ட் சர்ட் அணிந்து வந்ததை கண்டு மக்கள் வாய்விட்டு சிரித்தார்கள். இன்று அதற்காக ஒருவராவது சிரிப்பார்களா என்ன? கேளிக்கை என்ற பெயரில் இன்று நாம் நடத்துவது மலினமான பாலியல் தூண்டல்கள், அருவருப்பு மிக்க வெளிப்பாடுகள், கேளிக்கை என்றாலும் அதற்குள்ளும் தரமும், நேர்மையும், அக்கறையும் தேவைப்படுகிறது. சாப்ளின் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். வணிகம் மட்டுமே நோக்கமாக மாறிப்போனதுதான் கேளிக்கை வடிவம் சீரழிந்து போனதற்கு முக்கிய காரணம். கேளிக்கையிலிருந்து கலை எங்கே வேறுபடுகிறது என்பதற்கான ஒரு உதாரணத்தினைச் சொல்லுகிறேன். தஸ்தாயெவ்ஸ்கினுடைய "குற்றமும் தண்டனையும்' என்றொரு நாவல் இருக்கிறது. அது ஒரு கொலையைப் பற்றிய நாவல். நாம் சினிமாவிலும் ஜனரஞ்சக கதைகளிலும் பலமுறை படித்துள்ள அதே கதையம்சம்தான். ஆனால் கதையின் வழியே தஸ்தாயெவ்ஸ்கி துப்பறியும் வேலை செய்யவில்லை. கொலையை முன்வைத்து குற்றம் என்றால் என்ன? ஏன் எல்லா மனிதர்களுக்குள்ளும் குற்றம் மீதான ஈடுபாடு இருக்கிறது? யாரும் தன்னை பார்க்கவில்லை, தான் மாட்டிக்கொள்ளவே மாட்டோம் என்று ஒரு சூழல் வந்தால் எந்த மனிதனாக இருந்தாலும் ஏன் ஒரு குற்றம் செய்ய விரும்புகிறான். குற்றவாளி ஒருவனாகவும், தண்டிக்கப்படுகின்றவன் மற்றவனுமாகவே ஏன் எப்போதும் இருக்கிறார்கள்? குற்றவாளியை கடவுள் என்ன செய்கிறார்? என்று பல முனைகளில் ஆராய்கிறார். இங்கே ஒரு எளிய துப்பறியும் கதை ஆழமான மனஉளவியலை நோக்கி நகர்கிறது. மனிதனின் அறம், நியாய உணர்வு, சக மனிதன் மீது அன்பு செலுத்துவது போன்றவற்றை விசாரணை செய்கிறது. ஜனரஞ்சக எழுத்தாளன் போல தனது வாசகனை குஷிப்படுத்த எதையும் செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக, ஒரு கொலையை முன்வைத்து மனித மனதை ஆராய்ச்சி செய்கிறது. இதே கொலைக்கதை வெறும் துப்பறியும் கதையாக சுவாரஸ்யமாக எடுத்து செல்லப்படும்போது அது எளிய கேளிக்கையாக முடிந்துவிடுகிறது. அங்கே குற்றவாளி ஒரு எதிர்மறை கதாபாத்திரம். தண்டிக்கப்பட வேண்டியவன். துப்பறியும் நபர் அறிவாளி. ஆனால், தஸ்தாயெவ்ஸ்கி கதையில் குற்றவாளி சாதாரண மனிதன், மருத்துவம் படிக்கும் இளைஞன். வறுமையால் கொலை செய்கிறான். அதுவும் முதன்முறையாக அவன் குற்றவாளி என்று சொல்ல எந்த தடயமும் இல்லை. ஆனால் அவன் மனசாட்சி அவனை உறுத்துகிறது, கேள்வி கேட்கிறது. அதிலிருந்து மீளமுடியாமல் அவதிப்படுகிறான். அடுத்த நாள் காவல்துறை குற்றவாளி என்று கூறி அப்பாவி ஒருவரை கைது செய்து வைத்திருக்கிறது. இவனுக்குத் தெரியும் அவன் குற்றவாளியில்லையென்று. அதேசமயத்தில் உண்மையைச் சொல்லத் தயங்குகிறான். இந்தக் குழப்பம் முக்கியமானது. எப்போதுமே ஏழை, எளிய அப்பாவிகள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தில் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்? ஒரு பணக்காரனாவது அப்படி கைது செய்யப்படுகிறானா? என்று கேட்கிறான். பணம் ஒருவனை குற்றத்திலிருந்து காப்பாற்றிவிடுமா? சாமானியன் செய்தால் குற்றம். பணக்காரன் செய்தால் அது குற்றம். பணக்காரன் செய்தால் அது விபத்தா? என்று ஆதங்கப்படுகிறான். இப்படி விசாரணைக்களமாக நாவல் அமைவதே அதன் பெரிய வெற்றி. பொதுவில் கேளிக்கை மனித உணர்ச்சிகளை அதிகப்படுத்தி விளையாடுகிறது. போலியான பாலின்ப தூண்டுதல்களை தருகிறது. அதை ரசிப்பவன் மனது கறைபடுகிறது, அவன் தனது இயல்பான உணர்ச்சிகளை கேளிக்கை வடிவம் கற்று தந்த ஒன்றாக மாற்றி கொள்கிறான். ஆனால், தஸ்தாயெவ்ஸ்கி அதை செய்யவில்லை. அவர் மனிதத் துயரை புரிந்துகொள்ளவும் ஆறுதல் படுத்தவும் முயற்சிக்கிறார். அவரது நாவலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றிருக்கிறது. ஆனால் இது எளிய கேளிக்கை பிரதியில்லை. கலையின் உன்னதம். இந்த முரண்தான் வணிக சினிமாவிலும் நடக்கிறது. கேளிக்கை சினிமா ஒரு கதாநாயகனை உருவாக்குகிறது. அவன் மனம் நம்மை விட மேலானவன். அவதாரம் போன்றவன். சூப்பர்மேன் போல அதிசயமானவன். அவன் நம்மை ரட்சிக்க பிறந்தவன் என்கிறது வணிக சினிமா கதை. கலை சார்ந்த படைப்புகளோ எல்லா மனிதர்களும் நாயகர்கள்தான், அவர்கள் எப்படி வாழ்வை எதிர்கொள்கிறார்கள், போராடுகிறார்கள், ஜெயிக்கிறார்கள் அல்லது தோற்றுப் போகிறார்கள் என்பதை காட்டுகிறது. அந்தவகையில் அது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக, உண்மையாக இருக்கிறது. கேளிக்கை சினிமா பெரும்பான்மை நேரங்களில் வணிக முயற்சிக்காக மட்டுமே உண்டாக்கப்படுகிறது. ஊதி பெருசாக்கப்படுகிறது. கேளிக்கை என்ற பெயரால் சகலவிதமான மனித அவமதிப்புகளும் ரசிக்கப்படுகிறது. அதுதான் வருத்தமளிக்கிறது. நல்ல படம் எதுவென்று உங்கள் அருகிலுள்ள எந்தவொரு சாதாரண மனிதனையும் கேளுங்கள். வெற்றிப் பெற்று இருநூறு நாட்கள் ஓடிய படத்தை அவன் சொல்வதில்லை. மாறாக, தரமான ஆனால் பெரிய வணிக வெற்றி பெறாமல் போன படம் ஒன்றினைத்தான் குறிப்பிடுகிறான். அது எப்படி சாத்தியமாகிறது. கேளிக்கையை நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதை உருவாக்குவதில் கூட உயர்ந்த அக்கறையும், நேர்மையும் வேண்டும் என்பதையே சொல்கிறேன். கூட்டு கேளிக்கை என எதுவும் இல்லாமல் போய் வருகின்ற நமது சமகால சூழிலில் கேளிக்கை என்று நாம் நம்பியிருப்பது வணிக முயற்சிகளை மட்டுமே. அதுதான் வேதனையளிக்கிறது. இவ்வளவு பெரிய சென்னை கடற்கரையில் ஆயிரமாயிரம் மக்கள் கூடி நடனமாடலாம். பாடி மகிழலாம். திறந்த வெளியில் ஒரு அகலத்திரை கட்டி இரவெல்லாம் அங்கே குறும்படம் திரையிடலாம். சிறுவர்களுக்கான நாடகங்கள் நிகழ்த்தலாம். கட்டணமில்லாத கூட்டு கேளிக்கை மகிழ்விடங்கள் உருவாக்க எவ்வளவோ வெளிகள் இருக்கின்றன. ஆனால் அதை செய்ய எவ்வளவோ தடைகள், ஒடுக்கு முறைகள். வணிக வளாகங்களில் இவை காசு கொடுத்து, நிகழ்த்தப்படுகின்றன. அதை இன்றைய வணிக, கலாச்சார அடையாளமாக பெருமை கொள்கிறோம். இந்த முரண் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.

Comments

Popular Posts